26 August, 2009

தமிழீழம் என்ற: இலட்சியப் போருக்கு நாம் கொடுத்த விலை கொஞ்சமா?

தமிழீழம் என்ற:
இலட்சியப் போருக்கு நாம் கொடுத்த விலை கொஞ்சமா? பதில் எம் கண்ணீராக தான் இருக்க முடியும்
தமிழீழம் என்ற இலடச்சிய போருக்கு நாம் கொடுத்த விலை கொஞ்சமா? என்று கேட்டால் அதற்க்கு பதில் எம் கண்ணீராக தான் இருக்க முடியும். விடியலை வேண்டி அகிம்சை வழியில் நாம் மேற்க்கொண்ட போராட்டங்கள் முதல் இன்று ஆயுதம் தாங்கி போராடிய இறுதிக்காலகட்டம் வரை தமிழீழ விடுதலைப்போராட்டம் மிகவும் உச்சக்கட்ட விலையை கொடுத்துள்ளது.

முப்பதினாயிரத்துக்கும் மேற்ப்பட்ட மாவீரர்களின் உயிர்கொடை,
இரண்டு இலட்சத்துக்கு அதிகமான எம் மக்களின் உயிர் பறிப்புக்கள் என்று நாம் கொடுத்த விலை அதிகம்.

இன்றும் அங்கங்களை இழந்து நிற்க்கும் போராளிகள், பொதுமக்களின் நிலை பரிதாபமாக இருக்கும் போது எமது அதிக பட்ச வேலைத்திட்டமாக அகதி முகாம்களில் இருக்கும் மக்களை மீட்டாலே போதும் என்ற நிலைக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் வந்து விட்டனர். என்றால் இது மிகையாகாது. போராட்டஙகள் கவனயீர்ப்புக்கள், சாலை மறியல்கள், துண்டுப்பிரசுர விநியோகம் என்று புத்துணர்வுடன் கடந்த பத்து மாதங்கள் போராடிய எமது மக்களின் உணர்வுகளும் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மெளனித்ததோடு மெளனமாகி அழுகின்றது.

ஏன் இந்த சோர்வு?
எதனால் இந்த பின்னடைவு?

தமிழர்கள் அன்றும் சரி இன்றும் சரி விடுதலைப்புலிகள் என்ற அமைப்பை அரணாகக் கொண்டே வாழ்ந்தனர். தாம் வீட்டுக்குள் இருக்கும் போது அவர்கள் மட்டும் போராட வேண்டும் என்று எண்ணினார்கள். கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு எந்த தமிழனும் வீதியை மறிக்க நினைக்கவில்லை. 24 மணிநேரமும் போராட முனையவில்லை. காரணம் "அவர்கள் பாத்துக்கொள்ளுவார்கள்" என்ற அலட்சிய நோக்கு.

இன்னும் சொல்ல போனால் நாம் பணம் கொடுதால் போதும் மற்றவை எல்லாம் முடியும் என்று எமது விடுதலைப்போரை வியாபாரமாகவே பெரும்பாலான தமிழ் மக்கள் சிந்திக்க தலைப்பட்டனர்.

இன்று விடுதலைப்புலிகள் ஆயுதப்போரை முடிவுக்கு கொண்டு வந்த போது இவர்களும் சோர்வடைந்துள்ளமை இவர்களின் மூல சக்தி எது என்பதை எடுத்துக்காட்டுகின்றது.

ஆனாலும் விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை தமது தமிழீழ விடுதலைக்கான போரை அரசியல் வழிமுறையூடாக தாம் தொடர உறுதிபூண்டுள்ளனர். ஆனால் புலம்பெயர் தமிழர்கள் பலரும் இன்றுதான் போராட்டத்தை அறிந்தவர்கள் போல, விமர்சனம் என்ற பெயரில் முரணான கருத்துக்களை முன்வைப்பதும். பின்பு அக் கருத்துக்களை தங்களுக்கு ஏற்ற வகையில் திரிவுபடுத்துவதும். அதிகரித்து வருகின்றது.

குறிப்பிட்ட சிலரோ தாமே போராட்டத்தை கட்டி காப்பவர்கள் போல தம்மை முன்னைய காலத்தில் அடையாளப்படுத்திய போதும், இன்று போராட்டத்துக்கும் தமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல செயற்படத்தொடங்கியுள்ளனர்.

அது மட்டுமன்றி, இன்னும் சிலரோ தாம் தற்போது நடைமுறைப்படுத்தபட்டுள்ள கட்டமைப்புக்குள் இல்லை என்பதால் அந்த கட்டமைப்புக்கள் நேர விரையம் என்று சொல்லுமளவுக்கு வந்துவிட்டனர். அத்துடன் மீண்டும் மக்கள் எழுச்சி கொள்வதுவும் அவர்களை எழுச்சி கொள்ள வைப்பதுவும் தேவையற்ற செயற்பாடு என்றும் க்ர்ர்ற முற்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக இன்று பலரின் வாயில் உச்சரிக்கப்படுவது முகாமில் இருக்கும் போராளிகளை, மக்களை மீட்க வேண்டும் என்பதே! ஆனால் இந்த பிரச்சினைகளுக்கு நாம் தொடர்ந்தும் தற்காலிகமான தீர்வுகளை நோக்கி பயணிப்பதால் பாதிக்கப்படுவது என்னவோ எமது மக்கள் மாத்திரமே!

கூடாரங்களுக்குள் மக்கள் இருப்பது வேதனையே! சித்திரவதைக் கூடங்களுக்குள் போரளிகள் வதைபடுவது ஏற்க முடியாதது தான்.ஆனால் இவற்றுக்கு எல்லாம் நாம் ஒரு தற்காலிக தீர்வாக மக்களை , போராளிகளை வெளியேற்றி விட்டால் மட்டும் போதுமா?

நாளைக்கு மீண்டும் இந்த பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுக்காது என்பதற்கு என்ன உத்தரவாதத்தை இந்த பிரச்சினையை இவ் வகையில் தீர்கலாம் என்று நினைப்பவர்கள் முன்வைத்துள்ளனர். யாரிடமும் தெளிவான சிந்தனை இல்லை. ஆள் ஆளுக்கு ஒரு ஆய்வு கட்டுரை! ஆளாளுக்கு ஒரு செயற்பாட்டு வடிவம். போதாக்குறைக்கு வீராப்புக்கள் வேறு.

இன்று ஏற்பட்டுள்ள ஓர் சோர்வு நிலையில் பிரித்தானியத்தமிழர் பேரவை ஆரம்பித்திருக்கும் மக்கள் எழுச்சிப் போராட்டம் காலத்தின் தேவை என்பதை கருத்தில் கொண்டு இம்முயற்ச்சி நிச்சயம் ஏனைய நாடுகளிலும் முன்னெடுக்கப்படவேண்டும்

எனவே எல்லைகள் கடந்தும் விஸ்வரூபம் எடுக்கும் சிக்களப் பேரினவாதத்தை எதிர்கொண்டு எமது தேச விடுதலைக்கான பணியை முன்னெடுக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு சரியான வழிநடத்தலினூடாக பயணிப்பதே எம் இனத்தின் விடுதலைக்கு நாம் செய்யும் கைமாறாகும். எனவே நாம் இந்த விடுதலைப்போருக்கும் எம் மக்களின் அமைதியாக வாழ்வுக்கும் கொடுத்த விலை கொஞ்சமா? என்பதை அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்

No comments:

Post a Comment