Photobucket

27 August, 2009

படகோட்டிகளால் கைவிடப்பட்டு தமிழக மீனவர்களிடம் நகைகளை இழந்த அகதிகள்


இலங்கையிலிருந்தும் இராமேஸ்வரம் நோக்கி அகதிகளாக வந்த தமிழ் மக்களிடம் தமிழக மீனவர்கள் சிலர் நகைகள் மற்றும் பெறுமதியான பொருட்களை அபகரித்து விட்டு கரையில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த மீனவர்களை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் தமிழக புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது:-

மன்னார், முருங்கன் பகுதியைச் சேர்ந்த முகுந்தன் வயது 24, அவரது மனைவி தர்ஷினி வயது 23 மற்றும் அவர்களது 8 வயதுக் குழந்தை ஆகியோர் தலைமன்னாரிலிருந்து இராமேஸ்வரம் நோக்கிப் புறப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து நடுக்கடலில் வைத்து படகை நிறுத்திய இலங்கை படகோட்டிகள் அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் நாட்டுப் படகில் மூவரையும் ஏற்றி விட்டனர்.

அங்கிருந்து தனுஷ்கோடியில் இறங்கிய மூவரும் முகுந்தராஜர் சத்திரம் என்ற பஸ் வண்டியில் ஏறி மண்டபம் முகாமுக்குச் சென்றனர்.

அங்கு அவர்களை அகரிகளாகப் பதிவு செய்ய முடியாது எனக் கூறியதால் தனுஷ்கோடி பொலிஸ் நிலையம் சென்றனர். அங்கு நடைபெற்ற விசாரணையில், இலங்கை இராணுவக் கட்டுப்பாட்டில் வாழ்ந்து வந்தோம். சமீபத்தில் நடந்த சண்டையில் எமது பெற்றோர்கள் கொல்லப்பட்டதால் இங்கு வந்தோம்.

இங்கு வருவதற்காக, இலங்கைப் படகோட்டிகளிடம் 35 ஆயிரம் ரூபா கொடுத்தோம். அவர்கள் தனுஷ்கோடியில் இறக்கி விடுவதாகக் கூறி இடைவழியில் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாட்டுப் படகில் எங்களை ஏற்றிவிட்டுச் சென்றனர்.

நாட்டுப்படகில் இருந்த தமிழக மீனவர்கள் எங்களிடம் இருந்த தங்கச் சங்கிலி, தோடு மற்றும் செல்லிடத் தொலைபேசி போன்ற பெறுமதியான உடமைகளைப் பறித்துக்கொண்டு கடற்கரையில் இறக்கிவிட்டனர் என்று கூறினர்.

விசாரணைக்குப் பின் இவர்களைப் பொலிஸார் அகதிகளாகப் பதிவுசெய்து மண்டபம் முகாம் அனுப்பினர். அகதிகளிடம் பெறுமதிமிக்க நகைகளைப் பறித்த நாட்டுப்படகு மீனவர்கள் குறித்து புலனாய்வு துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஈழத்தமிழ் அகதிகளை வாழ்விடங்களுக்கு அனுப்ப வேண்டும்: தமிழகமெங்கும் "தமிழ்த் தேசிய எழுச்சி நாள்" போராட்டங்கள்



தமிழகத்தை ஆக்கிரமிக்கும் வெளியாரை வெளியேற்ற வேண்டும், ஈழத்தமிழ் அகதிகளை வாழ்விடங்களுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து தமிழகமெங்கும், நேற்று(26.08.09) புதன்கிழமை “தமிழ்த் தேசிய எழுச்சி நாள்” கடைப்பிடிக்கப்பட்டது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பேரணி, ஆர்ப்பாட்டம் என போராட்டங்கள் நடந்தன. கடந்த யூலை மாதம் திருச்சியில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் நடத்தப்பட்ட “தமிழ்த்தேசியம்” சிறப்பு மாநாட்டில், ஆகஸ்ட் 26 ஆம் நாளை தமிழ்நாட்டுத் தமிழர்கள் “தமிழ்த் தேசிய எழுச்சி” நாளாக கடைபிடிக்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.

தமிழகம் தான் இழந்த உரிமைகளை மீட்கவும்,ஈழ விடுதலைக்கு துணை நிற்கவும் உறுதி ஏற்றுக் கொள்ளும் நாளாக இந்நாள் கடைப்பிடிக்கப்பட வேண்டுமென அத்தீர்மானத்தில் வலியுறுத்தியிருந்தது. அதன்படி நேற்று தமிழ்த் தேசிய எழுச்சி நாள் தமிழகமெங்கும் கடைப்பிடிக்கப்பட்டது.

தஞ்சை

தஞ்சையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் எழுச்சிமிகு நிறைவுரையாற்றினார். தமிழ்நாட்டு உரிமைகளை மீட்க வேண்டியதின் அவசியம் குறித்தும், முள்வேலிகளுக்குள் சிறை வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை விடுதலை செய்யக் கோரியும் பெ.மணியரசன் கருத்துரை வழங்கினார்.

சென்னை

சென்னை நினைவரங்கத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் மாலை 4 மணியளவில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வார்ப்பட்டத்திற்கு
தமிழகத்தில் வெளியாரை வெளியேற்று! முகாமிலுள்ள தமிழர்களை விடுதலை செய்!” என்பன போன்ற பல்வேறு முழக்கங்கள் ஆர்ப்பாட்டத்தின் போது எழுப்பப்பட்டன.

சிதம்பரம்

சிதம்பரம் பெரியார் சதுக்கத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடந்தது.

ஈரோடு

ஈரோட்டில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் லோகநாதபுரத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசிய எழுச்சி நாள் கலை நிகழ்வுகள் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் மருத்துவர் ச.அர.மணிபாரதி தலைமை தாங்கினார். தங்கம் குழுவினரின் தமிழர் எழுச்சிப் பாடல்களுடன் நிகழ்ச்சி தொடங்கியது.

மதுரை

மதுரையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஜான்சி ராணி புங்கா அருகில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட உணர்வாளர்கள் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

ஓசூர்

ஓசூரில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. பெண்கள் உள்ளிட்டு திரளானோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் தொடக்கத்தில் பொம்மிக்குப்பம் சி.பெருமாள் வழங்கிய எழுச்சிப் பாடல்கள் பொது மக்களை வெகுவாக ஈர்த்தது. திருச்சியில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோவை

கோவையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் நேற்று காந்திபுரம் பகுதியில் தமிழ்நாடு உணவகம் முன்பு நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க. தோழர் பா.சங்கர் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் திரளான இளைஞர்கள் பங்கேற்றனர்.

திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பபூண்டி காமராஜ் சிலை அருகில் நடைபெற்ற எழுச்சி நாள் ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகரச் செயலாளர் இரமேசு தலைமை தாங்கினார்.

புதுச்சேரி

புதுச்சேரியில் செந்தமிழர் இயக்கம் சார்பில் சுதேசி மில் முன்பு தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆத்தூர்

சேலம் ஆத்தூரில் இளந்தமிழர் இயக்கம் சார்பில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

வேலூர்

வேலூரில் வழக்கறிஞர் ச.ந.ச.மார்த்தாண்டம் தலைமையில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்வேறு தலைவர்களும் இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.

காவல்துறையினரின் அனுமதி மறுப்பு காரணமாக திருச்செந்தூரில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் 28ஆம் திகதியும், புதுக்கோட்டையில் 29ஆம் திகதியும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஈழம்-இந்தியம்-சர்வதேசம்!

சுமார் இரண்டு தலைமுறைகளாக நீடித்த உரிமைப் போரொன்று, இந்தியத்தின் துணையோடும் , சர்வதேசத்தின் ஆசியோடும் தற்காலிகமாக அடக்கப்பட்டிருக்கிறது!

இலங்கை வரலாற்றில்- பெரும்பான்மை அரசு தனது அதிகாரத்தாலும், படைபலத்தாலும் புரிந்துவந்த அடக்குமுறைகளுக்கு எதிராக, அங்கு உருவான தமிழர்களது அரசியல் எதிர்ப்புணர்வுகள்; ஜனநாயக வழிகளில் அணுகப்படுவதற்குப் பதிலாக இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்ட காரணத்தால், ஆரம்பத்தில் வெறும் அரசியல் போராட்டங்களாக இருந்துவந்த ஈழத்தமிழர்களது உரிமைக்கான முன்னெடுப்புகள் காலப்போக்கில் ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்திருந்தது.

இதற்கு இந்திராகாந்தியின் தலைமையில் இருந்த அன்றைய இந்திய அரசும் ‘பச்சைக் கொடி’காட்டிப் போராளி இயக்கங்களுக்குப் பயிற்சியும் வழங்கியது.

அதேசமயத்தில் இந்தியப் பேரரசின் தென்கோடியில் இருக்கும் தமிழகத்தின் அரசியல் தலைவர்களும், தங்களது அரசியல் போட்டிகள் காரணமாக- ஈழப் போராளிகளிடையே அப்போது நிலவிய வேறுபாடுகளை தமக்குச் சாதகமாக்கி அதில் ‘குளிர்காயத்’ தவறவில்லை. அது இன்றும் தொடர்கிறது என்றாலும் அன்று அந்தத் தலைமைகளது நடவடிக்கைகள் ஈழத்தின் போராட்டக்களத்தினைப் பெரிய அளவில் பாதிக்கவில்லை.

move-out-of-safezoneஆனால்,
இன்று ஈழப்போராட்டம் மூர்க்கமாக நசுக்கப்பட்டு மூன்றுலட்சம் தமிழர்கள், சர்வதேச விதிமுறைகளுக்கு மாறாக; வன்னிப்பெரு நிலத்தின் திறந்த வெளிச்சிறைகளில் அடைக்கப்பட்டும், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டும் உள்ள ‘ராஜபக்ஷாசுர’ தாண்டவத்தின் பின்னரும்கூடத் தொடர்ந்துகொண்டிருப்பது வேறு விஷயம்! இதனைப் பிறிதொரு கட்டுரையில் பார்ப்போம்.

எந்த உரிமைகள் தமிழர்களுக்கு மறுக்கப்படுகின்றன என்று; இலங்கை சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து ‘தந்தை செல்வா’ முதல் ‘பிரபாகரன்’ வரை போராடிவந்தார்களோ----- அந்த உரிமைகளில் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்பதும், மாறாக; மக்கள் ‘மாக்க’ளிலும் கீழாய்ச் சிங்கள அரசால் நடாத்தப்படும் நிலைதான் ஏற்பட்டிருக்கிறது என்பதே உண்மை.

