Photobucket

04 September, 2009

தமிழ் ஈழப் போராட்டம் இனி என்னவாகும்? - பிரபாகரன் சொன்ன பதில்


தமிழ் ஈழப் போராட்டம் இனி என்னவாகும்? - பிரபாகரன் சொன்ன பதில்

தமிழ் ஈழப் போராட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டால் அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறுதிக் கட்ட போரின்போது தனது தளபதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.



இதுகுறித்து அருட்தந்தை ஜெகத்கஸ்பர் நக்கீரனில் எழுதிய கட்டுரையிலிருந்து…

போராட்டம் என்னவாகும்? தமிழருக்கு அரசியல் தீர்வொன்று கிட்டுமா? எதிர்காலம் எவ்வாறிருக்கும்? பலரும் கேட்கிற கேள்விகள் இவை.

இதோ பதில்:

மே-04. முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் இறுதி யுத்தத்தின் உக்கிரம் ஏறிக் கொண்டிருந்த நாட்கள். இயக்கத்தின் இரண்டாம் நிலை எதிர்காலத் தலைவர்களை அழைத்திருக்கிறார் வேலுப்பிள்ளை பிரபாகரன். இரவுப் பொழுது.

பங்கருக்குள் சந்திப்பு. அவரது கண்களில் ஞானத்தீட்சை பெற்றவர் போன்றதொரு ஒளி. ஒவ்வொரு சொல்லிலும் நம்பிக்கையின் உயிர்த் துடிப்பு. பிரபாகரன் பேசி யிருக்கிறார்:

“தினையான் குருவியை பார்த்திருக்கிறீர்களா? வேலிகளில், பூச்செடிகளில், வயல்வெளிகளில், வாலை வினாடிக்கு இருமுறை சிலிர்ப்பிக் கொண்டு தினைகள் சேகரிக்குமே தினையான் குருவி… குருவி இனங்களிலேயே மிகச் சிறிய குருவி இந்த தினையான் குருவிதான்… ஆனால் வெயில், மழை, புயல், குளிர், பாம்பு-எலி போன்ற எதிரிகள் எல்லாவற்றிடமிருந்தும் தன்னை பாதுகாத்துக் கொள்கிற ஏற்பாடுகளை சிறுகச் சிறுக ஆனால் கச்சிதமாகவும், பிசிரின்றியும், தன்னம்பிக்கையோடும் செய்யும்.

நீங்களும் தினையான் குருவிகளைப் போல் இருங்கள். போராட்டம் இன்று மிகவும் பின்னடைவு கண்டிருப்பது உண்மைதான். ஆனால் தினையான் குருவிகளைப் போல எமது போராட்டத்தையும், எமது மக்களுக்கான வாழ்வையும் மீண்டும் கட்டியெழுப்புவோம்.

எதற்கும் அஞ்சாதீர்கள். நாம் எண்ணிக்கையில் மிகச் சிறியவர்களாக இருந்தபோதும் நமது தளராத மன உறுதிதான் நமது போராட்டத்தை பெரிதாக வளர்த்தது. பாரதியாரின் பாடலை எப்போதும் நினைவில் கொண்டிருங்கள்.

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் -அதை

அங்கொரு காட்டிலோர் பொந்திடை

வைத்தேன்

வெந்து தணிந்தது காடு: -தழல்

வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும்

உண்டோ

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்…”

இரண்டு முறை இப்பாடலை பாடிய பிரபாகரன் அவர்கள் தொடர்ந்திருக்கிறார்.

“பாரதியின் அக்னிக் குஞ்சுகள் போலும் இருங்கள். நமது வளங்கள் அழிந்து குறுகி விட்டோமே என்று மனம் தளராதீர்கள். முக்கியமாக அஞ்சாதீர்கள். நம்பிக்கையை இழக்காதீர்கள். கொடூரத்தின் உச்சத்தில் நின்று கோரத்தாண்டவம் புரியும் சிங்களப் பேரினவாதக் காட்டை அழிக்க பொந்திடை வைக்கும் சிறு நெருப்பு போதும். ஏனென்றால் உண்மையும், நீதியும், வரலாறும் என் றானாலும் நமது பக்கமாய்த்தான் இருக்க முடியும். எனவே அஞ்சாதீர்கள்.

போராட்டத்தின் அக்னிக் குஞ்சுகள் நீங்கள். சிறு நெருப்பாய் இருங்கள். உங்களிலிருந்து பெரு நெருப்பு உருவாகும்…”, என்றாராம்.

‘பிரபாகரன் குற்றவாளி’ எனும் எத்துவாளி நீதிபதிகள்


ஏதோவொரு பிடிப்பில், நம்பிக்கையில், ஆதார அச்சில், எதிர்பார்ப்பில், காத்திருப்பில், ஒரு புள்ளியை நோக்கிய பயணமாக இருந்த வாழ்க்கை தேங்கிவிட்டது. இரவில் அடர்காட்டில் திசை தொலைத்த திகைப்பினை நினைவுறுத்துகின்றன இந்நாட்கள்.
முன்னைப்போல நண்பர்களின் முகங்களை எதிர்கொள்ள முடிவதில்லை. சந்திப்புகளைத் தவிர்த்துவிடுகிறோம். தொலைபேசி எண்களைக் கண்ணெடுக்காமலே நிராகரித்துவிடுகிறோம். எல்லாவற்றிலும் சலிப்பும் மந்தமும் படர்ந்துவிட்டிருக்கிறது. பிடிவாதமான சிறையிருப்புகளை மீறி யாரையாவது பார்த்துவிட நேரும்போது, ‘தயவுசெய்து அரசியல் பேசவேண்டாம்’என்று கேட்டுக்கொள்கிறோம். ஆனால், பேச்சு முட்டி மோதி அங்குதான் வந்து தரைதட்டுகிறது. பழகிய, புளித்த, சலித்த, விரும்பாத வார்த்தைகளை நாம் பேசவும் கேட்கவும் செய்கிறோம்.

“தலைவர் இருப்பதாகத்தான் சொல்கிறார்கள்”

“அவர் இல்லை என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும்”

“இராணுவப் பக்கத்தில் கவனம் செலுத்திய அளவு அரசியலிலும் கவனம் செலுத்தியிருக்கலாம்”

“முகாம்களுக்குள் இருக்கும் சனங்களை நினைத்தால்தான் என்ன செய்வதென்று தெரியவில்லை”

மேற்கண்ட ஒரே சாயலுடைய உரையாடல்களிலிருந்து தப்பித்து ஓடிவிட மனம் அவாவுகிறது. ஏனென்றால், அவை வந்துசேருமிடம் காற்றில்லாத வெளி. திசையழிந்த பனிமூட்டம்.

“முஸ்லிம்களை விரட்டாதிருந்திருக்கலாம்”

“அவ்வப்போது முன்வைக்கப்பட்ட அரசியல் தீர்வுகளில் ஒன்றைத் தேர்ந்திருக்கலாம்”

“அவர் முன்னரே வெளியேறியிருந்திருக்கலாம்”

“இத்தனை சனங்களைச் சாகக் கொடுக்காதிருந்திருக்கலாம்”

எத்தனை ‘லாம்’கள்!

அரங்கில் இல்லாதவர்களை காலம் எப்படிக் கபளீகரம் செய்கிறது என்பதைக் கண்ணெதிரே காண்கிறோம். ‘சீ-சோர்’ விளையாட்டு மாதிரி ஆகிவிட்டது எல்லாம். கரையில் இருந்தவர்கள் கடலுக்கும் கடலில் இருந்தவர்கள் கரைக்கும் இடம்மாறிவிட்டார்கள். விடுதலைப் போராட்டத்தின் வீழ்ச்சியானது, இதுநாள்வரை தியாகிகள் எனப்பட்டோரை ‘மக்களைச் சாகக்கொடுத்த, அடிமைகளாக்கிய துரோகிகள்’ஆகவும், துரோகிகள் எனப்பட்டோரை மீட்பர்களின் சட்டகத்தினுள்ளும் இடம்மாற்றி அடைத்திருக்கிறது. அன்றேல் அவ்வாறு மாயத்தோற்றம் காட்டுகிறது. (தியாகி, துரோகி வரைவிலக்கண விவாதங்களைப் பிறகொருநாள் முழுக்கட்டுரையொன்றில் பேசலாம்) பிரபாகரனை இன்னொரு சதாம் ஹுசைனாக வரலாற்றிலிருந்து அழித்துவிடக் கங்கணம் கட்டிக்கொண்டு பலர் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள
்। பல புலி ஆதரவாளர்கள் (முன்னாள்) புனுகுப்பூனைகளாக மாறி ‘மியாவ்’எனக் கத்தி இணையத்தளங்களில் அவலச்சுவை கூட்டுகிறார்கள். ஏற்கெனவே புலம்பெயர் நாடுகளில் புலிகளுக்கெதிரான பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தவர்களுக்கோ ‘குண்டியிலடித்த புழுகம்’. ‘புலிகளின் வீழ்ச்சி, ஜனநாயகத்தின் வெற்றி’என்பதாகப் பேசத் தலைப்பட்டிருக்கிறார்கள்.

இதற்குள் காலச்சுவடு அநாமதேயக் கட்டுரை ஒன்றை வெளியிட்டு, விடுதலைப் புலிகளை அழிவின் சூத்திரதாரிகளாகச் சித்தரிக்க முயன்றிருக்கிறது। ‘வன்னியில் நடக்கும் யுத்தம் விடுதலைப் புலிகளால் மிகைப்படுத்திச் சொல்லப்படுகிறது’என்று திருவாய்மொழிந்த ஜேர்மன் சுசீந்திரனின் நேர்காணலை அடுத்து- பேராசிரியர் அ।மார்க்ஸ் அவர்களின், தமிழக எழுத்தாளர்களின் பொது அறிவினைக் குறித்துக் கேள்வி எழுப்பும், புலியெதிர்ப்புக் (அது இல்லாமலா?) கட்டுரையொன்றை வெளியிட்டுப் புண்ணியம் கட்டிக்கொண்டிருக்கிறது ஆதவன் தீட்சண்யாவின் புதுவிசை சஞ்சிகை. கவிஞர் லீனா மணிமேகலையால் ஒழுங்கமைக்கப்பட்ட- ஈழத்தமிழ்க் கவிஞர்களின் கவிதை நூல் விமர்சனக் கூட்டத்தில் இலங்கையின் தேசிய கீதத்தை பயபக்தியோடு எழுந்து நின்று பாடிய பௌத்த நெறியாளர் சுகன் கீற்று இணையத்தளத்திலே, கொழும்புவாழ் கோமான் கருணாவை ‘வாழ்க நீ எம்மான்’என்று வியந்து குழைந்திருக்கிறார். ‘நீ இன்றி இன்றளவும் போர் நின்றிருக்க வாய்ப்பில்லை’என்று அவர் விசர்வாதம் அன்றேல் விதண்டாவாதம் பேசியிருக்கிறார். நமது சகபதிவரான த.அகிலனின் இணையத்தளத்திலே வெளியாகியிருக்கும் - அகதிமுகாம் தறப்பாழின் கீழிருந்து எழுதப்பட்ட கட்டுரையிலே ‘விடுதலைப் புலிகளின் கறுப்பு-வெள்ளை அரசியல்’சாடப்பட்டு, சாம்பல் ஓரங்களைக் குறித்துப் பேசவேண்டுமென்று கேட்கப்பட்டிருக்கிறது. அண்மையில் கனடாவில் நடந்த புத்தக விமர்சனக் கூட்டமொன்றிற்குச் சென்றிருந்தேன். (கவிஞர் கருணாகரனின் ‘பலியாடு’, த.அகிலனின் ‘மரணத்தின் வாசனை) அங்கு சமூகமளித்திருந்த எழுத்தாளர் சுமதி ரூபன் சொன்னார் “எனது உழைப்பிலிருந்து ஒரு சதம்கூடப் போராட்டத்திற்குச் சென்றுசேரக்கூடாது என்பதில் கவனமாயிருந்தேன்”. ஆனால், அதே சுமதி ரூபன் விடுதலைப் புலிகளை ஏற்றுக்கொண்ட, ஆதரித்த ரி.வி.ஐ. தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலைசெய்ததை (கவிஞர் சேரன் என்னை நேர்காணல் செய்தபோது) நான் பார்த்திருக்கிறேன் என்பதை இங்கு சொல்லியாக வேண்டும். அந்த ஊதியம் அவரில் எப்படிச் சுவறாமல் போகும், அல்லது அவருக்கு மாற்றான அரசியல் கருத்துக்கொண்ட நிறுவனத்தில் அவர் எப்படி நீடித்திருந்தார் என்பது எனக்குப் புரியத்தானில்லை. போராட்டத்திற்கு ஆதரவில்லை; எந்த அடக்குமுறைகளுக்கெதிராக அந்தப் போராட்டம் தொடங்கப்பட்டதோ, அந்த அரச பயங்கரவாதத்திற்கெதிராக அவரிடமிருந்து ஒருபோதும் ஒரு எதிர்ப்புக்குரலும் எழுந்ததில்லை. இன்றைய நிலையில் அங்குமில்லை; இங்குமில்லை என்பவர்கள் அங்கிடுதத்திகள். ‘நடுநிலைமை’என்ற சொல்லின் பின் பதுங்கிக்கொள்ளும் வேடதாரிகள்.அந்நிலைப்பாடானது பொதுச்சுமைகளிலிருந்து உங்களை விடுவித்து தனிப்பட்ட வாழ்வினில் குற்றவுணர்வின்றி உழல வசதிசெய்கிறது. மேலும், தோல்வியில் உங்களுக்குப் பங்கில்லை என்றால், எப்போதுமே, எந்தக் காலத்திலும் கிட்டப்போகும் வெற்றிகளிலும் உங்களுக்குப் பங்கில்லை என்பது நினைவிருக்கட்டும்.

அதிசயத்தில் பேரதிசயமாக, தனது இணையத்தளத்தின் வார்ப்புருவில் இடப்பட்டிருக்கும் வாசகங்களுக்கு அமைவுற ‘அதிகாரங்களுக்கெதிராக உண்மையைப் பேச’முதன்முறையாக முயன்றிருக்கிறார் ஷோபா சக்தி। ‘பிறழ் சாட்சியம்’என்ற தனது கட்டுரையை அவர் கீழ்க்கண்டவாறு நிறைவுசெய்திருக்கிறார்:

“இலங்கை அரச படைகளின் கொலைச் செயலைப் புலிகளின் மீது சுமத்தி ‘தேனி’போன் அரச சார்பு இணையங்கள் இலங்கை இராணுவத்தைப் பாதுகாக்கக் கிளப்பிவிடும் இதுபோன்ற வதந்திகளும் ஊகங்களும் பரப்புரைகளும் பாஸிஸத்தின் ஊடக முகங்கள்। அந்தப் பரப்புரைகளை நியாயப்படுத்தி சுகன் போன்றவர்கள் பேசும் சொற்கள் அவர்கள் இவ்வளவு நாளும் பேசிவந்த மானுட நேயத்தையும் (கொக்கமக்கா-இது என் எதிர்வினை) கொலைமறுப்பு அரசியலையும் கேள்விக்குள்ளாக்கியே தீரும். பிறழ் சாட்சியத்தில் புத்திசாலித்தனம் இருக்கலாம், சிலவேளைகளில் கவித்துவம் கூட இருக்கலாம். ஆனால், அந்தச் சாட்சியத்தின் பின்னால் அநீதியும் இரத்தப்பழியும் இருக்கிறது.”

உண்மையாக நெகிழ்ந்துபோனேன். விழிக்கடையில் கண்ணீர் திரண்டுவிட்டது. கடைசியில் மண்டைதீவு அந்தோனியார் கண்திறந்துவிட்டார்.:)

“தவறான வழிநடத்தலால் பல்லாயிரம் மக்களைக் கொன்றுகுவித்து, மூன்று இலட்சம் தமிழ்மக்களை ஏதிலிகளாக்கி முகாம்களுள் முடக்கிய பிரபாகரனுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் தகும்”என்பதே அண்மைக்காலங்களில் மேற்குறிப்பிட்டவர்களின் தரப்பு வாதமாக இருந்துவருகிறது. ‘இந்தப் பாவத்தில் எனக்குப் பங்கில்லை’என்று சந்தர்ப்பம் பார்த்துக் கைகழுவுகிற புதிய பிலாத்துக்களையும் பார்க்கமுடிகிறது. ‘நீரோ ஆண்டவர்!’என்று பழித்துக் களிக்கிற எத்துவாளிகளையும் எதிர்கொள்கிறோம். ‘போராட்டம் வெற்றி பெற்றிருந்தால் அது ஒட்டுமொத்தத் தமிழனுக்குச் சொந்தம். வீழ்ச்சியுற்றிருப்பதால் அது பிரபாகரன் என்ற தனிமனிதனுக்கு மட்டுமே சொந்தம்’என்பது அபத்தாபத்தமாக இல்லையா? ஆனையிறவு முகாம் கைப்பற்றப்பட்டபோது, புளகாங்கிதமடைந்தவர்கள் நாங்கள்தான். ‘ஈழத்தமிழர்களது போராட்டத்தால் தமிழினத்தை உலகமே அறிந்திருக்கிறது’என்றபோது பெருமிதத்தோடு பல்லிளித்தவர்களும் நாங்கள்தான். ‘விடுதலைப்புலிகள் கட்டுப்பாடும் வீரமும் நிறைந்த கெரில்லா வீரர்கள்’என்று மேற்கத்தேயம் வர்ணித்தபோது நம்மில் யாருமே புளகாங்கிதமடையவில்லை என்று நெஞ்சில் கைவைத்துச் சொல்லமுடியுமா? வெற்றிகளின்போது புல்லரித்ததெல்லாம், இப்போது செல்லரித்துப்போய்விட்டதா?

தோல்வி பெற்ற பக்கத்தை நிராகரிப்போரின், கைவிடுவோரின் தனிப்பட்ட உளச்சுத்தியைச் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. ஆம் பல்லாயிரவர் அழிந்துபோனார்கள். ஆம் மூன்று இலட்சம் பேர் முகாமுக்குள் இருக்கிறார்கள். ஆம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் சிறைக்கைதிகளாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆம் இருபத்துநான்காயிரம் பேர் காணாமல் போயிருக்கிறார்கள். இதனாலெல்லாம் போராட்டத்தின் நோக்கம் நியாயமற்றதென்று கூறமுடியுமா? விடுதலைப் புலிகள் எதேச்சாதிகாரத்தோடு இயங்கியதை, சக போராளிக்குழுக்களைக் கொன்றுபோட்டதை, முஸ்லிம்களை யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டியதை, உலக ஒழுங்கைப் புரிந்துகொண்டு சரியான நேரத்தில் சரியான முடிவுகளைத் தேராததை வேண்டுமானால் தவறென்று சொல்லலாம். ஆனால், போராட்டம் முன்னெடுக்கப்பட்டதன் நோக்கம் தவறில்லை. பேரினவாதத்தின் பாரபட்சங்களால் அவர்கள் போராட்டத்தை நோக்கி வலிந்து செலுத்தப்பட்டார்கள். விடுதலைப் புலிகள் முன்னெடுத்து நடத்திய போரின் பங்காளிகளாக நாம் அனைவரும் இருந்தோம். ஆக, இங்கே வீழ்ச்சியடைந்தது (பின்னடைவு என்று இனியும் சொல்லிக்கொண்டிருக்கமுடியாது) விடுதலைப் புலிகள் மட்டுமன்று; நாம் எல்லோருந்தான்। வெற்றியடைந்தால் பல்லைக் காட்டுவதும் வீழ்ச்சியுற்றால் பின்புறத்தைக் காட்டுவதும் கேவலமாக இருக்கிறது.

இதைத்தான் பிழைப்புவாதம் என்பது. இதைத்தான் சந்தர்ப்பவாதம் என்பது. இதைத்தான் அப்பட்டமான சுயநலம் என்பது. கயவாளித்தனம் என்பது. ஒட்டுண்ணித்தனம் என்பது.

அரசியலில் அதிகாரந்தான் தெய்வம். போரில் வெற்றிதான் தெய்வம். இந்த ‘தெய்வம் நின்று பழி தீர்க்கும்’, பாவம், புண்ணியம், பைசாசம் இன்னபிற தவிர்த்து கொஞ்சம் பகுத்தறிவு, யதார்த்தம், குரூரத்தோடும் சிந்தித்துப் பார்த்தால், விடுதலைப் போராட்டம் தோற்றுவிட்டதற்குக் காரணம் சகோதரப் படுகொலைகள் இல்லை; முஸ்லிம் சகோதரர்களை விரட்டியது இல்லை; அனுராதபுரத்தில் புகுந்து பொதுமக்களைக் கொன்றுபோட்டது இல்லை. இந்தியாவின் பிராந்திய வல்லாதிக்கப் பிடிமானம், அன்புக் கணவர் ராஜீவ் காந்தியின் மரணத்திற்குப் பழிவாங்கியே தீருவேன் என்ற மேன்மைமிகு சோனியாவின் பிடிவாதம், இலங்கையின் பௌத்த சிங்களப் பேரினவாதம், சீனாவின் நானா நீயா போட்டி, ஈராக் போன்ற நாடுகளில் புஷ் விட்ட தவறுகளால் நல்லபிள்ளையாகக் கைகட்டிக்கொண்டிருக்க வேண்டிய அமெரிக்காவின் நிர்ப்பந்தம்… இவையெல்லாம்தான் ஈழவிடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டமைக்கான காரணங்கள். ‘பாவத்தின் சம்பளம் மரணம்’என்றால், முதலில் செத்துப்போயிருக்கவேண்டியது அமெரிக்காதான்.

பிரபாகரன் அவர்கள் உலக ஒழுங்கோடு ஒத்துப்போயிருந்தால், அதிகாரத்தின் இசைக்கேற்ப நடனமாடியிருந்தால், அவ்வப்போது ஆட்சிபீடமேறிய அரசாங்கங்கள் நீட்டிய எலும்புத் துண்டுகளுக்காக நாக்கைத் தொங்கப்போட்டு மலினமாக விலைபோயிருந்தால்… தென்னிலங்கையில் பிழைப்புவாத அரசியல் நடத்தும் கருணா வகையறாக்களைப்போல சப்பர மஞ்சத்தில் சாமரம் வீசிக்கொண்டிருக்கப் படுத்திருக்கலாம். ‘பயங்கரவாதம்’ ‘புரட்சி’யாகியிருக்கும். தமிழ் மக்களும் பிழைத்திருப்பர்.

தலைவர் பிரபாகரன் இழைத்த ஒரே தவறு, வாழ்விலும் மரணத்திலும் சமரசம் செய்துகொள்ளாததுதான். இந்தத் ‘தூய்மைவாதம்’ போரில் உதவாது என்பதை அவர் உணர்ந்துகொண்டபோது, காலம் கடந்துவிட்டிருந்தது. நாங்கள் வீழ்ச்சியுற்றோம். போராட்டத்திற்கு முன்னர் இருந்ததைக் காட்டிலும் படுகேவலமான நிலைமைக்குக் கீழிறக்கப்பட்டிருக்கிறோம். ஆனால், அவரைக் குற்றம் சொல்ல நமக்குத் தகுதி இருக்கிறதா? வன்னியில் வதைபட்ட, வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் புல்மோட்டையிலும் அகதிமுகாம்களில் வதைபட்டுக்கொண்டிருக்கிற மக்களுக்கு அந்தத் தகுதி இருக்கிறது.

அவர்கள் போராடிக்கொண்டிருந்தபோது நாங்கள் என்ன செய்துகொண்டிருந்தோம்? தனிப்பட்ட வாழ்வில் மூழ்கிக் கிடந்தோம். வயிறு புடைக்க உணவருந்தினோம். குடித்தோம். படம் பார்த்தோம். நண்பர்களோடு சுற்றுலா போனோம். படுத்து பிள்ளை பெற்றுக்கொண்டோம். காதலித்தோம். உழைத்துச் சேமித்தோம். மேடைகளில் கவிதை வாசித்தோம். கைதட்டல்களை அள்ளிக்கொண்டோம். எப்போதாவது எதையாவது எழுதிக் கிழித்து ‘ஐயகோ நம்மினம் அழிகிறதே’என்று ஒப்பாரி பாடினோம். ஏதேதோ வழிகளில் நம் அடையாளங்களைப் பெருக்கப் பிரயத்தனப்பட்டோம். இன்று கூசாமல் குற்றம் சொல்கிறோம்.

தோற்றவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். வென்றவர்கள் கொண்டாடப்படுகிறார்கள். இது பொதுநியதி. ‘சத்தியம் வெல்லும்’என்பதெல்லாம் சும்மா. அப்படிப் பார்த்தால் இஸ்ரேல் சத்தியவந்தர்களின் பூமியாக இருக்கவேண்டும். இன்று வலிமையே பிழைக்கிறது; நீதியன்று. அதிகாரந்தான் விரோதி ஆண்டின் அறமாகியிருக்கிறது.

இதுவரையில் விடுதலைப் புலிகளைத் தூற்றிவந்த இணையத்தளங்களும் பத்திரிகைகளும் இப்போது செய்வதென்ன? வீழ்ச்சியின் காரணங்களை அடுக்கிக்கொண்டிருக்கின்றன. புலியெதிர்ப்புப் பட்டை கட்டப்பட்ட குதிரைகளுக்கு ஒரே பார்வையன்றி வேறில்லை. பேரினவாதம் தமிழ்மக்களை தடுப்புமுகாம்கள் என்ற வதைமுகாம்களில் வைத்து இழிவுசெய்துகொண்டிருப்பதை அவர்கள் ஏன் எழுதுவதில்லை? திஸநாயகம் போன்ற பத்திரிகையாளர்கள்மீது பேரினவாதத்தின் கொடூர நகங்கள் ஆழப் பதிவதை ஏன் எழுதுவதில்லை? மீட்கப்பட்டதாகக் கூறப்படும் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் ஆயுததாரிகளாகத் திரிந்து மக்களை அச்சுறுத்தும் குழுக்களின் அராஜகங்கள் பற்றி இவர்கள் ஏன் வாயே திறப்பதில்லை? நிர்வாணமாக்கப்பட்டு கண்களும் கைகளும் கட்டப்பட்டு ‘அடுத்த சூடு என் தலையிலா?’என்று ஏங்கி, சுடப்படுவதன் முன்பே செத்துக் கரிந்த அந்த மனிதர்களைப் பற்றி இவர்களால் ஏன் பேசமுடியவில்லை?

‘பேசவிடுகிறார்களில்லை… பேசவிடுகிறார்களில்லை’ என்று குற்றஞ்சாட்டப்பட்ட விடுதலைப் புலிகள் மௌனமாக்கப்பட்டுவிட்டார்கள். இப்போது யாருக்கு அஞ்சுகிறீர்கள்? ஒருவேளை அடக்குமுறைக்கெதிராகப் பேசுவது என்பதன் பொருள் உங்கள் அளவில் ‘விடுதலைப்புலிகளின் அடக்குமுறைகளுக்கு எதிரான பேச்சு’என்ற புனிதக் கோட்டைத் தாண்டாததா? இதன் வழியாக, புலிகளைக் காட்டிலும் அச்சங்கொள்ளத்தகு பயங்கரவாதிகளே இலங்கை அரச கட்டிலில் இருக்கிறார்கள் என்று மறைமுகமாக ஒப்புக்கொள்கிறீர்களா? ஒருவேளை புத்திஜீவித்தனம், மனிதாபிமானம், பேச்சுரிமை, சுதந்திரம் இன்னபிற பதங்களெல்லாம் எதிராளியின் அதிகாரத்திற்கும் தங்கள் இருப்பிற்குமேற்ப மாறுபடுமோ? ஆக, புலிகள் இல்லையென்றால் நீங்களும் அரங்கத்தில் இல்லை. உங்களது அரசியலும் அந்திமத்திற்கு வந்துவிட்டது. புலிகள் முடிந்துபோனார்கள் என்றால், புலிகளுக்கெதிரான முறைப்பாட்டோலங்களை வைத்து அரசியல் பண்ணிக்கொண்டிருந்த உங்கள் கதி இனி அதோ கதிதான். பேசச் சரக்குத் (புலிகள்) தீர்ந்துபோயிற்றென்றால் என்றால் இனி ஈயாடிக் கிடக்கவேண்டியதுதானே?

அதை விடுத்து, ‘பிரபாகரன் குற்றவாளி’, ‘பாவத்திற்குத் தண்டனை’என்று எத்தனை காலந்தான் அரற்றிக்கொண்டிருப்பீர்கள்? முதலில் குற்றப்பட்டியல்; இப்போது காரணப்பட்டியலா? நீங்களும் நாங்களும் (அப்படி ஒரு கோடு இருந்தால்) இனிப் பேசவேண்டியது பொதுவான ஆதிக்க சக்திகளுக்கெதிராகவே.

