veeramநான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட உறவுகள் முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டு இன்றோடு மூன்று மாதங்களுக்கு மேலாகின்றது.இப்போதும் அவர்களின் வாழ்க்கை கிழிந்த கந்தல் துணியாக முட்கம்பி வேலிகளில் தொங்கிக்கொண்டிருக்கிறது.

அவர்களின் கண்ணீர், மழை வெள்ளமாக மாறி அவர்களையே மீண்டும் அதில் மூழ்கவைத்தகொடுமை சில வாரங்களுக்கு முன்நடந்தேறியது. இனியும்தொடரும்.

இதைக்காண்பாரும் இல்லை.கேட்பாரும் இல்லை.குரல் கொடுப்பாரும் இல்லை.

இதுதான் மானதோடும் வீரத்தோடும் வாழ்ந்த ஈழத்தமிழனின் இன்றைய நிலை.

இது இப்படியிருக்க,சிறிலங்கா பாசிச ராணுவ அரசின் திரைமறைவு படுகொலை
அவலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கிறது.

உலகெங்கிலும் இதுவரை நிகழ்ந்திராத கேவலமான போர்க்குற்றங்களை புரிந்த
“சிறிலங்கா இன அழிப்பு இராணுவம்” இப்போது “பயங்கரவாதத்தை” எப்படி
ஒழிப்பது என்று உலகின் சில வல்லாதிக்க ராணுவங்களுக்கு பாடம்
நடத்துகிறது.

சாத்தான் வேதம் ஓதுகிறது.

சிறிலங்கா பாசிச ராணுவக்கும்பலோடு கைகோர்த்து “தமிழினப்படுகொலை” புரிந்த உலக வல்லாதிக்க சண்டியர்கள் சில இப்போது “உலக மனித நேய குரல்களின்” கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் வாய்பொத்தி நிற்கிறது.

மூன்று சகாப்தங்களுக்கு மேலாக தன் “சுயநிர்ணய” உரிமைக்காக போராடிய இனத்தினை முற்றாக சிதைத்து விட்டு “பயங்கரவாதத்தினை” ஒழித்துவிட்டதாய் சிங்கள தேசம் வேற்றிக்களியாட்டம் போடுகிறது.

தமிழனின் “இரத்த ஆற்றில்” தலை முழுகி சீவிச் சிங்காரிக்கிறது சிங்களம்.

உலக வல்லாதிக்கம் இதை வேடிக்கை பார்க்கிறது.இதே கதி ஒரு வெள்ளையினத்துக்கு நிகழ்ந்திருப்பின் என்ன நடந்திருக்கும்?

உலக மனித நேய அமைப்புக்கள் கத்திக் குழறியிருக்கும்.
ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் செய்து உடனடியாக நடவைக்கை எடுத்திருக்கும்.

சர்வதேச நீதிமன்றம் போர்க்குற்ற வழக்கு தொடர்ந்திருக்கும்.
ஒபாமா ஒப்பாரி வைத்திருப்பார். இந்தியா அமைத்திப்படை அனுப்பியிருக்கும்.

இது ஒன்றும் பாவப்பட்ட தமிழனுக்காய் நிகழவில்லையே இன்னும்.

ஏன்? ஏன்? ஏன்?

ஏனெனில் ஈழத்தமிழன் ஒரு இனம் இல்லை.
ஈழத்தமிழனுக்கு உணர்வுகள் இல்லை.

ஈழத்தமிழன் சுயநிர்ணய உரிமையோடு வாழக்கூடாது.
ஈழத்தமிழனுக்கு இனமான உணர்வு இருக்கக்கூடாது.

மொத்ததில் அவன் அவன் மனிதனே இல்லை.
அவன் மிருகங்களை விட கேவலமான பிறவி.

அவன் சபிக்கப்பட்ட பாவப்பட்ட எந்தவித மனித உணர்வுகளும் இல்லாத மரக்கட்டைகள்.

ஒருகாலத்தில் இந்த சபிக்கப்பட்ட இனத்தின் வளர்ச்சியை,

அதன் விடுதலை உணர்வை அதன் சுயநிர்ணய உரிமைப்போராட்டத்தினை பார்த்து இந்த உலகம் வியந்திருக்கிறது.

