Photobucket

01 September, 2009

சிறிலங்காவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி தொடர்ச்சியாக இரு மாதங்கள் வீழ்ச்சி


சிறிலங்காவின் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதித்துறை கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தொடர்ந்து இரண்டாவது மாதமாக வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதுடன் 3 லட்சம் மக்களை நாசி பாணி வதை முகாம்களில் தடுத்து வைத்திருக்கும் சிறிலங்காவின் ஆயத்த ஆடைகளை கொள்முதல் செய்யாதீர்கள் என மேற்குலக நாடுகளில் புலம்பெயர் தமிழர்கள் தொடர்ச்சியான பரப்புரை நடத்திவரும் நிலையில் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

புள்ளி விபரங்களின்படி நாட்டின் மிகப் பெரிய ஏற்றுமதித் துறையான ஆயத்த ஆடைகள் துறையின் வருமானம் கடந்த ஆண்டு ஜூன் மாத காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 5.6 விழுக்காட்டினால் குறைந்துள்ளது.

மே மாத விற்பனை நிலைவரம் இதனைவிட மோசமானதாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டு மே மாதத்தில் இடம்பெற்ற விற்பனையைவிட இந்த ஆண்டு 22.23 விழுக்காடு விற்பனை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக ஜூன் மாதத்தில் ஏற்பட்ட விற்பனை வீழ்ச்சிக்கு அமெரிக்காவில் ஆடைகள் வாங்குவது குறைந்ததே காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவுக்கான ஏற்றுமதியில் 21.6 விழுக்காடு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஏற்றுமதி 2008 ஆம் ஆண்டு மே, ஜூன் மாத காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது 10.8 விழுக்காட்டினால் அதிகரித்துள்ளது.

2008 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதி 2009 ஆம் ஆண்டு தொடக்கம் காலாண்டு காலப்பகுதியில் 8.8 விழுக்காடு உயர்ந்திருந்தது. ஆனால் அரையாண்டு முடிவில் மொத்த ஏற்றுமதி 2.4 விழுக்காட்டினால் வீழ்ச்சி அடைந்துள்ளது.

2010 ஆம் ஆண்டு இளவேனில் காலத்துக்கு என வழங்கப்பட்ட கொள்முதல் கட்டளைகளுக்கான துணிமணிகளை சிறிய நிறுவனங்கள் ஒக்ரோபரில் ஏற்றுமதி செய்ய தொடங்கியதும் இந்த வீழ்ச்சி சரிசெய்யப்பட்டு விடும் என ஆடை ஏற்றுமதி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் தேவைகள் குறைந்திருப்பதும் விலை போட்டியுமே ஆடை ஏற்றுமதி வீழ்ச்சிக்கான காரணம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

புல்மோட்டை முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை பார்வையிட 3 மாதங்களுக்குப் பின்னர் முதல் முறையாக அனுமதி

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற இறுதிக்கட்ட மோதல்களின்போது இடம்பெயர்ந்து திருகோணமலை மாவட்டத்தில் உள்ள புல்மோட்டைப் பகுதியில் சிறிலங்காப் படையினரால் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை அவர்களின் உறவினர்கள் பார்வையிடுவதற்கு முதல் தடவையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புல்மோட்டை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களைப் பார்வையிடுவதற்கு கடந்த மூன்று மாதகாலமாக அங்குள்ள உறவினர்கள் எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

தமது உறவினர்களைத் தேடி புல்மோட்டைக்குச் சென்றவர்கள் சிறிலங்காப் படையினரால் கடந்த வாரம் வரையில் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில் தனது மகனைப் பார்வையிடுவதற்காக கடந்த வாரம் அனுமதிக்கப்பட்ட பெண்மணி ஒருவர் தனது அனுபவத்தை பி.பி.சி.க்கு விபரித்துள்ளார்.

மட்டக்களப்பில் இருந்து புல்மோட்டைக்குச் சென்று தனது மகனைப் பார்வையிட்டுவிட்டுத் திரும்புவதற்கு தனக்கு மூன்று நாட்கள் தேவையாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.

"அந்த முகாமுக்குச் செல்வது மிகவும் கடினமானதாக இருந்தது. திருகோணமலையில் இருந்து புல்மோட்டைக்குச் செல்வதற்கு ஒரேயொரு பேருந்துதான் உள்ளது. அதில் பயணிப்பதற்கே ஒரு நாள் சென்றது. அதன் பின்னர் முச்சக்கர வாகனம் ஒன்றில் மூன்று கிலோ மீற்றர் தூரம் செல்ல வேண்டி இருந்தது" எனவும் அவர் குறிப்பிட்டார்.

"இவ்வளவு கடினமான பயணத்தை மேற்கொண்டு அங்கு சென்றால், மகனுடன் பேசுவதற்கு பத்து நிமிடங்கள் மட்டுமே எனக்குத் தரப்பட்டன" எனவும் அவர் கவலையுடன் கூறினார்.

புல்மோட்டையில் உள்ள முகாம்களிலும் மருத்துவமனையிலும் சுமார் 6 ஆயிரம் இடம்பெயர்ந்த மக்கள் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்த முகாம்களில் உள்ளவர்களில் சிலர் போரின் இறுதிக்காலத்தில் முல்லைத்தீவில் இருந்து இடம்பெயர்ந்து வந்தவர்களாகவுள்ள அதேவேளையில் ஏனைய சிலர் வருடக்கணக்காக இங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.

மட்டக்களப்பில் உள்ள முகாம் ஒன்றில் இருந்து தனது மகனைப் பார்வையிடுவதற்காக புல்மோட்டைக்கு வந்த பெண்மணி, ஊடகங்கள் அனைத்தும் வவுனியாவில் உள்ள முகாம்கள் பற்றிய செய்திகளை மட்டுமே வெளியிடுகின்றனவே தவிர, புல்மோட்டை முகாம்கள் பற்றிய செய்திகளை வெளியிடுவதில்லை எனக் குற்றம் சாட்டினார்.

புல்மோட்டை முகாமிலும் ஆயிரக்கணக்கான மக்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள போதிலும், வெளிநாட்டுத் தூதுக்குழுக்கள் அனைத்தும் வனியாவில் உள்ள முகாம்களுக்கு மட்டுமே சென்று பார்வையிடுகின்றன எனவும் தெரிவித்த அவர், புல்மோட்டை முகாம்களுக்கு யாராவது சென்றுள்ளது பற்றி தான் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

வவுனியா, யாழ்ப்பாணம் உட்பட பல பகுதிகளில் இருந்தும் புல்மோட்டைக்கு வந்தவர்கள் கடந்த வாரம் முகாம்களில் உள்ள தமது உறவுகளைப் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், இதற்கு முன்னர் பல தடவைகள் தனது மகனைப் பார்வையிடுதற்காக தான் சென்றபோது அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு வவுனியா முகாம்களில் சிலரும் புல்மோட்டையில் சிலருமாகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த முகாம்களில் வாழ்க்கை நிலைமை மிகவும் மோசமானதாகவுள்ளதாகத் தெரிவித்த அவர், இந்தப் பகுதியை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் குழு கவனத்திற்கொள்ளாமல் இருப்பது எப்படி என்பதுதான் தெரியவில்லை எனவும் குறிப்பிட்டார்.

சிங்கள ராணுவத்தின் போர்க்குற்றங்கள்:பட்டியலிட்டு காட்டுகிறது அமெரிக்கா

வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிங்கள ராணுவம் நடத்திய வலிந்த தாக்குதல்களின் போது இடம்பெற்ற போர்க் குற்றங்கள் குறித்து அமெரிக்காவின் போர்க் குற்றங்கள் தொடர்பான அலுவலகம் அறிக்கை ஒன்றைத் தயாரித்து வருகின்றது.

செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதிஅந்த அறிக்கை வெளியிடப்படும் எனத்தெரிகிறது.

இறுதிப் போரின்போது 20 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக அறிக்கைகளை மேற்கோள்காட்டி லண்டனில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளேடு செய்தி வெளியிட்டிருந்தது.

ஏப்ரல் மாதம் இறுதிவரை 6 ஆயிரத்து 500 பொதுமக்கள் உயிரிழந்தமை ஐக்கிய நாடுகள் சபையால் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் மே மாதம் 19 ஆம் நாள் வரை நாள்தோறும் சுமார் ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபையின் ரகசிய உள்ளக அறிக்கைகள் தெரிவிப்பதாக 'ரைம்ஸ்' கூறியது.

உயிரிழப்புக்கள் அநேகமாக சிங்கள ராணுவத்தின் எறிகணைத் தாக்குதல்களாலேயே ஏற்பட்டன எனவும் 'ரைம்ஸ்' நாள் ஏடு கூறியிருந்தது.

