Photobucket

04 September, 2009

விடுதலைப் புலிகளின் பதிலடி!


யாழ் பகுதிகளில் சிங்கள ராணுவத்தின் கோட்டை போன்று செயல்பட்ட குருநகர் ராணுவ முகாம் (1984 பிப்ரவரி 24) தகர்க்கப்பட்டது. விமானப்படையினர் சுன்னாகத்திலும் தெல்லிப்பளையிலும் அப்பாவி மக்களைச் சுட்டுக்கொன்றதற்கு பதிலடியாக, அத்துமீறல் செய்வதற்கென்றே உருவாக்கப்பட்ட "கஜவாகு ரெஜிமெண்ட்' பிரிவைச் சேர்ந்த 15 பேரை வாகனத்தில் வைத்தே, புலிகள் குண்டுவீசி அழித்தனர்.

"மக்களே மகத்தானவர்கள் - அவர்களுக்காகவே இயக்கங்களும் இயக்க நடவடிக்கைகளும்' என்ற அரசியல் சூத்திரத்தின் அடிப்படையில் சிங்கள ராணுவத்தின் கொடுமைகளுக்குப் பதிலடி கொடுக்க மக்களையே விடுதலைப்புலிகள் தயார் செய்து தாக்குதல் நடத்திய நிகழ்ச்சி யாழ்ப்பகுதியில் முதன்முதலாக நடந்தது.

யாழ் நகரத்தில் நாகதீப-கயிலைத்தீவு யாத்திரீகர்களின் வழிபாட்டுக்கென்று புத்த விகாரையில் வழிபாடு நடத்த, இலங்கையின் தெற்குப்பகுதிகளில் இருந்தே புத்த குருமார்களை அழைத்து வந்தனர். இவர்கள் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் யாழ்ப்பகுதி வந்து, ராணுவ ஜீப்புகளில் ஏறி, புத்தவிகாரைகளுக்கு வந்து வழிபாடு நடத்துவதைப் பார்த்து மக்கள் எரிச்சலுற்றனர்.

ஒரு நாள் யாழ் நகரில் அமைந்த புத்தவிகாரைக்குச் செல்லும் வழியெங்கும் தடைகளை ஏற்படுத்தினர். ஸ்டான்லி வீதியிலிருந்த புத்த விகாரையும் ஆஸ்பத்திரி வீதியிலிருந்த சிங்கள மகா வித்தியாலயத்தையும் மக்களே தகர்த்தனர். இவை இரண்டும் சிங்கள ராணுவத்தின் முகாம்களாகவே செயல்பட்டு வந்தன என்பதாலும், மாதாகோயில் ஒன்று தாக்கப்பட்டதாலும் மக்கள் கூடுதல் ஆத்திரத்துக்கு ஆளானார்கள். மக்கள் கடும் ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் கைக்குண்டுகளையும் வீசினர். கைக்குண்டுகளை வீச, புலிகளே மக்களுக்குப் பயிற்சி அளித்தனர்.

புலிகளின் வரலாற்றில் கடுமையான காவல்கொண்ட மட்டக்களப்பு சிறைச்சாலையை உடைத்து, அங்கு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிர்மலா நித்தியானந்தனை மீட்டது, கடற்படையினரை, பொலிகண்டிப் பகுதியில் மோட்டார் படகில் சென்று தாக்கி ஆறுபேரைக் கொன்றது, வல்வெட்டித்துறைக்கு அருகில் நெடியநாடு என்ற இடத்தில் மூன்று கவச வண்டிகள், ஒரு டிரக், ஒரு ஜீப் சகிதம் சென்று வெறியாட்டம் போட்டுத் திரும்பிக்கொண்டிருந்த 9 கமாண்டோ படையினரைத் தாக்கி அழித்தது, மாங்குளம் அருகே ஒட்டிசுட்டான் காவல் நிலையத்தில் கொரில்லாத் தாக்குதலை அடக்குவதில் சிறப்புப் பயிற்சி பெற்ற கமாண்டோ படையினரைத் தாக்கி, காவல்நிலையத்தின் கருவூலத்திலிருந்த ஆயுதங்களைப் பறித்தெடுத்தது ஆகியவை மிகமிக முக்கியமான சம்பவங்களாகும்.

புலிகளின் ஆயுதத் தேவையை நிறைவேற்றவும், கமாண்டோ படையினரின் கொட்டத்தை அடக்கவும் புலிகளால் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

மன்னார், கரவெட்டி மேற்கு, அச்சுவேலி, திக்கம், முல்லைத்தீவு, களுவாஞ்சிக்குடி, தொண்டமானாறு-பலாலி வீதி, தெல்லிப்பளைப் பகுதிகளில் மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தனித்தனி சமரில் 64 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் வடபிராந்திய சிங்கள ராணுவ தளபதி பிரிகேடியர் ஆரியப்பெருமா கொல்லப்பட்டார்.

