Photobucket

22 August, 2009

மூன்று கோரிக்கைகளை முன்வைத்து மகசீன் சிறையில் தமிழ்க் கைதிகள் இன்று காலை தொடக்கம் உண்ணாநிலைப் போராட்டம்

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 90 தமிழ் அரசியல் கைதிகள் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இன்று காலை உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

மகசீன் சிறைச்சாலையில் 96 தமிழ் கைதிகள் உள்ளபோதிலும் உடல்நிலை காரணமாக ஆறு கைதிகள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில் ஏனைய 90 கைதிகளும் இன்று சனிக்கிழமை காலை தொடக்கம் போராட்டத்தை தொடங்கி இருப்பதாக சிறைச்சாலையில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உண்ணாநிலைப் போராட்டம் தொடர்பாக மகசீன் சிறைச்சாலையில் இருந்து மலரவன் என்ற தமிழ் அரசியல் கைதி அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு நேற்று வழங்கிய சிறப்பு நேர்காணல் வருமாறு:

உங்களின் உண்ணாநிலைப் போராட்டத்தினை எப்போது தொடங்க உள்ளீர்கள்?

நாளை (இன்று) சனிக்கிழமை தொடங்கவுள்ளோம்.

உண்ணாநிலைப் போராட்டத்தில் என்ன கோரிக்கைகளை முன்வைத்து தொடங்க உள்ளீர்கள்?

எமது விடுதலையை வேண்டி மூன்று கோரிக்கைகளை முன்வைத்து எமது போராட்டத்தினை தொடங்க உள்ளோம்.

அந்த மூன்று கோரிக்கைகள் பின்வருமாறு:

(1) கடந்த 4 வருடங்களாக நாங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் எமது உறவுகள் எதுவித பொருளாதார உதவிகளும் இன்றி சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். எனவே எமது விடுதலையை வேண்டி - விடுதலை எமக்கு மட்டும் அன்றி எமது குடும்பங்களுக்கும் வேண்டி பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

(2) உள்நாட்டுப் போர் முடிவடைந்து சிவில் நிர்வாகம் நடைமுறையில் உள்ளதால் போர்க் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் சந்தேக நபர்களுக்கு பிணை அனுமதி வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

(3) பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்பு வைத்திருந்தார்கள் எனும் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைத்திருக்கும் சந்தேக நபர்களுக்கு புனர்வாழ்வு அளித்து உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

உங்களின் கோரிக்கைகளை யாருக்கு நீங்கள் அதிகாரபூர்வமாக அனுப்பி வைத்திருக்கின்றீர்கள்?

சிறிலங்காவின் நீதியமைச்சர் மிலிந்த மொறகொடவுக்கு அனுப்பியுள்ளோம்.

உண்ணாநிலைப் போராட்டத்தில் எத்தனை பேர் இறங்க உள்ளீர்கள்?

நாம் இருக்கின்ற பிரிவில் 90 பேர் இருக்கின்றோம். 90 பேரும் உண்ணாநிலைப் போராட்டத்தில் இறங்க உள்ளோம்.

விடுதலை வேண்டி கோரிக்கை விடுத்திருக்கின்றீர்கள். தடுத்து வைக்கப்பட்டிருந்த இத்தனை ஆண்டுகளில் உங்கள் மீது ஏதாவது குற்றங்கள் சுமத்தப்பட்டிருக்கின்றதா?

சிலருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும் அவை காலம் தாழ்த்தப்பட்டு வருகின்றதே தவிர அவர்கள்மீது எந்தவிதமான வழக்கு விசாரணைகளும் இன்றி காலம் தாழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

பிணை வழங்க வேண்டும் என ஒரு கோரிக்கையினை விடுத்திருக்கின்றீர்கள். அது தொடர்பான மேலதிக விபரம் அல்லது விளக்கத்தினை தரமுடியுமா?

எங்களின் வழக்குகளைப் பொறுத்தவரையில் பிணை அனுமதி உயர்நீதிமன்றத்தில்தான் தீர்மானிக்கப்படும். உயர்நீதிமன்றத்தில் என்றாலும் உயர்நீதிமன்றத்தில் இருந்து சட்டமா அதிபருக்கு அனுப்பி - சட்டமா அதிபர் மூலமாகத்தான் - அதுவும் சட்டமா அதிபர் உடன்பட்டால் மாத்திரமே பிணை கிடைக்கும். அவ்வாறு உடன்பட்டு எவருக்கும் பிணை கிடைத்ததாக இதுவரை தெரியவில்லை.

மகசீன் சிறைச்சாலையில் எத்தனை பேர் தடுத்து வைக்கப்பட்டு உள்ளீர்கள்?

96 பேர் உள்ளோம். உடல்நலப் பிரச்சினையால் ஆறு பேர் உண்ணாநிலைப் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் ஆகக்குறைந்த வயது, ஆகக்கூடிய வயது விபரங்களை தரமுடியுமா?

