20 August, 2009

101 ஆவது நாளாக வெள்ளை மாளிகை பேரணி: உச்ச மக்கள் போராட்டம் என பிரபல அமெரிக்க அரசியல் ஏடு வர்ணனை


அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமாவின் வதிவிடச் செயலகமான - அமெரிக்கத் தலைநகர் வோசிங்டன் டி.சி.யில் உள்ள 'வெள்ளை மாளிகை' முன்பாக அமெரிக்க மற்றும் கனடிய தமிழர்களால் நடாத்தப்பட்டுவரும் பரப்புரைப் போராட்டம் நேற்று புதன்கிழமை 101 ஆவது நாளாகத் தொடர்ந்தது. இது ஒரு உச்ச குரல் மிக்க மக்கள் போராட்டம் என அமெரிக்காவின் அதியுயர் செல்வாக்கு மிக்க "பொலிற்ரிகோ.கொம்" என்ற அரசியல் இணைய ஏடு வர்ணித்துள்ளது.

அமெரிக்க இலங்கைத் தமிழ் சங்கத்தின் முன்முனைவோடு முன்னெடுக்கப்படும் இந்தப் பரப்புரைப் போராட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை (18.08.09) தனது 100 ஆவது நாளைக் கடந்து இப்போதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

அமெரிக்காவின் பல மாநிலங்களில் இருந்தும் மற்றும் கனடாவில் இருந்தும் வருகை தரும் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் ஒவ்வொரு நாளும் இந்தப் போராட்டத்தில் தொடர்ச்சியாகக் கலந்துகொள்கின்றனர்.

சிறிலங்காப் படைகளின் தாக்குதல்களால் ஏற்கெனவே நேரடியான படுகொலைக்கு இலக்காகி, பின்பு இப்போது முட்கம்பி-வேலித் தடுப்பு வதைபுரி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டு இன அழிவுக்கு உள்ளாக்கப்படும் தமிழ் மக்களை பாதுகாக்குமாறு அமெரிக்க அரச தலைவரைக் கோரும் அதே வேளையில் -

தமிழ்த் தேசிய இனத்தின் அடிப்படையான அரசியல் கோரிக்கைகளை நிறைவு செய்யும் விதமான ஒரு நிரந்தரத் தீர்வு உருவாக வழி செய்யுமாறும் அவரைக் கோரி இந்தப் போராட்டம் தொடர்ந்து நடத்தப்படுகின்றது என இதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதே சமயம் - இந்தப் பரப்புரைப் போராட்டம் பற்றி குறிப்பிட்டுள்ள அமெரிக்காவின் மிகச் செல்வாக்குமிக்கதும், பிரபலமானதுமான 'பொலிற்ரிகோ.கொம்' (Politico.com) எனும் அரசியல் விவகார இணையத்தளம் -

அரச தலைவராக பராக் ஒபாமா பொறுப்பு ஏற்றதன் பின்னர் பல கவனயீர்ப்பு போராட்டங்கள் அவரது 'வெள்ளை மாளிகை' முன்றலில் நடைபெற்றுள்ளதாயினும் - அவற்றுள் நினைவில் நிலைத்து நிற்பதும், உயர்சக்தி வாய்ந்தததும், பலரது கவனத்தினை ஈர்த்துள்ளதும் - தமிழர்களால் நடத்தப்படும் இந்தப் போராட்டம் தான் என தெரிவித்துள்ளது.

இந்தத் தொடர் பரப்புரைப் போராட்டத்தின் 100 ஆவது நாளாகிய ஓகஸ்ட் 18 அம் நாள் - வோசிங்டன் டி.சி.யின் அரசியல்வாதிகள், கொள்கை வகுப்பாளர்கள், கல்விமான்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பல மட்டங்களிலும் நல் அபிமானம் பெற்ற 'பொலிற்ரிகோ' இணையத்தளத்தில் வெளியாகிய ஒரு செய்திக் கண்ணோட்டத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"தொடக்கத்தில் இருந்தே இந்தப் போராட்டக்காரர்கள் ஊதாசினப்படுத்திவிட முடியாத - மனதை உறைய வைக்கும் விதமான - தமது முழக்கங்கள் மூலமாக - அமெரிக்க அரசுத்துறை அதிகாரிகளினதும், ஊடகவியலாளர்களினதும் கவனத்தைப் பெரிதும் ஈர்த்திருந்தார்கள்.

