Photobucket

06 September, 2009

வைகோ, திருமா, விஜயகாந்த் புலிகளிடம் இருந்து பணம் வாங்கியதற்கான ஆதராம் உள்ளது: சு.சாமி

வைகோ, திருமாவளவன், விஜயகாந்த் ஆகியோர் விடுதலைப்புலிகளிடம் இருந்து பணம் வாங்கியதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் விடுதலைப்புலிகளிடம் இருந்து பணம் பெற்றுள்ளனர். விடுதலைப்புலிகளிடம் இருந்து இவர்கள் பணம் பெற்றதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.

நான் சொல்லுவதை மறுத்து வைகோ, திருமாவளவன், விஜயகாந்த் ஆகியோர் வழங்கு தொடர்ந்தாலும், அதை சந்திக்க நான் தயார். விடுதலைப்புலிகளிடம் இருந்து பணத்தை எப்படி பெற்றார்கள். யார் மூலம் பெற்றார்கள். இதற்கு கனடாவில் உள்ள ஒரு நபர் உதவியிருக்கிறார். அதற்கான சாட்சியும் என்னிடம் இருக்கிறது. தேவை வரும்போது அதை வெளியிடுவேன் என்றார்.

மேலும் அவர் பேசியதாவது,

சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு மீது 3 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்ததாக வழக்கு தொடருவேன்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என்பதை நிரூபித்ததற்கு தங்கள் குழுவுக்கு ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கூறினோம்.

தானியங்கி பணபட்டுவாடா எந்திரத்தில் (ஏடிஎம்) வாடிக்கையாளர்களுக்கு ரசீது கிடைப்பது போல, மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்குகளை பதிவு செய்யும் வாக்காளர்களுக்கு ரசீது கிடைக்க செய்யும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும்.

அடுத்து வரும் தேர்தலில் திமுகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

ஆந்திர மாநிலத்தில் அடுத்த முதல்வராக இந்து மதத்தைச் சேர்ந்தவர்தான் வர வேண்டும். கிறிஸ்தவர் முதல்வராக வரக்கூடாது. ஏனென்றால் அம்மாநிலத்தில் இந்துக் களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் பிரச்சனை இருந்து வருகிறது.

இந்து மதத்தை காப்பாற்றவும், விவசாயிகள், மீனவர்கள் ஆகியோரின் பிரச்சனைகளை முன்னிறுத்தவும், பிஜேபியுடன் இணைந்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும், 2011 சட்டசபை தேர்தல் வரை இந்த பிரச்சாரம் நடைபெறும் என்றும் சுப்பிரமணியசாமி தெரிவித்தார்.

பெல்ஜியம் நாடு சோனியாவுக்கு ஒரு விருதை வழங்கியிருக்கிறது. இது வெறும் அலங்காரத்துக்கானது என்றால் பிரச்சனை இல்லை. ஆனால் ஒரு பதவி என்றால், சோனியாவின் எம்.பி. பதவியை தகுதி இழக்க செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி ஜனாதிபதியிடம் மனு கொடுத்திருக்கிறேன் என்றார்.

பத்மநாதனை மலேசியாவே கைது செய்து சிறிலங்காவிடம் ஒப்படைத்தது: ஆங்கில இணையத்தளம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலரும் அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனருமான செல்வராசா பத்மநாதன் முன்னர் கூறப்பட்டது போன்று கடந்த ஓகஸ்ட் மாதம் 6 ஆம் நாள், சிறிலங்காப் படையினரும் அதன் புலனாய்வுத்துறையினரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின்போது கைது செய்யப்படவில்லை என்று கொழும்பில் இருந்து வெளிவரும் இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

மலேசிய சிறப்புப் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்ட பத்மநாதன், தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் சிறிலங்காப் படையினரிடம் கையளிக்கப்பட்டார் என்பதை சிறிலங்கா படைத்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியிருக்கிறார் என 'லங்கா நியூஸ் வெப்' என்ற அந்த இணையத் தளம் தெரிவித்துள்ளது.

அந்தச் செய்தியின் முக்கிய விபரம் வருமாறு:

சிறிலங்காவின் தேசிய புலனாய்வுப் பணியகத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் கபில கெந்த விதாரனவின் மேற்பார்வையின் கீழ் பத்மநாதன் தற்போது விசாரணை செய்யப்பட்டு வருகின்றார்.