‘பிரபாகரன்’என்ற மனிதரின் தனிப்பட்ட-பொது வாழ்வின் தூய்மை, நேர்மை குறித்துப் பேசுவதற்கு இங்கு எந்தப் புழுவுக்கும் அருகதை கிடையாது. சுயநல, சந்தர்ப்பவாத, பிழைப்புவாத, ஒட்டுண்ணி-சலுகை அரசியல் நடத்திக்கொண்டிருக்கும் எவருக்கும் அந்தத் தகுதி இல்லை. நாக்குகள் நியாயத்தைப் புரட்டிப் போட்டாலும் இதயங்கள் அறியும் அவரவர் தூய்மை. அவர் உலக ஒழுங்கிற்கமைவுற பிழைக்கத் தெரியாதவராயிருந்தார். அவரது அரசியல் பிழைத்துப் போயிற்று. அதன் விலை பல்லாயிரம் உயிர்கள், உடமைகள், ஆண்டுகள், அகதிமுகாமுக்குள் அடக்கப்பட்ட அவல வாழ்வு. அவ்வளவு வீரமும், மதிநுட்பமும், தொலைநோக்கும் வாய்ந்த அவர் ஏன் கடைசி நிமிடங்களில் தன் மக்களை அழியவிட்டு தானும் அழிந்துபோனார் என்பதே இன்று எல்லோர் மனதிலும் உழன்றபடியிருக்கும் கேள்வி.

அந்தக் கேள்விக்கான பதிலைக் காலம் சொல்லும். தான்தோன்றித்தனமான ஊகங்களை முன்வைத்து கயவர்கள் சொல்லக்கூடாது.

ஈழம் : ஒற்றுமை முழக்கமும் கொள்கைக் குழப்பமும்


தமிழீழ விடுதலையின் நான்காம் போர் 19/5 வேதனைகளுடன் முடிந்த பிறகு, தமிழக மற்றும் புலம்பெயர் தமிழர்கள் இடையில் புதியவகை ‘போதகர்கள்’ புறப்பட்டிருக்கிறார்கள்.



‘ஒற்றுமையுடன் இருப்போம்!

ஆயுதப் போராட்டம் வேண்டாம்.

அரசியல் போரே ஒரே வழி

இராஜதந்திர நகர்வுகளே தீர்வு தரும்!’



ஆகியவை இந்தப் புதிய போதகர்களின் மந்திரங்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டார்கள். தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட முதல் நிலைத் தலைவர்கள் கொல்லப்பட்டுவிட்டனர் என்ற சிங்கள இந்திய உளவுத் துறைகளின் பரப்புரைகளை மறுத்துரைக்காமல் அல்லது அவை உண்மையாகவே இருந்தாலும் அந்த சரிவுகளிலிருந்து போராட்டத்தை மீட்டு எடுத்து வழி நடத்தும் முயற்சிகளில் இறங்காமல் மேற்கண்ட மந்திரங்கள் சில பிரமுகர்களால் ஓதப்படுகின்றன.



தமிழீழ விடுதலைப் போராட்டத்தை எதிரிகளிடம் சரணடையச் செய்வதற்கான அனைத்துக் கூறுகளையும் இந்த நான்கு வரி மந்திரம் கொண்டுள்ளது. கே.பி. என்றழைக்கப்படும் செல்வராசா பத்மநாபன் தொடக்கி வைத்த இந்தச் சரணாகதி மதம் புலம்பெயர் நாடுகள் கடந்து தமிழகத்திலும் வேர் பிடிக்க நுழைந்திருக்கிறது. ‘தமிழர்களாக ஒன்றிணைவோம்!’ என்ற சொற்றொடரின் பொருள் என்ன? இந்த அழைப்பு யாரை நோக்கி விடுக்கப்படுகிறது? இந்தச் சூழலில் இந்த அழைப்பின் தேவையும் நோக்கமும் யாவை? இந்தக் கேள்விகளுக்கான விடை தேடினால் சரணாகதி மதத்தின் ‘தத்துவம்’ புரியும்.



தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நெடிய வரலாற்றில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையைத் தமிழீழ மக்களின் அறுதிப் பெரும்பான்மையினர் ஏற்றுக் கொண்டுவிட்டனர். அவர்களைப் பொறுத்தவரை, ஒரு தேசம் ஓர் இயக்கம் ஒரே நோக்கம் - அது ஈழ விடுதலை, என்பது ஐயந்திரிபற நிறுவப்பட்ட கருத்து. ஆகவே, ‘ஒன்றிணைவோம்’ என்ற வேண்டுகோள் ஈழத் தமிழர்களுக்குத் தேவைப்படவில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழீழ விடுதலையை ஆதரிக்கும் அனைவரும், தமிழீழ ஆதரவுப் போராட்டங்களில் எந்தக் காலத்திலும் ஒன்றுபட்டுத்தான் நிற்கிறார்கள்.



நடந்து முடிந்த ஈழப் பேரவலத்தைத் தடுக்கும் நோக்கில் நடத்தப்பட்ட அனைத்துப் போராட்டங்களிலும் தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளும் இயக்கங்களும் சிறு உணர்வாளர் குழுக்களும் முரண்பட்டு மோதிக் கொள்ளவில்லை. மாறாக, சில கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும் ஒரு இலக்கு நோக்கியே செயல்பட்டார்கள். 19/5க்குப் பிறகான தமிழீழ ஆதரவு அரசியற் செயல்பாடுகளில் சில முரண்கள் தமிழ்த் தேசிய இயக்கங்களிடையே முதன்மைப் படுத்தப்படுகின்றன.



• தமிழ்த் தேச விடுதலையும் தமிழீழ விடுதலையும் ஒருங்கிணைந்த புரட்சிகர நடவடிக்கைகளாக அணுக வேண்டும்.

• இந்தியாவைத் தமிழினம் தமது பகை சக்தி என்று புரிந்து கொண்டு அதனடிப்படையிலேயே எதிர்கால இனவிடுதலைப் போராட்டத்தைத் திட்டமிட வேண்டும்.

- இவை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் நிலைப்பாடுகள்.

• தமிழீழ விடுதலையே முதன்மையானது. தமிழ்த் தேச விடுதலை இரண்டாம் கட்டத்திற்குத் தள்ளப்படவேண்டியது.

• இந்தியாவைத் தமிழீழ அரசியலின் நேச சக்தியாக மாற்றும் வகையில் அணுக வேண்டும்.

- இவை தமிழர் தேசிய இயக்கத்தின் நிலைப்பாடுகள். இவை தவிர வேறு சில முரண்கள் இருப்பினும், இன்றைய அரசியல் தளத்தில் விவாதப் பொருட்களாக இருப்பவை இவ்விரண்டு முரண்கள் மட்டுமே. இந்த கோட்பாட்டு மாறுபாடுகள் இருப்பதால், த.தே.பொ.க. வும், த.தே.இ.யும் மல்லுக்கு நிற்கவில்லை. அவரவர் தளங்களில் இவ்வியக்கங்கள் தமிழீழ விடுதலை தொடர்பான பணிகளை இடையறாது மேற்கொண்டு வருகின்றன. இம்முரண்கள் தவிர, தமிழகத்தில் ஈழவிடுதலையை ஆதரிப்போர் இடையில் ஈழவிடுதலை குறித்த பெரிய முரண்கள் ஏதுமில்லை!

‘நாம் தமிழர்’ என்ற பெயரில் கடந்த 18ஆம் நாள் மதுரையில் நடத்தப்பட்ட மாநாட்டில் அருட்தந்தை ஜெகத் கஸ்பர் ஆகியோர், ‘தமிழர்களாக ஒன்றிணைவோம்’ என்ற வேண்டுகோளை விடுத்திருக்கிறார்! இந்த வேண்டுகோள் யாருக்கு விடுக்கப்படுகிறது? கட்சித் தமிழன் என்றால்… தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., சி.பி.எம்., சி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகளில் உள்ள தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதா ‘நாம் தமிழர்’ கொண்டுள்ள விருப்பம்.?

ஆம் எனில் அது போகாத ஊருக்கு வழி தேடும் முயற்சி. ஆனால், அம்மாநாடு வலியுறுத்திய செய்தி, தமிழ்த் தேசிய அரசியல் நடத்தும் கட்சிகள், இயக்கங்கள் தனித்துச் செயல்படுகின்றன.. அவை ‘நாம் தமிழர்’ என்ற குடையின் கீழ் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான்!

செல்வராசா பத்மநாபனும் புலம்பெயர் தமிழர்களிடையே ‘ஒன்றிணைவோம்’ என்றுதான் பரப்புரை செய்கிறார். இவர் வேண்டுகோள் விடுப்பது யாருக்கு? தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையை ஏற்றுக் கொண்டு பல்லாண்டு காலமாக ஒன்றிணைந்து செயல்படும் ஈழத்தமிழர்களிடத்தில்! கே.பி. யின் வேண்டுகோளின் உண்மையான பொருள், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையை ஒதுக்கிவிட்டுத் தன் தலைமையின் கீழ் புலம்பெயர் தமிழர்கள் ஒன்று திரள வேண்டும் என்பதே!

தமிழ்நாட்டில் ‘தமிழ்த் தேசியம்’ என்ற கோட்பாட்டுக் குடையின் கீழ் ஏற்கெனவே திரண்டு நிற்கும் பெருந்திரளை நோக்கி ‘ஒன்றுபடுங்கள்’ என்று ‘நாம் தமிழர்’ அறைகூவல் விடுப்பதற்கும் கே.பி.யின் அழைப்பிற்கும் அடிப்படையான ஒற்றுமைகள் உள்ளன.

