Photobucket

08 September, 2009

மகிந்தவுடன் த.தே.கூ. 2 மணி நேரம் பேச்சு: மீள்குடியேற்றத்தை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்து


வவுனியாவில் உள்ள முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த தமிழர்களை உடனடியாக விடுதலை செய்து அவர்களை தமது மண்ணில் மீள்குடியேற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை நேற்று சந்தித்துப்பேசிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தி கேட்டுள்ளது.
மகிந்தவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான இந்தப் பேச்சுவார்த்தைகள் இரண்டு மணிநேரத்துக்கு நீடித்த அதேவேளையில், படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்ற வேண்டியிருப்பதால் உடனடியாக மீள்குடியேற்றம் சாத்தியமானதல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை மகிந்த நிராகரித்துவிட்டார்.

இதற்குப் பதிலாக முகாம்களில் உள்ளவர்கள் தமது நண்பர்கள் அல்லது உறவினர்களின் இல்லங்களில் சென்று வசிப்பதற்கு வசதி செய்துகொடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த மகிந்த, அது தொடர்பாக விரைவில் அறிவிக்க இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார்.

கொழும்பில் உள்ள சிறிலங்கா அரச தலைவரின் அதிகாரபூர்வ இல்லமான அலரி மாளிகையில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 5:00 மணியளில் தொடங்கிய பேச்சுக்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான உயர் மட்டக்குழு ஒன்று கலந்துகொண்டது.

பேச்சுவார்ததைகள் முடிவடைந்த பின்னர் அது தொடர்பாக இரா.சம்பந்தன் கருத்துத் தெரிவிக்கையில் பின்வருமாறு தெரிவித்தார்:

"சிறிலங்கா அரச தலைவருடனான இந்தப் பேச்சுவார்த்தைகள் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு நீடித்தது. இதில் போரினால் இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் வைக்கப்பட்டுள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக நாம் முக்கியமாகக் குறிப்பிட்டோம். இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என நாம் வலியுறுத்தினோம்.

இடம்பெயர்ந்த மக்களை 180 நாள் வேலைத்திட்டம் ஒன்றில் மீள்குடியேற்றுவதாக அரசு தெரிவித்திருந்தபோதிலும், இதுவரையில் அதில் 10 வீதமானவர்களைக் கூட அரசு மீள்குயேற்றவில்லை என்பதை நாம் சுட்டிக்காட்டினோம். அதனால் இந்த மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த வேண்டும் என நாம் இந்தச் சந்திப்பின்போது முக்கியமாக கேட்டுக்கொண்டோம்.

அவர்கள் கண்ணிவெடிகளை அந்தப் பகுதியில் இருந்து அகற்றவேண்டிய தேவை இருப்பதாக நீண்ட ஒரு விளக்கத்தைத் தந்தார்கள். ஆனால், கண்ணிவெடிகள் குறைவாக உள்ள பகுதிகளில் அவற்றை அகற்றும் பணிகளைத் துரிதப்படுத்துமாறும், அதன் மூலம் அந்தப் பகுதிகளில் உள்ளவர்களை முதலில் குடியேற்றக் கூடியதாக இருக்கும் என்பதையும் நாம் சுட்டிக்காட்டினோம்.

இதனைவிட வவுனியாவில் உள்ள முகாம்களில் இட நெருக்கடி அதிகமாக இருப்பதால் அதனைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்வது அவசியம் என்பதையும் நாம் சுட்டிக்காட்டினோம். இங்குள்ளவர்கள் தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று வசிப்பதற்கு விரும்பினால் அவர்கள் அங்கு செல்வதற்கு அரசு அனுமதிப்பது அவசியம் எனவும் நாம் தெரிவித்தோம்" என சம்பந்தன் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த மகிந்த, இவ்வாறான அறிவித்தல் ஒன்றை தாம் ஏற்கனவே வெளியிட்டிருப்பதாகவும் மேலும் அது தொடர்பாக பகிரங்கமாக அறிவிப்பதாகவும் தெரிவித்தார். இதன்படி முகாமில் உள்ளவர்கள் தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சென்று வாழ்வதற்கு விரும்பினால் அதற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் மகிந்த சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான நடவடிக்கைகளுக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பை அரசு பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், இதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் வவுனியா முகாம்களுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டது. இது தொடர்பாக ஆலோசனை நடத்தி பதிலளிப்பதாக மகிந்த வாக்குறுதியளித்திருக்கின்றார்.

இந்தப்பேச்சுக்களின் போது கடந்த மூன்று மாத காலமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினத்தை விடுதலை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தமிழ்க் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டது.

இதற்குப் பதிலளித்த மகிந்த, சில விவகாரங்கள் தொடர்பான விசாரணைகளுக்காகவே அவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் முடிவடைந்து அவர் மீது எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் இல்லை என்பது நிரூபனமானால் அவர் உடனடியாக விடுதலை செய்யப்படுவார் எனவும் தெரிவித்தார்.

இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் எனவும் அதற்கான தீர்வுத் திட்டம் ஒன்றை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்கள். இதனை மகிந்த ஏற்றுக்கொண்டிருக்கின்ற போதிலும், இன்றைய சந்திப்பின்போது அது தொடர்பாக விரிவாக ஆராயப்படவில்லை. எதிர்வரும் சந்திப்புக்களில் இது தொடர்பாக ஆராய்வதற்கு இணக்கம் காணப்பட்டது.

மகிந்தவுடனான இந்தப் பேச்சுக்களில் இணக்கம் காணப்பட்ட விடயங்களின் நடைமுறை தொடர்பாக பசில் ராஜபக்ச தலைமையிலான அரச தலைவர் பணிக்குழுவுடன் தொடர்ந்தும் பேச்சுக்களை நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணக்கம் தெரிவித்தது. இன்றைய பேச்சுக்கள் தொடர்பாக தமிழத் தேசியக் கூட்டமைப்பு திருப்தி வெளியிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சந்திப்பில் மகிந்தவுடன் சுசில் பிரேம் ஜயந்த, ரிசாத் பதியுதீன், மகிந்தவின் ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச, மகிந்தவின் செயலாளர் லலித் வீரதுங்க, வடக்கு நலன்புரி முகாம்களுக்குப் பொறுப்பான படைத்தளபதி ஆகியோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், என்.சிறீகாந்தா, சிவசக்தி ஆனந்தன், ஐ.எம்.இமாம் மற்றும் தங்கேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment