Photobucket

03 September, 2009

'சனல்-4' வெளியிட்ட காணொலி ஒளிநாடா தொடர்பாக அமெரிக்கா தீவிர அக்கறை: ஐ.நா. பாதுகாப்புச் சபையிலும் விவாதிக்கப்படலாம்


விசாரணைகள் எதுவும் இன்றி மரண தண்டனை விதிக்கும் பாணியில் சிறிலங்கா தரைப் படையினர் தமிழ் இளைஞர்களைச் சுட்டுக்கொல்வதைச் சித்தரிக்கும் வகையில் வெளியாகி இருக்கும் காணொலி ஒளிநாடா தொடர்பாக தம்முறை தீவிர அக்கறையை தெரியப்படுத்தி இருக்கும் அமெரிக்கா, இது தொடர்பாக தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்காக மேலதிக தகவல்களை எதிர்பார்த்து இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றது.

"இந்தத் தகவல்கள் எம்மைப் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கின்றது" எனத் தெரிவித்திருக்கும் ஐ.நா. சபைக்கான அமெரிக்காவின் தூதுவர் சுசன் றைஸ், "இது தொடர்பான எமது நாட்டின் பிரதிபலிப்பை வெளிப்படுத்துவதற்கு எமக்கு மேலதிகமான தகவல்கள் தேவையாக இருக்கின்றன" எனவும் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையின் போது, கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் நிர்வாணமாக்கப்பட்டு கைகளும், கண்களும் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக்கொல்லப்படுவதைச் சித்தரிக்கும் காணொலிக் காட்சிகளை பிரித்தானியாவைச் சேர்ந்த 'சனல் - 4' தொலைக்காட்சி கடந்த வாரம் ஒளிபரப்பியதை அடுத்து மனித உரிமைகள் அமைப்புக்களின் கவனம் அதனை நோக்கிக் குவிந்திருக்கின்றது.

இந்தக் காட்சிகள் போலியாகத் தயாரிக்கப்பட்டவை எனத் தெரிவித்திருக்கும் சிறிலங்கா அரசு, விடுதலைப் புலிகள் அமைப்புக்கு சார்பானவர்கள் சிறிலங்காப் படையினர் மீது களங்கத்தை ஏற்படுத்துவதற்காக இதனைத் தயாரித்து இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தது.

இது தொடர்பாகக் கருத்து வெளியிட்ட சுசன் றைஸ், இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்புச் சபை ஆராயுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை எனக் குறிப்பிட்டார்.

ஐ.நா. பாதுகாப்புச் சபையின் சுழற்சி முறையிலான தலைமைப் பதவியின்படி செப்ரெம்பர் மாதத்துக்கான தலைமைப் பதவியை றைஸ் வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

"பாதுகாப்புச் சபையின் நிகழ்ச்சி நிரலில் இந்த விவகாரத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என உறுப்பு நாடுகள் கேட்டுக்கொள்ளுமா என்பதையிட்டு எனக்குத் தெரியவில்லை" எனத் தெரிவித்த றைஸ், காணொலி ஒளிநாடா தொடர்பான தகவல்கள் புதிதாக இருப்பதால் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் செய்யப்படலாம் எனவும் குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரில் அப்பாவிப் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டதாகவும், இதனைப் போர்க் குற்றமாக விசாரணைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் எனவும் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட கோரிக்கை ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் எடுத்த நிலைப்பாட்டினால் நிராகரிக்கப்பட்டது.

ஈழப்போரில் காயப்பட்ட பெண்மணி தமிழகத்தில் குழந்தை பெற்றார்

கிளிநொச்சியில் பிறந்த மேரிவேலன்டினா சிவரூபனை காதலித்து கைப்பிடித்தார். திருமணம் ரெண்டு ஆண்டுகளுக்கு முன் நடபெற்றது.

கிளிநொச்சியில் இலங்கை ராணுவம் குண்டு மழை பொழிய... ஓடி ஒளிந்தார்கள். 2 வயது குழந்தை ஹம்சாலினியின் உடலை பதம் பார்த்தன சிங்களர்கள் வீசிய அரக்க குண்டுகள். செத்து மடிந்த ஹம்சாலினியை மடியில் போட்டுக் கொண்டு கதறி அழுதார் குண்டு காயம் அடைந்த வேலன்டினா.