"அரச தலைவர் ஒபாமா, அரச தலைவர் ஒபாமா" ("Pres-i-dent Oba-ma! Pres-i-dent Oba-ma!") என பெண்களும் ஆண்களும் ஒலிபெருக்கி மூலமாக முழக்கமிட - அங்கு கூடியிருக்கும் 300 வரையிலான ஏனைய போராட்டக்காரார்கள் "இனப்படுகொலையை நிறுத்துங்கள்" ("Stop the genocide") என எதிரொலிக்கின்றார்கள்.

"ஆம், உங்களால் முடியும்; ஆம், உங்களால் முடியும்" என ஒபாமாவின் தேர்தல் பிரச்சார முழக்கத்தை சற்று மாற்றி அவர்கள் தொடர்ந்து முழங்குகின்றார்கள்.

தடுப்பு வதைபுரி முகாம்களில் ("concentration camps") அடைத்து வைக்கப்பட்டுள்ள எமது உறவுகள் விடுவிக்கப்பட்டு, அவர்கள் எந்தவித சித்திரவதைக்கும் உள்ளாகாமல் தமது சொந்த இடங்களில் வசிப்பதற்கு அனுமதிக்கப்படும் வரையில் நாம் இந்த இடத்தைவிட்டுப் போகப் போவதில்லை" என கனடாவில் இருந்து வந்திருந்த ஒரு பெண் தெரிவித்தார்.

"குழந்தைகள் பட்டினியால் மரணிக்கின்றார்கள். வயதானவர்கள் கூட தடுப்பு வதைபுரி முகாம்களில் மரணமடைகின்றார்கள்" எனவும் அவர் முறையிட்டார்.

- என 'பொலிற்ரிக்கோ.கொம்' இணைய இதழின் அந்த செய்திக் கண்ணோட்டம் குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பரப்புரைப் போராட்டத்தின் ஒழுங்கமைப்புக் குழுவைச் சேர்ந்த நியூயோர்க்கைச் சேர்ந்த மருத்துவர் தயா தயாபரன் 'புதினம்' நிறுவனத்திடம் பேசும்போது -

"அரச தலைவர் ஒபாமாவுக்கு மட்டுமன்றி, எமது இனம் எதிர்கொண்டுள்ள அரசியல் மற்றும் மனிதார்ந்த பிரச்சினைகளை வெளிநாட்டவருக்குச் சொல்லுவதற்கு இந்தப் போராட்டம் ஒரு பெரும் களமாக அமைந்துள்ளது. தற்போது கோடை காலம் ஆகையால், "வெள்ளை மாளிகை" பகுதியைப் பார்வையிடுவதற்கு பெருமளவு உல்லாசப் பிரயாணிகள் நாளாந்தம் வந்து செல்கின்றனர். அந்த வெளிநாட்டு மக்களின் கவனத்தை எமது போராட்டம் மிகப் பிரமாண்டமான அளவுக்கு ஈர்த்து வருகின்றது. அந்த மக்களுக்கு எமது இனத்தின் விடுதலைப் போராட்டம் பற்றிய விளக்கங்களை நாம் தெளிவாகக் கொடுத்து வருகின்றோம்" என்று குறிப்பிட்டார்.

"இந்தப் போராட்டத்தில் வைக்கப்பட்டிருக்கும் வாசக அட்டைகளையும், எமது உறவுகள் படும் அவலங்கள் தொடர்பான படங்களையும் வெளிநாட்டு மக்கள் மிகக் கரிசனையோடு பார்ப்பது மட்டுமல்லாது படம் பிடித்தும் செல்கின்றனர். வெள்ளை மாளிகையை விட்டுவிட்டு எமது போராட்டத்தைப் படம் பிடிப்பதிலேயே பலர் அக்கறை காட்டுகின்றார்கள்" என்று இந்தப் போராட்டத்தின் இன்னொரு ஒழுங்கமைப்பாளரான சரவணன் பவான் தெரிவித்தார்.