கண்களும் கைகளும் கட்டப்பட்டு, ஆடைகள் களையப்பட்ட தமிழ்க் கைதிகள் சிங்களப் படையினரால் சுட்டுக்கொல்லப்படும் காணொலிக் காட்சிகள் அண்மையில் பிரித்தானியாவின் 'சனல் - 4' நிறுவனத்தால் வெளியிடப்பட்டிருந்தது. இலங்கையின் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு இந்தக் காணொலியை வழங்கியிருந்தது.

இவை அனைத்தும் சிங்களப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கான உறுதியான சான்று ஆதாரங்களாக அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆராய்வதற்காக கடந்த மே மாதம் 26, 27 ஆம் நாட்களில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சிறப்பு கூட்டத் தொடர் கூட்டப்பட்டது.

எனினும் இதில் இலங்கைக்கு எதிராக எந்தவித தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை. இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய பலம் வாய்ந்த நாடுகளின் துணையுடன் தனக்கு எதிரான முயற்சியை கொழும்பு வெற்றிகரமாக தடுத்திருந்தது.

போரின் கடைசிக் காலப் பகுதியில் சிங்கள ராணுவத்தினர் மற்றும் விடுதலைப் புலிகளால் பெருமளவில் மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்பட்டன எனக் குற்றம் சாட்டிய 90 அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் இந்த கூட்டத் தொடருக்கு அழைப்பு விடுத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று விடுக்கப்படும் கோரிக்கைகளை ஏற்க அரசு தொடர்ந்து மறுத்து வருகின்றது. போரில் வெற்றி பெற்றவர்களுக்கு எதிராக அத்தகைய விசாரணைகள் நடத்தப்படுவதில்லை என அது கூறிவருகின்றது.

இத்தகைய நிலையிலேயே இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்க போர்க் குற்றங்கள் தொடர்பான அலுவலகம் அறிக்கை தயாரித்து வருகின்றது.

இந்த அறிக்கையில் இறுதிப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்த பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சிங்கள ராணுவம் மற்றும் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பாக ஆதாரபூர்வமான பல தகவல்களை இந்த அறிக்கை வெளியிடும் என மனித உரிமை ஆர்வலர்களும் ஊடகவியலாளர்களும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

உறவினர்களைப் பார்வையிடுவதற்கு வருகை தருவோரும் அகதிகளாகப் பதிவு

தமிழக முகாம்களில் வாழும் உறவினர்களைப் பார்வையிடுவதற்காக மூன்று மாத கால விசாவில் வருகை தரும் இலங்கைத் தமிழர்களையும் அகதிகளாகப் பதிவு செய் வதனால், அவர்கள் தாயகம் திரும்ப முற்படும் போது, புதிய சிக்கலை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

இலங்கையில் போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், தமிழக முகாம்களில் உள்ள இலங்கை அகதிகளைப் பார்வையிடுவதற்கு அவர்களின் உறவினர்கள் மூன்று மாத கால விசாவில் வருவது அதிகரித்துள்ளது.

இந்நிலையில், அவ்வாறு வருவோர் முகாமிலேயே தங்குவதால், அவர்களையும் அகதிகளாக மண்டபம் தனித்துணை ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் பதிவு செய்கின்றனர். அவர்களுக்கும் அகதிப் பதிவெண், தனி வீடு, குடும்ப அட்டை மற்றும் அடையாள அட்டை வழங்கப்படுகின்றன.

இவர்கள் விசா காலம் முடியும் முன்பே இலங்கை செல்ல விரும்பினால், முகாம் பொலிஸார், கியூ பிரிவு பொலிஸார், தனித்துணை ஆட்சியர், சென்னை அகதிகள் மறுவாழ்வுத் துறை அதிகாரி ஆகியோரின் சான்றிதழ்கள் பெறவேண்டும். இந்தச் சான்றிதழ்களைப் பெற குறைந்தது ஒரு மாதம் தேவைப்படும்.

இதனால், அவர்கள் முறையான அனுமதியின்றி படகில் இலங்கைக்குச் செல்வது அதிகரித்துள்ளது. எனவே, விசாவில் வருபவர்களின் கடவுச்சீட்டு விபரங்களைத் தனியாகப் பதிவுசெய்தால், இப் பிரச்சினையைத் தீர்க்கலாம் என அகதிகள் கூறுகின்றனர்.


இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், அகதிகளைப் பார்க்க வரும் உறவினர்கள் முகாமில் 10 நாட்கள் வரை தங்கலாம். அதற்கும் மேல் தங்குபவர்களை அகதிகளாகப் பதிவுசெய்ய வேண்டியிருக்கிறது என்றனர்.