கே.பி. முன்வைக்கும் அணுகுமுறைகள்:

தமிழீழ விடுதலைக்கான போராட்டம் இனி அரசியல் வழியில் மட்டுமே முன்னெடுக்கப்படும். கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டது போன்ற ‘வன்முறை’ வழிகள் இனி பலன் தராது. இந்திய சிங்கள அரசுகளுடன் நல்லுறவின் அடிப்படையில் தமிழர்களுக்குத் தேவையான உரிமைகளைப் பெற வேண்டும். முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மூன்றரை இலட்சம் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, கவனமாகச் செயல்படவேண்டும். (இவை தவிர ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ அமைப்பதும் இத்தலைப்பின் கீழ் அடங்கும். ஆயினும் இத்தலைப்பு இக்கட்டுரையின் எல்லைக்கு வெளியே இருப்பதால் அது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.) ‘நாம் தமிழர்’ மாநாட்டில் இதே அணுகுமுறைகளை வழிமொழியும் கருத்துகளே பேசப்பட்டுள்ளன.

அருட்த்தந்தை ஜெகத்கஸ்ப்பர் : ‘தி.மு.க., அ.தி.மு.க, பா.ம.க, ச.ம.க., வி.சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள். அனைத்துச் கட்சிகளும் தமிழர் என்ற அடிப்படையில் ஒன்று திரள வேண்டும்’.

‘மூன்றரை இலட்சம் தமிழர்களை வதை முகாம்களிலிருந்து மீட்பதற்காக, ராஜபக்சே காலில் கூட விழத் தயார்’.

இவை தவிர அம்மாநாட்டின் ஒட்டுமொத்த கருத்தியலும் ‘இந்திய அரசிடம் இணங்கிப் போவது, எந்த அரசியல் கட்சியையும் பகைத்துக் கொள்ளாமலிருப்பது குறிப்பாக தி.மு.க.வுடன் சுமூக உறவு பேணுவது என்ற அடிப்படையிலேயே அமைந்திருந்தது. மாநாட்டில் உரையாற்றிய பலர் இந்த அடிப்படையிலேயே பேசினர். திரைப்பட உதவி இயக்குனர்கள் நடத்திய நாடகத்தில், கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரை விமர்சிக்கும் காட்சி ‘நாம் தமிழர்’ மாநாட்டில் நீக்கப்பட்டது.

‘ஒன்றிணைவோம்’ என்ற அழைப்பு வீரம் செறிந்த போராட்டங்களை நடத்துவதற்காக அல்ல, எதிரிகளிடம் சரணடைவதற்காகத்தான் என்பதை தமிழீழ அரசியலில் கே.பி.யின் செயல்பாடுகளும் தமிழக அரசியலில் ‘நாம் தமிழர்’ மாநாடும் நமக்கு உணர்த்தி நிற்கின்றன.

ஒட்டுக் குழுக்களின் ‘ஒற்றுமை யுணர்வு’!

தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றில் மாபெரும் இடர்களைத் தோற்றுவித்த ஒட்டுக் குழுக்கள் எப்போதும் முன்வைத்த மந்திரம் - ‘ஒன்றுபடுவோம்’ என்பதே. தமிழீழ தேசியத் தலைவர் வே. பிரபாகரன் இந்தச் சதிகார ‘ஒற்றுமை’ குறித்து ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார். தற்போதைய ‘ஒன்றிணை வோம்’ மந்திரத்தின் பின்னாலிருக்கும் சதிவலையை உணர வேண்டிய அவசியம் இருப்பதால், விடுதலைப் புலிகளின் கடந்த கால அனுபவப் பதிவுகளை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

"தனித்து நின்று போராடி தமிழீழம் காணவேண்டும் என்ற இறுமாப்போடு நாம் இயங்கவில்லை. ஆயுதப் போராட்டப் பாதையை வரித்துக் கொண்ட சகல விடுதலை அமைப்புகளும் எமது பொது எதிரியை எதிர்கொண்டு போராட வேண்டும் என்பதே எமது ஆவல்.

"…நாம் ஒற்றுமையை வரவேற்கவே செய்கிறோம். ஒற்றுமையின் தேவையை உணர்கிறோம். ஆனால் இந்த ஒற்றுமையானது தமிழ் ஈழப் புரட்சி இயக்கத்திற்கு அப்பாற்பட்ட அந்நிய சக்திகளின் அழுத்தங்கள் காரணமாகவோ, அன்றி பிற்போக்கு சந்தர்ப்பவாத அரசியல் சக்திகளின் நெருக்குதல் காரணமாகவோ, அவசரப்பட்டுச் சமைத்த சாம்பார் ஒற்றுமையாக அமைவதை நாம் விரும்பவில்லை.

"…நாம் விரும்புவது உண்மையான, நிரந்தர ஒருமைப்பாட்டையே. இந்த ஒற்றுமையானது புரட்சிகரத் தலைமையை கட்டியெழுப்பும் இலக்கில், வரலாற்றுப் போக்கினை உணர்ந்து கொண்ட தெளிவில், புரட்சிகர இலட்சியங்களிலிருந்து வழுவாத உறுதிப்பாட்டில், ஆழமான சகோதரத்துவப் புரிந்துணர்வில் புரட்சிகர சக்திகள் மத்தியில் ஏற்பட வேண்டிய ஒன்றாகும்".

(வே. பிரபாகரன் - விடுதலைப்புலிகள் - இதழ் - ஏப்ரல் 85)

ஈபிஆர்எல்எஃப், டெலோ, ப்ளாட், ஈரோஸ் உள்ளிட்ட ஆயுதக் குழுக்கள் இயங்கி வந்த சூழலில், இக்குழுக்களில் பெரும்பான்மை யானவை இந்திய அரசின் வளர்ப்புப் பிள்ளைகளாக வலம் வந்த நிலையில், விடுதலைப் புலிகள் மட்டுமே தமிழீழ மக்களை மட்டும் நம்பி இயங்கினர். பிற ஆயுதக் குழுக்கள் தமது இந்திய எஜமானர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் முயற்சியில் ‘விடுதலைப் புலிகள் ஒன்றிணைந்து செயல்படாதவர்கள். அவர்கள் தன்னிச்சையாகச் செயல்படும் எதேச்சாதிகாரக் குழுவினர்’ என்று பரப்புரை செய்தன. இந்தப் பரப்புரைக்குப் பதில் தெரிவிக்கும் நோக்கில் எழுதப்பட்ட கட்டுரையின் ஒரு பகுதியே மேலே கண்டது. இது தொடர்பான விவாதங்கள் விடுதலைப் புலிகளின் தலைமையினால் மிக ஆழமாகவும் நேர்மையாகவும் மேற் கொள்ளப்பட்டன. விளைவாக, 1985 ஏப்ரல் 10ஆம் நாள் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.

1. தமிழீழ விடுதலைப் புலிகள்

2. தமிழீழ விடுதலை இயக்கம் (T.E.L.O)

3. ஈழப்புரட்சி அமைப்பு (E.R.O.S)

4. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (E.P.R.L.F)

ஆகிய நான்கு அமைப்புகளும் ஒரு உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டன.

1. ஸ்ரீலங்கா ஆதிக்கத்திலிருந்தும் அடக்கு முறையிலிருந்தும் எமது தாயகத்தின் சுதந்திரத்தையும், இறைமையையும் வென்றெடுத்தல்.

2. இலங்கைவாழ் தமிழ்த் தேசிய இனத்தின் சுய நிர்ணய உரிமையை நிலை நாட்டுகின்ற தனியரசைத் தவிர்த்த வேறெந்த குறைந்தபட்ச சமரசத்திட்டத்தையும் அங்கீகரிப்பதில்லை.

3. பரந்துபட்ட மக்களின் பங்களிப்போடு பரிணாமம் பெறும் வெகுஜன ஆயுதப் போராட்டத்தை (மக்கள் போராட்டத்தை) எமது போராட்டப் பாதையாகக் கொள்ளுதல்.

4. தேசிய சுதந்திரப் போராட்டத்தோடு சோசலிசப் புரட்சியையும் முன்னெடுத்து, சுதந்திரத் தாய் நாட்டில் சோசலிச சமுதாயத்தைக் கட்டியெழுப்புதல்

5. உலக ஏகாதிபத்திய நவகாலனித்துவப் பிடியிலிருந்து எமது தேசத்தைப் பு+ரணமாக விடுவித்து, அணி சேராக் கொள்கையைக் கடைப்பிடித்தல்

- இவையே ஒருங்கிணைப்பிற்கான அடிப்படைக் கோட்பாடுகள்.

(விடுதலைப் புலிகள் இதழ் - மே 85)

இந்த ஐந்து கோட்பாடுகளில் ஒன்றிலிருந்தும் வழுவாமல் இன்று வரை விடுதலைப் புலிகள் போராடி வருகின்றனர். இதே உடன்படிக்கையில் கையொப்பமிட்ட பிற மூன்று குழுக்கள் ஈழ விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுக்கும் ஒட்டுக்குழுக்களாக மாறியதை வரலாறு உணர்த்தியுள்ளது. ‘ஒன்றிணைவு’ குறித்து அதிகமாகப் பேசிய அனைத்து ஆயுதக் குழுக்களும் விடுதலைப் போருக்கு எதிரான முகாம்களில் பதுங்கியிருந்த படிதான் செயல்பட்டன.

