Photobucket

27 August, 2009

ஈழ ஆர்ப்பாட்ட கூட்டம் நடத்த வைகோவுக்கு அனுமதி மறுப்பு

கோவை மாநகர பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ஈழத்தமிழர்களுக்கு போராட்டம் நடத்தி சிறை சென்ற தொண்டர்களுக்கு பாராட்டு விழா, பொதுக்கூட்டம் வருகிற 31-ந் தேதி மாலை 6 மணிக்கு தெப்பக்குளம் மைதானத்தில் நடக்க இருந்தது.

இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த கூட்டத்துக்கு அனுமதி கேட்டு ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் பெரியார் தி.க. மாநகர செயலாளர் கோபால் விண்ணப்பித்து இருந்தார்.

ஆனால் போலீசார் எல்.டி.டி.இ. இயக்கத்திற்கு ஏற்கனவே அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டு சிறை சென்றவர்களுக்கு பாராட்டு விழா நடத்துவது சட்ட விரோதமான செயலாகும் எனக்கூறி அனுமதி மறுத்து விட்டனர்.

இதையடுத்து வருகிற 31-ந்தேதி அன்று நடைபெற இருந்த கூட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சிங்கள இராணுவம் செய்த கோரக் கொலைகள்: வைகோ அறிக்கை

இலங்கையின் சிங்களக் கொலைபாதக அரசு, தமிழ் இனத்தைக் கரு அறுக்கும் திட்டத்தோடு, கோரப்படுகொலைகளை நடத்தி வருகிறது என்று தொடர்ந்து நாம் கூறிவந்த குற்றச்சாட்டுகள், நுற்றுக்கு நூறு உண்மை என்பதற்கு மறுக்க முடியாத சாட்சியம் கிடைத்து உள்ளது. உலகில் இருட்டடிப்புச் செய்யப்பட்ட மனித உரிமை மீறல்களையும், அவலங்களையும் லண்டன் சேனல் 4 தொலைக்காட்சி வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து உள்ளது. அதே தொலைக்காட்சி, நேற்றைய தினம் வெளியிட்டு உள்ள தமிழர் படுகொலைக் காட்சிகள், இருதயத்தைப் பிளக்கின்றன. இரத்தத்தை உறைய வைக்கின்ற அந்தக் காட்சிகளில் தமிழ் இளைஞர்கள், சிங்கள இராணுவத்தினரால் மிகக் கொடூரமாகச் சுட்டுக்கொல்லப்படுகின்றனர். அந்த இளைஞர்கள், முழு நிர்வாணமாக்கப்பட்டு, அவர்களின் கைகள் பின்புறமாக விலங்கிடப்பட்ட நிலையில், தரையில் உட்கார வைக்கப்பட்டு, அவர்களின் பிடரியிலும், முதுகிலும், தலையிலும் துப்பாக்கியால் சிங்கள இராணுவத்தினர் சுட்டுக் கொல்கின்றனர். துடிதுடிக்க அந்த இளைஞர்கள், இரத்த வெள்ளத்தில் செத்து மடிகின்றனர். ஏராளமான இளைஞர்கள் இப்படிக் குரூரமாகச் சிங்கள இராணுவத்தினரால் வரிசையாகச் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அந்தப் படுகொலைகள் நடந்தபோது, சிங்களச் சிப்பாய் ஒருவனின் கைத்தொலைபேசியில் படம் பிடித்த காட்சிகள் தங்களுக்குக் கிடைத்ததாகத் தொலைக்காட்சி நிறுவனம் கூறுகிறது. கொல்லப்பட்ட இளைஞர்களின் கைகளில் கயிறு கட்டப்பட்டு உள்ளது தெரிகிறது. எனவே, ஏராளமான இளைஞர்களை இப்படிக் கைகளைப் பின்புறமாகக் கட்டி விலங்கிட்டு, பின்னர் கயிற்றால் கட்டி, விலங்குகளைக் கட்டி இழுத்து அடைத்து வைப்பதுபோல் அடைத்து வைத்து இருந்ததும், சித்திரவதை செய்ததும் தெரிய வந்து உள்ளது.

தமிழ் இனத்தைக் கொன்று குவிக்கும் கொலைபாதகம் நடத்தி வருகிற கொடியவன் ராஜபக்சேயின் அரசும், இராணுவமும், தமிழ் இளைஞர்களைச் சித்திரவதை செய்வதும், கொல்வதும், தமிழ்ப் பெண்களைக் கற்பழித்துக் கொல்வதும், அன்றாட நிகழ்வுகளாக, சர்வசாதாரணச் சம்பவங்களாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வந்து உள்ளது.

தற்போது தொலைக்காட்சியில் வெளியாகி உள்ள கோரப் படுகொலைகள், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நடந்து இருக்கிறது.

பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டதையும், லண்டனில் உள்ள தொலைக்காட்சி நிறுவனங்களும், செய்தித்தாள்களும், உலகத்துக்குத் தெரிவித்தன. மனிதகுல வரலாற்றில் யூதர்களைக் கொடூரமாகக் கொலை செய்த ஹிட்லரின் நாஜிப் படையினர்கூடச் செய்யத் துணியாத முறையில், சிங்கள இராணுவத்தினர், தமிழ் இளைஞர்களையும், இளம் பெண்களையும் வதைத்துத் துன்புறுத்திக் கொன்று அழித்தனர்.

யுத்தகளங்களில் தோற்கடிக்கப்பட்ட படைவீரர்களைக் கைது செய்தாலும், அவர்களை மனிதாபிமானத்தோடு போர்க்கைதிகளாக நடத்த வேண்டும் என்று, ஐ.நா. மன்றமும், மனித உரிமைகள் ஆணையமும், ஜெனீவாவில் செய்யப்பட்ட ஒப்பந்தங்களும் வலியுறுத்துகின்றன. சிங்களச் சிப்பாய்களை விடுதலைப் புலிகள் கைது செய்து வைத்து இருந்த காலத்தில், அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுத்து, அவர்களை மிகுந்த பண்பாட்டோடு புலிகள் நடத்தி வந்தார்கள் என்பதை பின்னர் விடுவிக்கப்பட்ட இராணுவச் சிப்பாய்களே பல கட்டங்களில் தெரிவித்து உள்ளனர். ஆனால், சிங்கள இராணுவம், மிருகங்களைவிடக் கேவலமான முறையில், கொடூரமாகத் தமிழர்களைத் துன்புறுத்தினர். குறிப்பாகத் தமிழ்ப் பெண்களை, ஆடைகளை அகற்றிப் படுநாசம் செய்தனர். அதிலும் யுத்தகளத்தில் போரில் உயிர்நீத்த தமிழ்ப் பெண்களின் சீருடைகளை அகற்றி, கோரச் சிரிப்புடன் சிங்களச் சிப்பாய்கள் வன்புணர்ச்சி நடத்தியது, உலகத்தில் இதுவரை எங்கும் நடக்காத கொடுமை ஆகும்.

நம் நெஞ்சைப் பதற வைக்கின்ற படுகொலைக் காட்சிகளைக் காண்கிறபோது, இதயம் வெடித்து விடுவதுபோல இருக்கிறது.

ஈராக்கில், அபு கிரைப் சிறையில் 2003 ஆம் ஆண்டில் அமெரிக்கச் சிப்பாய்களால் சித்திரவதைக்கும் துன்புறுத்தலுக்கும் ஈராக்கியர்கள் ஆளாக்கப்பட்ட உண்மை, முதலில் கைத் தொலைபேசிக் காட்சிகளாக வெளியில் வந்தவுடன், ஈராக்கில் ஆக்கிரமிப்புச் செய்த அமெரிக்க நாட்டிலேயே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இரண்டு பேருக்கு பத்து ஆண்டுக்கால சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது.

அதைப்போல, கியூபாவில் குவாண்டனமோ வளைகுடாவில் அமைந்து உள்ள அமெரிக்கக் கடற்படைத் தளத்தில், கைதிகள் கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டதற்கு உலகமே கண்டனம் தெரிவித்தது. அந்த முகாமை மூடிவிடுவோம் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்தார்.

ஆனால், அங்கெல்லாம் நடந்ததைவிட மிகக் கொடூரமான முறையில் தமிழர்களை சிங்கள இராணுவம் செய்து இருக்கின்ற படுகொலைகளுக்கு அனைத்து நாடுகளின் அரசுகளும் கண்டனம் தெரிவிப்பதோடு, பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் சிங்கள இராஜபக்சே அரசையும், இராணுவத் தளபதிகளையும், கொடுஞ்செயலில் ஈடுபட்ட இராணுவத்தினரையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தித் தண்டிக்க முன்வர வேண்டும்.

முதுகுக்குப் பின்னால் கைகளைக் கட்டி விலங்கிட்டு, சிங்களவன் துப்பாக்கியால் சுடும்போது, அந்தத் தமிழ் இளைஞர்கள் உயிர் பிழைக்க முயன்று, குண்டுகள் சீறி வரும்போது தலையை அங்குமிங்கும் அசைப்பதும், அதையும் மீறி அவர்கள் உடலில் குண்டுகள் பாய்ந்து, துடிதுடிக்க அவர்கள் மடிவதையும் காண்கையில், நம் உள்ளத்தில் வேதனை நெருப்புப் பற்றி எரிகிறது.

ஐயோ, நாதியற்றுப் போனோமா நாம் இந்த நானிலத்தில்? என்று மனம் பதறித் துடிக்கிறது. இக்கோரப் படுகொலைகளைச் செய்துவிட்டு, வழக்கம்போலச் சிங்கள அரசு, அப்படி நடக்கவே இல்லை என்றுகூறி விடுதலைப்புலிகள் மீது பழி சுமத்துகிறது.