சேபியப் படுகொலைகளை விட இலங்கையில் இடம்பெற்றது கொடூரம்

சேபியாவில் 2005ம் ஆண்டில் பல இளைஞர்கள் அரசபடைகளால் கொல்லப்பட்டனர். அப்போது வெளிவந்த திடுக்கிடும் வீடியோக் காட்சிகளை வெளியிட்டதும் சனல்4 தொலைக்காட்சியே. நாம் இங்கு அந்த வீடியோவை இணைத்துள்ளோம். அபோது இப் பிரச்சனை ஐ.நா வால் கையாளப்பட்டது. ஐ.நா மற்றும் உலகநாடுகளின் அழுத்தம் காரணமாக குற்றவாளிகள் போர்க்குற்ற நீதிமன்றில் நிறுத்தப்பட்டனர்.

அரச படைகளுக்கு 58 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இக்கொலைகளைப் பார்வையிடும்போது அங்கு அவர்கள் நிர்வாணமாக்கப்படவில்லை, சித்திரவதைகளுக்கு உள்ளாகவில்லை, கொலைசெய்வதற்கு முன்னர் தாக்கப்படவில்லை.

ஆனால் இலங்கை இராணுவமோ அவை அனைத்தையும் செய்கின்றது. இருப்பினும் ஐ..நா உட்பட பல உலகநாடுகள் தொடர்ந்து மவுனம் காப்பது மிகவும் ஆச்சரியத்துக்குரியதும், வருந்தத்தக்க விடயமும் ஆகும்.

31 August, 2009

மீட்கப்பட்ட மக்கள்' - 4: பேரினவாதத்தின் இன்னொரு கரம்





அரசியல் அதிகாரத்தை தமிழர் தாயகப் பகுதிகளுக்கும் பகிர்ந்தளித்து, தமிழர்களுக்கான ஆட்சி உரிமைகளை வழங்குமாறு இந்தியா, அமெரிக்கா உட்பட பல நாடுகள் சிறிலங்காவுக்கு சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில் - சத்தம் சந்தடி இன்றி தமிழர் தாயகத்தை சிங்கள மயமாக்கும் வேலைகள் பல வழிகளாலும் தொடங்கப்பட்டுவிட்டன. அதில் ஒரு வழிதான் சுகாதாரத்துறை.

1987 ஆம் ஆண்டில் இந்தியாவின் தலையீட்டுடன் ஏற்படுத்தப்பட்ட 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மாகாண சபைகளுக்கு வழங்கியிருந்த முதன்மையான அதிகாரங்களில் சுகாதார நிர்வாகமும் ஒன்று.

அதன்படி - மாகாண சுகாதார அமைச்சுக்கள் - மத்திய அரச சுகாதார அமைச்சின் அனுமதியோ உத்தரவோ இல்லாமலேயே - சுகாதாரம் தொடர்பான வேலைத் திட்டங்களைத் தத்தமது மாகாணத்திற்குள் செயற்படுத்தும் அதிகாரத்தினைக் கொண்டுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் 2009 ஆம் ஆண்டில் வன்னிப் போர்க்களப் பகுதியில் இருந்து இலட்சக்கணக்கில் வெளியேறிய தமிழ் மக்களில் பெரும் பகுதியினர் செட்டிக்குளம் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த தடுப்பு முகாம்களை (Detention Camps) சிறிலங்கா அரசு 'நிவாரணக் கிராமம்' (Relive Villages) என்றும், அரசு சாரா நிறுவனங்கள் 'நிவாரண வலயம்' (Relive Zones) என்றும் பெயரிட்டு வைத்துள்ளன. ஆனால் - உண்மையில் இவை எல்லாம் 'தடுப்பு வதைபுரி முகாம்கள்' (Nazi style Concentration Camps) என்பது நாம் அறிந்ததே.

அதன்படி - வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ்வரும் வவுனியா மாவட்ட சுகாதாரச் சேவையின் கீழ் - செட்டிக்குளம் தடுப்பு முகாம்களது சுகாதாரச் செயற்திட்டங்களும், செட்டிக்குளம் அரச மருத்துவமனையின் பணிகளும் இதுவரை காலமும் மிகச்சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

அந்த நிலையில் - செட்டிக்குளம் பகுதி தடுப்பு முகாம்களில் மேற்கொள்ளப்படும் மருத்துவ மற்றும் சுகாதாரச் செயற்பாடுகளை அங்கு இருந்தே நேரடியாக இயக்குவதற்கான இணைப்புச் செயலகம் ஒன்று கடந்த ஏப்ரல் மாதம் 2009 ஆம் ஆண்டில் செட்டிக்குளம் இலங்கை செஞ்சிலுவைச் சங்கக் கட்டடத்தில் அமைக்கப்பட்டதுடன் தேர்ந்து எடுக்கப்பட்ட திறமை மிக்க தமிழ் மருத்துவர் ஒருவர் இணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.