வயிற்றில் இன்னொரு உயிரை சுமந்தபடி உயிர்தப்பிய வேலன்டினா ஆசை ஆசையாய் வளர்த்த குழந்தையைத்தான் பறிகொடுத்து விட்டோம், வயிற்றில் வளரும் குழந்தையையாவது நல்லபடியாக பெற்றெடுக்க வேண்டும் என்று நினைத்தார்.

உயிர் மட்டுமே மிச்சமாகி இருந்த நிலையில் அடுத்த விமானத்தில் கணவருடன் சென்னைக்கு பறந்து வந்தார். அரும்பாக்கத்தில் இருவரும் தங்கினார்கள். வேலன்டினாவுக்கு தற்போது அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

குண்டு வீச்சில் பலியான வேலன்டினாவின் முதல் குழந்தைக்கு கடந்த மாதம் 22-ந்தேதி பிறந்தநாள். அதற்கு முந்தைய நாள் வேலன்டினாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இறந்துபோன ஹம்சாலினியே மீண்டும் வந்து பிறந்திருப்பதாக பூரிப்படைந்தார்கள் காதல் தம்பதிகள்.

தற்போது சுற்றுலா விசாவில் சென்னை வந்துள்ள இருவரும் சிகிச்சை முடிந்து மீண்டும் இலங்கைக்கே செல்வோம் என்று கூறினர்.

இலங்கையில் தமிழர்கள் படும்பாடு பற்றி சிவரூபனிடம் கேட்டோம். விரக்தியின் விளிம்புக்கே சென்றவர், எதுவும் வேண்டாம் சார் என்றார். அவரையும் அறியாமல் வார்த்தைகள் வந்து விழுந்தன.

உங்களுக்கு "அசத்தப் போவது யாரு!" எங்களுக்கு "அடுத்துப் போகப்போவது யாரு!


உங்களுக்கு "அசத்தப் போவது யாரு!" எங்களுக்கு "அடுத்துப் போகப்போவது யாரு!"



நீங்கள் "மானாட மயிலாடுங்கள்" அங்கே "மனிதர்களை
வேட்டையாடுகிறது" சிங்களப் பேரினவாத பேய்கள்

உங்களுக்கு "அசத்தப் போவது யாரு!" எங்களுக்கு "அடுத்துப் போகப்போவது யாரு!"

நீங்கள் "மானாட மயிலாடுங்கள்" அங்கே "மனிதர்களை வேட்டையாடுகிறது"
சிங்களப் பேரினவாத பேய்கள்

உங்களுக்கு "அரசி" தொடரவேண்டும், அங்கே எம் உறவுகளுக்கு "வாய்கரிசி" போடுகிறது சிங்களப் பேரினவாத பேய்கள்.

உங்கள் "ஜோடி நம்பர் வண்" கலக்குது, அங்கே எத்தனை "ஜோடிகள்" கலையுது?

உங்கள் "ராமாயணம்" பிரம்மாண்டமானது, ஆனால் அங்கே நிஜத்தில் நடக்குது.

உங்களுக்கு "நீயா நானா ?" எங்களுக்கு "வாழ்வா சாவா ?".

உங்களுக்கு "கோஃபி வித் அனு" எங்களுக்கு "பச்சைத்தண்ணி வித் செல்லு".

உங்களுக்கு "சிரித்து வாழ்வோம்" எங்களுக்கு "சாவிலும் வாழ்வோம்".

உங்களுக்கு "ஓடி விளையாடு பாப்பா" எங்களுக்கு "ஓடி ஒழிந்து கொள்ளு பாப்பா".

உங்களுக்கு "ராக மாலிகா" எங்களுக்கு "சாக முகாரி ராகமா?".

உங்களுக்கு "அசத்தப் போவது யாரு!" எங்களுக்கு "அடுத்துப் போகப்போவது யாரு!".

உங்களுக்கு "நடந்தது என்ன?" எங்களுக்கு "நடக்கிறது என்ன?".

உங்களுக்கு "நீ பாதி நான் பாதி" எங்களுக்கு "உயிர் பாதி உடல் பாதி".

உங்களுக்கு "ச ரி ங ம" எங்களுக்கு "சா நீ தமிழா".

உங்களுக்கு "திரை விமர்சனம்" எங்களுக்கு "தெரு தரிசனம்".

உங்களுக்கு "அதிரடி சிங்கர்" எங்களுக்கு "அதிரடி ஆட்லறி".

உங்களுக்கு "அரட்டை அரங்கம்" எங்களுக்கு "கொலை அரங்கம்".

உங்களுக்கு "சின்னத் திரை" எங்களுக்கு "வெற்றுத் தரை".