இதனை இந்தியமும், சர்வதேசமும் நன்கு அறியும்.

இந்தச் சந்தர்ப்பத்தில்தான் -----

இந்தியா ஈழத்தமிழர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத்தருவதில் அக்கறை செலுத்துகிறது என்றும்; அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உட்பட மேற்கு நாடுகள் அனைத்தும் இலங்கையின் இனப்பிரச்னையைத் தீர்ப்பதில் நாட்டங் கொண்டுள்ளன என்றும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்தச் சர்வதேசமும், இந்தியாவும் கடந்த இரண்டு தலைமுறைகளுக்கும் மேலாக அந்நாட்டில் நடைபெற்று வந்த இனஒடுக்கல் பற்றியும் அதற்கு எதிராக ஈழத்தமிழர்கள் நடாத்திய போராட்டங்கள் குறித்தும் எதுவும் அறியாது இருந்தனவா?

அதிலும் குறிப்பாக, இந்தியாவுக்கு--- இலங்கையின் இனப் பூசலும், சிங்கள ஆட்சியாளர்களின் அடக்கு முறைகளும் ஆரம்ப காலம் முதலே தெரிந்திருக்கிறது!

1964ல் சிறீமா-சாஸ்திரி ஒப்பந்தம் உருவான சமயத்தில் அது இந்தியவம்சாவழித் ‘தமிழர்கள்’ பற்றியது என்பது புரியாமல் இந்தியா அதனை அணுகியது என்று கூறிவிடமுடியாது. அதிகம் ஏன் ,1961ல் தமிழ் மாவட்டங்களில் ‘சிறீமாவோ’ அரசுக்கெதிரான அஹிம்சைப்போர் ‘தந்தை செல்வா’வால் வழிநடாத்தப் பட்டபோது அது தமிழகத்திலும் உணர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதற்கு முன்பும் ‘நேரு-கொத்தலாவலை’ காலத்திலேயே இலங்கையில் தமிழர்களுக்கு உரிய அரசியல் பாதுகாப்பு அந்நாட்டின் ஆளும் வர்க்கத்தால் வழங்கப்படவில்லை என்பது தெரிந்தே இருக்கிறது.

1983ல் நிகழ்ந்த ‘கறுப்பு யூலை’ ஈழத்தமிழர்களது உயிர்களுக்கும் அந்நாட்டில் பாதுகாப்புக் கிடையாது என்பதை வெளி உலகுக்கு எடுத்துக்காட்டியதாகக் கூறலாமேயன்றி--- அதற்கு முன்புவரை அவர்கள் அங்கு பூரணமான உரிமைகளை அனுபவித்து வந்தார்கள் என உலகம் நம்பியதாக பொருள்கொள்ள முடியாது.

இந்த உண்மையைப் புரிந்து கொண்டதால்தான், ’இந்திராவின் இந்தியா’-ஈழத் தமிழர்களை ஆயுத ரீதியில் பலப்படுத்த முன்வந்தது. அதனைச் சர்வதேசமும் ‘பார்வையாளர் நிலையில்’ ஏற்றுக்கொண்டுமிருந்தது!

இதில் வேடிக்கை யாதெனில்,இந்தியா தமிழ்ப் போராளிகளுக்குப் பயிற்சி வழங்கிய போதும், பின்னர் இன்று அதேபோராளிகளின் புதிய தலைமுறையினரோடு சேர்த்து அவர்களனைவரையும் சிங்கள அரசின் கரங்களால் அழிப்பதற்கு முன்நின்ற போதும் இந்தச் சர்வதேச சமூகம் தொடர்ந்தும் ‘பார்வையாளர்களா’கவே செயற்பட்டுவந்திருக்கிறது என்பதுதான்!

இந்தியாவின் அணுகுமுறை

இந்தியாவைப் பொறுத்த மட்டில், 21ம் நூற்றாண்டின் மிகப் பெரிய மனிதப் படுகொலைகள், தனது காலடியில் நிகழ்ந்து கொண்டிருக்கையில், அவை அனைத்தையும் காணாதது போன்று செயல்பட்டது மட்டுமல்லாமல் அதனை நிகழ்த்துவதற்குரிய எல்லாவகையான தொழில் நுட்ப-ஆயுத உதவிகளையும் சிங்கள அரசுக்கு அது வழங்கியிருக்கிறது.

தென் தமிழகத்து மக்கள் தங்கள் உடன் பிறப்புகளையொத்த ஈழத்தவர்கள் கோரமாகக் கொத்துக்கொத்தாகக் கொல்லப்படுவதைப் பொறுக்காது ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டபோதும், உணர்வுக் கொந்தளிப்பால் சில இளைஞர்கள் தீக்குளித்து மாண்டபோதும் தமிழகத் தலைமை ஒப்புக்காக கண்ணீர் விடவும்,(செல்லாத ஊருக்கு) கடிதம் எழுதவும் முன்வந்ததோடு தனது அரசியல் நாடகத்தை முடித்துக் கொண்டது. இது வேதனையானது மட்டுமல்ல வெட்கக்கேடானதுங்கூட..

