Photobucket

30 August, 2009

விடுதலைப் புலிகளின் முதல் களப்பலி!


தேர்ந்தெடுக்கப்படும் போராளிகளுக்குப் பயிற்சியளிக்க வவுனியா காட்டுப்பகுதியில் ஓர் இடத்தைத் தேர்வு செய்து, அந்த இடத்துக்குப் "பூந்தோட்டம்' என்று பெயர் வைக்கப்பட்டது. குடும்பத்தைத் துறத்தல், புகை மற்றும் மதுவைத் தொடாதிருத்தல், ரகசியம் காத்தல் உள்ளிட்ட விதிகளுக்குட்பட்ட போராளிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.

பல்வேறு வகையான துப்பாக்கிகள், ஏ.கே.47 வகைத் துப்பாக்கிகள், சிறு -குறு துப்பாக்கிகள் போன்றவற்றை இயக்குவது, ராக்கெட் மூலம் குண்டு செலுத்துவது, நிலக்கண்ணி வெடிகளை வைப்பது, வெடிக்கச் செய்வது, எறிகுண்டுகளை வீசுவது உள்ளிட்ட பயிற்சிகள் இங்கு அளிக்கப்பட்டன.

"புலிகளின் பயிற்சி முகாம்களில் போர்க்குரல், கைத்துப்பாக்கியால் சுடுவது எப்படி, உயிர் பாதுகாப்பு, நீர் அடியில் நீச்சல், குண்டுவீச்சிலிருந்து தப்புவது எப்படி?, போரில் கையாளப்படவேண்டிய முறைகள் மற்றும் ஒழுக்க விதிகள் எனப் பல்வேறு தலைப்புகளில் நூல்களைப் பார்த்தேன். போர் முறைகள் பற்றி ஆங்கிலத்தில்தான் நூல்கள் உண்டு. ஆனால் தமிழில் முதன்முதலாக புலிகளின் முகாமில்தான் இதுபோன்ற நூல்களைப் பார்த்தேன்' என்று பழ.நெடுமாறன் தான் எழுதியுள்ள "ஈழப் போர்முனையில் புலிகளுடன்' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அந் நூலில் அவர் மேலும், "போராட்ட வரலாறு சம்பந்தப்பட்ட நூல்களையும் அங்கு பார்த்தேன். அதில் ஒன்று, "தன்பிரீன் தொடரும் பயணம்' என்ற நூல் ஆகும். அந்த நூலை எழுதியவர் எழுத்தாளர் கல்கியின் நண்பர் ப.ராமஸ்வாமி. அவர் 1932-34-இல் சிறையில் இருந்தபோது அயர்லாந்து போராட்ட வரலாற்றைத் தமிழில் எழுதினார். அரை நூற்றாண்டுக்குப் பிறகு தமிழீழத்தில் போராளிகளுக்கு இந்நூல் உத்வேகம் ஊட்டுகிறது' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வகையான முதல் படையணியில் கிட்டு, சங்கர், பண்டிதர், செல்லக்கிளி, சுப்பையா, பொன்னம்மான் உள்ளிட்டோரும், இரண்டாவது அணியில் சீலன், புலேந்திரன், சந்தோஷம், ரஞ்சன் ஆகியோரும் மூன்றாவது அணியில் பொட்டு, விக்டர், பஷீர்காக்கா, லிங்கம், கணேஷ், அருணா ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

புலிகள் தங்களுக்கு வேண்டிய ஆயுதங்களைத் தாக்குதல் மூலமே பெற்றனர். இயக்கத்தில் ஏராளமான பேர் சேரவும் ஆயுதத் தேவையும் அதிகரித்தது. அந்தச் சமயத்தில் ஆயுதங்கள் வெளிநாடுகளிலிருந்து வாங்கப்பட்டன. இதற்கான நிதி வசதியை மக்களே அளித்தனர்.

தமிழர் பகுதிகளில் உள்ள குடும்பத்தினர், ஒரு குடும்பத்துக்கு ஒரு பவுன் தங்கம் வீதம் வழங்கினர். இதுபற்றி அறிந்த சிங்கள அரசு, அடகுக்கடை மற்றும் வங்கிகளில் அவசரத்தேவைக்காக வைத்த நகைகள் அனைத்தையும் கொழும்பில் மத்திய கிளைக்கு எடுத்துச் சென்றது. நகையை மீட்கச் சென்றபோதுதான் இந்த உண்மை மக்களுக்குத் தெரியவந்தது.

இதன் காரணமாக மக்கள் அடகுக்கடை மற்றும் வங்கிகள் முன்பாக பெரும் போராட்டங்களை நடத்தினர். இவ்வகையான 300 கோடி மதிப்பிலான தங்கநகைகள், கொழும்பில் முடங்கியிருந்தது. அதில் பெரும்பாலான நகைகள், சம்பந்தப்பட்டவர்கள் அகதிகளாக நாட்டை விட்டுச்சென்றுவிட்டதால் இலங்கை அரசின் கஜானாவில் சேர்க்கப்பட்டுவிட்டது.

ஆயுதம் மற்றும் பயிற்சி செலவுகளுக்காக, தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். பெருமளவு நிதியளித்ததாக ஆன்டன் பாலசிங்கம் தனது "விடுதலை' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களில் ஒருவரான பேபி சுப்ரமணியம் (இளங்குமரன்), வீரச்சாவு எய்திய கர்னல் சங்கர், "விடுதலைப்புலிகள்' என்னும் பத்திரிகையின் ஆசிரியராகப் பணிபுரிந்த மு.நித்தியானந்தன் ஆகியோருடன் முதலமைச்சர் எம்.ஜி.ஆரை அவரின் ராமாவரம் தோட்டத்தில் சந்தித்தபோது ஆயிரம் போராளிகளுக்கு பயிற்சியளிக்க ஒரு கோடியும், அந்த ஆயிரம் பேருக்கு ஆயுதம் தரிக்க இன்னொரு கோடியுமாக இரண்டு கோடி தேவைப்படும் என நிதியுதவி கேட்டதாகவும், அவரும் மறுநாள் வரும்படி கூறியதாகவும் அந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பாலசிங்கம் அந்நூலில் குறிப்பிட்டுள்ளதாவது: "நள்ளிரவில் கோடிக்கான பணத்துடன் திருவான்மியூரில் உள்ள அலுவலகத்துக்குச் செல்வதில் சிக்கல்கள் எழலாம். காவல்துறையினர் மடக்கினால் பிரச்னைகள் வரலாம். எம்.ஜி.ஆரிடம் விஷயத்தைக் கூறினோம். பாதுகாப்புக்கு ஒழுங்கு செய்வதாகக் கூறி, யாரிடமோ தொலைபேசியில் பேசினார். இரு ஜீப் வண்டிகளில் ஆயுதம் தரித்த காவல்துறையினர் அங்கு வந்தனர். எமது வாகனத்துக்கு முன்னும் பின்னுமாக ஆயுதம் தரித்த காவல்துறையினர் வர திருவான்மியூரை அடைந்தோம். எமது வீட்டில் தலைவர் பிரபாகரன், தமிழேந்தி, கர்னல் சங்கர் மற்றும் போராளிகள் காத்திருந்தனர். நூறு ரூபாய் நோட்டுகளை எண்ணி முடிக்க விடிந்துவிட்டது' என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் பணத்தைக்கொண்டு ஆயிரம் போராளிகளுக்குப் பயிற்சியளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

விடுதலைப் புலிகள் அமைப்பில் முதன்முதலில் களப்பலியானவர் சங்கர். 1982-ஆம் ஆண்டு ஜூலை 2-ஆம் தேதி யாழ்ப்பாணத்திலிருந்து பதினாறு கல் தொலைவில் உள்ள நெல்லியடியில் ரோந்து சென்று கொண்டிருந்த போலீஸ் படையின் மீது கொரில்லாப் படைகள் தாக்குதல் மேற்கொண்டனர். இந்தத் தாக்குதலில் நான்கு போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டதுடன், மூன்று போலீசார் படுகாயமுற்றனர். போலீஸ் படையினரிடமிருந்து பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்தத் தாக்குதலை அடுத்து சங்கரை வேட்டையாடியது ராணுவம். அவர் பதுங்கியிருந்த வீட்டை ராணுவம் சுற்றிவளைத்துத் தாக்கியது. நேருக்கு நேராக நடந்த துப்பாக்கிச் சண்டையில் சங்கரின் வயிற்றில் குண்டு பாய்ந்தது. ரத்தம் பீறிட்ட நிலையிலும் மூன்று கிலோமீட்டர் தூரம் ஓடித் தன் நண்பர்களிடம் துப்பாக்கியை ஒப்படைத்துவிட்டு மயங்கி விழுந்தார்.

பின்னர் மதுரைக்குக் கொண்டு சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். தமிழ்நாட்டில் நடந்த பயிற்சியை ஒழுங்குபடுத்துவதற்காக அப்போது தமிழகத்திலிருந்த பிரபாகரன், உடனே மதுரை விரைந்தார். சங்கரின் கைகளைப் பற்றிக்கொண்டு திகைத்து நின்றார். கடைசி நிமிடம், பிரபாகரன் கைகளைச் சங்கர் என்கிற சத்தியநாதன் பற்றியபடியே இருக்க -அவருடைய உயிர் பிரிந்தது.

தனது இயக்கப் போராளியை, உயிர் நண்பனை இழந்த துக்கத்தில், "என் கைகளில் உயிர் பிரிந்ததை இன்றுதான் காண்கிறேன்' என்று கண்ணீர் சிந்தினார் பிரபாகரன். அந்த சங்கர் உயிர்துறந்த நவம்பர் 27-ஆம் நாள் மாவீரர் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. "நடுகல்' வழிபாட்டு முறையும் அப்போதுதான் வந்தது

சுவிஸ் வங்கியில் மூன்று பில்லியன் டொலர் நிதி வைப்பு பத்மநாதன் தெரிவித்துள்ளதாக:சிங்கள பத்திரிகை

Pathmanathanதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான சுமார் மூன்று பில்லியன் பணம் சுவிட்சர்லாந்து வங்கியில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளதாக சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரான்ஸ், சுவீடன், பிரிட்டன் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் திரட்டப்பட்ட பணமே இவ்வாறு வைப்பிலிடப்பட்டுள்ளது என கே.பி. கூறியுள்ளதாகவும், சுவிஸ்சர்லாந்திலிருந்தே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அதிகளவு நிதி உதவி கிடைக்கப் பெற்றதாக குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளதாகவும் அப் பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான சொத்துக்கள் தொடர்பில் தொடர்ச்சியாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பாதுகாப்பு தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

29 August, 2009

களத்தில் இருந்து தளபதி ராம் உலகத் தமிழருக்கு விடுக்கும் அறிவித்தல் - கருத்துக்களம்

சமீபத்தில் வெளியான காணொளியை உலகில் அனைத்து மக்களும் நன்கு அறிந்த cnn தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது

இலங்கை ராணுவத்தால் தமிழ் இளைஞர்கள் மீது நடாத்தப்பட்ட அந்த கொடுரமான படுகொலையின் காட்சிகளை உலகில் பெயர் பெற்ற

அமெரிக்காவை தளமாக கொண்டு செயல்ப்படும் cnn தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது,அத்தோடு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர் இலங்கை அரசு பொய் சொல்வதாகவும் வெளிப்படையாக குற்றம் சுமத்தியுள்ளார்.

ஈழம் முதலாவது கொரில்லாத் தாக்குதல்

தங்கதுரை, குட்டிமணி, சின்னஜோதி உள்ளிட்டவர்களுடன் பிரபாகரனும் இந்தியா தப்பி வந்தார். ஆரம்பத்தில் பிரபாகரன் வேதாரண்யத்தில் தங்கினார். யாருடனும் அதிகம் பழக்கமில்லை. செலவுக்குக்கூட பணம் இல்லை. பின்னர் சென்னைக்கு வந்து கோடம்பாக்கம் பகுதியில் தங்கியிருந்த தங்கதுரை உள்ளிட்டோருடன் தங்கினார். அப்போது ஜோதி இந்தக் குழுவிலிருந்து விலகிவிட்டார்.

பிரபாகரனுக்கு சென்னையில் இருப்புக் கொள்ளவில்லை. அவர் இலங்கை செல்ல விரும்பினார். தங்கதுரை உள்ளிட்டோர், "இலங்கைக்கு இப்போது செல்வதோ - குழுவாக வேலை செய்வதோ தற்சமயம் சாத்தியமில்லை. அதற்கான நேரம் வரவில்லை' என்று தடுத்தனர்.

குட்டிமணியைத் தஞ்சவூரில் கைது செய்து (1973 நவம்பர் 18) இலங்கை அரசிடம் தமிழக அதிகாரிகள் ஒப்படைத்த பிறகும் தலைமறைவு வாழ்க்கையை இந்தியாவில் தொடர்வது சாத்தியமில்லை என உணர்ந்த பிரபாகரன் சென்னையிலிருந்து கிளம்ப முடிவு செய்தார். அவருக்கு இன்னொரு குழுவைச் சேர்ந்த தனபாலசிங்கம் என்கிற செட்டியைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.

அவர் பிரபாகரனைத் தனது குழுவில் சேர்ந்து கொள்ளும்படி வற்புறுத்தினார். இதுகுறித்து தங்கதுரையிடம் தெரிவித்ததும், "செட்டி நல்லவர் அல்ல. அவருக்கு விடுதலைப் போராட்டம் மட்டுமே நோக்கம் அல்ல; அவரை நம்பிப் போக வேண்டாம்' என்று அவர் தடுத்தார்.

இயங்க வேண்டும் என்ற வெறி, பிரபாகரனை "செட்டியை'த் தொடர வைத்தது.

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டைச் சேர்ந்த செட்டி என்கிற தனபாலசிங்கத்துடன் சேர்ந்துகொண்டார். இந்தக் குழுவின் ஆரம்பகால நோக்கம் அரசு ஆதரவாளர்களையும், போலீசுக்குத் தகவல் கொடுப்பவர்களையும் தண்டிப்பதுதான்.

இந்தச் சமயத்தில் தமிழ் தேசிய அரசியல் பார்வைக்கு இவர்களை முழுமையாகத் திருப்பியவர் தமிழரசுக் கட்சியிலிருந்த ஏ.இராஜரத்தினம்தான். அவரால் உற்சாகப்படுத்தப்பட்டு (1972) ஏற்பட்ட இயக்கத்துக்கு "தமிழ்ப் புதுப்புலிகள்' (பஹம்ண்ப் சங்ஜ் பண்ஞ்ங்ழ்ள்-பசப) என்று பெயர் வைத்துத் தொடங்கினர். செட்டி அவ்வப்போது கைது செய்யப்படுவதும் விடுதலையாவதுமாக இருந்தார்.

"செட்டி'யை நம்பிப் போக வேண்டாம் என்று சொன்ன தங்கதுரையிடம், "என்னை அவர் வழிக்குக் கொண்டு செல்ல முடியாது - முடிந்தால் அவரைத் திருத்துவேன்' என்று சொன்ன பிரபாகரனால் அவரைத் திருத்த முடியவில்லை என்பது உண்மையாகிப் போனது. இயக்க முடிவுகளுக்கு ஏற்ப அவரைத் தண்டிக்க வேண்டியதாயிற்று.

பின்னர், பிரபாகரன் குழுவினர் குட்டிமணி, தங்கதுரையுடன் மீண்டும் இணைந்தனர்.

அதுவும் சிறிது காலம்தான். அதன்பின்னர் தமிழ்ப் புதுப்புலிகள் இயக்கத்துக்கு பிரபாகரன் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

இதுகுறித்து பிரபாகரன் தெரிவித்ததாவது:

""பின் 1976-ஆம் ஆண்டு மே மாதம் 5-ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று இயக்கம் புதிய பெயரைச் சூட்டிக்கொண்டது. இவ்வியக்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே உறுதியும்-அர்ப்பணிப்பும்-ப
ேரார்வமும் கொண்ட இளம் புரட்சிவாதிகளை அது பெருமளவில் ஈர்த்துக்கொண்டது. நகர்ப்புற கெரில்லா அமைப்பாக உருவாக்கப்பட்டது. தேசிய விடுதலைக்கான நீண்டகால மக்கள் யுத்தம் என்ற லட்சியத்தில் தோய்ந்த விடுதலைப் புலிகள் இயக்கம் விரைவிலேயே தமிழ் மக்களின் புரட்சிகர ஆயுதப்போராட்ட இயக்கமாகப் பரிணமித்தது. விஞ்ஞான சோசலிசக் கோட்பாட்டை வரித்துக்கொண்ட புரட்சிகர விடுதலை இயக்கம் என்ற வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தேசியப் போராட்டத்தின் முன்னணி ஆயுதப்படையாக தன்னை நிறுவிக்கொண்டது'' என்பதாகும். (1985-ஆம் ஆண்டின் வெளியீடான "விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாறு').

அதே வெளியீடு தங்களின் போர்முறையையும் தெளிவாகக் கூறுகிறது: ""ஆயுதப் போராட்டமாகத் தேர்ந்தெடுத்துக்கொண்ட கொரில்லாப் போர்முறையானது நமக்கு மிகவும் பொருத்தமான போர் வடிவமாகும். நிராயுதபாணிகளான வலிமை குறைந்த தமிழ் மக்கள், சிங்கள இனவாத அரசின் பெரிய ராணுவ வலிமைக்கு எதிராகப் போராடுவதற்கு நீண்ட கொரில்லா யுத்தப் பாதையே பொருத்தமானது என்பதால், இந்த யுத்தியைக் கையாண்டோம்'' என்றும் கூறுகிறது.

தொடர்ந்து அவர்களின் தாக்குதல் குறித்து அவ்வெளியீடு கூறுகையில், ""அரசின் ஆயுதப்படைகளைக் கிலி கொள்ளச் செய்து அவர்களது மன உறுதியையும் கட்டுப்பாட்டையும் குலைத்துவிட்ட எமது கொரில்லாப் போர் முறையானது. ஸ்ரீலங்கா அரசு அமைப்பையே ஆட்டங்காணச் செய்திருப்பதுடன் தமிழர் பிரச்னையை சர்வதேசப்படுத்தவும் உதவியுள்ளது'' என்று தெரிவிக்கிறது.

இவ்வியக்கத்தின் நோக்கம் என்னவென்பது குறித்து விடுதலைப் புலிகள் இயக்கம் விவரிக்கையில், ""கொரில்லாப் போராட்டத்தை மக்கள் மத்தியில் நிலைகொள்ளச் செய்து, அப்போரில் மக்களை நேரடியாகப் பங்களிக்கச் செய்து இப்போர் முறையைப் பெரும்பாலான மக்கள் போராக விரிவாக்குவதே எமது நோக்கமாகும்'' என்றும் தெளிவுபடுத்துகிறது.

அவ்வெளியீட்டில் அதன் ஆரம்பகால நடவடிக்கைகள் குறித்தும், அதன் போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் குறிப்பிட்டிருப்பது என்னவென்றால், ""எமது இயக்கத்தின் ஆரம்பாகால நடவடிக்கைகள் போலீஸ் உளவுப்படையைச் சிதைப்பதை மையமாகக் கொண்டிருந்தது. போலீஸ் உளவுப்படையில் போலீஸ் அதிகாரிகள் மட்டுமல்ல; எமது இயக்க நடவடிக்கைகளைப் பற்றி தகவல்கள் வழங்குவோரும் துரோகிகளும் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் எம்மைப் பற்றி அளிக்கும் தகவல்களுக்கு ஈடாக, சன்மானமாக பெருந்தொகையை ரகசியமாகப் பெற்று வந்தனர். இந்த உளவு அமைப்பானது, அப்போதுதான் உருவாகிக்கொண்டிருந்த விடுதலை அமைப்புக்கு, பொதுவாக தமிழர்களின் தேசியப் போராட்டத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. ஆகவே அவ்வகை போலீஸ் அமைப்பைச் சிதைப்பதையே நோக்கமாகவும் செயலாகவும் கொண்டிருந்தது.

இரண்டாவது நடவடிக்கை, தமிழ் ஈழத்தில் போலீஸ் நிர்வாக அமைப்பை நிலைகுலையச் செய்வதை மையமாகக் கொண்டிருந்தது.

மூன்றாவதாக, எமது கொரில்லாப் போராளிகள் ராணுவப்படைகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டனர்'' என்று தங்களது கொள்கைத் திட்டத்தை அவ்வெளியீட்டில் குறிப்பிட்டிருந்தனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் தமிழர் துரோகி எனக் குற்றஞ்சாட்டப்பட்ட, யாழ்ப்பாண நகர மேயர் துரையப்பாவின் கொலையைத் தொடர்ந்து, விடுதலைப்புலிகள் அமைப்பு பிரபலமடைந்ததுடன் பிரபாகரனும் பிரபலமடைந்தார்.

துரையப்பாவின் மரணத்தைத் தொடர்ந்து உரும்பராயில் அரசு உருவாக்கிய புதிய உளவுப்படைப் பிரிவு அமைக்கப்பட்டது. அந்தப் பிரிவு முழுவதுமாக விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்டது.

உளவாளிகள் ஒழிப்பு மாவிட்டபுரத்திலும், இனுவிலிலும் தொடர்ந்து நடத்தப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணி எம்.பி.எம்.கனகரட்னம் யு.என்.பி.க்குத் தாவினார். இவரின் செயல் துரோகச் செயலாகக் கருதப்பட்டதையொட்டி, கொழும்புவிலுள்ள கொள்ளுப்பட்டியில் உள்ள இல்லத்தில் சுடப்பட்டு, தப்பினாலும் பின்னர் அவர் மரணம் நேர்ந்தது.

இந்தச் சம்பவத்தையொட்டி யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளைத் தேடித்தேடி வேட்டையாடினார்கள். இதிலும் சித்திரவதைப் புகழ் பஸ்தியாம்பிள்ளை குழுவினர் ஈடுபட்டதையொட்டி அவரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அடுத்தடுத்து விடுதலைப் புலிகளால் நேர்ந்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து அவ்வியக்கத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. 1978-ஆம் ஆண்டு மே மாதம் "விடுதலைப் புலிகள் மற்றும் இதுபோன்ற இயக்கங்களைத் தடை செய்தல் சட்டம்' பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் பாதுகாப்புப்படையினருக்கு சகலவிதமான அதிகாரங்களையும் வழங்கியது. விடுதலைப் புலிகள் நடவடிக்கைகளை ஆதரிப்பதாகச் சந்தேகப்படும் எந்த நபரின் சொத்துகளும் பறிமுதல் செய்யவும் சட்டம் வகை செய்தது.

"ஆனால், அரசு நினைத்ததற்கு மாறாக, இச்சட்டமானது எமது இயக்கத்தைப் பிரபலப்படுத்தியதுடன், எமது இயக்கத்துடன் தொடர்பு கொள்வது ஆபத்தானது என்று தெரிந்தும், தமிழ்மக்கள் தங்களது ஆதரவை வழங்கியதாக' இவர்களின் வெளியீடு கூறுகிறது.

1978-ஆம் ஆண்டு செப்டம்பர் 7-இல் ஜெயவர்த்தனாவுக்கு சர்வ அதிகாரங்களையும் வழங்கும் அரசியல் சட்டம் நிறைவேறியது. இதன் மூலம் அரசின் தலைவர், முப்படைகளின் தளபதி, அமைச்சர்களை நியமிக்க, விலக்க, நாடாளுமன்றத்தைக் கலைக்க அதிகாரம் வழங்கப்பட்டது. சிங்கள மொழிக்கும் பௌத்த மதத்துக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அதே நாளில், விடுதலைப் புலிகள் "ஆவ்ரோ' விமானத்தைக் குண்டு வைத்துத் தகர்த்து வெளிப்படுத்தினர்.

இதன் தொடர்ச்சியாக 1979, ஜூலை 20-இல் பயங்கரவாதத் தடைச் சட்டமும் அமலுக்கு வந்தது. 18 மாத காலம் ஒரு நபரைத் தனிமைச் சிறையில் வைக்கலாம். அதுமட்டுமல்லாமல், யாழ்ப்பாணத்தில் அவசரச் சட்டமும் பிரயோகிக்கப்பட்டது. முன்பே விவரித்திருந்தது போல பிரிகேடியர் வீரதுங்கா பயங்கர அடக்குமுறைகளைக் கையாண்டார்.

இதன் காரணமாக 1979 மற்றும் 1980-ஆம் ஆண்டுகளில் ஆயுதப் போராட்ட நடவடிக்கைகளை தாற்காலிகமாகத் தள்ளிப்போட்டு, இயக்கத்தை பலப்படுத்துவதில் விடுதலைப்புலிகள் ஈடுபட்டனர். 1980-இன் முற்பகுதியில் தங்கதுரை, குட்டிமணி தலைமையில் இயங்கிய தமிழீழ விடுதலை இயக்கத்துடன் கூட்டாகச் சேர்ந்து சில நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று விடுதலைப் புலிகள் இயக்கம் முடிவெடுத்தது. நீர்வேலி வங்கிக் கொள்ளையை அடுத்து, தமிழீழ விடுதலை இயக்கத் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதையடுத்து இவ்வியக்கத்துடனான உறவு முடிவுற்றது.

பிரிகேடியர் வீரதுங்கா, மேஜர் ஜெனரலாகப் பதவி உயர்வு பெற்று ராணுவத் தளபதியானார். யாழ் படுகொலையைக் கெüரவிக்கவே இந்த உயர்வு வழங்கப்பட்டதால், அதைக் கண்டிக்கும் வகையில், காங்கேயன்துறை வீதியில் ராணுவ ஜீப் ஒன்றை விடுதலைப் புலிகள் தாக்கியதில் இருவர் பலியானார்கள். விடுதலைப் புலிகள் வரலாற்றில் ராணுவத்தின் மீதான முதலாவது கொரில்லாத் தாக்குதல் இதுவே ஆகும். இந்தத் தாக்குதலை சார்லஸ் ஆன்டனி (சீலன்) நடத்தினார். பெருமளவில் ஆயுதங்களும் இந்தத் தாக்குதலில் கைப்பற்றப்பட்டன.

இதே போன்று நெல்லியடி போலீஸ் நிலையம் மீது தாக்குதல், கடற்படையினர் மீது தாக்குதல், சாவகச்சேரி போலீஸ் நிலையம் மீது தாக்குதல் எனப் பல முயற்சிகள் இவ்வியக்கத்தால் நடத்தப்பட்டன.

இவ்வகையான தாக்குதல்கள் யாவும் இந்திய அரசு அளித்த பயிற்சிகளுக்கு முன்பே நடந்தவை என்பது இங்கு குறிப்பிடப்படவேண்டும்.

போராளிகள் வெளிநாடுகளில் பயிற்சி பெறுவது என்பது ஈரோஸிலிருந்து தொடங்கியது. பிரிட்டனில் பி.எல்.ஓ. பிரதிநிதியுடன் ஈரோஸ் பிரதிநிதிகள் தொடர்புகொண்டு பயிற்சி பெறுவது குறித்து விவாதிக்கப்பட்டது. இதன்படி லண்டனில் வாழ்ந்த ஈரோஸின் செயலாளர் ஈ.இரத்தினசபாபதி, பெய்ரூட் சென்று, அல் ஜிகாத்துடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். இதன் காரணமாக ஈரோஸ் அமைப்பின் முதல் குழு பயிற்சி பெற்றுத் திரும்பியது. அடுத்த குழுவில் விடுதலைப் புலிகளிள் சிலரையும் ஈரோஸ் அமைப்பு சேர்த்துக்கொண்டது. இவ்வாறு பயிற்சி பெற்ற போராளிகள், யாழ்ப்பாணம் பகுதியில் குழு, குழுவாகப் பயிற்சி அளித்தனர்.

இவர்தான் கடற்புலிகள் தலைவர் சூசையா..?


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

புலிகள் பெயரில் உலாவும் காட்டு விலங்கு ஒன்றைத் தவிர புலிகள் என்கிற அடையாளத்தையே சுத்தமாக துடைத்து எறிந்துவிட்ட திருப்தியில் இருக்கிறது சிங்கள பேரினவாத அரசு.

கடைசி கட்டப் போரில் கொல்லப்பட்டவர்கள் லிஸ்ட்டில் கடல் புலிகளின் தலைவர் சூசையின் பெயர் இடம் பெற்றாலும், அவருடைய புகைப்படத்தை இதுவரையில் வெளியிடாமல் இருந்த சிங்கள அரசு, சமீபத்தில் அதனுடைய ஒரு வெப்சைட்டில் இவர்தான் சூசை என்று வெளியிட்டிருக்கிறது.


இந்தப் புகைப்படம் உண்மையா.. பொய்யா.. என்பது தெரியவில்லை..

சிங்கள அரசு அமைத்திருக்கும் மரண முகாம்களின் நிலைமையை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது. எப்படி இதையெல்லாம் சகித்துக் கொண்டு அடுத்தக் கட்ட வேலையை பார்க்கிறேன் என்று ஒரு நிமிடம் என்னை குற்றவாளியாக்குகிறது என் மனது.

அந்த வெட்ட வெளியில் நிற்கக்கூட முடியாத அந்த கூரைக்குள் எத்தனை குடும்பங்கள் வெந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை யோசித்தால் ஒரு வேளை சோறு உள்ளே இறங்க மாட்டேங்குது.. ஆனாலும் நம் மத்திய, மாநில ஆட்சியாளர்கள் மட்டும் முழு திருப்தியோடு இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு வேலை மிச்சம் என்று..

தப்பித் தவறி அந்த முகாம்களை அமைக்காமல் மக்களை அப்படியே விட்டு வைத்திருந்தால், அவர்களில் பாதிப் பேர் தமிழகம் தப்பி வந்திருப்பார்கள். பின்பு வந்தவர்களைத் தங்க வைத்து சோறு போட்டு பார்த்துக்கணுமே.. தொல்லை வேலையாச்சே என்று நினைத்து மனதுக்குள் சந்தோஷமாக இருக்கிறார்கள்.

ஆடட்டும்.. ஆடும்வரை ஆடட்டும்..!!!

