Photobucket

21 August, 2009

சிறிலங்கா சிறைகளில் வாடும் தடுப்புக்காவல் கைதிகள் நாளை முதல் உண்ணாநிலைப் போராட்டம்

சிறிலங்காவில் உள்ள தடுப்பு முகாம்களிலும் சிறைச்சாலைகளிலும் பல மாத காலமாக விசாரணைகள் இன்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் தம்மை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் எனக் கோரி நாளை சனிக்கிழமை தொடக்கம் உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்த இருப்பதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெலிக்கடைச் சிறைச்சாலை, மகசீன் சிறை, மற்றும் மட்டக்களப்பு, திருகோணமலை சிறைச்சாலைகளில் உள்ளவர்கள் உட்பட சுமார் 2 ஆயிரம் தடுப்புக்காவல் கைதிகள் இந்த உண்ணாநிலைப் போராட்டத்தில் இணைந்துகொள்வார்கள் எனவும், பூசா தடுப்பு முகாமில் உள்ள பல நூற்றுக்கணக்கான இளைஞர்களும் இதில் இணைந்துகொள்ளலாம் எனவும் தெரிகின்றது.

கடந்த இரண்டு தசாப்த காலத்தில் கைது செய்யப்பட்ட பெரும் தொகையான தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் எந்தவிதமான விசாரணைகளும் இன்றித் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் மீது குற்றப் பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படவில்லை. சுமார் 50 வரையிலானவர்களே தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளாக உள்ளனர்.

விசாரணைகள் இன்றித் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களில் பலர் தொடர்ச்சியாக பத்து வருடங்களுக்கும் அதிகமாக சிறைவாசம் இருக்கின்ற போதிலும் அவர்கள் மீது எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படவில்லை.

வடக்கு - கிழக்குப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட படையினரின் சுற்றிவளைப்புக்களின் போதே இவர்கள் வெறுமனே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தென்பகுதிச் சிறைகளுக்கு அனுப்பப்பட்டனர்.

இவர்கள் தமக்கு பொது மன்னிப்பு வழங்கி, தம்மை விடுதலை செய்யுமாறு சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொறகொடவுக்கும் கடிதங்களை அனுப்பிவைந்திருந்த போதிலும் அது தொடர்பாக உரிய பதில் கிடைக்காததையடுத்தே உண்ணாநிலைப் போராட்டத்தை அடுத்தகட்டமாக தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க, புலம்பெயர் தமிழர்கள் ஒன்று திரண்டு, தமிழீழம் மலரச் செய்வார்கள்: வைகோ

முன்பு யூதர்கள் கொல்லப்பட்டபோது உலகெங்கும் உள்ள யூதர்கள் ஒன்று திரண்டு போராடி வென்றனர். அதைப்போலவே இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க உலகெங்கும் உள்ள தமிழர்கள் ஒன்று திரண்டு, தமிழ் ஈழத்தை மலரச் செய்வார்கள்.இவ்வாறு நேற்று சென்னையில் நடைபெற்ற ஈழத் தமிழர் பிரகடனம் வெளியிடும் பொதுக்கூட்டத்தில் வைகோ பேசினார்.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான பிரகடனம் வெளியிடும் பொதுக்கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஈழத் தமிழர் வாழ்வுரிமை பிரகடனத்தை வெளியிட்டு, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது:

முன்பு யூதர்கள் கொல்லப்பட்டபோது உலகெங்கும் உள்ள யூதர்கள் ஒன்று திரண்டு போராடி வென்றனர். அதைப்போலவே இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க உலகெங்கும் உள்ள தமிழர்கள் ஒன்று திரண்டு, தமிழ் ஈழத்தை மலரச் செய்வார்கள்.