உங்களுக்கு "ராணி மஹா ராணி" எங்களுக்கு "சா நீ தினம் சா நீ".

சகோதர இயக்கங்களிடையே மோதல்!


சகோதர யுத்தம் உலக வரலாற்றில் காணக் கூடிய ஒன்று. ஒரு தாய் வயிற்றில் பிறந்த மக்களிடையே எழுந்த பகை, யுத்தத்தில் முடிந்திருக்கிறது. மொழியாலும், இனத்தாலும் ஒன்றாக இருப்பவர்களிடையே பகை மூண்டதை சங்க இலக்கியமும் சான்று கூறும். அதேபோன்று சேர, சோழ, பாண்டிய மன்னர் வரலாற்றிலும் நாம் அறிந்திருக்கிறோம். குறுநில மன்னர்கள் காலத்திலும் இவ்விதமான யுத்தம் தொடர்ந்திருக்கிறது. இதன் பின்னணியில் இருப்பது மேலதிகாரம்தான் என்பதையும் காணக்கூடும்.

இவ்வகையான பின்னணியை மனதில் நிறுத்தி சில செய்திகளைப் பார்க்கலாம்:

""தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அரசியல் வகுப்புகளில் விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட வேண்டும் எனப் பகிரங்கமாகக் கூறப்பட்டது. இதே கொள்கை டெலோவிடமும் இருந்தது.

ஈபிஆர்எல்எப்-ஐப் பொறுத்தவரையில் மற்றைய இயக்கங்களை அழிக்கும் திட்டம் எப்போதும் இருந்திருக்கவில்லை.

ஆயினும் இந்திய ராணுவத்தின் (அமைதிப்படை) வருகைக்குப் பின் அவர்கள் நடந்து கொண்டவிதம், "எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்' என்பதை உறுதி செய்தது'' என லண்டனில் இருந்து வெளிவந்த "ஈழ பூமி' என்னும் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த சண் எனப்படும் சண்முகலிங்கம் கூறினார்.

""ஓர் உண்மையை நாங்கள் மறந்துவிடக் கூடாது. எமது இயக்கங்கள் மாற்று இயக்கத்துக்குப் பலியாகிப் போன சம்பவத்தில், இந்திய உளவுப் படையினரின் ("ரா' அமைப்பு) பங்கு கணிசமான அளவு இருந்திருக்கிறது. இதைப் பல இயக்கத்தவர்கள் புரிந்து கொண்டிருந்தும் மீண்டும் மீண்டும் அவர்கள் அதற்குப் பலியாகிப் போனார்கள்''

""டெலோ இயக்கத்துக்குள் தாஸýக்கும், பொபிக்குமிடையே ஏற்பட்டப் பிரச்னையில், இயக்கத்தை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஸ்ரீசபாரத்தினம் விரும்பினாலும் அவரின் பரிவு பொபி மீதே இருந்தது''

""பேச்சுவார்த்தைக்கென யாழ்ப்பாணம் வைத்தியசாலை தேர்ந்தெடுக்கப்பட்டது. 1986 மார்ச் 11-ஆம் தேதி அங்கு ஐந்து மெய்க்காவலர்களுடன் தாஸ் வந்தபோது பொபி குழுவினரால் அழிக்கப்பட்டனர்''

""(திம்புப் பேச்சுவார்த்தை தோல்விக்குப் பின்) இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட மூவருள் இருவராகிய சத்தியேந்திராவும், சந்திரகாசனும் டெலோ இயக்கத்தவர் ஆவர். இவர்களின் வெளியேற்றத்திற்கு தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் காரணம் என டெலோ இயக்கத்தினர் சந்தேகப்பட்டனர்''

""இந்தக் காலகட்டத்தில் வடபகுதியில் தங்கியிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான துரைரத்தினம், ராஜலிங்கம், ஆலாலசுந்தரம், தர்மலிங்கம் ஆகியவர்களைக் கொல்லும்படி ஸ்ரீசபாரத்தினம் தனது தளபதிகளுக்கு தொலைத் தொடர்பு சாதனம் மூலம் உத்தரவிட்டார்''

""வடமராட்சிக்குப் பொறுப்பானவர், துரைரத்தினத்தையும் ராஜலிங்கத்தையும் கொல்ல மறுத்துவிட்டார். ஆனால் வி.தர்மலிங்கமும், ஆலாலசுந்தரமும் வகையாக மாட்டிக் கொண்டனர் (1985 செப். 2) - என்று "ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்' என்ற நூலில் புஷ்பராஜா குறிப்பிட்டுள்ளார். இவர் ஈபிஆர்எல்எஃப் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றபோதிலும் இந்தக் குறிப்புகளை அளித்துள்ளார்.