28 August, 2009

புலிகள் இராணுவ ரீதியாக அழிக்கப்பட்டாலும்

புலிகளின் போரியல் நுட்பங்களைஅறிவதற்கு விரும்பும் வல்லரசுகள்:
புலிகள் இராணுவ ரீதியாக அழிக்கப்பட்டாலும்- அவர்கள் போரியலில் தமக்கென முத்திரை பதித்திருக்கிறார்கள் என்பது உறுதியாகியுள்ளது.
விடுதலைப் புலிகளுடனான போரில் வெற்றி பெற்ற இலங்கை அரசிடம் இருந்து, இப்போது வெளியாகும் கருத்துகள் அதன் இராணுவத் திமிரை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளன.

பிரித்தானிய அரசாங்கம் இலங்கைக்கு ஆயுதங்களை வழங்குவதை மீள் பரிசீலனை செய்யவேண்டும் என்றும்-பிரித்தானியா வழங்கிய ஆயுதங்கள், தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் வேண்டும் என்றும், அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சி குழு கோரியிருந்தது. இதுகுறித்து இலங்கையின் முப்படைகளினது உயர் அதிகாரிகள் வெளியிட்டிருக்கின்ற கருத்துகள் பிரித்தானியாவை ஏளனப்படுத்துவது போன்று அமைந்துள்ளன. பிரித்தானியாவிடம் கப்பல்களையோ, விமானங்களையோ, ஆட்டிலறிகளையோ அல்லது வேறெந்த ஆயுதங்களையோ வாங்கி, போரில் வெற்றி பெறவில்லை- இது அந்த நாட்டு எம்.பிக்களுக்குத் தெரியாது போல இருக்கிறதென்று கிண்டலடித்திருந்தனர் அவர்கள்.

1996ம் ஆண்டு பிரித்தானியா பத்து 30மி.மீ பீரங்கிகளையும், அதற்கான 6,000 ரவைகளையும் வழங்கியிருந்தது. இவை கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகுகளில் பொருத்தப்படுவதற்காக வாங்கப்பட்டிருந்தன. இதற்குப் பின்னர் பிரித்தானியாவிடம் இருந்து இலங்கை அரசு வெளிப்படையாக ஆயுதங்களை வாங்கவில்லை. ஆனால் பின்னர் 30மி.மீ பீரங்கிகளுக்கான ரவைகளைக் வாங்க முற்பட்டபோது- அவற்றை விற்க பிரித்தானியா மறுத்து விட்டது என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. எவ்வாறாயினும், பிரித்தானிய அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழுவின் கோரிக்கை இலங்கை அரசாங்கத்தினாலும், அரசபடைத் தளபதிகளாலும் நேரடியாகவும்- மறைமுகமாகவும் ஏளனப்படுத்தப்பட்டிருக்கிறத
ு.

அதேவேளை, இப்படிப்பட்டதொரு சூழலில் பிரித்தானியாவிடம் இருந்து ஒரு கோரிக்கை வந்திருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றன. அதாவது, விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு காரணமாக அமைந்த- கடற்படையின் சிறிய படகுத் தாக்குதல் அணியின் அனுபவங்களை அறிந்து கொள்வதற்கு பிரித்தானியப் பாதுகாப்பு அதிகாரிகள் விருப்பம் தெரிவித்திருக்கிறார்களாம். இலங்கையின் பாதுகாப்புத் தரப்பு இப்படியொரு தகவலை வெளியிட்ட காலகட்டமானது- இது உண்மையா என்ற கேள்வியை எழுப்ப வைத்திருக்கிறது. பிரித்தானியாவின் ஆயுத உதவியின்றியே போரை நடத்தி வெற்றி பெற்றதாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய கருத்து வெளியிட்டிருந்த பின்னணியில் தான் இந்தத் தகவலும் வெளியாகியிருக்கிறது.

பிரித்தானியா தம்மிடம் அனுபவங்களை கேட்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறோம் என்று பெருமைப்படும் விதத்தில் இலங்கையின் கருத்துகள் அமையவில்லை. புலிகளுக்கு எதிராகப் போரிட ஆயுதங்களைத் தர மறுத்த பிரித்தானியா, இன்று போரின் அனுபவங்களை பெறுவதற்குத் தம்மிடம் கெஞ்சுகிறதென்று- அந்த நாட்டைக் கொச்சைப்படுத்தும் விதத்திலேயே இலங்கைப் படையதிகாரிகளின் கருத்துகள் அமைந்துள்ளன. இலங்கைப் படைகள் புலிகளுக்கெதிரான போரில் பெற்ற வெற்றி முக்கியமானதொன்று தான். அதற்காக அந்த வெற்றிக்கு இலங்கை மட்டும் உரிமைகொண்டாட முடியாது. அத்தோடு இது உலகத்தில் நிகழ்ந்திராத ஒன்றெனக் கூறிப் பெருமை கொள்ளவும் முடியாது. உலகில் எங்குமே- வல்லரசுகளால் கூட, நிகழ்த்த முடியாத அற்புதத்தை நிகழ்த்தியிருப்பதாக இலங்கைப் படைகள் தம்மைத் தாமே புகழ்ந்து கொண்டிருக்கின்றன.

ஆனால், 1950 இல் மலேசியாவில் விடுதலை கோரிய ஆயுதப்போராட்டத்தை பிரித்தானியா முழுமையாக நசுக்கியிருந்தது. பஞ்சாபில் சிக்கியர்களும், காஷ்மீரில் முஸ்லிம்களும், கிழக்கு மாநிலங்களில் இடதுசாரி மாவோயிஸ்டுகளும் தனிநாடு அமைப்பதற்கு ஆயுதப் போராட்டங்களை நடத்தியபோதும் இந்திய அரசு அவற்றை தோற்கடித்திருந்தது. இப்படிப் பல உதாரணங்கள் இப்போது வந்து விட்டன. இந்த வரிசையில் மற்றொன்றாகவே இலங்கைப் படைகளின் வெற்றியும் அமைந்திருக்கிறதே தவிர- எல்லாவற்றுக்கும் முன்னுதாரணமான ஒன்றாக இருக்கவில்லை. புலிகளுக்கு எதிரான போர் முடிந்த பின்னர்- முள்ளிவாய்க்கால் கடற்கரையில் ஒரு இராணுவ வெற்றிவிழா நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய அப்போதைய இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா- இந்தப் போரில் பெற்ற அனுபவங்களைக் கற்றுக் கொள்ள, உலகமே தம்மிடம் வரிசையாக வந்து நிற்கப் போவதாகக் கூறியிருந்தார்.

புலிகள் இயக்கம் உலகில் மிகவும் வல்லமை பெற்றதொரு இராணுவ அமைப்பாக- முப்படைகளையும், மரபுசார் படையணிகளையும் கொண்டதாக இருந்தது உண்மை. அப்படிப்பட்டதொரு இயக்கத்தை இராணுவ ரீதியாகத் தோற்கடித்தது இலங்கைப் படைகளுக்கு முக்கியமானதொரு வெற்றி தான். அதுபோலவே இந்தப் போரின் மூலம் சிறந்த அனுபவங்களை அவர்கள் பெற்றிருப்பதும் மறுக்க முடியாதது.
சில நாட்களுக்கு முன்னதாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய மோதறையில் உள்ள கவசப் படையணியின் தலைமையகத்துக்குச் சென்றிருந்தார். அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர்- இலங்கை இராணுவத்தின் கிளர்ச்சி முறியடிப்பு போருபாயங்களை அறிந்து கொள்ள பல்வேறு நாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளன.