ஒட்டுக் குழுக்கள் அனைத்தும் இந்திய உளவுத் துறையான ‘ரா’வின் ஆசியோடு தமிழகத்தில் தங்கிக் கொண்டு, அனைத்துவிதச் சீரழிவுகளுக்கும் ஆட்பட்டு, புரட்சிகர வசனங்களைப் பத்திரிகைகளில் எழுதுவதன் வழி மட்டுமே தமது ‘விடுதலைப் போரை’ நடத்திக் கொண்டிருந்தன". விடுதலைப் புலிகள் இவர்களை, ‘காகிதப் புரட்சியாளர்கள்’ என்று அழைத்தனர். ஆனால், இந்த ஒட்டுக் குழுக்கள் அனைத்தும் செய்த ஒரே பரப்புரை, ‘விடுதலைப் புலிகள் ஒன்றிணைய மறுக்கிறார்கள்’ என்பதுதான்!

ஆக, ‘ஒன்றிணைதல்’ என்ற சொல்லின் பின்னே அன்று முதல் இன்றுவரை ‘இந்திய ஏகாதிபத்தியத்தின் சதிகார முகம்’ ஒளிந்து கொண்டுள்ளது. கே.பியும், ‘நாம் தமிழர்’ அமைப்பும் வலியுறுத்தும் ‘ஒற்றுமை’க்கு என்ன கோட்பாட்டு நிபந்தனைகள் உள்ளன?

தனித் தமிழீழம் அமைய வேண்டும் - என்பதை இவ்விரு முகாம்களும் பேச்சளவில் ஒத்துக் கொள்கின்றன. ஆனால், அதைச் சாதிப்பதற்கான செயல்திட்டம் என்ன என்பதை ஆராயும் போதுதான் இவர்களின் சொல்லடுக்குகளுக்குப் பின்னால் உள்ள உண்மை முகங்கள் தெரிகின்றன.

இந்திய அரசோடு நல்லுறவு பேணிக் கொண்டு, தி.மு.க, காங்கிரஸ், அ.தி.மு.க, தே.மு.தி.க, ச.ம.க, பா.ஜ.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளையும் இணைத்துக் கொண்டு, ராஜபக்சேயின் காலில் விழுந்தாவது அரசியல் போராட்டங்களை மட்டுமே முன்னெடுத்து இராஜதந்திர வழியில் தனித் தமிழீழம் அமைக்கப் போகிறார்கள்!

இவ்வளவு ‘எளிய வழிகள்’ இருக்கும்போது, தமிழீழ விடுதலைப் புலிகள் எதற்காக 35 ஆண்டுகள் சமர் புரிந்தார்கள் என்று வியக்க வைக்கும் செயல்திட்டங்கள் ‘இவை’! எதிரிகளிடம் சரணடைந்து விடக்கோரும் திட்டம் இது. எல்லா சரணடைவுகளுக்கும் ‘ஒன்றிணைவு’ என்ற சொல்லே மூல மந்திரம்!

இதே போன்ற சூழலை முப்பது ஆண்டுகளுக்கு முன் எதிர்கொண்ட தலைவர் பிரபாகரன் பின்வருமாறு எழுதியுள்ளார், ‘ஒற்றுமை என்ற உயரிய நோக்கினை மக்களை ஏமாற்றும் வெறும் பிரசார சாதனமாகக் கையாள்வது மிகவும் கீழ்த்தரமான அரசியற் சந்தர்ப்பவாதமாகும்’ (விடுதலைப் புலிகள் இதழ் - ஏப்ரல் 85)

ஒரு தேசிய இனத்தின் விடுதலையைக் கெஞ்சிப் பெற முயல்வது, யாரையும் பகைத்துக் கொள்ளாமல் வாங்க நினைப்பது, போராட்டமே நடத்தாமல் அடைய முனைவது ஆகிய குணநலன்கள் கோழைத்தனத்தின் தன்னலத்தின் வெளிப்பாடுகள். 19/5க்குப் பிறகு மேலும் வீறு கொண்டு எழுந்து போராட வேண்டிய தமிழினம் ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தது.

தமிழ்த்தேசிய அரசியலைக் களமாக முன்வைக்கும் த.தே.பொ.க., த.தே.வி.இ. உள்ளிட்ட கட்சிகளும், தமிழர் உரிமை என்றளவில் வீரியமாகச் செயல்படும் பெ.தி.க., தமிழர் தேசிய இயக்கம் உள்ளிட்ட கட்சிகளுமே தமிழீழ விடுதலை அரசியலை மீண்டும் தமிழகத்தில் களமேற்றியுள்ளன. இவையே ‘அமைப்புகள்’ என்றளவில் தொடர்ந்து களத்தில் நிற்பவை. ஒரு புரட்சிகர விடுதலை இயக்கம் வெற்றிகரமாக இயங்கும்போது அதற்கு ஆதரவாக வீரர்கள், கோழைகள் அனைவரும் குரல் எழுப்புவர். அவ்வியக்கம் சரிவைச் சந்திக்கும்போதுதான் எந்தக் குரல் தொடர்ந்து ஒலிக்கிறது, எது கரைந்து காணாமல் போகிறது என்பதை அறிய முடியும். வீரம் - கோழைத்தனம் ஆகிய இரண்டும் இரு இயல்புகள். ஒரு மனிதரின் கோழைத்தனம் குறித்து நாம் குறைபட இயலாது. ஆனால் தன்னலம் ஆபத்தானது. அது நல்லவர்களைக் காட்டிக் கொடுத்துவிடும்.

‘சரணாகதி மதத்தவர் தம்மளவில் ஒதுங்கிக் கொண்டால், அது குறித்து நமக்கு விசனம் தேவையில்லை. அவர்கள் ராஜபக்சே, சோனியா, கலைஞர் கருணாநிதி உள்ளிட்டோர் கால்களில் விழுவதை நாமும் வேடிக்கை பார்க்கலாம். ஆனால், ‘ஒற்றுமை’ என்ற போர்வையில் இனவிடுதலைப் போராட்டத்தில் உள்ள அனைவரையும் காலில் விழ வைக்கும் திட்டம் அவர்களுக்கு இருந்தால், அது ஆபத்தானது.

"(எமது பாராளுமன்ற அரசியல்வாதிகள்) எமது மக்களது தேசியப் பிரச்சினையின் முழுவடிவத்தினையும் அதற்கான நிரந்தரத் தீர்வு என்ன என்பதையும் இந்திய அரசிடமோ சிங்கள அரசிடமோ உலகத்திற்கோ தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கவில்லை. தனியரசு தவிர்த்த சலுகைகள் பெறுவதற்காகவே இவர்கள் கொழும்புக்கும் டெல்லிக்கும் ராஜதந்திரக் காவடி எடுத்து வந்தனர். ஒரு தேசிய இன மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதா
கக் கூறிக் கொள்ளும் ஒரு தலைமை, அம்மக்களின் அடிப்படைப் பிரச்சினையிலும் அதற்கான அரசியற் தீர்விலும் குழம்பி நின்று, ‘மற்றவர்கள் பிரச்சினையைத் தீர்த்து வைக்கட்டும்’ என்ற மதி நுட்பமற்ற தந்திரோபாயத்தைக் கடைப் பிடித்து வந்ததாலேயே இந்தச் சிக்கல் ஏற்பட்டது.

(விடுதலைப் புலிகள் இதழ் - மே 84)

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே புலிகள் சந்தித்துக் கெல்லி எறிந்த கருத்துதான் ‘சரணாகதி மதம்’ என்பது. நபர்கள் மாறியுள்ளனர். கருத்து ஒன்றுதான் - என்பதை மேற்கண்ட தலையங்க வரிகளைப் படிக்கும் போது உணர முடிகிறது. புலிகள் அடையாளம் காட்டிய ‘ராஜதந்திர காவடி’யைத் தமிழகத் தமிழ்த்தேசியர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

இந்தச் சூழல் மிகவும் சிக்கலானது. போராடிய இயக்கம் இன்று உறங்கு நிலையில் உள்ளது. தலைமையின் வழிகாட்டுதல் இல்லாமல் ஒரு இனமே அல்லாடுகிறது. மூன்றரை இலட்சம் மக்கள் சொந்த மண்ணில் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். எதிரிகளோ களியாட்டம் போடுகின்றனர். ஒட்டுக் குழுக்களின் பரப்புரைகளில் பிணம் தின்ற ஓநாய்களின் உற்சாக ஊளையைக் கேட்க முடிகிறது. எங்கும் வேதனை, சோகம், மன இறுக்கம், தவிப்பு, மனநோய்க்கு ஆளாகிவிடுவோமோ, மாரடைப்பு வந்து விடுமோ என்ற பதைப்பு!

ஆனால், இதுவும் ஒரு போராட்டச் சூழல் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இனவிடுதலைப் போர் நடக்கிறது என்பதன் அறிகுறிகள்தான் இவை. இத்தனை ஆண்டுகள் வெற்றிச் செய்திகளை மட்டுமே கேட்டுப் பழகினோம். இப்போது பின்னடைவுகளை ஏற்க இயலவில்லை. வெற்றியின் களிப்பில் பங்குபெற்ற நம் அனைவருக்கும் இந்தப் பின்னடைவைச் சரி செய்யும் பொறுப்பும் கடமையும் உண்டு.

எந்தப் புலிகள் நம்மைப் புன்னகைக்க வைத்தார்களோ… அந்தப் புலிகள் முகங்களில் மீண்டும் புன்னகை பு+க்க வேண்டும். எந்தப் புலிகள் நமக்குத் ‘தமிழர்’ என்ற பெருமிதத்தை இறுமாப்பை மீட்டுத் தந்தார்களோ… அந்தப் புலிகள் மீண்டும் இறுமாப்படையச் செய்ய வேண்டும். இவையே போராடும் இனத்திற்குத் தேவையான குணங்கள்.

"சுதந்திரத்தை வென்றெடுக்காது போனால் நாம் அடிமைகளாக வாழ வேண்டும். தன்மானமிழந்து ‘தலைகுனிந்து’ வாழ வேண்டும். பயந்து பயந்து பதட்டத்துடன் வாழ வேண்டும். படிப்படியாக அழிந்து போக வேண்டும். ஆகவே, சுதந்திரத்திற்காகப் போராடுவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை."

(வே. பிரபாகரன் - விடுதலைப்புலிகள் இதழ் - மே 84)

இவையே தலைவர் பிரபாகரன் கடைபிடிக்கும் கோட்பாட்டு வரிகள். அவரோ, புலிகள் இயக்கமோ ஒரு போதும் ‘சரணாகதியை’ ஏற்றதில்லை. எதிரிகள் நமது இனத்தை அழிக்க முடிவு செய்துவிட்ட பிறகு, அவர்களிடம் சரணடைந்தாலும் மரணம்தான். திருப்பி அடித்தாலும் மரணம்தான். இவற்றில் இரண்டாவது வழியில்தான் விடுதலைக்கான வாய்ப்பு இருக்கிறது. வெற்றிக்கான சாத்தியம் இருக்கிறது.

‘சரணாகதி’ என்பது ஒரு இனத்தை அழித்தொழிக்கும் திட்டம் ஆகும். ‘சிங்களர்கள் கோபப்படும்படி எதுவும் செய்ய வேண்டாம்’ என்று தலைவர் கருணாநிதி கூறியதற்கும், கே.பி., ‘நாம் தமிழர்’ முன்வைக்கும் ‘ஒற்றுமை’ திட்டங்களுக்கும் பாரிய ‘ஒற்றுமை’ உள்ளது என்பதைக் கவனித்தால் நிலைமையை விளங்கி்க் கொள்ளலாம்.

‘சரணாகதி மதத்தவர்’ அனைவரும் எழுச்சி மிக்க வசனங்கள் பேசுகின்றனர். தலைவர் பிரபாகரன் குறித்து சிலாகிக்கின்றனர். இவையெல்லம், புரட்சிகர அடையாளங்கள் ஆகா. மாறாக, நடவடிக்கைகள் மட்டுமே அடையாளத்தைத் தீர்மானிக்கும். இயேசு ஒரு கலகக்காரராக வாழ்ந்தவர். மத நிறுவனங்களைக் கடுமையாக எதிர்த்தவர். ஜெருசலேம் நகருக்குத் தம் சீடர்களுடன் சென்ற இயேசு தேவாலயத்தின் முற்றத்தில் வணிகர்கள் கடைவிரித்திருந்ததைக் கண்டு துணுக்குற்றார். அவ்வணிகர்களை அங்கிருந்து விரட்டுகிறார். புறாக்களை விற்பவனிடமிருந்து அப்புறாக்களைப் பறித்துப் பறக்க விடுகிறார். அதிர்ச்சியுடன் இச்சம்பவத்தைப் பார்க்கும் மதபோதகர்களை நோக்கி, ‘இவ்விடம் வழிபாட்டுக்கான இல்லம் என்று எழுதப்பட்டுள்ளது. நீரோ இதை வழிப்பறிக்காரர்களின் குகை யாக்கிவிட்டீரே’ என்றார். (மத்தேயு 21:13) இது மட்டுமல்லாது, மதத் தலைவர்களையும், பிரசாரகர்களையும் இயேசு மிகக் கடுமையாகச் சாடினார். மத்தேயு அதிகாரம் 23 முழுவதும் மதகுருக்கள் மீதான இயேசுவின் கடுஞ்சொற்கள் நிறைந்தது.

இயேசு இறந்து 300 ஆண்டுகளுக்குப் பிறகு கான்ஸ்டான்டின் என்ற ரோம அரசன் தனது வர்க்க நலன்களுக்காக, கிறித்துவத்தை ஒர் ஆதிக்க வர்க்க மதமாகக் கட்டமைத்தான். இன்று தேவாலயங்கள் வணிகமயமாகிவிட்டன. மொத்த வணிகமும் இயேசுவின் பெயரால் நடக்கிறது. ‘நீங்கள் ஒருவரையும் பிதா என்று சொல்லாதீர்கள். பரலோகத்தில் இருப்பவரே உங்கள் பிதா’ என்றார் இயேசு. (மத்தேயு 23:9) இன்று கிறித்துவப் பாதிரியார்கள் அனைவரும் ‘பிதா’(Father) என்றுதான் அழைக்கப்படுகின்றனர். இதுவும் இயேசுவின் முன்னிலையில்தான் நடக்கிறது. யு+த மதம் என்னென்ன பாவங்கள் செய்கிறது என்பதற்காக இயேசு ஒரு கலகக்காரராகப் போராடி கொல்லப்பட்டாரோ, அப்பாவங்களைக் காட்டிலும் அதிகமான பாவங்களை கிறித்துவம் புரிந்துவருகிறது - இயேசுவின் திருப்பெயரால்!

சமூக மாற்றத்திற்குப் போராடும் இயக்கம் சரியும்போது அதைச் சரிவிலிருந்து மீட்டு அதற்கு வலுவு+ட்டத் தவறினால், இதுபோன்ற விபரீதங்கள் தவிர்க்கவியலாதவை. இதே வழியில்தான் புலிகள் சரிந்த நிலையில், சரணாகதி மதத்தினர் புலிகளின் பெயராலெயே ‘ஆயுதப் போராட்டத்தை வன்முறை’ என்று அறிக்கை விடுகின்றனர். இதே போக்கில் சரணாகதி மதம் வளர்ந்தால், புலிகள் மீண்டு வருவதே இடர் நிறைந்ததாகி விடும். ஏனெனில், இடைப்பட்ட காலத்தில் இவர்கள் நமது போர்க்குணத்தை மழுங்கடித்து மண்டியிட்டு மனுப்போடப் பழக்கி விடுவார்கள்.

நமது மதிப்புக்குரிய இயக்குனர் சீமான் அவர்களும் "நாம் தமிழர்" பொதுக் கூட்டத்தில் ஜெகத் கஸ்பருடைய உரையின் சாரத்தை மறுத்துப் பேசவில்லை. மாறாக அவரும் இதே தொனியில் பேசினார் என்ற செய்தி நம்மை ஆழ்ந்த வருத்தத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது. இயக்குனர் சீமானை இந்த ஒரு பொதுக் கூட்டத்தின் பங்கேற்பைக் கொண்டு மதிப்பிட இயலாது. தமிழீழ விடுதலைக்காக அவர் புரிந்த ஈகங்கள் அதிகம். தமிழ் இளைஞர்களிடையே இனவுணர்வைத் தட்டியெழுப்பியதில் அவர் பங்கு அளப்பரியது. இயக்குனர் சீமான், தான் நிற்பது எதிர்ப் போராட்டக் களத்தில் என்பதை உணர வேண்டும். ‘ஒற்றுமை, சமரசம்’ ஆகியவை போராட்ட உத்திகள் என்று அவர் கருதினால் அது சரியல்ல. அவர் இந்நிலையபாட்டிலிருந்து மீள வேண்டும். அவர் தற்போது எடுத்திருக்கும் நிலைப்பாடு அவர் உயிரினும் மேலாக மதிக்கும் தலைவர் பிரபாகரன் வெறுத்து ஒதுக்கிய நிலைப்பாடு என்பதை இக்கட்டுரையின் மேற்கோள் சான்றுகளே தெரிவிக்கும்.

"இறுதியாக ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். தமிழீழம் என்றோ ஒரு நாள் உதயமாவது திண்ணம். சமதர்ம சமூகமாக எமது நாடு வளம் கொழிப்பது திண்ணம். இந்நம்பிக்கையில் ஆன்ம உறுதி தளராது விடுதலைப் பாதையை நோக்கி வீறு நடை போடுவோமாக" - இவையும் தலைவர் பிரபாகரன் எழுதிய வரிகளே!

விடுதலைப் புலிகளின் பதிலடி!


யாழ் பகுதிகளில் சிங்கள ராணுவத்தின் கோட்டை போன்று செயல்பட்ட குருநகர் ராணுவ முகாம் (1984 பிப்ரவரி 24) தகர்க்கப்பட்டது. விமானப்படையினர் சுன்னாகத்திலும் தெல்லிப்பளையிலும் அப்பாவி மக்களைச் சுட்டுக்கொன்றதற்கு பதிலடியாக, அத்துமீறல் செய்வதற்கென்றே உருவாக்கப்பட்ட "கஜவாகு ரெஜிமெண்ட்' பிரிவைச் சேர்ந்த 15 பேரை வாகனத்தில் வைத்தே, புலிகள் குண்டுவீசி அழித்தனர்.

"மக்களே மகத்தானவர்கள் - அவர்களுக்காகவே இயக்கங்களும் இயக்க நடவடிக்கைகளும்' என்ற அரசியல் சூத்திரத்தின் அடிப்படையில் சிங்கள ராணுவத்தின் கொடுமைகளுக்குப் பதிலடி கொடுக்க மக்களையே விடுதலைப்புலிகள் தயார் செய்து தாக்குதல் நடத்திய நிகழ்ச்சி யாழ்ப்பகுதியில் முதன்முதலாக நடந்தது.

யாழ் நகரத்தில் நாகதீப-கயிலைத்தீவு யாத்திரீகர்களின் வழிபாட்டுக்கென்று புத்த விகாரையில் வழிபாடு நடத்த, இலங்கையின் தெற்குப்பகுதிகளில் இருந்தே புத்த குருமார்களை அழைத்து வந்தனர். இவர்கள் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் யாழ்ப்பகுதி வந்து, ராணுவ ஜீப்புகளில் ஏறி, புத்தவிகாரைகளுக்கு வந்து வழிபாடு நடத்துவதைப் பார்த்து மக்கள் எரிச்சலுற்றனர்.