குறுகிய காலத்தில் உலகில்எந்தஇனத்திலும்,விடுதலைப்போராடாட்டத்திலும்
கண்டிராத அதீத வளர்ச்சியை இந்த “ஈழத்தமிழனினம்” கண்டபோது மூக்கில் விரலை வைத்த காலமும் இருந்தது.

ஈழத்தமிழனின் “தமிழீழம்” மலர்ந்தால் அதுதான் இந்த உலகில் உள்ள
ஆட்சியாளர்களுக்கும்,நாடுகளுக்கும்,ஆட்சியமைப்புக்கும்,கட்டுமானங்களுக்கும்,போரியல்
தொழில்னுட்பங்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கும் என்று மேற்கத்தையவன் பெருமூச்சுவிட்டான்.

அதுவே வினையானது.

தன்னைவிட தம் இனத்தினை விட “தமிழன்” என்ற ஒரு இனம் தலைதூக்குமாக இருந்தால்

எதிர்காலத்தில் தங்களின் வல்லதிக்க சண்டித்தனக்களுக்கு ஆப்பு வைப்பான் தமிழன் என்று கணக்குப்போட்டார்கள். முதலில் மூக்கு வேர்த்தது பாழாய்ப்போன பாரத தேசத்துக்கு.

அவர்களின் “பிராந்திய நலனுக்கு கேடு” என்ற கேவலமான சிந்தனையின்
அடிப்படையில் சிங்களதேசத்தோடு கைகோர்த்தார்கள்.

இதற்கு தமிழனின் வளர்ச்சி கண்டு வயிறெரிந்த மேற்கத்திய வல்லாதிக்க சதிகளோடு கூட்டுச்சேர்ந்தார்கள்.இவையெல்லாம் திரைமறைவில் நடந்தேறியது.

வெல்வதே குறிக்கோள் எனக் கூட்டுச்சேர்ந்த கும்பல்களுக்கு தமிழனின்
உரிமைக்குரலோ இல்லை அவனது உயிர்களோ கண்களுக்கு தெரியவில்லை.

கொன்று குவிப்பதே அவர்களின் குறிக்கோள்.இது இப்போது மனித நேயம் பற்றிப்பேசும் அமைப்புகளுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் தெளிவாகத்தெரியும்.

ஆனால் உலக மக்களுக்கு இந்த “இனப்படுகொலை” நாடகத்தின் உண்மை வடிவம் தெரியவே தெரியாது. அதுவே உண்மை.

புலம்பெயர் தமிழர்களின் போராட்ட வடிவங்கள் அவர்களுக்கு கொஞ்சம் புரியவைத்திருக்கும். அதுவும் சில தவறான வழிகாட்டல்களால் சொல்லப்பட வேண்டிய விசயங்கள் மழுங்கடிக்கப்பட்டது.

அது தமிழினத்தின் சாபக்கேடான உண்மை. ஆனால் அது இப்போது தெளிவாக
உணரப்பட்டிருக்கிறது.

நடு வீதியில் நாய் செத்தால் நாலுபக்க அறிக்கை நாடாளுமன்றத்தில் வாசிக்கும் மேற்கத்திய மனித நேய கனவான்களுக்கு “தமிழினத்தின் அவலம்”கண்களுக்கு தெரியாது.

ஒரு மிருகத்துக்கு காட்டும் பரிவு கூட நம் இனத்துக்கு இல்லை.அவர்களுக்கு இது பத்தோடு பதினொன்றான விடயம். இதுதான் யதார்த்தம்.

ஆனால் சாதாரண “மனிதநேயம்” கொண்ட மக்களுக்கு அவர்களின் நிலையில் இருந்து விளங்கப்படுத்தினால் எம் நிலை புரியும்.

இன்று எல்லோராலும் கைவிடப்பட்ட ஈனப்பிறவிகள் ஆனது “ஈழத்தமிழினம்”.

சகாப்தங்களாய் வலி சுமந்து ரணப்பட்டு விடுதலை பெற்ற இனங்களுக்கு கூட எம்
இனத்தின் அவலங்கள் கண்களுக்கு தெரியவில்லை என்பதுதான் மிகப்பெரிய வேதனை.

அழிவுகளை கடந்து வலிகளைச்சுமந்து விடுதலைபெற்ற இனத்தினால்த்தான் இன்னொரு இனத்தின் விடுதலை உணர்வை இலகுவில் புரிந்துகொள்ள முடியும்.