பத்மநாதனின் கைது விடயத்தில், மலேசியாவில் உள்ள பிரதித் தூதுவர் மேஜர் ஜெனரல் உதய பெரேரா முக்கிய பங்காற்றி இருக்கின்றார். மலேசியாவில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தொடர்பாக அவர் விசாரணை நடத்திய அது பற்றி சிறிலங்காவில் உள்ள அதிகாரிகளுக்கு அடிக்கடி தகவல்களைக் கொடுத்து வந்தார்.

மலேசியாவிற்கான பிரதித் தூதுவராக நியமிக்கப்பட்டதில் இருந்து அங்கு விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தொடர்பாக, உதய பெரேரா மிகக் கவனமாக ஆராய்ந்து வந்தார். அது பற்றி மலேசிய அதிகாரிகளுடனும் அவர் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நடத்தி வந்தார்.

பத்மநாதன் போன்ற விடுதலை புலிகளின் தலைவர்கள் மலேசியாவில் தங்கியிருப்பது அந்த நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என உதய பெரேரா மலேசிய அதிகாரிகளுக்கு தொடர்ச்சியாக எச்சரிக்களை விடுத்து வந்தார்.

இத்தகைய பின்னணியில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை மலேசிய சிறப்பு புலனாய்வுத்துறை கவனமாக அவதானித்து வந்தது.

அதன் பின்னர், பத்மநாதனை கைது செய்து தருமாறு மலேசிய அரசுக்கு அதிகாரபூர்வமான கோரிக்கை ஒன்றை சிறிலங்கா அரசு விடுக்க வேண்டும் என்று உதய பெரேராவைத் தொடர்புகொண்ட மலேசிய சிறப்புப் புலனாய்வுத்துறையினர் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், சிங்கப்பூரில் நடைபெற்ற வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம, பத்மநாதனை கைது செய்து தருமாறு அதிகாரபூர்வ கடிதம் ஒன்றை மலேசிய வெளிவிவகார அமைச்சரிடம் ஜூலை மாதத்தில் கையளித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையில் இந்த ஏற்பாடுகள் அனைத்தும் முடிவடைந்ததும், கிழக்கு மாகாணத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் தலைவர்களான ராம் மற்றும் நகுலன் ஆகியோருக்கு பத்மநாதன் ஏற்படுத்திய தொலைபேசி அழைப்பு ஒன்றின் அடிப்படையில் சிறிலங்கா புலனாய்வுத்துறையினர் அவர் மலேசியாவில் தங்கியிருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தியது.

கிழக்குத் தலைவர்களுடன் தொடர்புகொள்ள பத்மநாதன் பயன்படுத்திய செய்மதித் தொலைபேசி இலக்கத்தைக் கண்டறிந்த சிறிலங்காப் புலனாய்வுத்துறையினர், மேலதிக விசாரணைகளுக்காக அதனை அமெரிக்க மற்றும் மலேசிய தொடர்பாடல் நிபுணர்களிடம் கையளித்தனர்.

அதேசமயத்தில் மலேசியாவில் 'சனல் - 4' செய்தி நிறுவனத்திற்கு பத்மநாதனால் வழங்கப்பட்ட நேர்காணல் குறித்து மலேசிய சிறப்பு புலனாய்வுத்துறையும் விசாரணைகளை நடத்திவந்தது.

அதன் பின்னர் பத்மநாதன் எங்கு இருக்கிறார் என்பதை மலேசிய சிறப்புப் புலனாய்வுத்துறையினர் கண்டறிந்தனர். கோலாலம்பூரில் உள்ள ரியூன் நட்சத்திர விடுத்தியில் அவர் தங்கியிருந்த சமயம் அவரைச் சுற்றிவளைத்தனர். அவரது வாகன சாரதி அப்புவையும் கைது செய்தனர். அந்த சமயம் பத்மநாதன் வேறு இருவருடன் உரையாடிக் கொண்டிருந்துள்ளார். அதனையடுத்து அப்புவை பத்மநாதனுக்கு செல்லிடப்பேசி அழைப்பை ஏற்படுத்தி அவசரமான விடயம் என்று கூறுமாறு மலேசிய சிறப்புப் புலனாய்வுத்துறையினர் நிர்ப்பந்தித்துள்ளனர்.

அப்பு கூறிய அவரச நிலை என்ன என்பதை பார்ப்பதற்காக வந்துகொண்டிருந்த வழியில் கேபி எனப்படும் செல்வராசா பத்மநாதனை மலேசிய சிறப்புப் புலனாய்வுத்துறையினர் கைது செய்தனர்.

இவ்வாறு அந்தச் செய்தி கூறுகின்றது.