தர்மலிங்கம், ஆலாலசுந்தரம் இருவரின் மரணம் உலகெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இக் கொலைகளைச் செய்தது யார் என்று பெரிய ஆராய்ச்சியே நடைபெற்றது. இந்தக் கொலைகளுக்கு விடுதலைப் புலிகள்தான் காரணமாக இருப்பர் என்றே பெரும்பாலானோர் கருதினர்.

இதுகுறித்து பழ.நெடுமாறன், விடுதலைப் புலிகள் தலைவர் வே.பிரபாகரனிடம் பேசும்போது, அவர் திட்டவட்டமாக மறுத்ததாகக் கூறியுள்ளார்.

பழ.நெடுமாறன் எழுதிய "பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்' என்ற நூலில்,
""நாங்கள் ஏன் இந்தக் கொலைகளைச் செய்ய வேண்டும். அதற்கான அவசியம் என்ன?

அதிலும் தர்மலிங்கம் எங்களால் நன்கு மதிக்கப்பட்டவர். யாருக்கும் மனதாலும் தீங்கு நினைக்காதவர். எங்கள்பால் அன்பு கொண்டவர். காரணமில்லாமல் எதற்காக நாங்கள் அவரைக் கொலை செய்ய வேண்டும்.

இந்தக் கொலைகளை யார் செய்தது என்று விசாரித்துக் கொண்டிருக்கிறோம். விரைவில் உண்மைக் குற்றவாளி பிடிபடுவார்'' என்று பிரபாகரன் கூறியதையும் எடுத்தாண்டுள்ளார்.

பின்னர் 1986-ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளுக்கும் டெலோவுக்கும் நடந்த மோதலில் டெலோ உறுப்பினர் பழனிவேல்-தங்கராசா என்னும் பேராளி கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டபோது அவர், "தலைமையின் உத்தரவு. இது ஓர் அரசியல் தந்திரம்; விளக்கம் தேவையில்லை' என்று பொபி கூறினார்.

விசாரணையில் பழனிவேல் தங்கராசா மேலும் கூறியதாவது:

""எங்களுக்குப் பழுப்புநிற மோரிஸ் ஆக்ஸ்போர்டு கார் வழங்கப்பட்டது. நான், சிட்டிபாபு, ரஞ்சித் ஆகியோர் வலண்டையன் தலைமையில் இயங்கினோம். ஆலாலசுந்தரம் வீட்டுக்குச் சென்றோம். அவரைப் பலவந்தமாகக் காரில் ஏற்றிக்கொண்டு தர்மலிங்கத்தின் இருப்பிடத்துக்குச் சென்றோம். ஆலாலசுந்தரம் உங்களிடம் பேசுவதற்காக வந்திருக்கிறார் என்று சொல்லி அவரையும் காரில் ஏற்றிக்கொண்டு "கோண்டாவில்' என்ற ஊருக்குப் போனோம்.

தர்மலிங்கத்தை சிட்டிபாபுவுடன் இறக்கிவிட்டுவிட்டு, ஆலாலசுந்தரத்தை நல்லூர் கூட்டிச் சென்றோம். அவரை நானும் வலண்டையனும் கொன்றோம். பின்னர் தர்மலிங்கத்தைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், தாவடி ரோட்டில் வைத்து அவரை சிட்டிபாபு கொன்றார்''

இந்த உண்மை வெளிவந்ததும் விமர்சனம் வேறு வகையாகத் திரும்பியது.

மதுரையில் 1986 மே 5-ஆம் தேதியன்று நடைபெற்ற டெசோ மாநாட்டின்போது, விடுதலைப் புலிகளுக்கும் டெலோவுக்கும் மோதல் ஏற்பட்ட செய்தி அறிந்து, அம்மாநாட்டின் தலைவர்கள், அங்கே இருந்த இலங்கைத் தமிழர் தலைவர்களை, ""ஒற்றுமையுடன் இருப்போம். எங்களுக்குள் மோதலில் ஈடுபட மாட்டோம்'' என்று உறுதி கேட்டார்கள். அவர்களும் அவ்வாறே உறுதி அளித்தனர். வாக்குறுதி அளித்தவர்கள் அனைவரும் மதுரையில் இருக்க, இலங்கையின் வடக்குப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் டெலோவுக்கும் மோதல் உச்சகட்டத்தில் இருந்தது.