வட மாகாண சபையின் சுகாதார அமைச்சும், வவுனியா மாவட்ட சுகாதார சேவைகள் பணிமனையும் இணைந்து - முற்றுமுழுதாகத் தமிழ் மருத்துவர்களது தலைமையில் - தடுப்பு முகாம்களில் இருக்கும் மக்களுக்கான சுகாதார மற்றும் மருத்துவ சேவையினை மிகச் சிறப்பாக வழங்கி வந்தன.

ஒவ்வொரு உயர்மட்ட சுகாதார நிர்வாகக் கலந்துரையாடல்களிலும் அந்த மக்களது சுகாதார மற்றும் மருத்துவப் பிரச்சினைகளைத் தெளிவான புள்ளி விபரங்களுடன் முன்வைத்துத் தீர்வுகாண முற்பட்டன.

இது சிறிலங்கா அரச நிர்வாக இயந்திரத்துக்குச் சங்கடத்தினை விளைவித்தது.

நேரடியாக சுகாதாரத்துறையினருடன் முரண்படுவது அனைத்துலக மட்டத்திலான சிக்கல்களைக் கொண்டுவரும் என்பதை உணர்ந்த சிறிலங்கா அரச வட்டாராம் - தந்திரோபாயமாக - பாதுகாப்பு அமைச்சு மற்றும் படைத்துறை மூலம் தமிழ் மருத்துவர்களுக்கு நெருக்கடிகளைக் கொடுக்கத் தொடங்கியது.

இந்த வேளையில் - அண்மையில் - எதிர்பாராத விதமாக - அந்த தமிழ் மருத்துவ இணைப்பாளர் வீதி விபத்து ஒன்றில் சிக்கிப் படுகாயம் அடைந்து விட்டார்.

அதனை அடுத்து, அவரது இடத்துக்கு ஏற்பட்ட வெற்றிடத்திற்கு - மாகாண சுகாதார அமைச்சின் ஆலோசனை பெறப்படாமலேயே - சிங்கள இனத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரை அவசர அவசரமாக நியமித்துவிட்டது சிறிலங்கா மத்திய சுகாதார அமைச்சு.

இது ஒன்றும் இயல்பாக நடந்துவிட்ட ஒரு சாதாரண நிர்வாகச் சம்பவம் அல்ல. மிகவும் நுணுக்கமாக - அரவம் எதுவும் இன்றி - அரங்கேற்றப்படும் ஒரு பாரிய பேரினவாதத் திட்டம்.

தமிழ் இனத்தை வேரறுக்கும் மாறாத தனது இலட்சியத்தை அடைய, சிங்களப் பேரினவாதம் மாற்றி மாற்றிச் செயற்படுத்தும் பேரினவாத வடிவங்களில் ஒன்றுதான் - இப்போது இந்த மருத்துவச் சுகாதாரத்துறை.

அந்தத் தமிழ் மருத்துவ இணைப்பாளரைப் படுகாயப்படுத்திய அந்த வீதி விபத்துக் கூட சந்தேகத்துக்கு இடமான விதத்திலேயே நடந்தேறியதாக வவுனியா மாவட்ட தமிழ் அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

அதன்பின்பு - சிங்களவர் ஒருவர் செட்டிக்குளம் பகுதிக்கான மருத்துவ சுகாதார இணைப்பாளராக நியமிக்கப்பட்டதன் பின்பு - சிறிது சிறிதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சு ஓரங்கட்டப்பட்டு, சிறிலங்கா மத்திய சுகாதார அமைச்சும் சிங்கள ஆதிக்கமும் செட்டிக்குளம் பகுதியில் மெல்ல மெல்ல ஊடுருவத் தொடங்கின.

அதிலும் குறிப்பாக - இணைப்பாளராகச் சிங்கள மருத்துவரை நியமித்தவுடன், ஒவ்வொரு தடுப்பு முகாமுக்கும் பொறுப்பாகச் செயற்பட்ட தமிழ் மருத்துவர்களது பரிந்துரைகள் எவையுமே செல்லுபடியற்றவையாக ஆக்கப்பட்டன.

உதாரணமாக - அதுவரை காலமும் மருத்துவ மரபின் பிரகாரம் - தடுப்பு முகாமில் இருக்கும் ஒரு நோயாளி மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட வேண்டிய தேவை இருப்பதாக ஒரு மருத்துவர் கருதினால் எதுவித தடையுமின்றி நோயாளர் காவு வாகனம் (Ambulance) மூலம் குறித்த நோயாளி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும் வசதி இருந்து வந்தது.

