05 September, 2009

வீழா வீரங்கள்...!


அதிகாலை ஒரு மணி இருக்கும். வெடிச்சத்தம் காதைப் பிளக்க.. நித்திரை இடையில் கலைகிறது. "சண்டை தொடங்கிட்டுது எல்லாரும் எழும்புங்கோ" அம்மா அவசரப்படுத்திக் கொண்டிருக்க, பலாலிப்பக்கம் இருந்து 'ஆட்லறிகளும்' கூவுகின்றன. "மண்டை தீவுப்பக்கம் தான் அடி விழுகுது" அப்பா தன் பங்குக்கு சொல்லும் பொழுதே வெடிச்சத்தம் உக்கிரமடைகிறது. பயம் கெளவிக் கொள்ள வீட்டை விட்டு வெளிய வந்து மாமரத்துக்கு அருகில் நின்றபடி அவதானிக்கிறோம். "சந்திரிக்கா போட்ட யுத்த நிறுத்தம் இந்தளவும் தானா?" அம்மா ஏக்கத்தோடு என்னைப் பார்த்துக் கேக்க, "அவள் கதிரை பிடிச்சிட்டாள் எல்லோ எனி என்னவும் செய்வாள்" அப்பா பதிலுரைக்கிறார். நித்திரை குழம்பிய பக்கத்து வீட்டு 'அங்கிளும்'.. வெளியே வந்து, வீதியில் நின்றபடி " என்ன அடி தொடங்கிட்டுது போல". பதிலுக்கு அப்பா "ஓமோம் ஓமோம் சத்ததைப் பார்க்க அப்படித்தான் தெரியுது, பலாலி கோவமா இருக்குது இழப்புகள் போல" என்ற அதற்கு அங்கிள் இருக்கும் விடிய பேப்பரில பார்க்கத்தான் தெரியும்" என்று பதில் தந்தார். என்ன சாதாரணமாய் இருக்கினம். என் மனம் கேள்வி கேட்டுவிட்டு, நினைவுகளால் விரிகின்றது.

அவனை சந்தித்து நண்பனாக்கியது அதிஸ்டமோ துரதிஸ்டமோ நான் அறியேன். வீட்டுக்கு அருகில்தான் அவனும் வாழ்ந்தான். இருந்தாலும் நாங்கள் பேசிக் கொண்டதேயில்லை. கனகாலம் முகம் அறிந்திருந்தும் பேச்சுக்கு அவசியம் இருக்கவில்லை. அன்று ஒருநாள் திலீபன் அண்ணாவின் நினைவு நாளுக்காய் வாழைமரம் கேட்டு வீட்டுக்கு வந்தான். "வாழைமரம் வேணும் தருவிங்களா" "ஏன் தம்பி எதுக்கு " சம்பிரதாயமாய் பதில் கேள்வி எழுகிறது அம்மாவிடம் இருந்து. "திலீபன் அண்ணாவின் நினைவு நாளுக்கு 'ஆன்ரி' ". "அதுதான் பொடியங்கள் வாழைமரம் கட்ட வேணாம் என்றிட்டினம் எல்லோ பிறகேன் கட்டுறீங்கள்..". "ஓம் 'ஆன்ரி' ,இது நான் எங்கள் வீட்டில படம் வைக்க" பதிலுக்கு அவன். "சரி தம்பி வெட்டிப் போங்கோ" என்ற அம்மா "அந்த வாழைகளைக் காட்டி விடப்பு" ...என்றா என்னிடம். கத்தியோடு வாழை காட்ட அவனைத் தொடர்கிறேன். அப்போ.. "உங்களைக் கண்டிருக்கிறன் எங்க இருக்கிறனீங்கள்" தெரிஞ்சும் கேட்கிறேன்.. "செல்வாண்ணா கடைக்கு அருகில" என்றான் அவன். எங்க படிக்கிறீங்கள் "கொக்குவில் இந்துவில"..பதிலுக்கு அவன் "நீங்கள்"... நான் "பற்றிக்ஸ்".

அன்றிருந்து சந்திக்கும் போதெல்லாம் நாங்கள் கதைத்துக் கொள்வோம். ஒரு நாள் அவனே கேட்டான். "நீங்கள் தமிழுக்கு ரியுசன் போறனீங்களோ".. இல்லை நான் தமிழுக்குப் போறதில்லை.. " என்றேன். கந்தசாமி மாஸ்ரட்ட போக விருப்பமா" என்றான் அவன் பதிலுக்கு. "அம்மாட்டக் கேட்டிட்டு சொல்கிறேன்" என்றேன். அதைத் தொடர்ந்து.. அம்மாவிடம் கேட்க அவாவும் சம்மதிக்க நாங்கள் இருவருமே அவரிடம் படிக்க இணைந்தோம். அவருடைய வகுப்புகள் விடிய 6 மணிக்கு ஆரம்பிக்கும்.அவன் விடிய 5:00 க்கே வீட்டு கேற்றில் தட்டிக்கொண்டு நிற்பான். எனது 'சைக்கிளில்' அக்கறையோடு தோழமையோடு இருவரும் வகுப்புப் போவோம். கட்டுரைகள் வீட்டுவேலைகள் கலந்தாலோசித்து செய்வோம். அப்படியே நாங்களும் நல்ல நண்பர்களானோம்.

திடீர் என்று ஒருநாள் நான் கந்தரட்ட வரேல்ல என்றான்.."ஏன் என்ன பிரச்சனை.." . என்றேன். "பிரச்சனை ஒன்றுமில்ல"...என்று இழுத்தான். சொல்லுங்கோ நாங்கள் இயன்றது செய்யுறம் என்ற.."நான் வேற ரியுசனுக்கும் போறனான்.. எல்லாத்துக்கும் காசு பிரச்சனை அதுதான்" என்றான். பாவம்.. அது உண்மைதான். அவன் வீட்டில் அம்மா தான் எல்லாம்..வருமானம் குறைவுதான். அவன் அப்பா வேறு திருமணம் செய்து போய்விட்டார். நான் சொன்னேன் "சரி நாங்கள் கந்தரோட கதைப்பம்...அவர் கஸ்டம் என்றா இலவசமாப் படிக்க விடுவாராம்". கதைச்சுப் பார்ப்பமே என்றேன். ஓம் என்றான். நாங்களும் கதைக்க அவரும் ஓம் என்ற அவன் வகுப்பைத் தொடர்ந்தான். பிரச்சனைகள் ஏதுமின்றி எங்கள் கல்வியும் நட்பும் தொடர்ந்தது.

வழமை போல் அன்றும் வகுப்பிருந்தது. ஆனால் அவன் வரவில்லை. வரமாட்டான் என்று சொல்லவும் இல்லை. காத்திருந்துவிட்டு நான் வகுப்புக்கு சென்றுவிட்டோன். அடுத்த நாளும் அவன் வரவில்லை. வீட்டில் போய் விசாரிக்க அவன் உறவுக்காரர் வீட்டுக்கு கிளிநொச்சி போனதாகச் சொன்னார்கள். ஏக்கம் ததும்ப எப்ப வருவார் என்று கேட்டேன். "அவர் அங்க இருந்துதான் படிக்கப் போறார்" என்றார்கள்...அது கேட்டது முதல் மனசு கனத்தது. நண்பனென்று அவனுடத்தான் அதிகம் பழகியது, இருந்தும் இடையில் இப்படிச் செய்திட்டானே ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை... கோவமும் கவலையும் சேர ஏமாற்றத்துடன் நட்புக்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.

மணலாறில் மின்னல் இராணுவ நடவடிக்கை தொடங்கிய போது ஒரு மாதத்துக்கும் மேலாய் பெரிய சண்டை. காயமடைந்த போராளிகள் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டார்கள். பாடசாலையில் இருந்து போராளிகளைப் பரமாரிக்க நண்பர்கள் போனார்கள். நானும் ஒரு நாள் கூடிப் போனேன். அங்கு ஒரு அதிர்ச்சி காத்திருப்பது அறியாமல் என் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அப்போ "இங்க ஆக்கள் அதிகம் நிக்கிறீங்கள் மற்ற வோட்டுக்குப் போங்கோ" என்று ஒரு போராளி அண்ணா சொன்னார். நானும் எங்களில் சிலரும் அங்கு போனதும் கண்டகாட்சி மனதை உலுக்கியது. முதற் கட்டிலில் அவன்.... நண்பனாகி.. சொல்லிக் கொள்ளாமலே..என்னைப் பிரிந்தவன் கால் ஒன்றை இழந்து காயத்தோடு அனுங்கியபடி.... ஓடிச்சென்று பரிவோடு பார்வைகளால் பேசினேன். அவன் கண்கள் கலங்கின. ஏக்கங்கள் ததும்ப என் கைகளைப் பிடித்தான். கவலைப்படாதே எல்லாம் சரியாகிடும் என்று ஆறுதல் கூறிவிட்டு அவனையும் மற்றவர்களையும் பராமரிக்கும் பொறுப்பை கேட்டு வாங்கி சில தினங்கள் செய்தேன்.

சில வாரங்கள் கழித்து காயங்கள் ஆறி அவனும் வீட்டுக்கு வந்து பேசினான். நான் மீண்டும் போகப் போறன். "அம்மா பாவமில்லையா" என்றேன்.." அப்படிப் பாத்திருந்தா நான் போயிருப்பேனா.. என் கடமையை நான் முழுக்க முடிக்க வேணும்" என்றான் அவன். அவனிடம் உறுதி தெரிந்தது.. வேட்கை இருந்தது. பாசறையில் வளர்ந்தவன் எல்லா..திடமாய் இருந்தான். உன் இலட்சியம் வெல்ல வாழ்த்துக்கள் என்று வாழ்த்துவதை விட வேறெதுவும் பேச சந்தர்ப்பம் அளிக்கவில்லை அவன். அவனுடைய உறுதி என்னை வியக்க வைத்தது. அன்று ஒரு நாள் கோபத்தில்.. அவனுடன் வைத்த நட்புக்கான முற்றுப்புள்ளியை அந்தக் கணமே அகற்றிக் கொண்டேன். ஒரு இலட்சிய வீரனை நண்பனாக்கியதில் எனக்குள் இறுமாப்பு பற்றிக் கொண்டது.

அதன் பின் எங்கு சண்டை என்றாலும் அவன் எண்ணங்களே என்னை ஆட்கொள்ளும். இன்றும் சண்டை என்றதும் அவன் எண்ணக்களே எண்ணில் வந்து மோதின. பொழுது விடிய விடிய சண்டையின் உக்கிரம் தனிந்தது. பயம் நீங்கி கொஞ்சம் படுப்பம் என்று தூங்கிய நான் எழும்ப 10 மணிக்கு மேல ஆகிட்டுது. முகத்தைக் கழுவிட்டு சைக்கிளை ஒரு மிதி மிதிச்சு பேப்பரோட வந்து நின்றேன். செய்தி பெரிசா இல்லை. "மண்டைதீவு இராணுவ முகாம் மீது தாக்குதல்" தலைப்புச் செய்தியோடு விபரம் பெரிசா இருக்கவில்லை. விபரங்கள் கிடைக்கல்லப் போல ஸ்பெசல் பேப்பர் வரும் என்று காத்திருந்தன். வீட்டில் எல்லோருக்குள்ளும் செய்தியறிய ஏக்கம் கலந்த ஆவல். அன்றைய பொழுது அசாதாரணமாகவே கழிந்து கொண்டிருந்தது.

பிற்பகல் போல ஸ்பெசல் பேப்பர் வந்தது. விபரங்கள் தேடத்தேட ஏக்கங்கள் அதிகரித்தது, போராளிகளுக்கு என்ன இழப்பு. விபரம் காணேல்ல என்று எண்ணியபடி பக்கங்களைப் புரட்டினேன். ஓர் இடத்தில் வீரச்சாவு பட்டியலில் சிறிதாக இருந்தது. சில பெயர்கள் மட்டுமே இருந்தன. அப்பாடா பெரிய இழப்பு இல்லை. என் நண்பன் அவன் பெயரும் இருக்கவில்லை. ஏதோ சொல்லி மனம் தன்னைத்தானே தேற்றிக் கொண்டிருக்கும் போது சோக கீதம் இசைக்கும் சத்தம் கேட்டது. அப்போதுதான் மனதுக்குள் ஏதோ ஒரு குற்ற உணர்வை உணர்ந்தேன். பல கேள்விகள் முளைக்கலாயின.. அவன் மட்டுமா எனக்கு நண்பன்.. பழகினால் தானா நட்பு.. சொந்த மண்ணுக்காய் வீழ்ந்துவிட்ட இவன் நண்பன் இல்லையா.. ஏன் நான் இப்படி சுயநலத்தோடு ..??! விடை காணத்துடித்தேன்..அன்றிலிருந்
து எல்லாப் போராளிகளயும் என் நண்பர்களா எண்ணிக் கொண்டேன். நண்பன் ஒருவன் வித்தாகி விழுந்துவிட்டால் கண்ணீர் சிந்தித்தான் செய்தியே படிப்பேன். வித்தாகிவிட்டவர்களுக்கு தேடிச் சென்று மரியாதை செய்வேன். "எதிர்பார்ப்புகள் இல்லா உன்னதங்கள் மாவீரர்கள்" என்ற வசனத்தை எனக்குள் பொறித்துக் கொண்டேன்..! அவர்களை உதாரணமாக்கி வாழப்பழகிக் கொண்டேன். உண்மையில் என் நண்பனே இத்தனை மாற்றங்களுக்கும் வித்திட்டவன். இப்போ அவனே புரட்சியாளன் எனக்குள். பிறிதொரு சண்டையில் அவன் வீரச்சாவடைத்த போது அவனுக்காக அழவில்லை.. இறுமாந்து கொண்டேன். எனக்குள் புரட்சியாளனாக அவனே வாழ்கிறான். அவன் வீழ்ந்தாலும் அவன் விட்டுச் சென்ற நினைவுகள் வீழாது வாடாது.No comments:

Post a Comment