தமிழகத்தில் வன்முறையை தூண்டுவது எங்கள் நோக்கமல்ல. அண்டை நாட்டில் லட்சக் கணக்கில் நம் தமிழர்கள் வதை முகாம்களில் அடைபட்டுக் கிடக்கும்போது, அவர்களை பாதுகாக்க குரல் கொடுப்பது எங்கள் கடமை என்றார். புலிகளை ஆதரிப்பதில் தவறில்லை:

அக்கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது:

விடுதலைப் புலிகளை ஒழித்து விட்டோம் என இலங்கை அரசு கூறுகிறது. ஆனால் அதன் பிறகும் 3 லட்சம் தமிழர்களை முள்வேலி முகாம்களில் அடைத்து வைத்து வதைப்பது ஏன்? முகாம்களில் உள்ள தமிழ் இளைஞர்கள் கடத்தப்படுகிறார்கள். 15 வயதைக் கடந்த தமிழ் ஆண்கள் உயிரோடு இருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்ப் பெண்களின் கற்பு சூறையாடப்படுகிறது.

இந்த அவலங்களை காண மனித உரிமை ஆர்வலர்களால் அங்கு செல்ல முடியவில்லை. ஆனால் முதல்வர் கருணாநிதி இலங்கையில் சுமுகத் தீர்வு ஏற்பட்டுவிட்டதாக கூறுகிறார். இப்போது அங்கு சுமுக நிலை நிலவுகிறதா என்பதை அவர் தனது மனசாட்சிப்படி கூறட்டும்.

1985-ம் ஆண்டு டெசோ மாநாட்டில் பேசிய கருணாநிதி, தமிழ் ஈழம்தான் இறுதித் தீர்வு; தமிழ் ஈழத்தை ஆதரிப்பதற்காக எந்த அடக்குமுறையை ஏவிவிட்டாலும் தாங்கிக் கொள்ளத் தயார் என்றார். அன்று கருணாநிதி கூறியதைத்தான் இன்று நாங்கள் கூறுகிறோம். ஆனால் எங்கள் மீது அவர் அடக்குமுறையை ஏவுகிறார் என்றார்ராமதாஸ்.

கூட்டத்துக்கு தலைமை வகித்த, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் பேசியதாவது:

தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து பேசுவது குற்றமாகாது; அந்த இயக்கத்துக்கு ஆயுத உதவி உள்ளிட்ட உதவிகளை செய்தால் மட்டுமே குற்றம் என உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. அத்தீர்ப்பின் படியே, பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்த நாங்கள் விடுதலை செய்யப்பட்டோம்.

எனவே விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசுவதில் தவறில்லை. அவ்வாறு பேசக் கூடாது என தமிழக அரசு கூறுவது அடக்குமுறை நடவடிக்கை ஆகும் என்றார்.

கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் த. ஸ்டாலின் குணசேகரன், புதிய பார்வை ஆசிரியர் எம். நடராஜன், மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் நிர்வாகி ஹென்றி திபேன் உள்ளிட்டோர் பேசினர். கூட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, இலங்கைத் தமிழ் எம்.பி. சிவாஜி லிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முல்லைத்தீவு, இரணைமடுவில் விமான படையினரின் புதிய ஒடுபாதை!



முல்லைத்தீவு மற்றும் இரணைமடுவில் புதிய விமானப்படை தளங்கள் அமைக்கப்பட்டு ஒடுபாதைகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன என விமானப்படை பேச்சாளர் ஜானக நாணயக்கார தெரிவித்துள்ளார். ஏற்கனவே புலிகளால் பாவிக்கப்பட்டுவந்த இலகுரக விமானங்களை தரையிறக்குவதற்கு பாவிக்கப்பட்ட ஒடுபாதைகளே அவை என்றும், மேற்படி விமான ஒடுபாதைகள் புனரமைக்கப்பட்டு, அபிவிருத்தி செய்யப்பட்டதும் அதனை விமானப்படையினர் பாவிப்பர்.

விமான ஒடுபாதைகளுக்கான அபிவிருத்தி பணிகளை விமானப்படை தளபதி ஏயார் மார்சல் றோசான் குணதிலக நேற்றுக்காலை பார்வையிட்டுள்ளார். விமான ஒடுபாதைகளின் அபிவிருத்தி பணிகள் இவ்வாண்டு முடிவடைவதற்குள் நிறைவு செய்யப்பட்டு ஒடுபாதை விமானப்படையினரின் முற்று முழுதான பாவனைக்கு திறக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

வன்னியிலிருந்த புலிகளின் முன்னாள வான்படைத் தளங்களுக்கு சிறிலங்கா வான் படைத் தளபதி திடீர்ப் பயணம்

கிளிநொச்சியிலும், முல்லைத்தீவிலும் தமிழீழ விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட வான்படைக்கான தளங்கள், மற்றும் ஓடுபாதைகள் அமைந்திருந்த பகுதிகளுக்கு சிறிலங்காவின் வான் படைத் தளபதி எயர் மாஷல் ரொஷான் குணதிலக்க நேற்று திடீர்ப் பயணம் ஒன்றை மேற்கொண்டு அவற்றை நேரில் பார்வையிட்டார். வன்னிப் பிராந்தியம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த காலத்தில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இரணைமடுப் பகுதியிலும், முல்லைத்தீவு டாவட்டத்திலும் தமது வான்படைக்கான ஓடுபாதைகளை விடுதலைப் புலிகள் அமைத்திருந்தார்கள். இந்த ஓடுபாதைகளைப் பயன்படுத்தியே வான் புலிகள் சிறிலங்காவின் இராணுவ பொருளாதார நிலைகளின் மீது தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.

சிறிலங்கா படையினர் இந்தப் பகுதிகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின்னர் இந்த விமான ஓடுபாதைகளைப் புனரமைத்து தமது வான்படைத் தளங்களை அந்த இடங்களில் அமைத்திருக்கின்றார்கள். அத்துடன் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய அதே ஓடுபாதைகளைத்தான் சிறிலங்கா வான் படையினரும் இப்போது பயன்படுத்திவருகின்றார்கள்.

விடுதலைப் புலிகள் இந்தப் பகுதிகளிலிருந்து பின்வாங்கிய போது ஓடுபாதைகள் சேதமடைந்திருந்ததாகவும், இருந்த போதிலும் தாம் அந்தப் பகுதிகளைக் கைப்பற்றிய பின்னர் குறிப்பிட்ட ஓடுபாதைகளை இலகுரக வானூர்திகள் பயன்படுத்தக் கூடிய விதமாக திருத்தியமைத்திருப்பதாகவும் சிறிலங்கா வான்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தப் பகுதியில் வான்படைக்கான முகாம்களை அமைத்து அவற்றைப் பராமரிப்பதற்காக மேற்கொள்ளப்படும் வேலைகளைப் பார்வையிட்ட சிறிலங்காவின் வான்படைத் தளபதி, இங்கு பணிபுரியும் முக்கிய அதிகாரிகளுடனும் அது தொடர்பான பேச்சுக்களை நடத்தினார். இங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகள் தொடர்பாகவும் அவர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

ஈழ விடுதலைப் போராட்டம் மீண்டும் முன்னெடுக்கப்படுவதற்கும், வெற்றி பெறுவதற்கும் முழுமையாக உதவுவோம்: உலகத் தமிழர் பிரகடனம்.


ஈழ விடுதலைப் போராட்டம் மீண்டும் முன்னெடுக்கப்படுவதற்கும், வெற்றி பெறுவதற்கும் அவர்கள் விரும்பும் அரசியல் தீர்வு உருவாவதற்கு முழுமையாக உதவுவோம் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வெளியிட்ட ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் பிரகடனம் கூறுகிறது.

சென்னை அமைந்தகரை புல்லாரெட்டி நிழற்சாலையில், தற்பொழுது நடந்த மாநாட்டில், உலகத் தமிழர் பிரகடனத்தை மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலர் வைகோ படித்து வெளியிட்டார்.