இந்தப் பரப்புரைப் போராளிகளுடன் நேரில் வந்து உரையாடும் பல வெளிநாட்டவர்கள், தமிழ் மக்களின் அவலங்கள் தொடர்பாகவும் அவர்களின் அரசியல் போராட்டம் தொடர்பாகவும் விடயங்களையும் கேட்டு அறிந்து செல்வது சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றது.

இன்னொரு ஒழுங்கமைப்பாளரான பாலன் பாலசிங்கம் கருத்து தெரிவிக்கும்போது - "வோசிங்டன் டி.சி நகர காவல்துறையின் கணிப்பின்படி நளாந்தம் சராசரியாக 5 ஆயிரம் பேர் "வெள்ளை மாளிகை" பகுதியைப் பார்வையிட இங்கு வருகை தருகின்றார்கள். அதனால், எமது இந்த தொடர் போராட்டம் நிச்சயமான பலன்களைத் தருகின்றது. சில அமெரிக்க மற்றும் வெளிநாட்டுப் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை அழைத்து வந்து எமது இந்தப் போராட்டத்தையும் இங்கு நாம் தாங்கியுள்ள வாசக அட்டைகளையும் படங்களையும் அவர்களுக்குக் காட்டி - தமிழர் போராட்டத்தின் வரலாற்றையும் தமிழர் படும் அவலங்களையும் எடுத்து விளக்குவதனையும் நாம் அடிக்கடி காணமுடிகின்றது" என்று தெரிவித்தார்.

"வெறும் பார்வையாளர்களாக இங்கு நடப்பவற்றை அவதானிப்பதற்காக மட்டும் வரும் பல அமெரிக்க இளையோர்கள் - தமிழர் படும் அவலங்கள் பற்றிய தகவல்களை அறிந்த பின்னர் - தாமும் இந்தப் போராட்டத்தின் பங்காளிகளாகி - எமது கைகளில் இருக்கும் வாசக அட்டைகளை வாங்கி உயரப் பிடித்தபடி வெள்ளை மாளிகை நோக்கி "தமிழ் இன அழிப்பை நிறுத்துங்கள்" என்று முழக்கங்களை எழுப்பும் நிகழ்வு அடிக்கடி நடக்கின்றது" என இன்னொரு ஒழுங்கமைப்பாளரான சிவா நாதன் தெரிவித்தார்.

சில வெளிநாட்டு மக்கள் இந்தப் போராட்டத்தில் வைக்கப்பட்டிருக்கும் படங்களைப் பார்வையிட்டும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரிடம் தமிழரின் அவலங்களைப் பற்றிக் கேட்டும் கண்கலங்கி அழுததனையும் 'புதினம்' செய்தியாளர் பல சந்தர்ப்பங்களில் கண்டுள்ளார்.

அமெரிக்க மற்றும் வெளிநாட்டு மக்கள் மாத்திரமன்றி - 'வெள்ளை மாளிகை' ஊடகச் சந்திப்புக்களுக்கு வருகைதரும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ஊடகவியலாளர்களின் கவனத்தையும் இந்தப் போராட்டம் மிகப் பெருமளவில் ஈர்த்து வருகின்றது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழர்களை அணுகும் ஊடகவியலாளர்கள், அவர்களுடன் உரையாடி தமிழர்களது அரசியல் போராட்டம் தொடர்பான தகவல்களையும் கேட்டு அறிந்து சேகரித்து வருகின்றனர்.

"102 ஆவது நாளக இன்றும் தொடரும் இந்தப் பரப்புரைப் போராட்டத்தைப் பெருவெற்றியாக்கும் பொறுப்பு அமெரிக்கா மற்றும் கனடா வாழ் தமிழர்களின் கைகளிலேயே உள்ளது" எனத் தெரிவித்த இதன் முதன்மை ஒழுங்கமைப்பாளரான மருத்துவர் தயாபரன் - மிகப் பெருமளவில் திரண்டுவந்து தொடர்ந்து கலந்துகொண்டு இந்தப் போராட்டத்தை வெற்றியடைய வைக்குமாறு அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

No comments:

Post a Comment