Photobucket

22 August, 2009

மூன்று கோரிக்கைகளை முன்வைத்து மகசீன் சிறையில் தமிழ்க் கைதிகள் இன்று காலை தொடக்கம் உண்ணாநிலைப் போராட்டம்

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 90 தமிழ் அரசியல் கைதிகள் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இன்று காலை உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

மகசீன் சிறைச்சாலையில் 96 தமிழ் கைதிகள் உள்ளபோதிலும் உடல்நிலை காரணமாக ஆறு கைதிகள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில் ஏனைய 90 கைதிகளும் இன்று சனிக்கிழமை காலை தொடக்கம் போராட்டத்தை தொடங்கி இருப்பதாக சிறைச்சாலையில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உண்ணாநிலைப் போராட்டம் தொடர்பாக மகசீன் சிறைச்சாலையில் இருந்து மலரவன் என்ற தமிழ் அரசியல் கைதி அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு நேற்று வழங்கிய சிறப்பு நேர்காணல் வருமாறு:

உங்களின் உண்ணாநிலைப் போராட்டத்தினை எப்போது தொடங்க உள்ளீர்கள்?

நாளை (இன்று) சனிக்கிழமை தொடங்கவுள்ளோம்.

உண்ணாநிலைப் போராட்டத்தில் என்ன கோரிக்கைகளை முன்வைத்து தொடங்க உள்ளீர்கள்?

எமது விடுதலையை வேண்டி மூன்று கோரிக்கைகளை முன்வைத்து எமது போராட்டத்தினை தொடங்க உள்ளோம்.

அந்த மூன்று கோரிக்கைகள் பின்வருமாறு:

(1) கடந்த 4 வருடங்களாக நாங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் எமது உறவுகள் எதுவித பொருளாதார உதவிகளும் இன்றி சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். எனவே எமது விடுதலையை வேண்டி - விடுதலை எமக்கு மட்டும் அன்றி எமது குடும்பங்களுக்கும் வேண்டி பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

(2) உள்நாட்டுப் போர் முடிவடைந்து சிவில் நிர்வாகம் நடைமுறையில் உள்ளதால் போர்க் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் சந்தேக நபர்களுக்கு பிணை அனுமதி வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

(3) பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்பு வைத்திருந்தார்கள் எனும் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைத்திருக்கும் சந்தேக நபர்களுக்கு புனர்வாழ்வு அளித்து உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

உங்களின் கோரிக்கைகளை யாருக்கு நீங்கள் அதிகாரபூர்வமாக அனுப்பி வைத்திருக்கின்றீர்கள்?

சிறிலங்காவின் நீதியமைச்சர் மிலிந்த மொறகொடவுக்கு அனுப்பியுள்ளோம்.

உண்ணாநிலைப் போராட்டத்தில் எத்தனை பேர் இறங்க உள்ளீர்கள்?

நாம் இருக்கின்ற பிரிவில் 90 பேர் இருக்கின்றோம். 90 பேரும் உண்ணாநிலைப் போராட்டத்தில் இறங்க உள்ளோம்.

விடுதலை வேண்டி கோரிக்கை விடுத்திருக்கின்றீர்கள். தடுத்து வைக்கப்பட்டிருந்த இத்தனை ஆண்டுகளில் உங்கள் மீது ஏதாவது குற்றங்கள் சுமத்தப்பட்டிருக்கின்றதா?

சிலருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும் அவை காலம் தாழ்த்தப்பட்டு வருகின்றதே தவிர அவர்கள்மீது எந்தவிதமான வழக்கு விசாரணைகளும் இன்றி காலம் தாழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

பிணை வழங்க வேண்டும் என ஒரு கோரிக்கையினை விடுத்திருக்கின்றீர்கள். அது தொடர்பான மேலதிக விபரம் அல்லது விளக்கத்தினை தரமுடியுமா?

எங்களின் வழக்குகளைப் பொறுத்தவரையில் பிணை அனுமதி உயர்நீதிமன்றத்தில்தான் தீர்மானிக்கப்படும். உயர்நீதிமன்றத்தில் என்றாலும் உயர்நீதிமன்றத்தில் இருந்து சட்டமா அதிபருக்கு அனுப்பி - சட்டமா அதிபர் மூலமாகத்தான் - அதுவும் சட்டமா அதிபர் உடன்பட்டால் மாத்திரமே பிணை கிடைக்கும். அவ்வாறு உடன்பட்டு எவருக்கும் பிணை கிடைத்ததாக இதுவரை தெரியவில்லை.