இலங்கையில் சிங்கள அரசால் மனித உரிமைகள் மண்ணோடு மண்ணாக்கப்பட்டு, தமிழ் இனம் உலகில் எங்கும் நடந்து இராத இனக்கொலைக்கு ஆளாகிய நிலையில், நடைபெற்ற கொடுமைகள் குறித்து விசாரணை மேற்கொள்ள, ஆய்வு நடத்த ஐக்கிய நாடுகள் மன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்து, சிங்கள அரசுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து, வாக்கு அளித்த நாடுகள் தங்கள் மனச்சாட்சியைக் குழிதோண்டிப் புதைத்து விட்ட பாவத்தைச் செய்தன.

தமிழர்களைக் கொன்று குவிக்க சிங்கள அரசுக்கு ஆயுதங்களை அள்ளித்தந்த இந்திய அரசு, ஐ.நா. மன்றத்திலும், இலங்கையை ஆதரித்தது வெட்கக்கேடான இழிசெயல் ஆகும். ஈழத்தில் முள்வேலி முகாம்களுக்குள் வதைபட்டுக் குற்றுயிரும் குலையுயிருமாக தவித்துக் கொண்டு இருக்கின்ற மூன்று இலட்சம் தமிழர்களின் துயரம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. மழை வெள்ளத்தோடு அவர்களின் கண்ணீரும் சேர்ந்து கொண்டது.

முல்லைத் தீவு மாவட்டத்தில், வன்னிப் பிரதேசத்தில், இப்படி நிர்வாணமாக்கப்பட்டு, கைகள் கட்டப்பட்டு சிங்கள இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட இக்கொடுஞ்செயலுக்கும், தமிழர்கள் சிந்திய இரத்தத்துக்கும், சிங்கள அரசு மட்டும் அல்ல, இந்திய அரசும் பொறுப்பாளி ஆகும். தமிழர்களின் அழிவுக்குக் காரணமான ஆயுதங்களையும், அனைத்து இராணுவ உதவிகளையும் அளித்த இந்திய அரசுக்குத் தமிழர் வரலாற்றில் எந்நாளும் மன்னிப்புக் கிடையாது.

ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்த சிங்கள அரசின் ரத்த வெறியாட்டம் குறித்த உண்மைகள் ஒவ்வொன்றாக அம்பலத்துக்கு வந்தே தீரும். இந்தத் துன்பமான நேரத்தில், உலகெங்கும் உள்ள தமிழர்கள், மனம் தளர்ந்துவிடாமல், நம் இனத்தைக் காக்க, கொடுமை செய்தோரைக் கூண்டில் நிறுத்த, உறுதிகொண்டு போராடுவோம். அனைத்து உலக நாடுகளின் மனச்சாட்சியின் கதவுகளைத் தட்டுவோம்.இந்தக் கோர நிகழ்ச்சிகளை அறியும் வேளையில், உலகெங்கும் உள்ள மனித மனங்கள் பதறவே செய்யும். ஈழத்தமிழர்களின் துயரத்தையும், சிங்கள அரசின் கொடுமைகளையும் உலக மக்கள் அறியும்போது, இன்றைய நிலைமை நிச்சயமாக மாறும். தமிழர்களின் பக்கம் நியாயம் இருக்கிறது. தமிழ் ஈழத்தின் விடுதலைக்குரல், நியாயத்தின் குரல் என்பதை உலகம் ஒருநாள் உணர்ந்து ஏற்றுக்கொள்ளவே செய்யும் என்ற நம்பிக்கையோடு, நம் தர்மயுத்தத்தைத் தொடர்வோம்.

26.08 2009
தாயகம் வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க

26 August, 2009

தமிழீழம் என்ற: இலட்சியப் போருக்கு நாம் கொடுத்த விலை கொஞ்சமா?

தமிழீழம் என்ற:
இலட்சியப் போருக்கு நாம் கொடுத்த விலை கொஞ்சமா? பதில் எம் கண்ணீராக தான் இருக்க முடியும்
தமிழீழம் என்ற இலடச்சிய போருக்கு நாம் கொடுத்த விலை கொஞ்சமா? என்று கேட்டால் அதற்க்கு பதில் எம் கண்ணீராக தான் இருக்க முடியும். விடியலை வேண்டி அகிம்சை வழியில் நாம் மேற்க்கொண்ட போராட்டங்கள் முதல் இன்று ஆயுதம் தாங்கி போராடிய இறுதிக்காலகட்டம் வரை தமிழீழ விடுதலைப்போராட்டம் மிகவும் உச்சக்கட்ட விலையை கொடுத்துள்ளது.

முப்பதினாயிரத்துக்கும் மேற்ப்பட்ட மாவீரர்களின் உயிர்கொடை,
இரண்டு இலட்சத்துக்கு அதிகமான எம் மக்களின் உயிர் பறிப்புக்கள் என்று நாம் கொடுத்த விலை அதிகம்.

இன்றும் அங்கங்களை இழந்து நிற்க்கும் போராளிகள், பொதுமக்களின் நிலை பரிதாபமாக இருக்கும் போது எமது அதிக பட்ச வேலைத்திட்டமாக அகதி முகாம்களில் இருக்கும் மக்களை மீட்டாலே போதும் என்ற நிலைக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் வந்து விட்டனர். என்றால் இது மிகையாகாது. போராட்டஙகள் கவனயீர்ப்புக்கள், சாலை மறியல்கள், துண்டுப்பிரசுர விநியோகம் என்று புத்துணர்வுடன் கடந்த பத்து மாதங்கள் போராடிய எமது மக்களின் உணர்வுகளும் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மெளனித்ததோடு மெளனமாகி அழுகின்றது.

ஏன் இந்த சோர்வு?
எதனால் இந்த பின்னடைவு?

தமிழர்கள் அன்றும் சரி இன்றும் சரி விடுதலைப்புலிகள் என்ற அமைப்பை அரணாகக் கொண்டே வாழ்ந்தனர். தாம் வீட்டுக்குள் இருக்கும் போது அவர்கள் மட்டும் போராட வேண்டும் என்று எண்ணினார்கள். கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு எந்த தமிழனும் வீதியை மறிக்க நினைக்கவில்லை. 24 மணிநேரமும் போராட முனையவில்லை. காரணம் "அவர்கள் பாத்துக்கொள்ளுவார்கள்" என்ற அலட்சிய நோக்கு.

இன்னும் சொல்ல போனால் நாம் பணம் கொடுதால் போதும் மற்றவை எல்லாம் முடியும் என்று எமது விடுதலைப்போரை வியாபாரமாகவே பெரும்பாலான தமிழ் மக்கள் சிந்திக்க தலைப்பட்டனர்.

இன்று விடுதலைப்புலிகள் ஆயுதப்போரை முடிவுக்கு கொண்டு வந்த போது இவர்களும் சோர்வடைந்துள்ளமை இவர்களின் மூல சக்தி எது என்பதை எடுத்துக்காட்டுகின்றது.

ஆனாலும் விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை தமது தமிழீழ விடுதலைக்கான போரை அரசியல் வழிமுறையூடாக தாம் தொடர உறுதிபூண்டுள்ளனர். ஆனால் புலம்பெயர் தமிழர்கள் பலரும் இன்றுதான் போராட்டத்தை அறிந்தவர்கள் போல, விமர்சனம் என்ற பெயரில் முரணான கருத்துக்களை முன்வைப்பதும். பின்பு அக் கருத்துக்களை தங்களுக்கு ஏற்ற வகையில் திரிவுபடுத்துவதும். அதிகரித்து வருகின்றது.

குறிப்பிட்ட சிலரோ தாமே போராட்டத்தை கட்டி காப்பவர்கள் போல தம்மை முன்னைய காலத்தில் அடையாளப்படுத்திய போதும், இன்று போராட்டத்துக்கும் தமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல செயற்படத்தொடங்கியுள்ளனர்.

அது மட்டுமன்றி, இன்னும் சிலரோ தாம் தற்போது நடைமுறைப்படுத்தபட்டுள்ள கட்டமைப்புக்குள் இல்லை என்பதால் அந்த கட்டமைப்புக்கள் நேர விரையம் என்று சொல்லுமளவுக்கு வந்துவிட்டனர். அத்துடன் மீண்டும் மக்கள் எழுச்சி கொள்வதுவும் அவர்களை எழுச்சி கொள்ள வைப்பதுவும் தேவையற்ற செயற்பாடு என்றும் க்ர்ர்ற முற்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக இன்று பலரின் வாயில் உச்சரிக்கப்படுவது முகாமில் இருக்கும் போராளிகளை, மக்களை மீட்க வேண்டும் என்பதே! ஆனால் இந்த பிரச்சினைகளுக்கு நாம் தொடர்ந்தும் தற்காலிகமான தீர்வுகளை நோக்கி பயணிப்பதால் பாதிக்கப்படுவது என்னவோ எமது மக்கள் மாத்திரமே!

கூடாரங்களுக்குள் மக்கள் இருப்பது வேதனையே! சித்திரவதைக் கூடங்களுக்குள் போரளிகள் வதைபடுவது ஏற்க முடியாதது தான்.ஆனால் இவற்றுக்கு எல்லாம் நாம் ஒரு தற்காலிக தீர்வாக மக்களை , போராளிகளை வெளியேற்றி விட்டால் மட்டும் போதுமா?

நாளைக்கு மீண்டும் இந்த பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுக்காது என்பதற்கு என்ன உத்தரவாதத்தை இந்த பிரச்சினையை இவ் வகையில் தீர்கலாம் என்று நினைப்பவர்கள் முன்வைத்துள்ளனர். யாரிடமும் தெளிவான சிந்தனை இல்லை. ஆள் ஆளுக்கு ஒரு ஆய்வு கட்டுரை! ஆளாளுக்கு ஒரு செயற்பாட்டு வடிவம். போதாக்குறைக்கு வீராப்புக்கள் வேறு.

