Photobucket

26 August, 2009

வன்னியில் நாள் ஒன்றுக்கு 60 கிலோ மீற்றர் பரப்பிலேயே கண்ணிவெடிகள் அகற்றப்படுகின்றன: 'சர்வாத்ரா' அமைப்பு

வன்னியில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்தியப் படையினரால் ஒரு நாளைக்கு 60 முதல் 70 சதுர கிலோமீற்றர் பரப்பளவையே சுத்திகரிக்க முடிகிறது என 'சர்வாத்ரா' அமைப்பு தெரிவித்துள்ளது.

இயந்திரங்களின் துணையுடன் தாம் பணிகளை மேற்கொள்வதால் இவ்வளவு விரைவாகச் செயற்பட முடிகிறது எனவும் இதுவே மனிதவலுவைப் பயன்படுத்தி மேற்கொண்டால் ஒரு நாளைக்கு 10 சதுர கிலோ மீற்றர் பரப்பளவையே சுத்திகரிக்க முடியும் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து சிறிலங்காப் படையினர் கைப்பற்றிய நிலப்பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அமைப்புக்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவின் 'சர்வாத்ரா' அமைப்பும் முன்னாள் இந்தியப் படையினரையும் உள்ளூர்வாசிகளையும் இணைத்து கடந்த 2003 ஆம் ஆண்டில் இருந்து அந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றது.

பெரிய அணைக்கட்டுப் போன்ற ஒரு கிலோ மீற்றர் பரப்பளவில் மட்டும் 14 கவச எதிர்ப்பு கண்ணிவெடிக்களைத் தாம் மீட்டதாக அந்த அமைப்புத் தெரிவித்துள்ளது.

மன்னாரின் நெல்வயல்களில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் தற்போது 'சர்வாத்ரா' ஈடுபட்டுள்ளது. மழை காலத்துக்குள் முன்னதாக அப்பகுதிகளைச் சுத்திகரித்து விவசாயிகள் கைகளில் ஒப்படைத்தாலேயே அவர்களால் விவசாயத்தில் ஈடுபட முடியும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்தப் பகுதிகளில் ஏராளமான கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கும் 'சர்வாத்ரா' அமைப்பின் நடவடிக்கை முகாமையாளர் மனிந்தர் சிங், கடந்த சில நாட்களில் மட்டும் 200 முதல் 300 வரையான கண்ணிவெடிகளை அகற்றியுள்ளோம் என்றார். அதேசமயம் சில சமயம் ஒரு நாளில் 10 முதல் 20 கண்ணிவெடிகளையே அகற்ற முடிகிறது எனவும் அவர் கூறினார்.

'அர்ஜூன்' எனப்படும் சிறப்பு இயந்திரம் ஒன்றை நாம் பயன்படுத்தி வருகின்றோம். இந்த இயந்திரம் எந்த வகையான கண்ணிவெடிகளையும் அகற்றும் வல்லமை படைத்தது. தற்போது அத்தகைய 8 இயந்திரங்கள் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

நாம் கண்ணிவெடிகளை அகற்றிவரும் பகுதியில் மண் கடினமானதாகவும் வறண்டதாகவும் காணப்படுகின்றது. அதனால், சிறப்பாக வேதியல் சேர்க்கப்பட்ட தண்ணீரை தரையின் மீது தண்ணீர் தாங்கி வாகனங்கள் மூலம் பீச்சியடித்து அது ஊறுவதற்கு மூன்று மணி நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. அதன் பின்னர் கண்ணிவெடிகளை இலகுவாக அகற்ற முடிகிறது என்றார் மனிந்தர் சிங்.

கண்ணிவெடிகளை அகற்றியதுடன் மட்டுமல்லாது சுத்திகரிக்கப்பட்ட கிராமங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் தமது அமைப்பு ஈடுபட்டு வருகின்றது என அவர் தெரிவித்தார்.

ஏனெனில் சில பகுதிகளில் கண்ணிவெடிகள் எங்கு புதைக்கப்பட்டுள்ளன என்ற வழிகாட்டல் வரைபடங்கள் ஏதுமற்ற வகையில் அங்கும் இங்குமாக கண்ட கண்ட இடங்களில் எல்லாம் அவை புதைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment