Photobucket

28 August, 2009

புலிகள் இராணுவ ரீதியாக அழிக்கப்பட்டாலும்

புலிகளின் போரியல் நுட்பங்களைஅறிவதற்கு விரும்பும் வல்லரசுகள்:
புலிகள் இராணுவ ரீதியாக அழிக்கப்பட்டாலும்- அவர்கள் போரியலில் தமக்கென முத்திரை பதித்திருக்கிறார்கள் என்பது உறுதியாகியுள்ளது.
விடுதலைப் புலிகளுடனான போரில் வெற்றி பெற்ற இலங்கை அரசிடம் இருந்து, இப்போது வெளியாகும் கருத்துகள் அதன் இராணுவத் திமிரை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளன.

பிரித்தானிய அரசாங்கம் இலங்கைக்கு ஆயுதங்களை வழங்குவதை மீள் பரிசீலனை செய்யவேண்டும் என்றும்-பிரித்தானியா வழங்கிய ஆயுதங்கள், தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் வேண்டும் என்றும், அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சி குழு கோரியிருந்தது. இதுகுறித்து இலங்கையின் முப்படைகளினது உயர் அதிகாரிகள் வெளியிட்டிருக்கின்ற கருத்துகள் பிரித்தானியாவை ஏளனப்படுத்துவது போன்று அமைந்துள்ளன. பிரித்தானியாவிடம் கப்பல்களையோ, விமானங்களையோ, ஆட்டிலறிகளையோ அல்லது வேறெந்த ஆயுதங்களையோ வாங்கி, போரில் வெற்றி பெறவில்லை- இது அந்த நாட்டு எம்.பிக்களுக்குத் தெரியாது போல இருக்கிறதென்று கிண்டலடித்திருந்தனர் அவர்கள்.

1996ம் ஆண்டு பிரித்தானியா பத்து 30மி.மீ பீரங்கிகளையும், அதற்கான 6,000 ரவைகளையும் வழங்கியிருந்தது. இவை கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகுகளில் பொருத்தப்படுவதற்காக வாங்கப்பட்டிருந்தன. இதற்குப் பின்னர் பிரித்தானியாவிடம் இருந்து இலங்கை அரசு வெளிப்படையாக ஆயுதங்களை வாங்கவில்லை. ஆனால் பின்னர் 30மி.மீ பீரங்கிகளுக்கான ரவைகளைக் வாங்க முற்பட்டபோது- அவற்றை விற்க பிரித்தானியா மறுத்து விட்டது என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. எவ்வாறாயினும், பிரித்தானிய அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழுவின் கோரிக்கை இலங்கை அரசாங்கத்தினாலும், அரசபடைத் தளபதிகளாலும் நேரடியாகவும்- மறைமுகமாகவும் ஏளனப்படுத்தப்பட்டிருக்கிறத
ு.

அதேவேளை, இப்படிப்பட்டதொரு சூழலில் பிரித்தானியாவிடம் இருந்து ஒரு கோரிக்கை வந்திருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றன. அதாவது, விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு காரணமாக அமைந்த- கடற்படையின் சிறிய படகுத் தாக்குதல் அணியின் அனுபவங்களை அறிந்து கொள்வதற்கு பிரித்தானியப் பாதுகாப்பு அதிகாரிகள் விருப்பம் தெரிவித்திருக்கிறார்களாம். இலங்கையின் பாதுகாப்புத் தரப்பு இப்படியொரு தகவலை வெளியிட்ட காலகட்டமானது- இது உண்மையா என்ற கேள்வியை எழுப்ப வைத்திருக்கிறது. பிரித்தானியாவின் ஆயுத உதவியின்றியே போரை நடத்தி வெற்றி பெற்றதாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய கருத்து வெளியிட்டிருந்த பின்னணியில் தான் இந்தத் தகவலும் வெளியாகியிருக்கிறது.

பிரித்தானியா தம்மிடம் அனுபவங்களை கேட்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறோம் என்று பெருமைப்படும் விதத்தில் இலங்கையின் கருத்துகள் அமையவில்லை. புலிகளுக்கு எதிராகப் போரிட ஆயுதங்களைத் தர மறுத்த பிரித்தானியா, இன்று போரின் அனுபவங்களை பெறுவதற்குத் தம்மிடம் கெஞ்சுகிறதென்று- அந்த நாட்டைக் கொச்சைப்படுத்தும் விதத்திலேயே இலங்கைப் படையதிகாரிகளின் கருத்துகள் அமைந்துள்ளன. இலங்கைப் படைகள் புலிகளுக்கெதிரான போரில் பெற்ற வெற்றி முக்கியமானதொன்று தான். அதற்காக அந்த வெற்றிக்கு இலங்கை மட்டும் உரிமைகொண்டாட முடியாது. அத்தோடு இது உலகத்தில் நிகழ்ந்திராத ஒன்றெனக் கூறிப் பெருமை கொள்ளவும் முடியாது. உலகில் எங்குமே- வல்லரசுகளால் கூட, நிகழ்த்த முடியாத அற்புதத்தை நிகழ்த்தியிருப்பதாக இலங்கைப் படைகள் தம்மைத் தாமே புகழ்ந்து கொண்டிருக்கின்றன.

ஆனால், 1950 இல் மலேசியாவில் விடுதலை கோரிய ஆயுதப்போராட்டத்தை பிரித்தானியா முழுமையாக நசுக்கியிருந்தது. பஞ்சாபில் சிக்கியர்களும், காஷ்மீரில் முஸ்லிம்களும், கிழக்கு மாநிலங்களில் இடதுசாரி மாவோயிஸ்டுகளும் தனிநாடு அமைப்பதற்கு ஆயுதப் போராட்டங்களை நடத்தியபோதும் இந்திய அரசு அவற்றை தோற்கடித்திருந்தது. இப்படிப் பல உதாரணங்கள் இப்போது வந்து விட்டன. இந்த வரிசையில் மற்றொன்றாகவே இலங்கைப் படைகளின் வெற்றியும் அமைந்திருக்கிறதே தவிர- எல்லாவற்றுக்கும் முன்னுதாரணமான ஒன்றாக இருக்கவில்லை. புலிகளுக்கு எதிரான போர் முடிந்த பின்னர்- முள்ளிவாய்க்கால் கடற்கரையில் ஒரு இராணுவ வெற்றிவிழா நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய அப்போதைய இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா- இந்தப் போரில் பெற்ற அனுபவங்களைக் கற்றுக் கொள்ள, உலகமே தம்மிடம் வரிசையாக வந்து நிற்கப் போவதாகக் கூறியிருந்தார்.

புலிகள் இயக்கம் உலகில் மிகவும் வல்லமை பெற்றதொரு இராணுவ அமைப்பாக- முப்படைகளையும், மரபுசார் படையணிகளையும் கொண்டதாக இருந்தது உண்மை. அப்படிப்பட்டதொரு இயக்கத்தை இராணுவ ரீதியாகத் தோற்கடித்தது இலங்கைப் படைகளுக்கு முக்கியமானதொரு வெற்றி தான். அதுபோலவே இந்தப் போரின் மூலம் சிறந்த அனுபவங்களை அவர்கள் பெற்றிருப்பதும் மறுக்க முடியாதது.
சில நாட்களுக்கு முன்னதாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய மோதறையில் உள்ள கவசப் படையணியின் தலைமையகத்துக்குச் சென்றிருந்தார். அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர்- இலங்கை இராணுவத்தின் கிளர்ச்சி முறியடிப்பு போருபாயங்களை அறிந்து கொள்ள பல்வேறு நாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளன.

எனவே வெளிநாடு;கள் இராணுவங்களுக்கு கிளிர்ச்சி முறியடிப்புப் பயிற்சிகளை வழங்குவதற்கு, முல்லைத்தீவில் பயிற்சி முகாம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாகத்; தெரிவித்திருந்தார் பாகிஸ்தான் போன்ற நாடுகள் இங்கு பயிற்சி பெற விரும்புவதாகவும் அவர் கூறியிருந்தார்.
ஆனால், முல்லைத்தீவில் பாகிஸ்தான் இராணுவத்துக்குப் பயிற்சி அளிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்த அவரே, பின்னர் அதை மறுத்தார்.
முல்லைத்தீவில் பாகிஸ்தான் படைகளுக்கு பயிற்சி வழங்கப்படாது தென்பகுதியில் வைத்தே பயிற்சி அளிக்கப்படும் என்று கூறியிருக்கிறார் லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய.

புலிகளைத் தோற்கடித்தது பற்றி அனுபவங்களைப் பெறுவதற்கு வெளிநாட்டுப் படைகள் ஆசைப்படுவது முக்கியமானதொரு விடயமே.
ஆனால் இந்தப் பெருமை இலங்கை இராணுவத்துக்குக் கிடைத்திருப்பதற்குக் காரணமே புலிகள் தான். ஒருவரின் குணத்தை அவரது நண்பன் யார் என்பதைக் கொண்டு முடிவு செய்யலாம். அதுபோன்றே ஒரு படையின் பலத்தை அறிய அந்தப் படையின் எதிரியைக் கொண்டே மதிப்பிடலாம் என்பார்கள்.

இந்த வகையில் புலிகளின் பலம்- திறன்- ஆற்றல் ஆகியனவே, இந்த முறியடிப்புப் போருக்கு முக்கியத்துவத்தைக் கொடுத்திருக்கிறது.
புலிகள் இயக்கத்தின் போரியல் வளர்ச்சி பற்றி, அவர்களின் திறன் பற்றி சர்வதேச இராணுவ விற்பன்னர்கள் பலரும் கடந்த காலங்களில் இலங்கைக்குச் சென்று நேரில் அறிந்திருந்தனர். இப்போது அவர்கள் தோற்கடிக்கப்பட்ட விதம் பற்றி அறிய ஆசைப்படுகின்றனர். அதேவேளை, இலங்கைப் படைகளின் சிறிய படகுத் தாக்குதல் அணிகளின் தந்திரோபாயம் பற்றி அறிந்து கொள்ள பிரித்தானியா ஆசைப்படுவதாக தகவல் வெளியிடப்பட்டிருப்பது தான் ஆச்சரியம். புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டது சர்வதேச சமூகத்தின் பங்களிப்புடன் தான் என்பதை மறைக்கவே இலங்கை அரசு இப்படியான தகவல்களை வெளியிடுவது போலத் தெரிகிறது.

ஒரு கட்டத்தில் புலிகளைத் தோற்கடிக்க சர்வதேசம் உதவ முன்வரவில்லை என்று கூறியது அரசாங்கம். பின்னர் சில ஆசிய நாடுகளைத் தவிர வேறு மேற்குநாடுகள் உதவவில்லை என்றும் கூறியது. இப்போது பிரித்தானிய ஆயுதங்களின் மூலம் புலிகளைத் தோற்கடிக்கவில்லை என்கிறது. இந்தியாவின் உதவியைப் பெறவில்லை என்கிறது. இப்படிப் பல உண்மைகளை மறைத்து தமது இராணுவ வல்லமையை- வெற்றியை மிகைப்படுத்திக் கொள்வதில் இலங்கை அரசும், படைகளும் முயற்சி செய்து வருகின்றன. இலங்கைக் கடற்படையின் சிறிய படகுத் தாக்குதல் அணிகளின் தந்திரோபாயம் பற்றிய அறிந்து கொள்ள பிரித்தானியா விருப்பம் வெளியிட்டது உண்மையானால்- அதற்கான பெருமையும் புலிகளுக்கேயுரியது.

கடற்புலிகளின் கடல் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டுவதில் முக்கிய பங்கு வகித்தது- நான்காவது கட்ட ஈழப்போரில் கடற்படை அறிமுகப்படுத்திய விசேட படகுப் படையணி (Special Boat Squadron-SBS) மற்றும் துரித நடவடிக்கைப் படகு அணி (Rapid Action Boat Squadron -RABS) ஆகியனவாகும். இலங்கைக் கடற்படையில் விசேட படகுப் படையணி 1993இல் அமைக்கப்பட்டது. இரண்டாம் கட்ட ஈழப்போர் மற்றும் மூன்றாம் கட்ட ஈழப்போர்களின் போதும் இது செயற்பட்டது. அதேவேளை துரித நடவடிக்கைப் படகு அணி தான் நான்காவது கட்ட ஈழப்போர் காலத்தில் உருவாக்கப்பட்டது. இந்தப் படையணிகளின் உருவாக்கமே புலிகளின் தோல்விக்குக் காரணம் என்று கூற முடியாது. இந்தப் படையணிகளுக்கு வழங்கப்பட்ட படகுகள், ஆயுதங்கள் தான் முக்கிய மாற்றத்துக்கு வழிவகுத்தது.

கடற்படையின் சுடுபல சக்தியை அதிகரிக்கும் வகையிலும், கடற்கரும்புலிகளின் தாக்குதல்களை முறியடிப்பதற்கு ஏற்ற வகையிலுமே இந்தத் தந்திரோபாயத்தைக் கடற்படை அறிமுகப்படுத்தியிருந்தது. இரண்டாம், மூன்றாம் கட்ட ஈழப்போர்களின் போது கடற்படை அழிவுகளை சந்தித்ததற்கான காரணங்களை ஆராய்ந்த போது- ஒற்றை இயந்திரம் கொண்ட சண்டைப் படகுகளும், குறைந்த சூட்டு வலுவும் தான் தமது பலவீனம் என்று கண்டறிந்தது.