இதன் பின்னணி என்ன?

விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மேஜர் அருணா 1986 ஏப்ரல் 27-ஆம் தேதி சிங்களக் கடற்படையினருடன், கடலில் ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்டார். இதையொட்டி யாழ்குடாப் பகுதியில் ஏப்ரல் 28-ஆம் தேதியன்று அஞ்சலி செலுத்தும் வகையில் வேலைநிறுத்தம் கடைபிடிக்கப்பட்டது.

அதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் சிங்களக் கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் 11 பேரை டெலோ இயக்கம் இழந்திருந்தது. அவர்களுக்கு அஞ்சலி செலுத்தாமல், விடுதலைப் புலிகள் இயக்க வீரருக்கு மட்டும் அஞ்சலி செலுத்துவதா எனக் கேட்டு மறுநாள் 29-ஆம் தேதி வேலைநிறுத்தம் செய்ய டெலோ இயக்கம் அறிவுறுத்தியது.

இதற்கு மறுத்த கல்வியங்காட்டுப் பகுதி மீது டெலோ தாக்குதலைத் தொடுத்ததும் இதைத் தடுத்த விடுதலைப் புலிகள் இயக்கத் தளபதிகள் மேஜர் பஷீர்காக்கா, லெப்டினன்ட் முரளி ஆகியோரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இச் சம்பவத்தைத் தொடர்ந்து ஸ்ரீசபாரத்தினத்தின் பழைய நண்பர் என்ற முறையில் விடுதலைப் புலிகளின் தளபதி கேப்டன் லிங்கம் பிரச்னையைப் பேசித் தீர்க்கும் நோக்கத்துடன் டெலோ முகாமுக்குச் சென்றார். ஆனால் அங்கே லிங்கம் கொல்லப்பட்டார்
(தகவல்: பழ.நெடுமாறன்-பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்).

இதன் பின்னர் டெலோ இயக்கத்தவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் மோதல் மூண்டது. இரு இயக்கங்களுக்குமிடையே நடந்த ஒருவார மோதலில் டெலோ இயக்கத் தலைவர் ஸ்ரீசபாரத்தினம் உயிரிழந்தார். (6.5.1986).
இந்த மரணத்துக்கு திமுக தலைவர் மு. கருணாநிதி உள்ளிட்ட டெசோ தலைவர்கள் வருத்தமும் வேதனையும் தெரிவித்தனர். இனி டெசோ அமைப்பு இயங்காது என்று மு.கருணாநிதி அறிவித்தார். முரசொலி நாளிதழ் அவர் எழுதிய இரங்கற்கவிதையை வெளியிட்டது. ஈபிஆர்எல்எஃப் இயக்கம் மட்டும் ஸ்ரீசபாரத்தினம் கொல்லப்பட்டதற்கு, யாழ்ப்பாணத்தில் இரங்கல் ஊர்வலம் ஒன்றை நடத்தியது.

பலத்த விமர்சனங்களுக்கான விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன் அப்போது தமிழ்நாட்டில்தான் இருந்தார். இது குறித்து பிரபாகரன் கூறுகையில், "லிங்கத்தின் சாவுச் செய்தி வந்தபோது நானே கொதிப்படைந்தேன். களத்திலிருந்த எங்கள் தோழர்களுக்கு வேறு வழி எதுவுமில்லை. லிங்கம் படுகொலை மற்றும் எங்களது முக்கியத் தோழர்கள் கைது என்பது தற்செயலாக நடந்ததாகத் தெரியவில்லை. ஆழமான சதியின் விளைவாகவே இவை நிகழ்ந்துள்ளன.

இந்திய உளவு அமைப்புகளின் தூண்டுதல் பேரிலேயே சென்னையிலிருந்த ஸ்ரீசபாரத்தினம் யாழ்ப்பாணத்தில் முகாமிட்டிருக்கிறார் என்பதும், எங்களுடன் மோதி எங்களை ஒழித்துக் கட்டுவதே அவரின் திட்டம் என்பதற்கான ஆதாரங்கள் எங்களுக்குக் கிடைத்திருக்கின்றன. எனவே எங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானோம்.

ஸ்ரீசபாரத்தினத்தையோ, டெலோ இயக்கத்தையோ திட்டமிட்டு நாங்கள் அழிக்கவில்லை. நாங்கள் முந்திக் கொள்ளாவிட்டால் எங்களை அழித்துவிட டெலோ இயக்கத்தினர் முயன்றிருப்பார்கள்'' என்று தெரிவித்துள்ளார்