இன்று ஏற்பட்டுள்ள ஓர் சோர்வு நிலையில் பிரித்தானியத்தமிழர் பேரவை ஆரம்பித்திருக்கும் மக்கள் எழுச்சிப் போராட்டம் காலத்தின் தேவை என்பதை கருத்தில் கொண்டு இம்முயற்ச்சி நிச்சயம் ஏனைய நாடுகளிலும் முன்னெடுக்கப்படவேண்டும்

எனவே எல்லைகள் கடந்தும் விஸ்வரூபம் எடுக்கும் சிக்களப் பேரினவாதத்தை எதிர்கொண்டு எமது தேச விடுதலைக்கான பணியை முன்னெடுக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு சரியான வழிநடத்தலினூடாக பயணிப்பதே எம் இனத்தின் விடுதலைக்கு நாம் செய்யும் கைமாறாகும். எனவே நாம் இந்த விடுதலைப்போருக்கும் எம் மக்களின் அமைதியாக வாழ்வுக்கும் கொடுத்த விலை கொஞ்சமா? என்பதை அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்

கே.பியின் கைது வெளிவராத சில உண்மைகள் : அதிர்ச்சித் தகவல்


கே.பி எவ்வாறு கைதுசெய்யப்பட்டார், எங்கு கொண்டு செல்லப்பட்டார் என பல தகவல்கள் உலாவந்தவண்ணம் உள்ளன, கற்பனையின் உச்சக்கட்டத்திற்குச் சென்ற சில இணையத்தளங்கள், அவர் தானாகச் சென்று சரணடைந்தார் என்று கூட எழுதித்தள்ளியுள்ளார்கள். உண்மை சற்று தாமதமாக வெளியே வருகின்றது. அதிர்வு இணைய வாசகர்களுக்காக கொழும்பில் இருந்து வந்த தகவலை வழங்குகிறோம்.
கே.பியைப் பற்றி எந்த ஒரு இரகசியத்தையும் வெளியிடக் கூடாது என கோத்தபாய கொழும்பில் உள்ள அனைத்துப் பத்திரிகைகளுக்கும் தனிப்பட்ட ரீதியில் மிரட்டல் விடுத்துள்ளார்.
தற்போது கிடைக்கப்பெற்ற தகவலின் படி கொழும்பில் உள்ள ஒரு தனிப்பட்ட மிகவும் இரகசியமான இடம் ஒன்றில் கே.பி வைக்கப்பட்டிருப்பதாகவும், தேசிய புலனாய்வுத் துறையின் இயக்குனர் கபில் கேண்டவிதாரன, அவரிடம் விசாரணைகளை நடத்திவருவதாகவும் அறியப்படுகிறது. கே.பி யிடம் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்திற்கும் அவர் பதில் கூற மறுப்பதாகவும், அப்படிக் கூறினாலும், பொட்டு அம்மானுக்கே அது தெரியும் என்று கூறிவருவதால், விசாரணை நடத்துவோரால், பல விடயங்களைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது.
இருப்பினும் காலப்போக்கில் அவர் சில உண்மைகளைக் கக்குவார் அல்லது சித்திரவதைகளைத் தீவீரப்படுத்தும் நோக்கம் காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுவரை அவர் கூறியதாக வெளிவந்த, அனைத்துச் செய்திகளும் பொய்யான கற்பனையே என்கிறார்கள், அவரை விசாரிக்கும் புலனாய்வு அதிகாரிகள். கொழும்பில் உள்ள சில நாளிதழ்கள் வியாபார நோக்கத்திற்காக, கே.பி, சில விடயங்களைக் கூறியதாகச் செய்திகளை வெளியிட அவற்றை தமிழ் இணையங்களும் செய்தியாகப் பிரசுரித்துள்ளனவே அன்றி, இதுவரை அவர் வாயை திறக்கவில்லை என்பதே உண்மை.
எவ்வாறு கைது நடந்தது:
கே.பி கைதானது இது ஒன்றும் முதல் தடவை அல்ல, தாய்லாந்தில் 2007ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11ம் திகதி கே.பி கைதுசெய்யப்பட்டிருந்தார். இருப்பினும் தாய்லாந்து அரசாங்கம் அவரை நாடுகடத்தவில்லை. பின்னர் அவர் சில நாடுகளின் தலையீடு காரணமாக விடுவிக்கப்பட்டார். இருப்பினும் இம் முறை இலங்கை அரசு வித்தியாசமாக இதனைக் கையாண்டுள்ளது. கே.பி கைதுசெய்யமுன்னர் வந்த தொலைபேசி அழைப்பு தயாமோகனிடம் இருந்து வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கு முன்னரும் ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், இருப்பினும் அவர் அந்த தொலைபேசி அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், பின்னர் வந்த தயாமோகனின் அழைப்பை ஏற்றுக் கதைத்த அவர், சைகையால் அங்கு நின்ற நடேசனின் தம்பியாரிடம், கொஞ்சம் பொறுங்கள் தான் வெளியேசென்று கதைத்துவிட்டு வருவதாகக் கூறியுள்ளார். தனது கண்ணாடியை அவர் மேசை ஒன்றின் மீது கழற்றிவைத்துவிட்டு வெளியே சென்றுள்ளார்.
தயாமோகனுடன் சுமார் 15 நிமிடங்கள் உரையாடிய அவர், தொலைபேசியை துண்டித்தபோது, வேறு ஒரு அழைப்பு வந்தது அந்த அழைப்பில் அவர் பேசியவண்ணம் கீழே இறங்கி ரியூன் கோட்டலின் சுவருக்கு அருகாமையில் சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே அவர் சுற்றிவழைக்கப்பட்டிருந்தார் என்பது அவருக்குத் தெரியாது.
கைது செய்தது யார் ?

ஆம் அவரைக் கைது செய்தது Malaysian Special Bureau (MSB ) மலேசியாவின் ஸ்பெசல் பியூரோ ஏஜன்ட். மலேசியாவில் இயங்கும் மலேசிய ஸ்பெசல் பியூரோ அமைப்பு மலேசிய முடியரசின் அபிமானத்திற்குரிய, மற்றும் நம்பிக்கைக்குரிய அமைப்பாகும், இவர்களின் நடவடிக்கையை போலீசார் கட்டுப்பத்த முடியாது, மற்றும் இவர்களின் நடவடிக்கை பற்றி மலேசியப் போலீசார் அறிந்திருக்கவும் மாட்டார்கள்.
இரண்டாவது தொலைபேசி அழைப்பை மேற்கொண்டவர் தமது அமைப்புக்கு உதவியவர் என மலேசிய ஸ்பெசல் பியூரோவினர் தெரிவித்துள்ளனர்.
5ம் திகதி புதன்கிழமை மாலை சுமார் 3.00 மணியளவில் அவர் மலேசிய ஸ்பெசல் பியூரோ ஏஜன்ட்டுகளால் கைது செய்யப்பட்டார். கே.பியின் வாகன சாரதி அப்பு என்றழைக்கப்படுபவரும் கைது செய்யப்பட்டார். அவர்கள் இருவரும் உடனடியாக பாங்கொக் கொண்டு செல்லப்பட்டனர்.
ஏன் பாங்கொக் ? மலேசியாவில் இருந்து கொழும்புகொண்டு சென்றிருக்கலாமே ?
மலேசியாவில் உள்ள தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்து அமைப்புக்களுடன் கே.பி தொடர்புகளை சமீபத்தில் ஏற்படுத்தியிருந்ததே கே.பியின் கைதுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. மலேசியாவில் உள்ள ஹிந்துராப் அமைப்புடன் கே.பி தொடர்புகளை மேற்கொண்டதால், மலேசிய அரசாங்கம் அதிர்ச்சிக்குள்ளானது, ஏற்கனவே அங்கு வாழும் தமிழர்கள், மலேசியாவில் தமக்கு சம உரிமையில்லை என்றும் தம்மை ஒரு இரண்டாம் தர குடிமக்களாகவே அரசு கருதுவதாகவும் கூறிப் பலபோராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந் நிலையில் கே.பி யின் இந்த நடவடிக்கை மலேசிய அரசுக்குப் பெரும் திண்டாட்டமாக இருந்தது. கே.பியை தாமே கைதுசெய்து நாடுகடத்தியதாக மலேசிய அரசாங்கம் ஒப்புக்கொள்ளுமேயானால் அது அங்கு வாழும் தமிழர்களிடம் மேலும் பல சிக்கல்களைத் தோற்றுவிக்கும் என அஞ்சிய மலேசியா, கைதுசெய்த கே.பியை உடனே பாங்கொக்கிற்கு கொண்டுசென்றது. ஆக இரண்டு இலங்கை புலனாய்வு அதிகாரிகள் பிரசன்னமாகியிருந்தனர். கே.பி மலேசியாவில் கைதாகும் போது, அவர்கள் இருவரும் காரில் அமர்ந்திருந்தனர். இதுவே உண்மை
ஆனால், தாமே கே.பியை கைதுசெய்தோம், எந்த நாட்டிற்கும் சென்று எவரையும் கைதுசெய்ய முடியும் என்று இலங்கை அரசு கொக்கரித்தது எல்லாம் படு பீலா. சொந்த நாட்டில் உள்ளவர்களையே ஒழுங்காக கைதுசெய்ய முடியாத கையாலாகாத இலங்கை புலனாய்வுப் பிரிவினர், நாடுவிட்டு நாடுசென்றா கைதுசெய்யமுடியும்? செய்மதி தொலைபேசியூடாக நடமாட்டத்தை கண்காணித்தே தாம் இந்தக் கைதை மேற்கொண்டதாக இலங்கை அரசு படு உடான்ஸ் விட்டது, காரணம் மலேசியா வாய் திறக்காது என்பது அவர்களுக்குத் தெரியும்.
5ம் திகதி மாலை சுமார் 3.00 மணியளவில் மலேசியாவில் இருந்து கோத்தபாய ராஜபக்சவின் கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்பு ஒன்று வந்ததாக் கூறப்படுகிறது. அதில் பேசிய ஜெனரல் உதய பெரேரா, கே.பி கைதான விடயத்தைக் கூறியிருக்கிறார். உடனடியாக இலங்கை இராணுவ விமானத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்றில், கேணல் ஷாலில் தலைமையில் சில அதிகாரிகள் பாங்கொக் விமான நிலையத்திற்குப் புறப்பட்டுள்ளனர்.
இலங்கை விமானப்படையினர் பாங்கொக் விமான நிலையத்திற்குப் பல தடவைகள் பறப்பில் ஈடுபட்டிருந்ததாகவும், பாங்கொக் நகரமே கே.பியை இலங்கைக்கு அழைத்துவர ஏற்றது என இலங்கை அதிகாரிகள் மலேசியாவிடம் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அங்கு சென்ற கேணல் ஷாலில் கே.பியையும் அவரது வாகன சாரதி அப்புவையும் இலங்கை கொண்டு சென்றனர்.
சீன அரசாங்கம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது
இது இவ்வாறிருக்க கே.பியின் கைது காரணமாக தமிழ் மக்களை விட அதிர்ச்சியில் இருப்பது சீன அரசாங்கமே. ஏன் என்றால், புலிகளின் மொத்த ஆயுதக் கொள்வனவில் பாதிக்குமேல் ஆயுதங்களை வழங்கும் முக்கிய நாடாகச் சீனா விளங்கியுள்ளது. இலங்கையுடன் நல்ல நட்புறவைப் பேணிவரும் சீனா மறுபக்கத்தில் புலிகளுக்கும் பல நவீன ஆயுதங்களை வழங்கியுள்ளது. இலங்கை அரசிற்கு தான் கொடுத்த ஆயுதங்களின் விபரங்களையும் சொல்லி அதனைவிட அதி நவீன ஆயுதங்களைப் புலிகளுக்கு விற்று, நாடகம் ஆடியது சீன அரசு. தற்போது இந்தியாவிற்கு தலையிடியை ஏற்படுத்தும் நோக்கில் இலங்கையுடன் கைகோத்து நிற்கும் சீனா கே.பியின் கைதுதொடர்பாக படு அதிர்ச்சியடைந்துள்ளது.
இராணுவம் கூறும் ஊர்ஜிதமற்ற தகவல்கள்:
இலங்கை இராணுவத்தின் கூற்றுப் படி தளபதி ராம் தம்மிடம் அக்கரைப்பற்றில் வந்து சரணடைந்ததாகவும், ராமை வைத்து கே.பி மற்றும் சில முக்கியமான நபர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியதாகவும் கூறுகின்றனர். ராம் காட்டில் இருப்பதாக் கூறி அவரே தொலைபேசியில் உரையாடியதால், பல விடையங்கள் வெளிவந்ததாகக் கூறப்படுகிறது. கே.பியுடன் தொடர்ந்து உரையாடிவந்த தளபதி ராம், கே.பி மலேசியாவில் இருந்து புறப்பட இருந்த தேதிகளையும் இராணுவத்திற்குக் கூறியதாக ஊர்ஜிதமற்ற இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர், அந்த இயக்கத்தை அரசியல் ரீதியாகப் பலப்படுத்துவதை கே.பி மேற்கொண்டதும், அமெரிக்க அரசில் அவர் கொண்டிருந்த செல்வாக்கும் இலங்கை அரசு அவரைக் கைதுசெய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது எனலாம். கடைசி நாட்களில் அவர் தனது பாதுகாப்பில் அக்கறை செலுத்தவில்லை என்பது எல்லோராலும் தெரிவிக்கப்படும் ஓர் விடையமாகும்.
எது எவ்வாறு இருப்பினும் கே.பியை இலங்கை நீதிமன்றில் ஆஜர் படுத்தி முறையான விசாரணையை நடத்த இலங்கை அரசிற்கு உலகநாடுகள் அழுத்தம் கொடுக்கவேண்டும். அதற்கான ஏற்பாடுகளை புலம்பெயர் தமிழர்கள் மேற்கொள்ளவேண்டும்.

சனல்4 வின் அதிர்சி வீடியோ : இலங்கை அரசு மறுப்பு




வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தில் பெரும் மனிதப்பேரவலம் இடம்பெற்றுள்ளதாக தொடர்ச்சியா இலங்கை அரசைக் குற்றஞ்சாட்டிவரும் இலண்டன் சனல்4 தொலைக்காட்சி வன்னியில் இளைஞர்கள் கண்கள் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக்கொல்லப்படுவதை காண்பிக்கும் வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளது.

குறிப்பிட்ட வீடியோ பதிவு ஜனநாயகத்திற்கான ஊடக அமைப்பினர் தமக்கு வழங்கியதாகவும், அவ்வீடியோ கடந்த ஜனவரி மாதம் களமுனையில் நின்ற சிப்பாய் ஒருவர் தனது கையடக்கத் தொலைபேசி மூலம் அக்காட்சியை பதிவு செய்திருந்தாகவும் கூறப்படுகின்றது.

இச்சர்சைக்குரிய விடயத்தை பூரணமாக நிராகரித்திருக்கும் இலங்கை அரசு தமது படைகள் வன்னியில் புலிகளுக்கு எதிராகவே போராடியதாகவும் மக்களுக்கு எதிரான எவ்வித செயற்பாடுகளிலும் இறங்கியிருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாத பட்டியலிலிருந்து விடுதலை புலிகளை நீக்கக்கோரும் மனு அமெரிக்க நீதிமன்றால் நிராகரிப்பு


விடுதலைப் புலிகளை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்கக் கோரும் மனுவினை அமெரிக்க நீதிமன்றம் நிராகரித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஜனாதிபதி ஜோர்ஜ் டபி ள்யூ புஷ் 2001 ஆம் ஆண்டில் சில குழுக்களை பயங்கரவாதக் குழுக்களெனப் பிரகடனம் செய்யவும் அவற்றின் சொத்துக்களை முடக்கிவைக்கவும் .

அவற்றுக்கான உதவிகளையும் சேவைகளையும் தடை செய்யவும் அமெரிக்க அரசாங்கத்திற்கு அதிகாரமளித்து பிறப்பித்த நிறைவேற்று கட்டளை ஒன்றுக்கு எதிராக அமைப்பு ஒன்று பயங்கரவாத பட்டியலிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை நீக்கிவிடுமாறு தாக்கல் செய்த மனுவை அமெரிக்க லொஸ் ஏஞ்ஜல்ஸ் மாநில நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

வன்னியில் நடைபெற்ற மோதலின் பொது அகதிகளாகி மன்னாரின் வசித்து வரும் மக்களுக்கு நிவாரணம் கிடையாதாம்



போர் காரணமாக மன்னாரில் தஞ்சமைடைந்துள்ள மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த நிவாரண முத்திரைகளை கொடிய இலங்கை அரசு இரத்து செய்துள்ளது.
நிவாரண முத்திரைகள் இரத்து செய்யபட்ட மக்களுக்கு 25.000ஆயிரம் ரூபா மீள் குடியேற்றத்திற்காக வழங்கப்படும் என்று
பிரதேச செயலகத்தினர் தெரிவித்துள்ளதாக மன்னாரில் தஞ்சமடைந்துள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்

உடலில் குண்டு பாய்ந்த நிலையில் சிகிச்சைக்காக ராமேஸ்வரதுக்கு தப்பி வந்த ஈழத்தமிழர்

இலங்கை ராணுவத்தின் துப்பாக்கி குண்டு ஒன்று விலாவில் பாய்ந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக ஈழத்தமிழர் ஒருவர் ராமேஸ்வரத்துக்கு கள்ளத் தோனியில் தப்பி வந்துள்ளார்.
இலங்கையில் முல்லைத் தீவு மாவட்டம் சுதந்திரபுரம் என்ற பகுதியில் வசித்து வந்தவர் ரஞ்சித் ஜெயகுமார். இவருக்கு சுகந்தினி என்ற மனைவியும், மதி இன்பம், கனி இன்பன் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.

இவர் போர் சமயத்தில் இலங்கை ராணுவத்தின் குண்டு மழைக்கு பயந்து பதுங்கு குழியில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். அப்போது ஒரு நாள் இலங்கை ராணுவத்தின் துப்பாக்கியில் இருந்து வெளிவந்து ஒரு தோட்டா பதுங்கு குழியில் மறைந்திருந்த இவரது வலது விலாவில் பாய்ந்தது.

இந்நிலையில் நேற்று அவர் சிகிச்சைக்காக தனது குடும்பத்தினருடன் ராமேஸ்வரம் வந்தார். தற்போது அவரிடம் ராமேஸ்வரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

ராமேஸ்வரம் போலீசாரிடம் அவர் கூறுகையில்,

போர் சமயத்தில் சுதந்திரபுரம் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து முள்ளிவாய்க்கால் பகுதிக்கு சென்றோம். ராணுவம் நடத்திய தாக்குதலில் பதுங்கு குழியில் தங்கியிருந்த எனது வலது விலாவில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது.

இதையடுத்து முல்லைத் தீவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். ஆனால் துப்பாக்கி குண்டுகளை அகற்ற முடியாது என்று டாக்டர்கள் கூறிவிட்டனர்.

என்னால் வலியை தாங்கி கொள்ள முடியவில்லை. எனவே, தமிழ்நாட்டுக்கு வந்து சிகிச்சை பெற முடிவு செய்தேன். இதையடுத்து வவுனியா முகாமுக்கு சென்று அகதிகளோடு தங்கினோம். பின்பு ஒரு படகோட்டிக்கு ரூ 2 லட்சம் கொடுத்து இங்கு தப்பி வந்தோம் என்றார்.

அவரிடம் போலீசார் சோதனை செய்த போது இலங்கை, கனடா, அமெரிக்க, ஐரோப்பா உள்பட பல வெளிநாட்டு பணமும், இந்திய பணம் ரூ.25 ஆயிரமும் இருந்தது.

பின்னர் ரஞ்சித் ஜெயக்குமார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைக்கப்பட்டார். அவர்கள் அனைவரும் மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்