பஞ்சு மெத்தைகளிலும்,பகட்டு வாழ்க்கையிலும்,குளிர் அறைகளிலும் துயில் கொள்ளும் “மனித நேய கனவான்களுக்கு” ஈழத்தமிழனின் வலியை உணரமுடியாது.

அவர்களுக்கு அறிக்கை அனுப்புவதிலோ, இல்லை எடுத்துச்சொல்வதிலோ எதுவும் நடந்துவிடப்போவதில்லை. இது கடந்த காலத்தின் ஊடான யதார்த்தம்.
எப்போது நமக்காக இந்த உலகில் போராடி விடுதலை பெற்ற ஒரு இனம்,
ஈழத்தமிழனுக்காய் ஆத்மார்த்தமாக குரல் கொடுக்கிறதோ அன்றுதான் எங்களின்
“வலிகள்”,”விடுதலை வேட்கை”,”சுயநிர்ணய உரிமை” இந்த உலகுக்கு
தெரியப்படுத்தப்படும்.நியாயப்படுத்தப்படும்.

அதுவரை சிங்கள வெறியாட்டம் தொடரும் பாரத தேசத்தின் பரிவோடு.

இரத்த ஆறு ஈழ மண்ணில் ஓடிய போது,புலம்பெயர் தமிழன் வீதியில் இறங்கி
உலகின் மனச்சாட்சிகளை ஓங்கித்தட்டினான்.உலகின் மனித நேய மையத்தின்
வாசலில் தீக்குழித்தான் தமிழன்.பட்டினியிருந்து கெஞ்சி மண்ணாடினான்.

பாரத தேசத்தில் பார்க்கும் இடமெல்லாம் பற்றியெரிந்தார்கள் தமிழக
சகோதரர்கள்.ஓயாது குரல் கொடுத்தோம்.என்ன நடந்தது.எதுவுமே இல்லை.

தமிழகத்தினை நம்பியிருந்தோம் என்று சொல்வதை விட நம்மில் சிலர்
தமிழகத்தின் தறுதலை அரசியல் வாதிகளை நம்பியிருந்தோம் என்று சொன்னால் சரியாகவிருக்கும்.நம்பிக்கெட்டதுதான் மிச்சம்.

பதவிக்கும் பகட்டுக்கும் கதிரைக்கும் ஆட்சி செய்யும் பரதேசிகள் உள்ளவரை எல்லாம் பகற்கனவே.

படையைத்திரட்டி “தமிழீழம்” அமைப்போம் என்று கூவியது எல்லாம் பொய்வேசம்.

ஒரு நேர உணவு விடுத்து “உண்ணாவிரதம்” இருந்தது ஒரு கருங்காலி.இப்படிப்பலவற்றை ஞாபகப்படுத்தலாம்.

ஆனால் அடிமட்ட தமிழக உறவுகள் இபோதும் உணர்வோடுதான் இருக்கிறார்கள்.இல்லையென்றால் எமக்காக பதினைந்து உறவுகள் உயிர்கருகி இருப்பார்களா?

ஆனால் இன்று அவர்களின் சிந்தனைகளையும் செயல்களையும் இந்த அரசியல் பரதேசிகள் கட்டிப்போட்டு வைத்திருக்கிறார்கள்.உண்மையில் “ஈழத்தமிழனுக்காய்” குரல் கொடுக்க வேண்டிய மிகப்பெரிய சக்தி,ஒரேஒரு இனம் “தமிழக உறவுகள்” தான்.

ஆனால் தூரதிஸ்ட வசமாக இப்போதும் அவர்கள் மெளனமாகவே இருக்கிறார்கள்.

தன் உடன் பிறந்த உறவுகளுக்காக ,இனத்துக்காக குரல் கொடுக்காமல் ஆறு கோடி தமிழனும் வேடிக்கை பார்க்கும்போது வெள்ளைக்காரன் வந்துதான் விடுதலை பெற்றுத்தருவான் என நினைப்பது கேவலமே.

தன் உறவுகளுக்காய் வலி சுமந்து வீறுகொண்டு எழுந்த இன்னொரு பெரிய சக்தி
“புலம்பெயர் ஈழத்தமிழினமும்” ஆறு கோடியோடு ஒரு கோடியாக உறங்கிக்கிடப்பது கேவலமானது.