ஆனால் இப்போது - தடுப்பு முகாமில் இருக்கும் ஒரு நோயாளி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என ஒரு தமிழ் மருத்துவர் கருதினால் கூட (அவர் சிறப்பு மருத்துவ நிபுணராக இருப்பினும் கூட) மேற்-பரிந்துரை ஒரு சிங்கள மருத்துவரால் அல்லது இராணுவ மருத்துவரால் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நிபந்தனை நடைமுறைக்கு வந்துள்ளது.

இதன்பின்னர் - அந்தச் சிங்கள இணைப்பாளரின் அனுமதி கிடைக்காத நிலையில் - குழந்தைகள், வயோதிபர்கள் உட்பட தமிழ் நோயாளர்கள் தடுப்பு முகாம்களில் கொத்துக் கொத்தாகச் செத்து விழத் தொடங்கினர்.

இதனால் - தமது கண் முன்னாலேயே சொந்தங்கள் செத்து வீழ்ந்து கொண்டிருக்கும் போதும் எதுவும் செய்ய வகையில்லாத தமது கையாலாகாத நிலையால் மனம் வெதும்பிய தமிழ் மருத்துவர்கள் ஒவ்வொருவராக செட்டிக்குளம் பகுதியில் இருந்து வெளியேற தொடங்கினர்.

தற்போது - செட்டிக்குளம் பகுதியில் உள்ள ஏழு தடுப்பு முகாம்களில் எதிலுமே பொறுப்பு மருத்துவர்களாகத் தமிழர்கள் இல்லை. எல்லாவற்றிலுமே சிங்களவர்களே பொறுப்பாக உள்ளனர்.

இது இவ்வாறு இருக்க - நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டுவந்த செட்டிகுளம் பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரியின் (Medical Officer for Health அல்லது Divisional director of Health Services) அதிகாரங்கள், அவர் ஒரு தமிழர் என்பதால் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு தடுப்பு முகாம்களுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட சிங்கள் மருத்துவர்களிடம் கொடுக்கப்பட்டுவிட்டன.

சிறிலங்காவின் வேறு எந்தப் பகுதியிலும் இல்லாத ஒரு நடைமுறையாக - நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கை (Preventive and Curative) செட்டிக்குளம் பிரதேச சுகாதார அதிகாரியிடம் இருந்து பறிக்கப்பட்டது.

இதன் பின்னால் இன்னொரு பாரிய சதி நடவடிக்கை ஒளிந்திருக்கிறது.

சுகாதார மருத்துவ அதிகாரியின் பணிகளில் சிசு மரணங்கள் (Infant Deaths), கர்ப்பிணிகள் மற்றும் பிரசவத் தாய்மார்களது (Maternal Deaths) இறப்புக்கள் தொடர்பாக அறிக்கையிடுவதும் அடங்குகின்றது.

அந்த அறிக்கையானது அதிகாரபூர்வப் புள்ளி விபரங்களில் வெளியானால் அரசுக்குச் சிக்கல்களை உருவாக்கும். இதனாலேயே தமிழ் சுகாதார மருத்துவ அதிகாரியின் பணி அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு முகாம்களுக்குப் பொறுப்பான சிங்கள மருத்துவர்களிடம் முடக்கப்பட்டது.

விளைவாக - கடந்த ஐந்து மாத காலத்தில் - செட்டிக்குளம் பகுதியில் உள்ள தடுப்பு முகாம்களில் மட்டும் இறந்து போன 20 வரையான பிரசவத் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களது இறப்புக்கள் தொடர்பான கள விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை (Field Investigation Report) முழுமைப்படுத்தப்படவில்லை.

இது - சிறிலங்கா அரசின் திட்டமிட்ட செயற்பாடு வெற்றியடைந்திருப்பதையே காட்டுகிறது.

மேலும் - தமிழ் சுகாதார மருத்துவ அதிகாரியின் பணி அவரிடம் இருந்து பிடுங்கப்பட்டு தடுப்பு முகாம்களுக்குப் பொறுப்பான சிங்களவர்களிடம் முடக்கப்பட்டதால் - தாய் சேய் நலன் பேணும் நடவடிக்கைள் (Maternal and Child Health Activities) முற்றாகச் சீர்குலைந்து போயின.