இவ்வாறு இந்திய நடுவண் அரசோ, தமிழ் மாநில அரசோ சிறிதுகூட மனச்சாட்சியின்றிச் செயல்பட்டதை ஒவ்வொரு தமிழனும் அறிவான்.உலகும் அறியும்.

பின்னர், மேற்கு நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து , இறுதிப் போரின்போது மனிதப் படுகொலைகளை நிகழ்த்திய ஸ்ரீலங்கா அரசுக்கு எதிராகப் பன்னாட்டு அவையில் எழுப்பமுயன்ற ‘மனித உரிமை மீறல்’ குற்றச் சாட்டிலிருந்து ஸ்ரீலங்கா அரசினைப் பாதுகாப்பதற்காக இந்தியா செயற்பட்டதையும், தனது கூட்டாளிகளான வேறு சில வளரும் நாடுகளையும் இந்த அநீதிக்குத் துணைபோக வைத்ததையும் எவரும் மறந்துவிடவில்லை.

இந் நிலையில்தான் இந்தியா ஈழத் தமிழர்களது அரசியல் பிரச்னையைத் தீர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடவுள்ளது என்னும் பேச்சு கிளம்பியிருக்கிறது.

இந்தியா, உண்மையாகவே தமிழர்களின் உணர்வுகளையும் அவர்களது நீண்ட நெடிய போராட்டத்தின் பொருளையும் உணர்ந்து, அதற்கேற்ப ஓர் அரசியல் தீர்வினை அந் நாட்டில் ஏற்படுத்தித்தருமா ?

அவ்வாறு அது எண்ணினாலும் அந்நாட்டின் சிங்கள அரசு இந்தியாவின் ஆலோசனையைக் கேட்டு அதன்படி செயல்படுமா? என்பது கேள்விக்குரியதே.

உண்மையில், இந்தியா; ஈழத்தமிழர்களது உணர்வுகளையோ அன்றித் தமிழகத்தின் சகோதரத் தமிழர்களது ஆதங்கத்தையோ புரிந்துகொண்டு செயல்படும் என்பது சந்தேகந்தான்!

ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருந்த சமயத்திலும், அதன் பின்னர் இலட்சக்கணக்கான தமிழர்கள் முகாம்கள் என்னும் பெயரில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத ‘மந்தைத் திடல்’களில் அடைத்து வைக்கப்பட்டு அவர்களது தன்மானத்தையும், அவர்களுக்கான மனித உரிமைகளையும் சிறுமைப்படுத்தும் செயலினைச் சிங்க்ள அரசு செய்கின்றபோதும் அதனை மாற்றுவதற்கான முயற்சிகளில் இந்தியா ஈடுபட்டதாகத் தெரியவில்லை.

ஸ்ரீலங்கா அரசினால் ‘போர் முடிந்துவிட்டது’ என்று அறிவிக்கப்பட்டு மூன்று மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், தமது பதவிகளையும்-வாரிசுகளின் வசதியான வாழ்க்கையினையும் மட்டுமே பெரிதாக நினைத்து, இனமானத்தையும் மனிதாபிமானத்தையும் அடகு வைத்துவிட்டு வெறும் வாய்ப் பேச்சில் தேனாய்-பாகாய் கசிந்துருகும் தமிழகத் தலைமையும் அதன் தோழமை நடுவண் அரசும் திடீரென தமது ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு ஈழத்தமிழர்களுக்கு திறந்த மனதுடன் நியாயமான தீர்வொன்றினை ஏற்படுத்தித் தருவார்கள் என்று எவராவது கூறினால் அதனை நம்புவது கடினமாகத்தான் உள்ளது.

சர்வதேசத்தின் சாதனை

மற்றொரு பக்கத்தில்; விடுதலைப் புலிகளது ஆயுதப் போராட்டம் எதனால் ஆரம்பிக்கப்பட்டது----- அதன் அரசியல் பின்னணி என்ன என்பதை ஆராயாமல், ஆளுவோர்-ஆளப்படுவோர் என்னும் இருவித கண்ணோட்டத்தினை மட்டுமே கருத்தில்கொண்டு- ஆளும் வர்க்கத்துக்கு மற்றொரு ஆளும் வர்க்கம் உதவுவதே ‘உலக தர்மம்’ என்னும் சித்தாந்தத்தில் ஊறிப்போய் கண்முன் நிகழும் அநீதிகளையும் அடக்குமுறைகளையும் கண்டுங்காணாதார் போன்று செயலாற்றுவதில்; சர்வதேசம் வல்லமை மிக்கதாக உருப்பெற்றிருக்கிறது.

Boosa1986Tamilprisonersஅந்த வகையில் இலங்கை அரசின் எல்லாவகையான மனித உரிமை மீறல்களுக்கும் மறைமுகமாகத் துணைசென்றவையும், செல்பவையும் இந்தச் சர்வதேசங்கள்தாம்.

தமது நாட்டின் அரசியல்-பொருளாதார மேம்பாட்டிற்கு எது துணைசெய்வதாக அமைகின்றதோ –அது நியாயமற்றது ஆயினும் அதற்கு ஒத்தூதும் ‘நவீன சித்தாந்தத்திற்கு அடிமைப் பட்டுப்போன இந்தச் சர்வதேசங்கள்தாம் இவ் வருட முற்பாதியில் இலட்சக்கணக்கான மனித உயிர்கள் சிறிய கால இடைவெளியில் கொன்றழிக்கப்பட ஏதுவாக ஸ்ரீலங்காவுக்கு( முன் கூட்டியே) ஆயுதங்களை வழங்கியிருந்தன.

