Photobucket

15 September, 2009

இரவிரம் பகலிலும் சிங்கள ராணுவத்தினரால் துன்புறுத்தப்படுவதாக ஈழத் தமிழ்ப் பெண் கண்ணீர்!

இரவிரம் பகலிலும் சிங்கள ராணுவத்தினரால் துன்புறுத்தப்படுவதாக வவுனியா முகாமில் தங்கியிருந்து அண்மையில் விடுதலையான சுகந்தினி தேசமாணிக்கம் என்ற இந்த 22 வயதான இளம் பெண் தெரிவித்திருக்கின்றார்.

எதற்காக எங்களை இப்படி நடத்துகிறார்கள் என்பது தெரியவில்லை. உண்மையில் நாங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல. நாங்கள் சாதாரண அப்பாவி மக்கள் என்று கூறியுள்ளார்.

போர் உச்ச கட்டத்தில் இருந்தபோது முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்த சுகந்தினி, இந்தக் கடுமையான போரின் பின்னரும் தான் உயிருடன் இருப்பதை ஒரு அதிர்ஷ்டம் என்றே கருதுகின்றார். இரண்டு வருட காலமாக இடம்பெற்ற கடும் மோதல்களில் மத்தியில் வாழ்ந்து உயிர் பிழைத்த சுகந்தினியின் மூன்று மைத்துனர்கள் போரின் இறுதிக்கால கட்டத்தில் கொல்லப்பட்டனர்.

போர்ப் பிடியிலிருந்து தப்பிவந்த இவர், கடந்த நான்கு மாத காலமாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் சிறிய கூடாரங்களில், பங்கீட்டு உணவுப் பொருட்கள் மற்றும் சுத்தமற்ற குடிநீரையும் அருந்திக்கொண்டு மக்களால் நிரம்பி வழியும், முட்கட்பி வேலிகளாலும் ஆயுதம் தாங்கிய படையினராலும் சூழப்பட்ட முகாம் ஒன்றில் அடைக்கப்பட்டிருந்தார்.

அரசின் மீள்குடியேற்றத் திட்டத்தின் கீழ் அண்மையில் விடுதலையான இவர், திருகோணமலை துறைமுகத்துக்கு அருகேயுள்ள ஒரு கிராமத்தில் தனது தாயாரின் அரவணைப்பில் தற்போதுள்ள இவரின், கணவர் தொடர்ந்தும் இந்த முகாம்களில் ஒன்றிலேயே தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

"எனது கணவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவரல்ல. இருந்தபோதிலும் யாழ்ப்பாணத்துக்கு அருகேயுள்ள ஒரு கிராமம்தான் அவரது சொந்தக் கிராமம் என்பதால்தான் அவர் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக தரைப் படையினர் தெரிவிக்கின்றார்கள். போர் இடம்பெற்ற காலத்தில் நாம் சந்தித்துக்கொண்டோம். ஆனால் இப்போது இல்லை. என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை" எனவும் சுகந்தினி தெரிவித்தார்.

தான் தடுத்துவைக்கப்பட்டிருந்த முகாமின் நிலை தொடர்பாகத் தெரிவித்த சுகந்தினி, "சாக்குளால் அமைக்கப்பட்டுள்ள இந்த சிறிய கூடாரங்களில் இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் வைக்கப்பட்டிருந்தார்கள். அதிகளவு மக்கள் இந்த முகாம்களில் வைக்கப்பட்டிருப்பதால் பல பிரச்சினைகள் உருவாகியுள்ளன. முகாமில் இருந்து இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கடந்த மாதம் தூக்கிச் செல்லப்பட்டதாகவும், அவர்களுக்கு ஏதாவது நடந்திருக்கலாம் என முகாமில் உள்ளவர்கள் பேசிக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் மனிதச் சங்கிலி போராட்டம்

இலங்கை ராணுவ முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டுள்ள 3 லட்சம் தமிழர்களை விடுவிக்கக் கோரி சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் 14-09-09 அன்றுமனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினர்.

இலங்கையில் சுமார் 3 லட்சம் தமிழர்கள் வதை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்கப்படாததால் பெரும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். இதை கண்டித்தும், இலங்கைத் தமிழர்களை அவர்களது சொந்த கிராமங்களில் குடியேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரியும், சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் இன்று காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தினர்.

கல்லூரி வாசலில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் சாலையின் இருபுறங்களிலும் நூற்றுக் கணக்கான மாணவர்கள் கைகோர்த்து நின்றனர். அப்போது, இலங்கை அரசை கண்டித்தும், இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் தலையிடக் கோரியும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கையில் வைத்திருந்தனர்.

இலங்கை முகாம்களில் அவதிப்படும் தமிழர்களின் நிலையை நேரில் அறிய மனித உரிமைக் குழுவையும், நடுநிலைப் பத்திரிகையாளர்களையும் இலங்கைக்கு அனுப்பிவைத்து தமிழர்களை மீட்க முயற்சி எடுக்க வேண்டும் என்றும் மாணவர்கள் கோஷமிட்டனர்.


"உடைமை இழந்து வந்தவர்களின் உயிரையும் வதைப்பதா"
"தமிழர் உரிமையை நிலைநாட்டு"
"புத்தம் பேசும் சிங்களரே யுத்தம் புத்தம் சொன்னதா"
"ஐ.நா. சபையே தலையீடு செய்"
"இந்திய அரசே ஈழத் தமிழர்களுக்கு நிவாரணம் கொடு"
"தமிழக அரசே தமிழனை இழிவுபடுத்தாதே"
போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் தாங்கியிருந்தார்கள்.