Photobucket

21 August, 2009

வன்னியிலிருந்த புலிகளின் முன்னாள வான்படைத் தளங்களுக்கு சிறிலங்கா வான் படைத் தளபதி திடீர்ப் பயணம்

கிளிநொச்சியிலும், முல்லைத்தீவிலும் தமிழீழ விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட வான்படைக்கான தளங்கள், மற்றும் ஓடுபாதைகள் அமைந்திருந்த பகுதிகளுக்கு சிறிலங்காவின் வான் படைத் தளபதி எயர் மாஷல் ரொஷான் குணதிலக்க நேற்று திடீர்ப் பயணம் ஒன்றை மேற்கொண்டு அவற்றை நேரில் பார்வையிட்டார். வன்னிப் பிராந்தியம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த காலத்தில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இரணைமடுப் பகுதியிலும், முல்லைத்தீவு டாவட்டத்திலும் தமது வான்படைக்கான ஓடுபாதைகளை விடுதலைப் புலிகள் அமைத்திருந்தார்கள். இந்த ஓடுபாதைகளைப் பயன்படுத்தியே வான் புலிகள் சிறிலங்காவின் இராணுவ பொருளாதார நிலைகளின் மீது தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.

சிறிலங்கா படையினர் இந்தப் பகுதிகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின்னர் இந்த விமான ஓடுபாதைகளைப் புனரமைத்து தமது வான்படைத் தளங்களை அந்த இடங்களில் அமைத்திருக்கின்றார்கள். அத்துடன் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய அதே ஓடுபாதைகளைத்தான் சிறிலங்கா வான் படையினரும் இப்போது பயன்படுத்திவருகின்றார்கள்.

விடுதலைப் புலிகள் இந்தப் பகுதிகளிலிருந்து பின்வாங்கிய போது ஓடுபாதைகள் சேதமடைந்திருந்ததாகவும், இருந்த போதிலும் தாம் அந்தப் பகுதிகளைக் கைப்பற்றிய பின்னர் குறிப்பிட்ட ஓடுபாதைகளை இலகுரக வானூர்திகள் பயன்படுத்தக் கூடிய விதமாக திருத்தியமைத்திருப்பதாகவும் சிறிலங்கா வான்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தப் பகுதியில் வான்படைக்கான முகாம்களை அமைத்து அவற்றைப் பராமரிப்பதற்காக மேற்கொள்ளப்படும் வேலைகளைப் பார்வையிட்ட சிறிலங்காவின் வான்படைத் தளபதி, இங்கு பணிபுரியும் முக்கிய அதிகாரிகளுடனும் அது தொடர்பான பேச்சுக்களை நடத்தினார். இங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகள் தொடர்பாகவும் அவர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

No comments:

Post a Comment