ஒருபுறம் அடக்குமுறை அரசுக்கு ஆயுதங்களையும், போர் நிபுணத்துவத்தையும் “நாடுகளுக்கிடையேயான புரிந்துணர்வு” என்னும் பெயரில் வழங்கிவரும் இந்நாடுகள், இது போன்ற “புரிந்துணர்வின்” பின்னால் மிதிபடும் மனித உரிமைகளையும், அதனால் ஏற்படும் மனித அவலங்களையும் பற்றிச் சிறிதுகூடச் சிந்திப்பதில்லை.

மாறாகத் தமது செயல்களுக்கு ஆதரவு தேடும் முகமாக, உரிமைகளுக்காகப் போராடும் இயக்கங்களுக்கு ‘பயங்கரவாத’ முத்திரை குத்தி அவற்றைத் தனிமைப்படுத்தும் செயலிலும் முனைப்புக் காட்டுகின்றன.

விடுதலைப் போராட்டம்- பயங்கரவாதம்- தீவிர வாதம்- இவை யாவும் உருவாவதற்கான பின்னணியே, சமூகத்தினதும்-ஆளும் வர்க்கத்தினதும் ‘அடிப்படை உரிமை மீறல்களே’ என்னும் அரிச்சுவடியினைப் புரிந்து கொள்ளாது-

அல்லது புரிந்து கொள்ள மறுத்து,

மேம்போக்காகத் தமக்குப் பிடிக்காத

அல்லது

அடங்காத இயக்கங்களுக்கு ‘பயங்கரவாத’ அடையாளம் இடும் அநீதியான அணுகுமுறை, இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் உருவாகிவிட்டிருக்கிறது.


ரஷ்ய-அமெரிக்கப் பனிப்போர் முடிவுற்று, தனக்குச் சவாலாக இருந்த “ரஷ்ய’ கட்டமைப்பு குலைந்து விட, அடுத்தடுத்து சோவியத் சார்பு கம்யூனிஸ நாடுகள் அனைத்தையும் ஏதோவொரு வகையில் சிதறடிப்பதன் மூலமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆற்றலை “நீண்ட கால நோக்கில்” உறுதிப்படுத்திய பின்னர், அமெரிக்காவின் கவனம் மத்திய கிழக்கின் எண்ணெய் வளத்தின் மீது படிந்தது.

போரிடும் வலிமை பெற்ற, அதே சமயம் தனது ஆற்றலுக்குச் சவாலாகவிருந்த சோவியத் ஒன்றியத்தையும் அதன் சித்தாந்தத்தில் ஊறிய நாடுகளையும் வலியழித்தாகி விட்டது. அடுத்து உலகப் பொருளாதார வளங்களைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க வல்லரசு தனது கையில் எடுத்த ஆயுதந்தான் ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ என்பது.

அதன் இந்தத் திட்டத்துக்கு வலுசேர்ப்பது போன்று ‘இரட்டைக் கோபுரத் தகர்ப்பும்’ ‘அல்கெய்டா’ நடவடிக்கைகளும் அமைந்து விட்டன.

தொடர்ந்து, அதிபர் ‘புஷ்’ நிகழ்த்திய ; ‘சதாம் ஹுசெய்னின் இரசாயன ஆயுதங்கள்’ குறித்த மிக்குயர் தொழில் நுட்ப உத்திகளுடன் கூடிய ‘நாடகம்’ சதாமுக்கு எதிரான போரிற்கு ஐ.நா வின் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது.

உலகில் மற்றொரு ‘சண்டிய’ராக உருவாகிவந்த சதாமை அடக்கவும், போரிடுவதன் காரணத்தால் அவ்வாறு போரிடும் அணிகளது வளங்கள் நலிவடையும் என்னும் கணிப்பினாலும்- அமெரிக்கா-ஈராக் இவை இரண்டினையும் மோதவிடுவதில் (மறைமுகமாக) விருப்புக்கொண்ட வளரும் நாடுகளிற் சிலவும் அதிபர் ‘புஷ்’ஷின் இம் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடாமல் விலகி நின்றன.

இதன் பயனாக விளைந்ததுதான் ‘சதாம் வதம்’!

அதனைத் தொடர்ந்து, வளர்ச்சியடைந்த அமெரிக்க-மேற்குலகிற்கு மாற்றாக, கிழக்கில் ‘சோவிய’த்தின் இடத்தைப் பிடிப்பதில் சீனாவும்-இந்தியாவும் போட்டியிட ஆரம்பித்தன.

இலங்கையின் இனப் பூசலில் இவ்விரு நாடுகளும் மூக்கை நுழைத்துக் கொண்டதும், ஈழத் தமிழரது விடுதலையினை செயலற்றுப் போகச்செய்ததையும், இந்தக் கோணத்தில்தான் ஆராயவேண்டும்

மேற்கு நாடுகள் பலவற்றில் ஸ்ரீலங்காவின் இனப் படுகொலைகளைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களும்- அதனைத் தொடர்ந்து ‘ஸ்ரீலங்காவைக் கண்டித்து மேற்குலகம் .பன்னாட்டுச் சபை வரை இலங்கை அரசின் ‘மனித உரிமை மீறல்களை’ எடுத்துச் சென்றதும், இந்தக் கிழக்கு-மேற்கு அரசியல் பலப் பரீட்சைக்கு களம் அமைத்துத் தந்தன.

