Photobucket

27 August, 2009

படகோட்டிகளால் கைவிடப்பட்டு தமிழக மீனவர்களிடம் நகைகளை இழந்த அகதிகள்


இலங்கையிலிருந்தும் இராமேஸ்வரம் நோக்கி அகதிகளாக வந்த தமிழ் மக்களிடம் தமிழக மீனவர்கள் சிலர் நகைகள் மற்றும் பெறுமதியான பொருட்களை அபகரித்து விட்டு கரையில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த மீனவர்களை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் தமிழக புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது:-

மன்னார், முருங்கன் பகுதியைச் சேர்ந்த முகுந்தன் வயது 24, அவரது மனைவி தர்ஷினி வயது 23 மற்றும் அவர்களது 8 வயதுக் குழந்தை ஆகியோர் தலைமன்னாரிலிருந்து இராமேஸ்வரம் நோக்கிப் புறப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து நடுக்கடலில் வைத்து படகை நிறுத்திய இலங்கை படகோட்டிகள் அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் நாட்டுப் படகில் மூவரையும் ஏற்றி விட்டனர்.

அங்கிருந்து தனுஷ்கோடியில் இறங்கிய மூவரும் முகுந்தராஜர் சத்திரம் என்ற பஸ் வண்டியில் ஏறி மண்டபம் முகாமுக்குச் சென்றனர்.

அங்கு அவர்களை அகரிகளாகப் பதிவு செய்ய முடியாது எனக் கூறியதால் தனுஷ்கோடி பொலிஸ் நிலையம் சென்றனர். அங்கு நடைபெற்ற விசாரணையில், இலங்கை இராணுவக் கட்டுப்பாட்டில் வாழ்ந்து வந்தோம். சமீபத்தில் நடந்த சண்டையில் எமது பெற்றோர்கள் கொல்லப்பட்டதால் இங்கு வந்தோம்.

இங்கு வருவதற்காக, இலங்கைப் படகோட்டிகளிடம் 35 ஆயிரம் ரூபா கொடுத்தோம். அவர்கள் தனுஷ்கோடியில் இறக்கி விடுவதாகக் கூறி இடைவழியில் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாட்டுப் படகில் எங்களை ஏற்றிவிட்டுச் சென்றனர்.

நாட்டுப்படகில் இருந்த தமிழக மீனவர்கள் எங்களிடம் இருந்த தங்கச் சங்கிலி, தோடு மற்றும் செல்லிடத் தொலைபேசி போன்ற பெறுமதியான உடமைகளைப் பறித்துக்கொண்டு கடற்கரையில் இறக்கிவிட்டனர் என்று கூறினர்.

விசாரணைக்குப் பின் இவர்களைப் பொலிஸார் அகதிகளாகப் பதிவுசெய்து மண்டபம் முகாம் அனுப்பினர். அகதிகளிடம் பெறுமதிமிக்க நகைகளைப் பறித்த நாட்டுப்படகு மீனவர்கள் குறித்து புலனாய்வு துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment