Photobucket

26 August, 2009

உடலில் குண்டு பாய்ந்த நிலையில் சிகிச்சைக்காக ராமேஸ்வரதுக்கு தப்பி வந்த ஈழத்தமிழர்

இலங்கை ராணுவத்தின் துப்பாக்கி குண்டு ஒன்று விலாவில் பாய்ந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக ஈழத்தமிழர் ஒருவர் ராமேஸ்வரத்துக்கு கள்ளத் தோனியில் தப்பி வந்துள்ளார்.
இலங்கையில் முல்லைத் தீவு மாவட்டம் சுதந்திரபுரம் என்ற பகுதியில் வசித்து வந்தவர் ரஞ்சித் ஜெயகுமார். இவருக்கு சுகந்தினி என்ற மனைவியும், மதி இன்பம், கனி இன்பன் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.

இவர் போர் சமயத்தில் இலங்கை ராணுவத்தின் குண்டு மழைக்கு பயந்து பதுங்கு குழியில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். அப்போது ஒரு நாள் இலங்கை ராணுவத்தின் துப்பாக்கியில் இருந்து வெளிவந்து ஒரு தோட்டா பதுங்கு குழியில் மறைந்திருந்த இவரது வலது விலாவில் பாய்ந்தது.

இந்நிலையில் நேற்று அவர் சிகிச்சைக்காக தனது குடும்பத்தினருடன் ராமேஸ்வரம் வந்தார். தற்போது அவரிடம் ராமேஸ்வரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

ராமேஸ்வரம் போலீசாரிடம் அவர் கூறுகையில்,

போர் சமயத்தில் சுதந்திரபுரம் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து முள்ளிவாய்க்கால் பகுதிக்கு சென்றோம். ராணுவம் நடத்திய தாக்குதலில் பதுங்கு குழியில் தங்கியிருந்த எனது வலது விலாவில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது.

இதையடுத்து முல்லைத் தீவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். ஆனால் துப்பாக்கி குண்டுகளை அகற்ற முடியாது என்று டாக்டர்கள் கூறிவிட்டனர்.

என்னால் வலியை தாங்கி கொள்ள முடியவில்லை. எனவே, தமிழ்நாட்டுக்கு வந்து சிகிச்சை பெற முடிவு செய்தேன். இதையடுத்து வவுனியா முகாமுக்கு சென்று அகதிகளோடு தங்கினோம். பின்பு ஒரு படகோட்டிக்கு ரூ 2 லட்சம் கொடுத்து இங்கு தப்பி வந்தோம் என்றார்.

அவரிடம் போலீசார் சோதனை செய்த போது இலங்கை, கனடா, அமெரிக்க, ஐரோப்பா உள்பட பல வெளிநாட்டு பணமும், இந்திய பணம் ரூ.25 ஆயிரமும் இருந்தது.

பின்னர் ரஞ்சித் ஜெயக்குமார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைக்கப்பட்டார். அவர்கள் அனைவரும் மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

No comments:

Post a Comment