எனவே வெளிநாடு;கள் இராணுவங்களுக்கு கிளிர்ச்சி முறியடிப்புப் பயிற்சிகளை வழங்குவதற்கு, முல்லைத்தீவில் பயிற்சி முகாம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாகத்; தெரிவித்திருந்தார் பாகிஸ்தான் போன்ற நாடுகள் இங்கு பயிற்சி பெற விரும்புவதாகவும் அவர் கூறியிருந்தார்.
ஆனால், முல்லைத்தீவில் பாகிஸ்தான் இராணுவத்துக்குப் பயிற்சி அளிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்த அவரே, பின்னர் அதை மறுத்தார்.
முல்லைத்தீவில் பாகிஸ்தான் படைகளுக்கு பயிற்சி வழங்கப்படாது தென்பகுதியில் வைத்தே பயிற்சி அளிக்கப்படும் என்று கூறியிருக்கிறார் லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய.

புலிகளைத் தோற்கடித்தது பற்றி அனுபவங்களைப் பெறுவதற்கு வெளிநாட்டுப் படைகள் ஆசைப்படுவது முக்கியமானதொரு விடயமே.
ஆனால் இந்தப் பெருமை இலங்கை இராணுவத்துக்குக் கிடைத்திருப்பதற்குக் காரணமே புலிகள் தான். ஒருவரின் குணத்தை அவரது நண்பன் யார் என்பதைக் கொண்டு முடிவு செய்யலாம். அதுபோன்றே ஒரு படையின் பலத்தை அறிய அந்தப் படையின் எதிரியைக் கொண்டே மதிப்பிடலாம் என்பார்கள்.

இந்த வகையில் புலிகளின் பலம்- திறன்- ஆற்றல் ஆகியனவே, இந்த முறியடிப்புப் போருக்கு முக்கியத்துவத்தைக் கொடுத்திருக்கிறது.
புலிகள் இயக்கத்தின் போரியல் வளர்ச்சி பற்றி, அவர்களின் திறன் பற்றி சர்வதேச இராணுவ விற்பன்னர்கள் பலரும் கடந்த காலங்களில் இலங்கைக்குச் சென்று நேரில் அறிந்திருந்தனர். இப்போது அவர்கள் தோற்கடிக்கப்பட்ட விதம் பற்றி அறிய ஆசைப்படுகின்றனர். அதேவேளை, இலங்கைப் படைகளின் சிறிய படகுத் தாக்குதல் அணிகளின் தந்திரோபாயம் பற்றி அறிந்து கொள்ள பிரித்தானியா ஆசைப்படுவதாக தகவல் வெளியிடப்பட்டிருப்பது தான் ஆச்சரியம். புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டது சர்வதேச சமூகத்தின் பங்களிப்புடன் தான் என்பதை மறைக்கவே இலங்கை அரசு இப்படியான தகவல்களை வெளியிடுவது போலத் தெரிகிறது.

ஒரு கட்டத்தில் புலிகளைத் தோற்கடிக்க சர்வதேசம் உதவ முன்வரவில்லை என்று கூறியது அரசாங்கம். பின்னர் சில ஆசிய நாடுகளைத் தவிர வேறு மேற்குநாடுகள் உதவவில்லை என்றும் கூறியது. இப்போது பிரித்தானிய ஆயுதங்களின் மூலம் புலிகளைத் தோற்கடிக்கவில்லை என்கிறது. இந்தியாவின் உதவியைப் பெறவில்லை என்கிறது. இப்படிப் பல உண்மைகளை மறைத்து தமது இராணுவ வல்லமையை- வெற்றியை மிகைப்படுத்திக் கொள்வதில் இலங்கை அரசும், படைகளும் முயற்சி செய்து வருகின்றன. இலங்கைக் கடற்படையின் சிறிய படகுத் தாக்குதல் அணிகளின் தந்திரோபாயம் பற்றிய அறிந்து கொள்ள பிரித்தானியா விருப்பம் வெளியிட்டது உண்மையானால்- அதற்கான பெருமையும் புலிகளுக்கேயுரியது.

கடற்புலிகளின் கடல் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டுவதில் முக்கிய பங்கு வகித்தது- நான்காவது கட்ட ஈழப்போரில் கடற்படை அறிமுகப்படுத்திய விசேட படகுப் படையணி (Special Boat Squadron-SBS) மற்றும் துரித நடவடிக்கைப் படகு அணி (Rapid Action Boat Squadron -RABS) ஆகியனவாகும். இலங்கைக் கடற்படையில் விசேட படகுப் படையணி 1993இல் அமைக்கப்பட்டது. இரண்டாம் கட்ட ஈழப்போர் மற்றும் மூன்றாம் கட்ட ஈழப்போர்களின் போதும் இது செயற்பட்டது. அதேவேளை துரித நடவடிக்கைப் படகு அணி தான் நான்காவது கட்ட ஈழப்போர் காலத்தில் உருவாக்கப்பட்டது. இந்தப் படையணிகளின் உருவாக்கமே புலிகளின் தோல்விக்குக் காரணம் என்று கூற முடியாது. இந்தப் படையணிகளுக்கு வழங்கப்பட்ட படகுகள், ஆயுதங்கள் தான் முக்கிய மாற்றத்துக்கு வழிவகுத்தது.

கடற்படையின் சுடுபல சக்தியை அதிகரிக்கும் வகையிலும், கடற்கரும்புலிகளின் தாக்குதல்களை முறியடிப்பதற்கு ஏற்ற வகையிலுமே இந்தத் தந்திரோபாயத்தைக் கடற்படை அறிமுகப்படுத்தியிருந்தது. இரண்டாம், மூன்றாம் கட்ட ஈழப்போர்களின் போது கடற்படை அழிவுகளை சந்தித்ததற்கான காரணங்களை ஆராய்ந்த போது- ஒற்றை இயந்திரம் கொண்ட சண்டைப் படகுகளும், குறைந்த சூட்டு வலுவும் தான் தமது பலவீனம் என்று கண்டறிந்தது.

புலிகள் தமது பாரிய சண்டைப்; படகுகளில் 250 குதிரைவலு கொண்ட நான்கு இயந்திரங்களைப் பொருத்தியிருப்பர். சிறிய சண்டைப் படகுளில் இரண்டு இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருக்கும். ஒரு இயந்திரம் பழுதானால் கூட மற்றதைப் பயன்படுத்தித் தப்புவதற்கு இது வாய்ப்பானது. இதன் அடிப்படையில் தான் கடற்படை தமது தந்திரோபாயத்தை மாற்றியமைத்தது. இதற்கான ஆய்வுகளின் போது புலிகளின் தாக்குதல் படகுகளே முன்மாதிரிகளாக எடுக்கப்பட்டன. இதன் அடிப்படையில் மூன்று வகையான படகுகள் உருவாக்கப்பட்டன. இதில் பெரியது- 17 மீற்றர் நீளமானது. இது கட்டளை மற்றும் சண்டைப் படகுக்கான வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டது. இரண்டரை மீற்றருக்கு எழும்பும் அலைகளையும் சமாளித்துப் பயணம் செய்யக் கூடியது இந்தப் படகு. இரண்டாவது வகைப் படகு 14மீற்றர் நீளம் கொண்டது.

அடுத்தது- 23அடி நீளத்தை கொண்டது. இதற்குப் பெயர் அரோ (Arrow) இது 1.25 மீற்றர் உயருமான அலைகளிலும் லாவகமாகப் பயணம் செய்யக் கூடியது. 14மீற்றர் மற்றும் 17மீற்றர் நீளமான கரையோர ரோந்துப் படகுகளில் 250 குதிரை வலுக்கொண்ட நான்கு இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. 37 நொட்ஸ் வேகத்தில் இவை பயணம் செய்யும் இந்தப் படகுகளில் 23மி.மீ இரட்டைக்குழல் பீரங்கி (23 mm Double-barrel gun) ஒன்று, சிங்கப்பூர் தயாரிப்பான 40மி.மீ தன்னியக்க கிரனேட் லோஞ்சர் (CIS 40 mm Automatic Grenade Launcher) ஒன்று, 12.7மி.மீ விமான எதிர்ப்புத் துப்பாக்கிகள் இரண்டு என்பன பொருத்தப்பட்டன.