இதில் ’பலிக் கடா’ ஆக்கப்பட்டது ஈழத் தமிழினந்தான்!

மனித உரிமை- மக்களாட்சிப் பண்பு- தனிமனித் சுதந்திரம்- பேச்சுரிமை- உயர்ந்த வாழ்க்கைத் தரம் என்று பல வகைகளிலும், கிழக்கை விடவும் பலபடிகள் முன்னேற்றம் பெற்றவையாக மேற்குலகம் உள்ளது!

பணத்துக்காக அல்லது அற்ப சலுகைகளுக்காக தனது உரிமையை விற்பது- பணத்தின் மூலம் பதவிகளை அடைவது-மனித விழுமியங்களைக் மதிக்காதிருப்பது- காலை வாருதல்- மத இன துவேஷம் போன்றவற்றில் இருந்து இன்னும் விடுபடாத நிலையே கிழக்கில் அதிகம் காணப்படுகிறது.

எனவே ஈழத்தமிழர்களைப் பொறுத்த மட்டில் அவர்களது அடிப்படை உரிமைகளை நியாயமான வகையில் பெற்றுத்தரும் நிலை இந்தியாவை விடவும், மேற்குலகத்திடமே அதிகம் உள்ளது.

இதற்குச் செயலுருக் கொடுக்கும் ஆற்றலும் ,இன்று புலம் பெயர் தமிழர்களிடமே தங்கியிருப்பதை மறுப்பதற்கில்லை.

இக்கட்டுரையை நிறைவு செய்வதற்கு முன், ஈழத்தமிழர்களுக்கு நன்கு பரிச்சயமான பழ மொழி ஒன்று என் ஞாபகத்துக்கு வருகிறது.

“அழுதாலும், பிள்ளை(யை) அவளே பெறவேண்டும்” என்பது அந்தப் பழமொழி!

ஆகையால், எமது ‘ஈழக் குழந்தை’யை நாம் பெற்றெடுக்க வேண்டுமாயின் நாம் தான் அதனை முயன்று பெற்றெடுக்கவேண்டும். பிறர் எமக்காக அதனைப் பெற்றுத் தருவர் என நினைப்பது அறிவுடமையாகாது.

ஈழ ஆர்ப்பாட்ட கூட்டம் நடத்த வைகோவுக்கு அனுமதி மறுப்பு

கோவை மாநகர பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ஈழத்தமிழர்களுக்கு போராட்டம் நடத்தி சிறை சென்ற தொண்டர்களுக்கு பாராட்டு விழா, பொதுக்கூட்டம் வருகிற 31-ந் தேதி மாலை 6 மணிக்கு தெப்பக்குளம் மைதானத்தில் நடக்க இருந்தது.

இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த கூட்டத்துக்கு அனுமதி கேட்டு ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் பெரியார் தி.க. மாநகர செயலாளர் கோபால் விண்ணப்பித்து இருந்தார்.

ஆனால் போலீசார் எல்.டி.டி.இ. இயக்கத்திற்கு ஏற்கனவே அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டு சிறை சென்றவர்களுக்கு பாராட்டு விழா நடத்துவது சட்ட விரோதமான செயலாகும் எனக்கூறி அனுமதி மறுத்து விட்டனர்.

இதையடுத்து வருகிற 31-ந்தேதி அன்று நடைபெற இருந்த கூட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சிங்கள இராணுவம் செய்த கோரக் கொலைகள்: வைகோ அறிக்கை

இலங்கையின் சிங்களக் கொலைபாதக அரசு, தமிழ் இனத்தைக் கரு அறுக்கும் திட்டத்தோடு, கோரப்படுகொலைகளை நடத்தி வருகிறது என்று தொடர்ந்து நாம் கூறிவந்த குற்றச்சாட்டுகள், நுற்றுக்கு நூறு உண்மை என்பதற்கு மறுக்க முடியாத சாட்சியம் கிடைத்து உள்ளது. உலகில் இருட்டடிப்புச் செய்யப்பட்ட மனித உரிமை மீறல்களையும், அவலங்களையும் லண்டன் சேனல் 4 தொலைக்காட்சி வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து உள்ளது. அதே தொலைக்காட்சி, நேற்றைய தினம் வெளியிட்டு உள்ள தமிழர் படுகொலைக் காட்சிகள், இருதயத்தைப் பிளக்கின்றன. இரத்தத்தை உறைய வைக்கின்ற அந்தக் காட்சிகளில் தமிழ் இளைஞர்கள், சிங்கள இராணுவத்தினரால் மிகக் கொடூரமாகச் சுட்டுக்கொல்லப்படுகின்றனர். அந்த இளைஞர்கள், முழு நிர்வாணமாக்கப்பட்டு, அவர்களின் கைகள் பின்புறமாக விலங்கிடப்பட்ட நிலையில், தரையில் உட்கார வைக்கப்பட்டு, அவர்களின் பிடரியிலும், முதுகிலும், தலையிலும் துப்பாக்கியால் சிங்கள இராணுவத்தினர் சுட்டுக் கொல்கின்றனர். துடிதுடிக்க அந்த இளைஞர்கள், இரத்த வெள்ளத்தில் செத்து மடிகின்றனர். ஏராளமான இளைஞர்கள் இப்படிக் குரூரமாகச் சிங்கள இராணுவத்தினரால் வரிசையாகச் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அந்தப் படுகொலைகள் நடந்தபோது, சிங்களச் சிப்பாய் ஒருவனின் கைத்தொலைபேசியில் படம் பிடித்த காட்சிகள் தங்களுக்குக் கிடைத்ததாகத் தொலைக்காட்சி நிறுவனம் கூறுகிறது. கொல்லப்பட்ட இளைஞர்களின் கைகளில் கயிறு கட்டப்பட்டு உள்ளது தெரிகிறது. எனவே, ஏராளமான இளைஞர்களை இப்படிக் கைகளைப் பின்புறமாகக் கட்டி விலங்கிட்டு, பின்னர் கயிற்றால் கட்டி, விலங்குகளைக் கட்டி இழுத்து அடைத்து வைப்பதுபோல் அடைத்து வைத்து இருந்ததும், சித்திரவதை செய்ததும் தெரிய வந்து உள்ளது.