கர்ப்பிணிகள் மற்றும் பிரசவத் தாய்மார்களது மரணங்களும் (Maternal Deaths) சிசு மரணங்களுமாகும் (Maternal Deaths) ஒரு நாட்டின், அல்லது ஒரு நாட்டில் உள்ள குறிப்பிட்ட ஒரு சமுகத்தின் சுகாதார நிலவரத்தின் குறிகாட்டிகள் (Health Indicators) எனக் கருதப்படுபவை.

ஒரு நாட்டில், அல்லது குறிப்பிட்ட ஒரு சமூகத்தில் தாய்மார்களது இறப்புக்களோ (Maternal Deaths) அல்லது சிசுமரணங்களோ (Infant Deaths) அல்லது இரண்டுமே கூட - அடிக்கடி நிகழ்கின்றது எனின் அந்தச் சமூகம் சுகாதாரத்தில் படுவீழ்ச்சி கண்டதாகவே (Poor Health Status) அர்த்தம்.

மேலும் - வன்னிக்கு உள்ளே இடப்பெயர்வுகள் நிகழ்ந்த காலத்திலேயே கட்டுப்பாட்டில் இருந்த கொடிய தொற்று நோயான சின்னமுத்து (Measles) செட்டிக்குளம் பகுதி ஏழு தடுப்பு முகாம்களில் வாழும் குழந்தைகள் மத்தியில் வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது.

இவ்வாறாக - தமிழ் மருத்துவர்களைத் துரத்தி விட்டுச் சிங்களவர்களை அந்த இடங்களுக்கு நியமித்துச் சுகாதாரச் சீர்கேடுகளை முடிமறைத்து, அவை பற்றிய புள்ளி விபரங்கள் வெளியே செல்வதைத் தடுத்துவிட்டது சிறிலங்கா அரசு.

இதே வேளையில் - வெளிநாட்டு அரசுகளும் சரி, அரசு சாரா நிறுவனங்களும் சரி "இடம்பெயர்ந்த மக்களுக்கு நாம் நேரடியாகத் தான் உதவுவோம்" எனக் கூறி மருத்துவ உபகரணங்களாகவும், மருந்துகளாகவும் மாகாண சுகாதார அமைச்சு மற்றும் மாவட்ட சுகாதார சேவைகள் பணிமனை ஆகியவற்றின் ஊடாகத் தமது உதவிகளைக் குவிக்க தொடங்கின.

இவ்வாறாக வந்து குவிந்த மருத்துவ உபகரணங்களைப் பார்வையிட்ட தென்னிலங்கை மருத்துவமனை ஒன்றின் மருத்துவ அதிகாரி ஒருவர் "செட்டிக்குளம் மருத்துவமனையில் உள்ள உபகரணங்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் கூடக் கிடையாது" என்று சொன்னார்.

இதனால் - கொழும்பில் இரகசிய ஆலோசனைகள் அவசர அவசரமாக நடந்தன. "எப்படி இந்த மருத்துவ உபகரங்களைத் தென்னிலங்கைக்குக் கடத்துவது" என்பது பற்றித் தான் அந்த ஆலோசனைகள் நடந்தன.

தற்போதைய சிறிலங்காவின் அரசியலமைப்பு சட்டத்தின்படி இந்த மருத்துவ உபகரணங்கள் எல்லாம் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் சொத்து.

செட்டிக்குளம் பகுதி தடுப்பு முகாம்களில் உள்ள மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பின்னர் - செட்டிக்குளம் மருத்துவமனையிலும், தடுப்பு முகாம்களில் உள்ள சுகாதார நிலையங்களிலும் இந்தக் கருவிகள் அங்கு பயனற்றவை என வடக்கு மாகாண சுகாதார அமைச்சு எண்ணினால் - அந்த உபகரணங்களை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைகளுக்கோ அல்லது முல்லைத்தீவு பொது மருத்துவமனைக்கோ அனுப்பலாம். வடக்குக்கு வெளியே வேறு எங்கும் கொண்டுசெல்ல முடியாது.

இதுதான் சிறிலங்கா அரச மட்டத்தினருக்குப் பிடிக்கவில்லை.

"பல கோடி ரூபாய்கள் பெறுமதியான - மிகத் தரமான அவ்வளவு உபகரணங்களையும், ஏனைய மருத்துவ உதவிகளையும் தெற்கிற்கு எப்படி எடுத்துச் செல்வது?"