புலிகள் தரப்பில் களுவாஞ்சிக்குடி தாக்குதலில் லெப்டினன்ட் ஆர்.பாமதேவா, திக்கத்தில காப்டன் ஞானேந்திர மோகன் என்கிற ரஞ்சன்லாலா ஆகிய இருவரும் மரணமடைந்தனர்.

மேலே கூறியவையே, விடுதலைப்புலிகளின் வரலாற்றில் 1975-1984-ஆம் ஆண்டுகளுக்குள் நடைபெற்ற சம்பவங்களின் சுருக்கம் ஆகும்.

1984-1987-இல் தமிழர் விடுதலைக்கூட்டணி மற்றும் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தலைவர்களின் கோரிக்கைகளுக்கேற்ப, ஏராளமான அளவில் இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு வந்த மக்களின் குழந்தைகள் படிப்புக்குத் தகுதி நிர்ணய வழிமுறைகளை எல்லாம் மூட்டை கட்டிவைத்துவிட்டு, ஈழத் தமிழர்களுக்கு என்று தனி ஒதுக்கீடு செய்து மாணவர்கள் கல்வி கற்கவும், பொறியியல், மருத்துவம், தொழில்நுட்பம் போன்ற உயர்கல்வி வசதிகள் பெறுவதற்கும் ஆணை பிறப்பித்தார் எம்.ஜி.ஆர்.
(எம்.ஜி.ஆரும் ஈழத்தமிழரும் - வே.தங்கநேயன்).

பின்னாளில், 27-4-1987-ஆம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்படுகிற கொடுமையைக் கண்டித்தும் விடுதலைப் புலிகளை ஆதரிக்கவேண்டிய வரலாற்று நெருக்கடி குறித்தும் எம்.ஜி.ஆர். சார்பில் பண்ருட்டி ராமச்சந்திரன் விளக்கிய பின்னர், விடுதலைப்புலிகளுக்கும், ஈரோஸýக்குமாக வழங்கிய நாலு கோடி ரூபாய்க்கான காசோலை குறித்து ஜெயவர்த்தனா அலறினார்.

அவர் பிரதமர் ராஜீவ் காந்தியைத் தொடர்புகொண்டு தெரிவித்த புகாரின் அடிப்படையில் விடுதலைப்புலிகளுக்கும் ஈரோஸýக்கும் அளித்த காசோலையை எம்.ஜி.ஆர். திரும்பப் பெற்றார். இது குறித்து விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் தனது "விடுதலை' நூலில் எழுதி இருப்பதாவது:



""ஈழத்தமிழர்களுக்குத் திரட்டிய நிதியை அம்மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் விடுதலை இயக்கங்களுக்குக் கொடுப்பதில் என்ன தவறு - இதனைப் பிரதமர் புரிந்துகொள்ளாதது ஏன்?'' என்று எம்.ஜி.ஆர். ஆதங்கப்பட்டார்.


தொடர்ந்து, ""அந்தக் காசோலையை வைத்திருக்கிறீர்களா? வங்கியில் போடவில்லையே'' என்றார்.

""அந்தக் காசோலை என்னிடம்தான் இருக்கிறது'' என்றேன்.

""அதை அமைச்சரிடம் (பண்ருட்டி ராமச்சந்திரனிடம்) கொடுத்துவிடுங்கள், நாளை இரவு வீட்டுக்கு வாருங்கள் எனது சொந்தப் பணத்திலிருந்து நான்கு கோடி ரூபாய் தருகிறேன்'' என்றார்.

""எனக்குப் போன உயிர் திரும்பி வந்ததுபோல இருந்தது. மறுநாள் இரவு எம்.ஜி.ஆரின் வீட்டுக்குச் சென்றோம். சொன்னபடி எங்களுக்கு நாலு கோடி ரூபாய் அளித்தார்'' என்றும் குறிப்பிட்டுள்ளார் பாலசிங்கம்.

""விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் தமிழ்நாட்டு அரசுக்கும் இடையில் நல்லுறவு நிலவியது. எமது இயக்கத்தின் மீதும் தலைவர் பிரபாகரன் மீதும் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். கொண்டிருந்த அன்பும் மதிப்புமே இந்த நல்லுறவுக்கு ஆதாரமாக விளங்கியது'' என்று குறிப்பிட்டுள்ளார்
(தகவல்: விடுதலை நூல்).

பாவை சந்திரன்


No comments:

Post a Comment