02 September, 2009

வவுனியா முகாம் மர்மம்: 15 ஆயிரம் பேரின் கதி என்ன?

வுனியா தடுப்பு முகாம்களில் இருந்து 15 ஆயிரம் பேர் காணாமல் போய் இருக்கிறார்கள் என வவுனியா மாவட்ட செயலர் சார்ள்ஸ் வடமாகாண பிரதி காவல்துறை மா அதிபருக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

இதன் அடிப்படையில் காவல்துறையினர் சிறப்பு விசாரணைகளை தொடங்கியுள்ளனர். காணாமல் போனவர்களுக்கு என்ன ஆனது என்பது பற்றிய தகவல்கள் எதுவும் தெரியவில்லை.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதிச் சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில், அந்தப் பகுதிக்குள் அகப்பட்டுக்கொண்ட பொதுமக்களை படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வருமாறு அரசு அழைப்பு விடுத்தது.

இதன் பின்னர் 3 லட்சத்துக்கும் மேலான மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்தனர். குறிப்பாக முள்ளிவாய்க்கால் சண்டை இடம்பெற்றபோதே பெருமளவிலான மக்கள் வந்தனர். எனினும் தரைப்படையின் பதிவுகளின்படி 2 லட்சத்து 80 ஆயிரம் மக்களே வந்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் தூதராகவும் இந்தப் புள்ளி விபரங்களையே வெளியிட்டிருந்தது.

சிங்கள தரைப்படையின் முன்னாள் தளபதி சரத் பொன்சோ, முன்பொரு சமயம் ஊடகங்களிடம் பேசும்போது, முகாம்களில் உள்ள மக்கள் மத்தியில் இருந்த 10 ஆயிரத்துக்கும் அதிகமான விடுதலைப் புலிகள் சந்தேக நபர்கள் புனர்வாழ்வு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள் எனக் கூறியிருந்தார்.

ஏற்கனவே சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டிருந்த 10 ஆயிரத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கு மேலதிகமாகவே இந்த எண்ணிக்கை தெரிவிக்கப்பட்டது.

முகாம்களில் உள்ள மக்களின் எண்ணிக்கை விபரம் கடந்த மாதம் கணக்கிடப்பட்டது. அப்போது 10 ஆயிரம் பேர் குறைவது தெரியவந்தது.

இந்த விசயம் தொடர்பாக இரு வாரங்களுக்கு முன்பாக வவுனியா மாவட்ட செயலாளர் ஏ.எஸ்.எம்.சார்ள்ஸ் மூலமாக வடமாகாண பிரதி காவல்துறை மா அதிபருக்கு அறிக்கையிடப்பட்டது.

இது தொடர்பில் கருத்துக்களை அறிந்துகொள்ள மாவட்ட செயலருடன் தொடர்புகொண்ட போது அவர் நாட்டிற்கு வெளியே சென்றுள்ளார் எனக் கூறப்பட்டது.

எனினும், பெரும் எண்ணிக்கையில் ஆட்கள் குறைவதற்கான காரணம் என்ன என்பதையிட்டு உறுதியாகக் கூறமுடியாது உள்ளதாக, பெயர் குறிப்பிட விரும்பாத, செயலகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அண்மைய கணக்கெடுப்பு அரசின் பணிப்பின் பேரில் மாவட்ட செயலகத்தைச் சேர்ந்த 20 அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அந்தக் கணக்கெடுப்பின்படி முகாம்களில் தற்போது 2 லட்சத்து 65 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர்.

உள்ளூர் ஊடகங்களின் தகவல்கள்படி முகாம்களில் இருந்து மக்கள் திடீரென வெளியேறியதனாலேயே புள்ளிவிபரங்களில் இந்த வேறுபாடுகள் ஏற்படுகின்றன எனத் தெரிவிக்கப்படுகின்றது. அப்படிப் பார்த்தால், இதுவரையில் நாள் ஒன்றுக்கு 100 முதல் 200 வரையிலான மக்கள் வெளியேறி இருக்க வேண்டும். இது எவ்வளவு தூரம் சாத்தியமானது என்பது கேள்விக்கு உரியதே.

அதிலும் கடந்த ஒரு மாத காலப்பகுதியில் முகாம்களில் இருந்து மருத்துவத் தேவைகளுக்காகக்கூட வெளியே செல்வதற்கு பெருமளவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

முகாம்களில் இருந்து மக்கள் தப்பிச் செல்கிறார்கள் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்ததை அடுத்து முகாமின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பெருமளவில் பலப்படுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில் போர் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் 70 முதல் 80 நாட்களுக்குள்ளேயே 15 ஆயிரம் பேரும் காணாமல் போயிருக்க வேண்டும். அப்படியாயின் நாள் ஒன்றிற்கு 180 முதல் 200 பேர் தப்பிச் சென்றிருக்க வேண்டும். இது நடைமுறையில் சாத்தியமானது அல்ல எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

எனவே முகாமில் இருந்து காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்த மர்மம் நீடிக்கிறது.

No comments:

Post a Comment