வெற்றிகளையே கண்டு பழகிப்போன நமக்கு சில பின்னடைவுகளும் தோல்விகளும் இழப்புகளும் மனம் சோரவைத்துவிட்டது.

சில நிகழ்வுகளையும்,அழிவுகலையும் சாதாரணமாய் ஜீரணிக்கமுடிவில்லை.முடியும்,நடக்கும்,அடைந்துவிடுவோம் என்ற
மனனிலையோடு போராடிய “புலம்பெயர் தமிழினம்” இன்று
துவண்டுபோய்க்கிடக்கிறது.

கடந்த காலங்களை பற்றி அலசி ஆராய்வதிலும்,தோல்விகளுக்கான காரணங்களை கண்டு பிடிப்பதிலும்,அவற்றை யார் தலையில் வைக்கலாம் என்ற கண்டுபிடிப்புகளிலும் காலம் போய்க்கொண்டிருக்கிறது.

வீணான விவாதங்களிலும்,வேண்டாத ஆராய்ச்சிகளாலும் கைகளில் இருந்தவற்றையும் களவுகொடுத்துக்கொண்டிருக்கிறோம்.

தேவையான பொழுதுகளில் குரல் கொடுத்த நாம் இப்போது அதைவிட ஆயிரம் மடங்கு தேவை உள்ளபோது அமைதியாய் இருப்பது அவமானம்.நாளை வரலாறு கேவலமான இனமாக எம்மை பதிவு செய்யும்.

எங்கள் உறவுகளின் கண்கள் கட்டப்பட்டுள்ளது.

அவர்களின் நாக்குகள் அறுக்கப்பட்டுவிட்டது.

அவர்களின் ஆடைகள் களையப்பட்டு நிர்வாணமாக்கப்படுள்ளார்கள்.

அவர்களின் கைகளும் கால்களும் அடித்து முறிக்கப்பட்டுவிட்டன.

அவர்களின் பிடரிவளியே துப்பாக்கி ரவை துளைத்து குருதி கொப்பளிக்கிறது.

என் தங்கையின் மார்புகள் அறுக்கப்பட்டு விட்டன.

என் தம்பியின் கண்கள் தோண்டி எடுக்கப்பட்டு விட்டது.

என் தாயின் கற்பு களவாடப்பட்டு விட்டது.

என் தந்தையின் தலை அறுக்கப்பட்டுவிட்டது.

இதையெல்லாம் பார்த்தும் இன்னும் நாம் வாய்பேசாமல் இருந்தால், இந்த உலகம்
சொல்வது போல அவர்கள் நினைப்பது போல “ஈழத்தமிழினம்” என்பது ஒரு மனித இனமே இல்லை.ஆகக்குறைந்தது ஜீவ காருண்யம் காட்ட “மிருக இனம்” கூட இல்லை.

ஆதலால் முதலில் எமக்குள்ளே சில முடிவுகளை திடமாய் எடுப்போம்.”புலம் பெயர் தமிழினம்” ஒன்று படவேண்டும் என்கிற கூக்குரலை நிறுத்தி ஒன்றுபட்டிருக்கும் தமிழன் திடமாய் நடந்தால் அவர்களின் வழிதொடர ஆயிரம் பேர் வருவார்கள்.

இன்று ஒவ்வொரு நாடுகளிலும் “தமிழர் பேரவை” என்ற நம்பிக்கை உருவாகியிருக்கிறது.இப்போது அது பலமான ஒரு சக்தியாக பரிணமித்திருக்க வேண்டும்.ஆனால் இப்போதும் முளைவிட்ட விதையாக இருப்பது வேதனை.தமிழினத்துக்கு நேர்ந்திருக்கும் சோதனை.

இந்த நிலை மாறவேண்டும்.ஒன்றுபடுவதுக்கு ஒன்பது மாதங்கள் வேண்டுமெனில் ஒரு உயிர்களையும் காப்பாற்ற முடியாது.முதலில் நாம் எங்களின் மனச்சாட்சிகளை தட்டி திறவுங்கள்.

அதன் பின் உலகத்தின் மனக்கதவுகளை உரிமையோடு தட்டுவோம்.

உன்னைத்திருத்திக்கொள். உலகம் தானாகவே திருந்தும்.