ஆகக்குறைந்த வயதில் 18 அல்லது 19 வயதில் ஒருவர் உள்ளார். வயதில் கூடியவர்கள் என்ற வகையில் 62 வயதில் உள்ளனர்.

குறிப்பாக இவர்கள் இலங்கையின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள்?

வடக்கு - கிழக்கு, மலையகம் உள்ளிட்ட எல்லாப் பகுதியைச் சேர்ந்தவர்களும் உள்ளனர்.

அனைவரும் எந்தக் காரணத்துக்காக கைது செய்யப்பட்டார்கள்?

சந்தேகதத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

நீங்கள் அனைவரும் (90-க்கும் அதிகமானோர்) எத்தனை ஆண்டுகாலமாக மகசீன் சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டுள்ளீர்கள்?

மகசீன் சிறைச்சாலையில் தொடர்ச்சியாக அல்லாமல் பல்வேறு சிறைச்சாலைகளில் இருந்து மாற்றப்பட்டு - மாற்றப்பட்டு கடைசியாக தற்போது மகசீன் சிறைச்சாலையில் இருக்கின்றோம். இவர்கள் ஒரு வருடம் தொடக்கம் நான்கு வருட வரையான காலப்பகுதியில் உள்ளவர்கள்.

உங்களின் உணவுத் தேவைகளோ அவை எந்தவகையில் சிறைச்சாலைகளில் நீங்கள் மாறி - மாறி சிறைச்சாலைக்கு - சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தாலும் உங்களின் உணவுத் தேவைகளோ அல்லது அத்தியாவசிய வசதிகளோ, படுக்கை வசதிகளோ எந்தளவில் இருக்கின்றன?

அத்தியாவசிய தேவைகள் என்று எங்களுக்கு எதுவும் சிறப்பாக எதுவும் செய்து தரப்படுவதில்லை. உணவு மட்டும் மற்றைய சிறைக் கைதிகளுக்கு வழங்கப்படுவது போன்று வழங்கப்படுகின்றது.

நீங்கள் எந்தவகையில் உயிர் அச்சுறுத்தலோ அல்லது தாக்குதல் அச்சுறுத்தலுக்கு உள்ளாகுகின்றீர்கள்?

சக கைதிகளால்தான் உயிர் அச்சுறுத்தல்கள் ஏற்படுகின்றன.

உண்ணாநிலைப் போராட்டத்தினை நடத்தும்போது சிறைக்காவலர்களோ அல்லது வேறு யாராவது உண்ணாநிலைப் போராட்டத்தினை கைவிடுமாறு ஏதாவது அச்சுறுத்தல்கள் விடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா?

சாத்தியக்கூறுகள் தற்போதைக்கு கூறுமளவுக்கு இல்லை. ஆனால், எதிர்காலத்தில் வரலாம்.

நீங்கள் அதனை எதிர்பார்க்கின்றீர்களா?

சிறைச்சாலை நிர்வாகத்தால் சில அழுத்தங்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கின்றோம்.

அனைத்து தமிழர்களும் உங்களுக்கு என்ன உதவியை வழங்கவேண்டும் என தமிழ் அரசியல் கைதிகள் சார்பில் எதிர்பார்க்கின்றீர்கள்?


எங்களுக்கு வெளியில் இருந்து அரசுக்கு கொடுக்கக்கூடிய அழுத்தங்களை தமிழ் மக்களும் அரசியல் கட்சிகளும் இணைந்து மேற்கொள்ள வேண்டும்
என எதிர்பார்க்கின்றோம்.

உங்களை யாராவது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்து சந்திப்பது உண்டா?

உண்ணாநிலைப் போராட்டங்களில் ஈடுபட்ட காலங்களில் வந்து சந்தித்தார்களே தவிர அதன் பிற்பாடு எவரும் வந்து சந்திக்கவில்லை.

வவுனியா நிவாரண கிராமங்களில் உள்ள வெளிமாவட்டங்களை சேர்ந்தோரை சொந்த இடங்களுக்கு அனுப்ப முடிவு

வவுனியா, நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் நேற்று தெரிவித்தார். யாழ்ப்பாணம், திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை உடனடியாக அனுப்பவும், கடும்மழை வெள்ளம் காரணமாக முகாம்களில் தங்கியுள்ளவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு மாற்று நடவடிக்கைகள் செய்வது குறித்தும் அரச அதிபர் தலைமையில் நேற்றுக்காலை விசேட கூட்டம் நடைபெற்றது.