தமிழ் இனத்தைக் கொன்று குவிக்கும் கொலைபாதகம் நடத்தி வருகிற கொடியவன் ராஜபக்சேயின் அரசும், இராணுவமும், தமிழ் இளைஞர்களைச் சித்திரவதை செய்வதும், கொல்வதும், தமிழ்ப் பெண்களைக் கற்பழித்துக் கொல்வதும், அன்றாட நிகழ்வுகளாக, சர்வசாதாரணச் சம்பவங்களாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வந்து உள்ளது.

தற்போது தொலைக்காட்சியில் வெளியாகி உள்ள கோரப் படுகொலைகள், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நடந்து இருக்கிறது.

பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டதையும், லண்டனில் உள்ள தொலைக்காட்சி நிறுவனங்களும், செய்தித்தாள்களும், உலகத்துக்குத் தெரிவித்தன. மனிதகுல வரலாற்றில் யூதர்களைக் கொடூரமாகக் கொலை செய்த ஹிட்லரின் நாஜிப் படையினர்கூடச் செய்யத் துணியாத முறையில், சிங்கள இராணுவத்தினர், தமிழ் இளைஞர்களையும், இளம் பெண்களையும் வதைத்துத் துன்புறுத்திக் கொன்று அழித்தனர்.

யுத்தகளங்களில் தோற்கடிக்கப்பட்ட படைவீரர்களைக் கைது செய்தாலும், அவர்களை மனிதாபிமானத்தோடு போர்க்கைதிகளாக நடத்த வேண்டும் என்று, ஐ.நா. மன்றமும், மனித உரிமைகள் ஆணையமும், ஜெனீவாவில் செய்யப்பட்ட ஒப்பந்தங்களும் வலியுறுத்துகின்றன. சிங்களச் சிப்பாய்களை விடுதலைப் புலிகள் கைது செய்து வைத்து இருந்த காலத்தில், அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுத்து, அவர்களை மிகுந்த பண்பாட்டோடு புலிகள் நடத்தி வந்தார்கள் என்பதை பின்னர் விடுவிக்கப்பட்ட இராணுவச் சிப்பாய்களே பல கட்டங்களில் தெரிவித்து உள்ளனர். ஆனால், சிங்கள இராணுவம், மிருகங்களைவிடக் கேவலமான முறையில், கொடூரமாகத் தமிழர்களைத் துன்புறுத்தினர். குறிப்பாகத் தமிழ்ப் பெண்களை, ஆடைகளை அகற்றிப் படுநாசம் செய்தனர். அதிலும் யுத்தகளத்தில் போரில் உயிர்நீத்த தமிழ்ப் பெண்களின் சீருடைகளை அகற்றி, கோரச் சிரிப்புடன் சிங்களச் சிப்பாய்கள் வன்புணர்ச்சி நடத்தியது, உலகத்தில் இதுவரை எங்கும் நடக்காத கொடுமை ஆகும்.

நம் நெஞ்சைப் பதற வைக்கின்ற படுகொலைக் காட்சிகளைக் காண்கிறபோது, இதயம் வெடித்து விடுவதுபோல இருக்கிறது.

ஈராக்கில், அபு கிரைப் சிறையில் 2003 ஆம் ஆண்டில் அமெரிக்கச் சிப்பாய்களால் சித்திரவதைக்கும் துன்புறுத்தலுக்கும் ஈராக்கியர்கள் ஆளாக்கப்பட்ட உண்மை, முதலில் கைத் தொலைபேசிக் காட்சிகளாக வெளியில் வந்தவுடன், ஈராக்கில் ஆக்கிரமிப்புச் செய்த அமெரிக்க நாட்டிலேயே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இரண்டு பேருக்கு பத்து ஆண்டுக்கால சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது.

அதைப்போல, கியூபாவில் குவாண்டனமோ வளைகுடாவில் அமைந்து உள்ள அமெரிக்கக் கடற்படைத் தளத்தில், கைதிகள் கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டதற்கு உலகமே கண்டனம் தெரிவித்தது. அந்த முகாமை மூடிவிடுவோம் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்தார்.