23அடி நீளம் கொண்ட ‘அரோ’ தாக்குதல் படகுகளில் 250 குதிரைவலு கொண்ட இரண்டு இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளதால் 35 நொட்ஸ் வேகத்தில் பயணம் செய்யக் கூடியது. இதில் 23மி.மீ பீரங்கி அல்லது 12.7மி.மீ துப்பாக்கி மற்றும் 40மி.மீ தன்னியக்க கிரனேட் லோஞ்சர் என்பன பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் கடற்புலிகளின் செறிவான சுடுபல சக்தி கடற்படையால் தோற்கடிக்கப்பட்டது. இந்தத் தந்திரோபாயம் கடற்புலிகளிடம் இருந்து கடற்படை கற்றுக் கொண்டது தான். அரோ வகைப் படகுகள் பிரித்தானியா, அமெரிக்கா போன்ற முன்னணி நாடுகளின் கடற்படைகளின் பாவனையில் உள்ளது. ஆனால் அவற்றில் ஆகக் கூடியது 12.7மி.மீ துப்பாக்கியைத் தான் பொருத்தியிருக்கிறார்கள். இந்தப் படகுகளில் 20மி.மீ, 23மி.மீ பீரங்கிகளையும ;பொருத்தி கடற்சமர்களை நடத்த முடியும் என்று இலங்கைக் கடற்படைக்குக் காட்டிக் கொடுத்ததே புலிகள் தான். இப்போது அந்த உத்தியைத் தான் பிரித்தானியா கேட்பதாகக் கூறிப் பெருமைப்படுகிறது இலங்கை அரசு.

ஆதைவிடக் கடற்படை வடிவமைத்த அரோ வகைப் படகுகள் கூடக் கடற்புலிகளின் படகுகளை மாதிரியாக்கக் கொண்டே வடிவமைக்கப்பட்டவை. கடற்புலிகளை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இலங்கைக் கடற்படையின் படகுகள், தந்திரோபாயங்களைப் பற்றி அறிந்துகொள்ள பிரித்தானியா விரும்புகிறதென்றால் அது இலங்கைக் கடற்படைக்குரிய பெருமையல்ல.

புலிகள் இராணுவ ரீதியாக அழிக்கப்பட்டாலும்- அவர்கள் போரியலில் தமக்கென முத்திரை பதித்திருக்கிறார்கள் என்பது உறுதியாகியுள்ளது. அவர்களின் போரியல் நுட்பங்களை, தந்திரோபாயங்களை- கற்றுக் கொள்ள வெளிநாடுகள் விரும்புகின்றன என்றால்- அதற்காக பெருமைப்படக் கூடியது இலங்கை அரசு அல்ல. புலிகள் இயக்கமே.

பிரபாகரன் போராளியானது ஏன்

ஈழத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட போராளிக்குழுக்கள் ஆயுதமேந்தி, ஈழத்தை அடைவதற்காகப் போராடினர் என்பதும், அதில் தமிழீழ விடுதலைப் புலிகள், (LTTE) தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம், (PLOTE) தமிழீழ விடுதலை இயக்கம், (TELO) ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, (EPRLF) ஈழப்புரட்சிகர இயக்கத்தினர் (EROS) என ஐந்து அமைப்புகள் முன்னணியில் இருந்தனவென்பதும், கொள்கை, கோட்பாடுகள் குறித்தும், இவ்வியக்கங்கள் அரசின் மீது தொடுத்தத் தாக்குதல் குறித்தும் அவர்களது வெளியீடுகள் மூலம் தகவல்களைத் தெரிவித்திருக்கின்றன என்றும் முந்தைய பல பகுதிகளில் பார்த்தோம்.

இவ்வியக்கங்களின் தோற்றுவாய் என்பது தமிழ் மாணவர் பேரவை, பின்னர் தமிழ் இளைஞர் பேரவை ஆகியன. இக்குழுக்களில் 30 ஆண்டுகளாக களத்தில் நின்று போராடிய, பலம் பொருந்திய அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள்தான் என்ற நிலையில், பெங்களூரில் நடைபெற்ற தெற்காசிய மாநாட்டின்போதும், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் போதும் ஒரு முடிவுக்கு வர இவ்வியக்கமே நெருக்குதலுக்கு ஆள்பட்டது என்கிற அளவிலும் அவ்வியக்கம் குறித்து இங்கே விரிவாகப் பார்ப்பது அவசியமாகிறது.

இலங்கையின் வடக்கு மாநிலத்தின் பருத்தித் துறைப் பகுதியில் வல்வெட்டித்துறை திருவேங்கடம் வேலுப்பிள்ளை - பார்வதி தம்பதியினருக்கு நான்கு குழந்தைகள். இரு ஆண்கள்; இரு பெண்கள். இதில் பிரபாகரன் கடைக்குட்டி ஆவார். மனோகரன் மூத்தவர், இரு சகோதரிகள் ஜெகதீஸ்வரி, விநோதினி. தந்தை வேலுப்பிள்ளை அரசு காணி அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர்.

பிரபாகரன் பத்தாம் வகுப்பு வரை படித்தார். சிறு வயது முதலே வெடி மருந்து, வெங்காய வெடி செய்வதில் நாட்டம் கொண்டிருந்தார். கப்பல் பணிக்கு இவரது நண்பர்கள் மனு போட்டு வேலையில் சேர்ந்திருந்தார்கள். அவர்களைப் போன்று கப்பல் பணி ஊழியராகச் சேர ஆசைப்பட்டது -வெடிபொருள்கள், துப்பாக்கி வாங்கலாம் என்ற ஆசையில்தான். ஆனால் தந்தை அனுமதிக்கவில்லை.

இலங்கையில் தமிழ்த் தலைவர்களின் ஜனநாயக வழியிலான போராட்டங்கள் அசட்டை செய்யப்பட்டன. இலங்கையின் ஆட்சிப் பொறுப்பில் அவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று ஒதுக்கியே வைத்திருந்தனர்.

இடதுசாரிகளோ, பிரச்னைகளுக்கு வன்முறை மூலமே தீர்வுகாண வேண்டும் என்பதைச் சொன்னார்கள். அதைப் பலமுறையில் செய்தும் காட்டினார்கள், சீனச் சார்பு கம்யூனிஸ்ட்டுகள். அவர்களே தமிழ் பேசும் மக்கள் மத்தியில் வன்முறையை அறிமுகம் செய்தவர்களும் ஆவர் (புஷ்பராஜா பக். 44).

இவர்களும் சிங்கள பேரினவாதத்துக்கு அடிமையாகி, முதலாளித்துவக் கட்சிகள் என்று யாரை விமரிசனம் செய்தார்களோ அவர்களுடனே கூட்டு சேர்ந்து, மற்றவர்களைக் காட்டிலும் தமிழர்களுக்கு அதிக துரோகம் செய்தார்கள். எனவே, சிங்கள அரசின் அடக்குமுறைகளைக் கண்டு கொதித்தெழுந்த தமிழ் மாணவர்கள் 1970-களில் தமிழ் மாணவர் பேரவை என்ற அமைப்பைத் தோற்றுவித்தனர் என்பதை முன்பே பார்த்தோம்.

சிங்கள அரசின் மீது கோபம் கொண்டிருந்த இளைஞர்கள் மாணவர் பேரவையை நாடிச் சென்று இணைந்து கொண்டனர்.அதே வகையைப் பின்பற்றி சத்தியசீலன் தொடங்கிய தமிழ் மாணவர் பேரவையில் (நவம்பர் 1970) பிரபாகரனும் இணைந்து கொண்டார்.