உலகத் தமிழர் பிரகடனம் வருமாறு :

1. ஈழத் தமிழ் மக்களின் மரபு வழி தாயகத்தில் அவர்களுக்கு முழுமையான மனித, ஜனநாயக உரிமைகள் வழங்கிடவும், அதற்கேற்ற அரசியல் அமைப்பிற்கு உத்தரவாதம் தரக்கூடிய அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்காக உலக மக்களின், அரசுகளின் ஆதரவைத் திரட்டிடவும், ஈழத் தமிழ் மக்கள் ஒப்புக்கொள்ளக் கூடியத் தீர்வு ஒன்றை அவர்களின் பிரச்சனையைத் தீர்க்கும் ஒரே வழி என்பதிலும் நாங்கள் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.

2. தங்கள் தாயகத்திலும், உலக நாடுகளிலும் புலம் பெயர்ந்திருக்கக்கூடிய ஈழத் தமிழர்கள் அனைவரும் அவரவர்களின் ஊர்களிலும், வீடுகளிலும் மீண்டும் குடியேறவும், அமைதியான, இயல்பான, சுதந்திரமான வாழ்க்கையை நடத்தவும் துணை நிற்க நாங்கள் உறுதி பூணு‌கிறோ‌ம்.

3. தமிழர் தாயக மண்ணில் அத்துமீறி உருவாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்களையும், சிங்கள இராணுவ முகாம்களையும் மற்றும் இராணுவ ரீதியான அமைப்புகளையும் வெளியேற்ற வேண்டும் என ஐ.நா.வை வற்புறுத்த நாங்கள் உறுதி பூணுகிறோம்.

4. இலங்கையில் மனித நேய உணர்வை மீறித் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளையும், கொலைகளையும் செய்த சிங்கள இராணுவ அதிகாரிகளும், அவர்களை ஏவிவிட்ட சிங்கள அரசியல் வாதிகளும் சர்வதேச நீதிமன்றத்தில் போர்க் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவதற்கு உரிய நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ள நாங்கள் உறுதி பூணுகிறோம்.

5. உலகில் உள்ள மற்ற தேசிய இன மக்களைப் போல முழுமையான, இறைமை உள்ள மக்களாக வாழும் உரிமையில் தங்களின் எதிர்காலத்தை தாங்களே முடிவு செய்துகொள்ளும் உரிமையும் ஈழத் தமிழர்களுக்கு இயற்கையாக உண்டு என்பதையும் அந்த வாழ்வுரிமையை அவர்கள் நிலைநிறுத்திக்கொள்ள அவர்களுக்கு தோள் கொடுத்து துணை நிற்க உலகத் தமிழர்களாகிய நாங்கள் உறுதி பூணுகிறோம்.

6. அளப்ப‌ரிய தியாங்களைச் செய்த ஈழத் தமிழ் மக்களும், அவர்களுக்காக இறுதிவரை போராடிய போராளிகளும், வீறுகொண்டு நடத்திய விடுதலைப் போராட்டம் பல நாடுகளின் கூட்டுச் சதியின் விளைவாக பின்னடைவைச் சந்திக்க நேர்ந்திருப்பது தற்காலிகமானது. மீண்டும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதற்கும், வெற்றி பெறுவதற்கும் அந்த மக்கள் விரும்பி ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வு உருவாவதற்கும் நாங்கள் முழுமையாக உதவுவோம். அதற்காக எங்களை முற்றிலுமாக ஒப்படைத்துக்கொண்டு எத்தகைய தியாகத்திற்கும் தயாராக இருப்போம் என உலகளாவிய தமிழர்களாகிய நாங்கள் உறுதி பூணுகிறோம்.

பிரகடனம் படித்து முடிக்கப்பட்ட பிறகு ஈழத் தமிழர்களுக்கு உதவ சர்வபறி தியாகத்திற்கும் தயார் என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது.

ஏராளமான கருஞ்சட்டை தரித்த இளைஞர்கள் தீப்பந்தம் ஏந்தி அந்த உறுதிமொழியை ஏற்றனர். அவர்கள் அனைவருடைய சட்டையிலும் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் படம் அச்சிடப்பட்டிருந்தது. பின்புறத்தில் தமிழீழத்தின் வரைபடம் அச்சிடப்பட்டிருந்தது.