வேகமாகச் சிந்தித்த மத்திய சுகாதார அமைச்சு - செட்டிக்குளம் ஆதார மருத்துவமனையின் அத்தியட்சகரான தமிழ் மருத்துவரை எப்படித் "தூக்குவது" என்பது பற்றியும், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் அதிகாரத்தை செட்டிக்குளத்தில் எப்படி இல்லாது செய்வது என்பது பற்றியும் சிந்தித்து திட்டமிடத் தொடங்கியது.

இறுதியாக - குறுக்குவழி ஒன்றைக் கண்டுபிடித்த மத்திய சுகாதார அமைச்சு - அவசர அவசரமாக - அமைச்சரவைத் தீர்மானம் ஒன்றின் மூலமாக செட்டிக்குளம் நிவாரணக் கிராமங்களும் (தடுப்பு முகாம்கள்), ஆதார மருத்துவமனையும் மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டதாகப் பிரகடனப்படுத்தும் வேலைகளில் மும்முரமாக இறங்கியிருக்கிறது.

இந்த முயற்சிக்கு உடந்தையாக - முன்னாள் தரைப்படை அதிகாரியும் தற்போதைய வடக்கு மாகாண ஆளுநருமான மேஜர் ஜெனரல் சந்திரசிறீயின் உத்தரவுக்கு இணங்க மாகாண சுகாதார அமைச்சும், வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையும் எந்தவித எதிர்ப்பும் காட்ட முடியாது அமைதியாக இருப்பது அனைத்து தமிழ் மருத்துவத்துறையினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

இது தொடர்பான முதலாவது அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுவிட்ட நிலையில், மத்திய சுகாதார அமைச்சின் இந்த முறைகேடான நடவடிக்கை தொடர்பில் உண்மை நிலையினை வெளி உலகுக்கு தெரிவித்து இந்த முறைகேட்டினை முறியடிக்க உதவுமாறு வவுனியா தமிழ் மாவட்ட சுகாதார வட்டாரங்கள் வேண்டுகின்றன.

இந்த விடயத்தைப் பெரிதாக்கி - உரிய முறையில் சிறிலங்கா அரசு மீது - இலங்கைத் தீவுக்கு உள்ளிருந்தும் வெளியில் இருந்தும் அழுத்தங்களைப் போட்டு தமிழ் இனத்துக்கு உதவுமாறு -

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, உலகளாவிய ரீதியில் இயங்கும், தமிழர் மருத்துவ அமைப்புக்கள் மற்றும் தற்போது உருவாக்கப்படும் உலகத் தமிழர் பேரவை ஆகியோரிடம் அவர்கள் இந்த வேண்டுகோளை முன்வைக்கின்றனர்

“எம்மைக்காக்க எவரும் இல்லையா…?” தமிழர் இயக்கத்தின் அறுத்தெரிவோம் முள்வேலிகளை நிகழ்வின் ஈழ மக்களின் நிலையை விளக்கும் “எம்மைக்காக்க எவரும் இல்லையா…?

விடுதலைப்புலிகள் பற்றி பேச எனக்கு தடை இல்லை:சீமான்


தூத்துக்குடியில் நாம் தமிழர் அமைப்பின் சார்பில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பாலவிநாயகர் சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு இயக்குநர் சீமான் தலைமை வகித்தார்.

அப்போது சீமான்,’’என்மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் போடப்பட்டது. என்னுடைய வழக்கின்போது,தடை செய்யப்பட்ட அமைப்பின் படத்தையோ,
அல்லது அதற்கு ஆதரவாக பேசுவதோ தவறல்ல என நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இறையான்மையைச் பற்றி பேசும் இந்தியப் பேரரசு, தமிழர் தேசியத்தின் உரிமையைப் பறிக்கிறது. அமெரிக்காவில் கூட தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக போராட அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் இங்கு, சட்டம் போட்டுத் தடுக்கிறார்கள்.

இலங்கைக்கு உதவிவரும் இந்திய பேரரசு தற்போது 1000 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. இந்த பணத்தில்தான் ராணுவத்திற்கு
சம்பளம் அளிக்கப்பட்டுள்ளது. போர் முடிந்து 3மாதகாலம் ஆகியும், முள்வேலிக்குள் சிக்கிக் கிடக்கும் தமிழர்களின் நிலை பற்றி, தமிழக அரசியல்வாதிகள் மவுனமாக இருக்கின்றனர்.

மத்திய அரசும் மெளனம் சாதிக்கிறது. போர் முடிந்ததும் அதிகாரப்பகிர்வு
அளிக்கப்படும் என்ற பேச்சு, தற்போது எழவில்லை. இந்திய பேரரசு ஒருநாள் இதற்காக கவலைப்படும் காலம் வரும்’’என்று பேசினார்.