பருவமழை ஆரம்பிக்கும் முன்னர் குறிப்பிட்ட தொகையினரை வெளியேற்றவும் மலசலகூட வசதிகளுக்கான மாற்று ஏற்பாடுகளை செய்யவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

செப்டம்பர் 15ஆம் திகதிக்கு முன்னதாக சகல மாற்று ஏற்பாடுகளையும் செய்வதென இக்கூட்டத்தின் போது முடிவு செய்யப்பட்டது. யுனிசெப் நிறுவன பிரதிநிதிகள், அனர்த்த முகாமைத்துவ அமைச்சு பிரதிநிதிகள், உள்ளூராட்சி பிரதிநிதிகள் பலரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். இதேவேளை நிவாரணக் கிராமங்களில் உள்ள வலது குறைந்தோர், வயோதிபர்கள், மன நோயாளர்கள் தொடர்பாகவும் அவர்களை பொறுப்பேற்க உறவினர்கள் இருப்பின் அவர்களிடம் ஒப்படைப்பதற்குமான வேலைகளை துரிதப்படுத்துவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கென நியமிக்கப்பட்ட குழுவினர் நிவாரணக் கிராமங்களுக்குள் தரவுகளை சேகரித்து வருகின்றனர் என்றும் வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். சார்ள்ஸ் தெரிவித்தார்.

மேலும் நிவாரணக் கிராமங்களில் வசித்து வருபவர்களில் வவுனியாவில் இவர்களுக்கு அசையாத சொத்துக்கள் இருப்பின் நெருங்கிய உறவினர்கள் அவர்களை பொறுப்பேற்றால் விடுவிக்கப்படுவர். இதற்குரிய பதிவுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

வலயம் 4, வலயம் 5 நிவாரணக் கிராமங்களில் பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு வவுனியாவில் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தில் வீடு காணி உடமைகள் இருப்பதினை பிரதேச கிராமசேவையாளர் உறுதிப்படுத்தினால் விடுவிக்க சிபார்சு செய்யப்படும். இராணுவத்தின் அனுமதிக்கு பத்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டு விடுவிக்கப்படுவர் பருவமழை ஆரம்பிக்க முன்னர் ஒரு குறிப்பிட்ட தொகையினரை வெளியேற்றிவிடலாம் என்றும் நம்பப்படுகிறது. சுமார் இரண்டாயிரம் பேரின் பெயர்கள் கிடைத்துள்ளதாக அவை தொடர்பான பரிசீலனை நடைபெறுகின்றது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்மாவட்டத்தில் 31 பாடசாலைகளை தரமுயர்த்துவதற்கு 1035 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு-சுசில் பிரேம் ஜயந்த!

யாழ் குடாவில் உள்ள 31 பாடசாலைகளை சிறந்த பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கு 1035 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் 32.5 மில்லியன் ரூபா வீதம் வழங்க உள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்தார்.

இது தவிர வடக்கிலுள்ள 75 பாடசாலைகளுக்கு கணனிப் பிரிவுகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு வடக்கிலுள்ள 200 பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள் ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தவணைப் பரீட்சை வினாத்தாள்கள் மற்றும் உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களில் இடம்பெற்ற தவறுகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாக ஐ.தே.க. முன் வைத்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணைக்கு பதிலளிக்கையிலே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அமைச்சர் மேலும் கூறிய தாவது, வடபகுதியில் கல்வித் துறையை மேம்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக் கைகளை மேற்கொண்டு வருகிறது.

யாழ்ப்பாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறை கிடையாது. அண்மையில் 400 ஆசிரிய உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர். கிழக்கில் 3500 ஆசிரியர்கள் கடந்த காலங்களில் நியமிக்கப்பட்டனர்.

தவணைப் பரீட்சைகளில் இடம்பெற்ற தவறுகள் தொடர்பாக கல்வி அமைச்சு உரிய விசாரணைகளை நடத்தியது. இந்தத் தவறுகளுக்கு 12 அதிகாரிகள் முழுமையாக பொறுப்பு கூற வேண்டும். இவர்களுக்கு எதிராக உரிய ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்குமாறு மாகாண அமைச்சர்களுக்கு அறிவித்துள்ளோம்.

அதிகாரிகளின் கவனயீனம் மற்றும் தவறினாலேயே இந்தப் பிழைகள் நடந்தன. 9 மாகாணங்களிலும் தவணைப் பரீட்சை நடத்த 90 மில்லியன் ரூபா தேவைப்படுகிறது. மூன்றாம் தவணைப் பரீட்சைக்கான வினாத்தாள்களை அச்சிடத் தேவையான பணத்தை கல்வி அமைச்சு வழங்க முடிவு செய்துள்ளது. அடுத்த வருடம் முதல் நிதி ஆணைக் குழுவினூடாக தேவையான பணம் வழங்கப்படும்.

வினாத்தாள்கள் தயாரிப்பது தொடர்பாக சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் எதிர்வரும் 25ஆம் திகதி அறிவூட்ட உள்ளோம். உயர்தரப் பரீட்சை வினாத் தாள்களில் ஏற்பட்ட தவறுகள் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. பேராசிரியர்கள் தலைமையிலான குழுக்களே வினாத் தாள்களை தயாரித்தன.

இடம்பெயர்ந்த மக்களை தங்கவைப்பதற்காக பொறுப்பேற்கப்பட்ட 17 பாடசாலைகளிலும் அடுத்த தவணையின் போது கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும். செப்டம்பர் முதல் வாரம் முதல் முகாம்களில் உள்ள சாதாரணதர மாணவர்களுக்கு விசேட வகுப்புகள் நடத்தப்படும் என்றா