புலிகள் தமது பாரிய சண்டைப்; படகுகளில் 250 குதிரைவலு கொண்ட நான்கு இயந்திரங்களைப் பொருத்தியிருப்பர். சிறிய சண்டைப் படகுளில் இரண்டு இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருக்கும். ஒரு இயந்திரம் பழுதானால் கூட மற்றதைப் பயன்படுத்தித் தப்புவதற்கு இது வாய்ப்பானது. இதன் அடிப்படையில் தான் கடற்படை தமது தந்திரோபாயத்தை மாற்றியமைத்தது. இதற்கான ஆய்வுகளின் போது புலிகளின் தாக்குதல் படகுகளே முன்மாதிரிகளாக எடுக்கப்பட்டன. இதன் அடிப்படையில் மூன்று வகையான படகுகள் உருவாக்கப்பட்டன. இதில் பெரியது- 17 மீற்றர் நீளமானது. இது கட்டளை மற்றும் சண்டைப் படகுக்கான வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டது. இரண்டரை மீற்றருக்கு எழும்பும் அலைகளையும் சமாளித்துப் பயணம் செய்யக் கூடியது இந்தப் படகு. இரண்டாவது வகைப் படகு 14மீற்றர் நீளம் கொண்டது.

அடுத்தது- 23அடி நீளத்தை கொண்டது. இதற்குப் பெயர் அரோ (Arrow) இது 1.25 மீற்றர் உயருமான அலைகளிலும் லாவகமாகப் பயணம் செய்யக் கூடியது. 14மீற்றர் மற்றும் 17மீற்றர் நீளமான கரையோர ரோந்துப் படகுகளில் 250 குதிரை வலுக்கொண்ட நான்கு இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. 37 நொட்ஸ் வேகத்தில் இவை பயணம் செய்யும் இந்தப் படகுகளில் 23மி.மீ இரட்டைக்குழல் பீரங்கி (23 mm Double-barrel gun) ஒன்று, சிங்கப்பூர் தயாரிப்பான 40மி.மீ தன்னியக்க கிரனேட் லோஞ்சர் (CIS 40 mm Automatic Grenade Launcher) ஒன்று, 12.7மி.மீ விமான எதிர்ப்புத் துப்பாக்கிகள் இரண்டு என்பன பொருத்தப்பட்டன.

23அடி நீளம் கொண்ட ‘அரோ’ தாக்குதல் படகுகளில் 250 குதிரைவலு கொண்ட இரண்டு இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளதால் 35 நொட்ஸ் வேகத்தில் பயணம் செய்யக் கூடியது. இதில் 23மி.மீ பீரங்கி அல்லது 12.7மி.மீ துப்பாக்கி மற்றும் 40மி.மீ தன்னியக்க கிரனேட் லோஞ்சர் என்பன பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் கடற்புலிகளின் செறிவான சுடுபல சக்தி கடற்படையால் தோற்கடிக்கப்பட்டது. இந்தத் தந்திரோபாயம் கடற்புலிகளிடம் இருந்து கடற்படை கற்றுக் கொண்டது தான். அரோ வகைப் படகுகள் பிரித்தானியா, அமெரிக்கா போன்ற முன்னணி நாடுகளின் கடற்படைகளின் பாவனையில் உள்ளது. ஆனால் அவற்றில் ஆகக் கூடியது 12.7மி.மீ துப்பாக்கியைத் தான் பொருத்தியிருக்கிறார்கள். இந்தப் படகுகளில் 20மி.மீ, 23மி.மீ பீரங்கிகளையும ;பொருத்தி கடற்சமர்களை நடத்த முடியும் என்று இலங்கைக் கடற்படைக்குக் காட்டிக் கொடுத்ததே புலிகள் தான். இப்போது அந்த உத்தியைத் தான் பிரித்தானியா கேட்பதாகக் கூறிப் பெருமைப்படுகிறது இலங்கை அரசு.

ஆதைவிடக் கடற்படை வடிவமைத்த அரோ வகைப் படகுகள் கூடக் கடற்புலிகளின் படகுகளை மாதிரியாக்கக் கொண்டே வடிவமைக்கப்பட்டவை. கடற்புலிகளை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இலங்கைக் கடற்படையின் படகுகள், தந்திரோபாயங்களைப் பற்றி அறிந்துகொள்ள பிரித்தானியா விரும்புகிறதென்றால் அது இலங்கைக் கடற்படைக்குரிய பெருமையல்ல.

புலிகள் இராணுவ ரீதியாக அழிக்கப்பட்டாலும்- அவர்கள் போரியலில் தமக்கென முத்திரை பதித்திருக்கிறார்கள் என்பது உறுதியாகியுள்ளது. அவர்களின் போரியல் நுட்பங்களை, தந்திரோபாயங்களை- கற்றுக் கொள்ள வெளிநாடுகள் விரும்புகின்றன என்றால்- அதற்காக பெருமைப்படக் கூடியது இலங்கை அரசு அல்ல. புலிகள் இயக்கமே.

No comments:

Post a Comment