ஒரு நாள் யாழ் நகரில் அமைந்த புத்தவிகாரைக்குச் செல்லும் வழியெங்கும் தடைகளை ஏற்படுத்தினர். ஸ்டான்லி வீதியிலிருந்த புத்த விகாரையும் ஆஸ்பத்திரி வீதியிலிருந்த சிங்கள மகா வித்தியாலயத்தையும் மக்களே தகர்த்தனர். இவை இரண்டும் சிங்கள ராணுவத்தின் முகாம்களாகவே செயல்பட்டு வந்தன என்பதாலும், மாதாகோயில் ஒன்று தாக்கப்பட்டதாலும் மக்கள் கூடுதல் ஆத்திரத்துக்கு ஆளானார்கள். மக்கள் கடும் ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் கைக்குண்டுகளையும் வீசினர். கைக்குண்டுகளை வீச, புலிகளே மக்களுக்குப் பயிற்சி அளித்தனர்.

புலிகளின் வரலாற்றில் கடுமையான காவல்கொண்ட மட்டக்களப்பு சிறைச்சாலையை உடைத்து, அங்கு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிர்மலா நித்தியானந்தனை மீட்டது, கடற்படையினரை, பொலிகண்டிப் பகுதியில் மோட்டார் படகில் சென்று தாக்கி ஆறுபேரைக் கொன்றது, வல்வெட்டித்துறைக்கு அருகில் நெடியநாடு என்ற இடத்தில் மூன்று கவச வண்டிகள், ஒரு டிரக், ஒரு ஜீப் சகிதம் சென்று வெறியாட்டம் போட்டுத் திரும்பிக்கொண்டிருந்த 9 கமாண்டோ படையினரைத் தாக்கி அழித்தது, மாங்குளம் அருகே ஒட்டிசுட்டான் காவல் நிலையத்தில் கொரில்லாத் தாக்குதலை அடக்குவதில் சிறப்புப் பயிற்சி பெற்ற கமாண்டோ படையினரைத் தாக்கி, காவல்நிலையத்தின் கருவூலத்திலிருந்த ஆயுதங்களைப் பறித்தெடுத்தது ஆகியவை மிகமிக முக்கியமான சம்பவங்களாகும்.

புலிகளின் ஆயுதத் தேவையை நிறைவேற்றவும், கமாண்டோ படையினரின் கொட்டத்தை அடக்கவும் புலிகளால் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

மன்னார், கரவெட்டி மேற்கு, அச்சுவேலி, திக்கம், முல்லைத்தீவு, களுவாஞ்சிக்குடி, தொண்டமானாறு-பலாலி வீதி, தெல்லிப்பளைப் பகுதிகளில் மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தனித்தனி சமரில் 64 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் வடபிராந்திய சிங்கள ராணுவ தளபதி பிரிகேடியர் ஆரியப்பெருமா கொல்லப்பட்டார்.

புலிகள் தரப்பில் களுவாஞ்சிக்குடி தாக்குதலில் லெப்டினன்ட் ஆர்.பாமதேவா, திக்கத்தில காப்டன் ஞானேந்திர மோகன் என்கிற ரஞ்சன்லாலா ஆகிய இருவரும் மரணமடைந்தனர்.

மேலே கூறியவையே, விடுதலைப்புலிகளின் வரலாற்றில் 1975-1984-ஆம் ஆண்டுகளுக்குள் நடைபெற்ற சம்பவங்களின் சுருக்கம் ஆகும்.

1984-1987-இல் தமிழர் விடுதலைக்கூட்டணி மற்றும் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தலைவர்களின் கோரிக்கைகளுக்கேற்ப, ஏராளமான அளவில் இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு வந்த மக்களின் குழந்தைகள் படிப்புக்குத் தகுதி நிர்ணய வழிமுறைகளை எல்லாம் மூட்டை கட்டிவைத்துவிட்டு, ஈழத் தமிழர்களுக்கு என்று தனி ஒதுக்கீடு செய்து மாணவர்கள் கல்வி கற்கவும், பொறியியல், மருத்துவம், தொழில்நுட்பம் போன்ற உயர்கல்வி வசதிகள் பெறுவதற்கும் ஆணை பிறப்பித்தார் எம்.ஜி.ஆர்.
(எம்.ஜி.ஆரும் ஈழத்தமிழரும் - வே.தங்கநேயன்).

பின்னாளில், 27-4-1987-ஆம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்படுகிற கொடுமையைக் கண்டித்தும் விடுதலைப் புலிகளை ஆதரிக்கவேண்டிய வரலாற்று நெருக்கடி குறித்தும் எம்.ஜி.ஆர். சார்பில் பண்ருட்டி ராமச்சந்திரன் விளக்கிய பின்னர், விடுதலைப்புலிகளுக்கும், ஈரோஸýக்குமாக வழங்கிய நாலு கோடி ரூபாய்க்கான காசோலை குறித்து ஜெயவர்த்தனா அலறினார்.

அவர் பிரதமர் ராஜீவ் காந்தியைத் தொடர்புகொண்டு தெரிவித்த புகாரின் அடிப்படையில் விடுதலைப்புலிகளுக்கும் ஈரோஸýக்கும் அளித்த காசோலையை எம்.ஜி.ஆர். திரும்பப் பெற்றார். இது குறித்து விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் தனது "விடுதலை' நூலில் எழுதி இருப்பதாவது:



""ஈழத்தமிழர்களுக்குத் திரட்டிய நிதியை அம்மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் விடுதலை இயக்கங்களுக்குக் கொடுப்பதில் என்ன தவறு - இதனைப் பிரதமர் புரிந்துகொள்ளாதது ஏன்?'' என்று எம்.ஜி.ஆர். ஆதங்கப்பட்டார்.


தொடர்ந்து, ""அந்தக் காசோலையை வைத்திருக்கிறீர்களா? வங்கியில் போடவில்லையே'' என்றார்.

""அந்தக் காசோலை என்னிடம்தான் இருக்கிறது'' என்றேன்.

""அதை அமைச்சரிடம் (பண்ருட்டி ராமச்சந்திரனிடம்) கொடுத்துவிடுங்கள், நாளை இரவு வீட்டுக்கு வாருங்கள் எனது சொந்தப் பணத்திலிருந்து நான்கு கோடி ரூபாய் தருகிறேன்'' என்றார்.

""எனக்குப் போன உயிர் திரும்பி வந்ததுபோல இருந்தது. மறுநாள் இரவு எம்.ஜி.ஆரின் வீட்டுக்குச் சென்றோம். சொன்னபடி எங்களுக்கு நாலு கோடி ரூபாய் அளித்தார்'' என்றும் குறிப்பிட்டுள்ளார் பாலசிங்கம்.

""விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் தமிழ்நாட்டு அரசுக்கும் இடையில் நல்லுறவு நிலவியது. எமது இயக்கத்தின் மீதும் தலைவர் பிரபாகரன் மீதும் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். கொண்டிருந்த அன்பும் மதிப்புமே இந்த நல்லுறவுக்கு ஆதாரமாக விளங்கியது'' என்று குறிப்பிட்டுள்ளார்
(தகவல்: விடுதலை நூல்).

பாவை சந்திரன்


தமிழ்நாட்டை தமிழன் ஆளும் நாளே நன்னாள்

தமிழ்நாட்டை தமிழன் ஆளும் நாளே நன்னாள்

தரணிபுகழ வாழ்ந்துகாட்ட அதுவே முதல்நாள்



அரசியல் கோமாளிகள் ஆளும் தமிழ்நாட்டில்

அமைதியின்மை தன்வேரை ஆழச்செலுத்துறதே!

உழைப்போர் நிலை ஒவ்வொரு நாளும் தாழ்மையுற

ஊதாரிகள் படம் தாங்கி ஊர்முனை சிரிக்கிறதே!



கேரளா ஆந்திரா கர்நாடகா அவரவர் ஆட்சி செய்ய

கேடுகெட்டத் தமிழன் அவர்களாள கேட்டுவாங்கித் தின்கிறானே!

தன்இனத்தை தாழவைத்து தலையாட்டி கோடிசேர்த்து

தறுதலை பட்டம்பெற்று சிரித்து தம்பட்டம் அடிக்கிறானே!



தன்மானம் காக்க தன்எதிர்ப்பைக் காட்டும் தரணிவாழ் உயிர்களைப் பார்!

தன்மானம்இழந்து தன்னினத்தைஅழிக்க தர்க்கம்செய்யும் தமிழனைப் பார்!

கைஏந்தி வாழும்இவன் காலம்காட்டும் சங்கத் தமிழ் வாரிசா?þஅல்லது

கயவாளிக்குணம் பெற்றஇவன் காட்டுமிராண்டித் தலைமயிரா?



பேருக்குத்தான் தமிழனென்றால் பேரிடி இவன்தலை விழட்டும்

பிறப்பவர்கள் இனிமேலாவது பிறர்புகழ மானம் பெறட்டும்

நாய்களைப்போல் நரிகளைப்போல் நடித்துவாழ வேண்டாம்þபிறர்

நயவஞ்சகத்தில் நலம்பெற்று அவரை நக்கி வாழவேண்டாம்!



பிறர் கையில் தமிழகமோ விழிபிதுங்கி வெம்புது

பிறப்புரிமை பிறர் சுரண்ட பேச்சுத்திணறிக் கிடக்குது

உணர்வுபெற்று உனை உணர்ந்து ஓங்கி எழுடா தமிழா!-þபிற

ஊதாரிகள் ஓட ஓட உனது ஆட்சி படைடா தமிழா!