இப்பேரவையில் தீவிரவாதக் குழு ஒன்றும் இருந்தது. அக் குழுவில் தங்கதுரை, சின்ன ஜோதி போன்றோர் இருந்தார்கள். அவர்கள் பிரபாகரனைக் காட்டிலும் வயதில் பெரியவர்கள். தங்கதுரையும் பிரபாகரனும் ஒரே ஊரானதால் இருவருக்கிடையே நெருக்கம் ஏற்பட்டது. பிரபாகரனுக்குத் துப்பாக்கிச் சுடவும், தொடர்ந்து கைக்குண்டுகள் செய்யவும் பயிற்சி அளித்தார்கள். அவர்களாக சொல்லிக் கொடுத்தது பாதி என்றால், இவராக அறிந்து கொண்டதே அதிகம்.

இந்த நேரத்தில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவர் "தரப்படுத்துதல்' என்கிற சட்டத்தைக் கொண்டுவந்து மாணவர்களை கோபத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றார்.

இந்தத் தரப்படுத்துதல் சட்டத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய, கல்வி அமைச்சரும் தமிழருமான பதியுத்தீன் முகமதுவையே அவர் பயன்படுத்தினார். நாடாளுமன்றத்தில் மசோதாவைத் தாக்கல் செய்யும்போது பதியுத்தீன் முகமது, "மருத்துவம் பொறியியல் துறையில் மாணவர்கள் பயிலும்போது, தமிழ் மாணவர்களே அதிக எண்ணிக்கையில் இடம்பிடிக்கின்றனர். சிங்கள மாணவர்கள் அவர்களைக் காட்டிலும் குறைவான எண்ணிக்கையில் உள்ளனர். இதற்கு - தமிழ் மாணவர்களுக்கு, தமிழ் ஆசிரியர்கள் அதிக மதிப்பெண் அளிப்பதே காரணம்' என்று உண்மைக்கு மாறான தகவல் ஒன்றை கூறி அவையில் பதிவு செய்தார்.

இதன் முதற்கட்டமாக செய்முறைத் தேர்வுகள் ரத்தானது. இதனால் கோபமுற்ற மாணவர்கள் தமிழ்த் தலைவர்களை நெருக்கினர். தமிழ்த் தலைவர்கள் ஸ்ரீமாவோ பண்டார நாயக்காவைச் சந்தித்து முறையிட்டபோது, "நீங்கள் கல்வி அமைச்சரிடம் முறையிட வேண்டிய விஷயம்' என்றார். கல்வி அமைச்சரான பதியுத்தீன் முகமது, "இது அமைச்சரவை முடிவு; இதில் நான் வெறும் கருவி மட்டுமே; எனக்கு பணிக்கப்பட்டதைச் செய்தேன்; இதில் மாற்றம் செய்யும் அதிகாரம் எதுவும் எனக்கு இல்லை' என்றார்.

இவையெல்லாம் பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகளாக வந்ததும், மாணவர் பேரவையினர் இதற்குத் தக்க எதிர்ப்பைக் காட்ட விழைந்தனர். அரசுப் பேருந்து ஒன்றை கொளுத்துவது என்று முடிவானது. இதில் பங்கு பெறப் பலரும் போட்டியிட்டனர். கிட்டத்தட்ட இருபது பேர். அதில் நான்கு பேர் தெரிவு செய்யப்பட்டனர். அதில் பிரபாகரனும் ஒருவர். மற்றவர்களைவிடப் பிரபாகரன் வயதில் சிறியவர் என்றாலும், அப்படியொருவர் தேவை என்று அவரைத் தேர்வு செய்தார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நால்வரில் மூவர் குறிப்பிட்ட நேரம் நெருங்க நெருங்க பயந்து ஓடிவிட்டனர். நான்காவது நபரான பிரபாகரன் எப்படியும் பேருந்தைக் கொளுத்தியே தீர்வது என்று, அன்று இரவு பணி முடிந்து, பணிமனையில் வண்டியை விட்டுவிட்டுப் போகும் வரைக் காத்திருந்து, பேருந்தை எண்ணெய் ஊற்றி கொளுத்தினார். பேரவையினர் பிரபாகரனின் வீரச்செயலைப் பாராட்டி, அணைத்துக் கொண்டனர்.

சுதந்திர ஈழம் என்பது அவரது தாகம் ஆயிற்று. அநீதியை எதிர்த்துப் போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், சாக்ரட்டீஸ் போன்றோரின் வாழ்க்கை அவருக்குப் பிடித்தது.

"இதற்கெல்லாம் காரணம் 1958-இல் நடைபெற்ற பயங்கரப் படுகொலைகள்தான். இதன் உச்சம் தெற்கே பாணந்துறை சிவன் கோயிலில் உறங்கிக்கொண்டிருந்த பூசாரியை எழுப்பி, அவர்மீது எண்ணெய் ஊற்றி சிங்களவர்கள் எரித்துக் கொன்ற சம்பவம். வடக்கு மாநிலமே உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்தது. இதே கலவரத்தில் சின்னஞ்சிறு சிசுவை, கொதிக்கும் தாரில் போட்டுக் கொன்ற சம்பவம் இளைஞர்களை உசுப்பேற்றியது. அப்பாவிகளை சிங்களவர்கள் கொல்கிறார்கள். நாங்கள் ஏன் இவர்களைத் திருப்பித் தாக்கக்கூடாது என்ற எண்ணம் இளைஞர்களாகிய எங்களுக்கு ஏற்பட்டது. கர்ணன், வீமன், விவேகானந்தர் ஆகியோரை எங்களுக்குப் பிடித்தது. "இளைஞர் அணி' ஒன்றை உருவாக்கினோம். எங்களது வரலாற்றுப் பின்னணியே எங்களை ஆயுதம் தரிக்கச் சொல்லிற்று. அப்போது எனக்கு வயது பதினாலுதான்' என்று ஒரு பேட்டியில் சிறுவயதைப் பற்றி பிரபாகரன் குறிப்பிட்டிருக்கிறார்.

பின்னர் ஒரு நாள் அதிகாலை பிரபாகரனைத் தேடி போலீஸ் வந்தது. கதவைத் திறந்தால் பெருமளவில் போலீஸ். வீட்டைச் சோதனையிட்டும் பிரபாகரன் கிடைக்கவில்லை. அப்போதுதான் பெற்றோருக்கு பிரபாகரனுக்குத் தீவிரவாத நண்பர்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்தது.

பிரபாகரன் வீட்டுக்கு வருவதை நிறுத்திக்கொண்டார். ஆனாலும் பிரபாகரன் வீட்டைச் சோதனையிட போலீசார் அடிக்கடி வந்தனர். பிரபாகரன் என நினைத்து அவரது அண்ணன் மனோகரனை அழைத்துச் சென்ற சம்பவமும் நடந்தது. நீண்டநாள்கள் பிரபாகரன் வீட்டுக்கு வராததால் கவலையுற்ற தந்தை வேலுப்பிள்ளை, பிரபாகரன் தங்கியிருந்த தீவிரவாதக் குழுவினரைக் கண்டுபிடித்து அவரை அழைத்து வந்தார். போலீஸ் நடவடிக்கை தொடரவும் பிரபாகரன் அங்கிருந்து கிளம்பினார்.

மாணவர் பேரவையின் தீவிரவாத செயல்களை ஒடுக்க உடனடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வலைவீச்சில் பேரவைத் தலைவரான சத்தியசீலன் சிக்கினார். கடும் சித்திரவதைகளுக்கு ஆளான அவரைத் தொடர்ந்து ஸ்ரீ சபாரத்தினம் கைதானார். பிரபாகரனைத் தேடுவதில் போலீஸôர் தீவிரமாக இருந்தனர்.