மகசீன் சிறைச்சாலையில் எத்தனை பேர் தடுத்து வைக்கப்பட்டு உள்ளீர்கள்?

96 பேர் உள்ளோம். உடல்நலப் பிரச்சினையால் ஆறு பேர் உண்ணாநிலைப் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் ஆகக்குறைந்த வயது, ஆகக்கூடிய வயது விபரங்களை தரமுடியுமா?

ஆகக்குறைந்த வயதில் 18 அல்லது 19 வயதில் ஒருவர் உள்ளார். வயதில் கூடியவர்கள் என்ற வகையில் 62 வயதில் உள்ளனர்.

குறிப்பாக இவர்கள் இலங்கையின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள்?

வடக்கு - கிழக்கு, மலையகம் உள்ளிட்ட எல்லாப் பகுதியைச் சேர்ந்தவர்களும் உள்ளனர்.

அனைவரும் எந்தக் காரணத்துக்காக கைது செய்யப்பட்டார்கள்?

சந்தேகதத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

நீங்கள் அனைவரும் (90-க்கும் அதிகமானோர்) எத்தனை ஆண்டுகாலமாக மகசீன் சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டுள்ளீர்கள்?

மகசீன் சிறைச்சாலையில் தொடர்ச்சியாக அல்லாமல் பல்வேறு சிறைச்சாலைகளில் இருந்து மாற்றப்பட்டு - மாற்றப்பட்டு கடைசியாக தற்போது மகசீன் சிறைச்சாலையில் இருக்கின்றோம். இவர்கள் ஒரு வருடம் தொடக்கம் நான்கு வருட வரையான காலப்பகுதியில் உள்ளவர்கள்.

உங்களின் உணவுத் தேவைகளோ அவை எந்தவகையில் சிறைச்சாலைகளில் நீங்கள் மாறி - மாறி சிறைச்சாலைக்கு - சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தாலும் உங்களின் உணவுத் தேவைகளோ அல்லது அத்தியாவசிய வசதிகளோ, படுக்கை வசதிகளோ எந்தளவில் இருக்கின்றன?

அத்தியாவசிய தேவைகள் என்று எங்களுக்கு எதுவும் சிறப்பாக எதுவும் செய்து தரப்படுவதில்லை. உணவு மட்டும் மற்றைய சிறைக் கைதிகளுக்கு வழங்கப்படுவது போன்று வழங்கப்படுகின்றது.

நீங்கள் எந்தவகையில் உயிர் அச்சுறுத்தலோ அல்லது தாக்குதல் அச்சுறுத்தலுக்கு உள்ளாகுகின்றீர்கள்?

சக கைதிகளால்தான் உயிர் அச்சுறுத்தல்கள் ஏற்படுகின்றன.

உண்ணாநிலைப் போராட்டத்தினை நடத்தும்போது சிறைக்காவலர்களோ அல்லது வேறு யாராவது உண்ணாநிலைப் போராட்டத்தினை கைவிடுமாறு ஏதாவது அச்சுறுத்தல்கள் விடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா?

சாத்தியக்கூறுகள் தற்போதைக்கு கூறுமளவுக்கு இல்லை. ஆனால், எதிர்காலத்தில் வரலாம்.

நீங்கள் அதனை எதிர்பார்க்கின்றீர்களா?

சிறைச்சாலை நிர்வாகத்தால் சில அழுத்தங்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கின்றோம்.

அனைத்து தமிழர்களும் உங்களுக்கு என்ன உதவியை வழங்கவேண்டும் என தமிழ் அரசியல் கைதிகள் சார்பில் எதிர்பார்க்கின்றீர்கள்?


எங்களுக்கு வெளியில் இருந்து அரசுக்கு கொடுக்கக்கூடிய அழுத்தங்களை தமிழ் மக்களும் அரசியல் கட்சிகளும் இணைந்து மேற்கொள்ள வேண்டும்
என எதிர்பார்க்கின்றோம்.

உங்களை யாராவது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்து சந்திப்பது உண்டா?

உண்ணாநிலைப் போராட்டங்களில் ஈடுபட்ட காலங்களில் வந்து சந்தித்தார்களே தவிர அதன் பிற்பாடு எவரும் வந்து சந்திக்கவில்லை.

No comments:

Post a Comment