ஆனால், அங்கெல்லாம் நடந்ததைவிட மிகக் கொடூரமான முறையில் தமிழர்களை சிங்கள இராணுவம் செய்து இருக்கின்ற படுகொலைகளுக்கு அனைத்து நாடுகளின் அரசுகளும் கண்டனம் தெரிவிப்பதோடு, பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் சிங்கள இராஜபக்சே அரசையும், இராணுவத் தளபதிகளையும், கொடுஞ்செயலில் ஈடுபட்ட இராணுவத்தினரையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தித் தண்டிக்க முன்வர வேண்டும்.

முதுகுக்குப் பின்னால் கைகளைக் கட்டி விலங்கிட்டு, சிங்களவன் துப்பாக்கியால் சுடும்போது, அந்தத் தமிழ் இளைஞர்கள் உயிர் பிழைக்க முயன்று, குண்டுகள் சீறி வரும்போது தலையை அங்குமிங்கும் அசைப்பதும், அதையும் மீறி அவர்கள் உடலில் குண்டுகள் பாய்ந்து, துடிதுடிக்க அவர்கள் மடிவதையும் காண்கையில், நம் உள்ளத்தில் வேதனை நெருப்புப் பற்றி எரிகிறது.

ஐயோ, நாதியற்றுப் போனோமா நாம் இந்த நானிலத்தில்? என்று மனம் பதறித் துடிக்கிறது. இக்கோரப் படுகொலைகளைச் செய்துவிட்டு, வழக்கம்போலச் சிங்கள அரசு, அப்படி நடக்கவே இல்லை என்றுகூறி விடுதலைப்புலிகள் மீது பழி சுமத்துகிறது.

இலங்கையில் சிங்கள அரசால் மனித உரிமைகள் மண்ணோடு மண்ணாக்கப்பட்டு, தமிழ் இனம் உலகில் எங்கும் நடந்து இராத இனக்கொலைக்கு ஆளாகிய நிலையில், நடைபெற்ற கொடுமைகள் குறித்து விசாரணை மேற்கொள்ள, ஆய்வு நடத்த ஐக்கிய நாடுகள் மன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்து, சிங்கள அரசுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து, வாக்கு அளித்த நாடுகள் தங்கள் மனச்சாட்சியைக் குழிதோண்டிப் புதைத்து விட்ட பாவத்தைச் செய்தன.

தமிழர்களைக் கொன்று குவிக்க சிங்கள அரசுக்கு ஆயுதங்களை அள்ளித்தந்த இந்திய அரசு, ஐ.நா. மன்றத்திலும், இலங்கையை ஆதரித்தது வெட்கக்கேடான இழிசெயல் ஆகும். ஈழத்தில் முள்வேலி முகாம்களுக்குள் வதைபட்டுக் குற்றுயிரும் குலையுயிருமாக தவித்துக் கொண்டு இருக்கின்ற மூன்று இலட்சம் தமிழர்களின் துயரம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. மழை வெள்ளத்தோடு அவர்களின் கண்ணீரும் சேர்ந்து கொண்டது.

முல்லைத் தீவு மாவட்டத்தில், வன்னிப் பிரதேசத்தில், இப்படி நிர்வாணமாக்கப்பட்டு, கைகள் கட்டப்பட்டு சிங்கள இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட இக்கொடுஞ்செயலுக்கும், தமிழர்கள் சிந்திய இரத்தத்துக்கும், சிங்கள அரசு மட்டும் அல்ல, இந்திய அரசும் பொறுப்பாளி ஆகும். தமிழர்களின் அழிவுக்குக் காரணமான ஆயுதங்களையும், அனைத்து இராணுவ உதவிகளையும் அளித்த இந்திய அரசுக்குத் தமிழர் வரலாற்றில் எந்நாளும் மன்னிப்புக் கிடையாது.

ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்த சிங்கள அரசின் ரத்த வெறியாட்டம் குறித்த உண்மைகள் ஒவ்வொன்றாக அம்பலத்துக்கு வந்தே தீரும். இந்தத் துன்பமான நேரத்தில், உலகெங்கும் உள்ள தமிழர்கள், மனம் தளர்ந்துவிடாமல், நம் இனத்தைக் காக்க, கொடுமை செய்தோரைக் கூண்டில் நிறுத்த, உறுதிகொண்டு போராடுவோம். அனைத்து உலக நாடுகளின் மனச்சாட்சியின் கதவுகளைத் தட்டுவோம்.இந்தக் கோர நிகழ்ச்சிகளை அறியும் வேளையில், உலகெங்கும் உள்ள மனித மனங்கள் பதறவே செய்யும். ஈழத்தமிழர்களின் துயரத்தையும், சிங்கள அரசின் கொடுமைகளையும் உலக மக்கள் அறியும்போது, இன்றைய நிலைமை நிச்சயமாக மாறும். தமிழர்களின் பக்கம் நியாயம் இருக்கிறது. தமிழ் ஈழத்தின் விடுதலைக்குரல், நியாயத்தின் குரல் என்பதை உலகம் ஒருநாள் உணர்ந்து ஏற்றுக்கொள்ளவே செய்யும் என்ற நம்பிக்கையோடு, நம் தர்மயுத்தத்தைத் தொடர்வோம்.

26.08 2009
தாயகம் வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க