Photobucket

26 August, 2009

யாழ் தொழில் நுட்ப கல்லூரி மாணவர்களின் பகிஷ்கரிப்பு

யாழ் தொழில் நுட்ப கல்லூரியின் அதிபர் கல்லூரிக்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவதைக் கண்டித்து மாணவர்களின் பகிஷ்கரிப்பு போராட்டம் தொடர்கிறது.

யாழ் தொழில் நுட்ப கல்லூரியின் அதிபர் கல்லூரியை கல்வி நடவடிக்கைக்கள் தவிர்ந்த செயற்பாடுகளுக்காகப் பயன்படுத்துவதையும், அச்செயற்பாடுகளில் ஈடுபட மாணவர்களாகிய தம்மை வற்புறுத்துவதாகவும் கூறி மாணவர்களால் ஓகஸ்ட் 18 இல் ஆரம்பிக்கப்பட்ட வகுப்புகளைப் புறக்கணிக்கும் போராட்டமானது தொடர்ந்து நடைபெறுகின்றது.

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்வரை இது தொடரும் என யா.தொ.க மாணவர்கள்ர் அறிவித்துள்ளனர்.
அண்மையில் நடைபெற்ற யாழ் மாநகரசபைத் தேர்தலின்போது யா.தொ.நு கல்லூரியை இலங்கை சுதந்திரக் கட்சியின் அலுவலகம் போல அதிபர் பயன்படுத்தியதாகவும், தேர்தலுக்கான சுவரொட்டிகள், போஸ்டர்களை ஒட்டும்படி மாணாவர்களை அதிபர் வற்புறுத்தியதாகவும் கூறும் மாணவர்கள் எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடம்தராது, கல்வி நடவடிக்கைகள் மட்டுமே அங்கு இருக்கும் என்ற உறுதிமொழி தரப்பட வேண்டும் என்று இந்த பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதோடு அதிபர் மீது மோசடியும் சுமத்தப்பட்டுள்ளது. கல்லூரியைப் புனரமைக்கவென கொரிய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மில்லியன் கணக்கான பணத்தை அதிபர் தவறாகப் பயனப்டுத்தியுள்ளார்.

இதற்கிடையில் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் சிலர் புலிகளுடன் தொடர்புள்ளவர்கள் எனக்கூறப்பட்டு இலங்கை புலனாய்வுக் குழுவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர். அதற்கு மாணவர்கள் காட்டிய எதிர்ப்பை அடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். எனினும் அந்த மாணவர்களை போலீசார் பயமுறுத்துவதோடு, விசாரணைகளுக்கு உட்படுத்தி வருகின்றனர்.

விரிவான செய்தி வெள்ளவத்தையில் சிறப்பு தேடுதல் நடவடிக்கை

போர் நிறைவுக்கு வந்து விட்டதாகக் கூறியதிலிருந்து கொழும்பில் தேடுதல்களும் அதிகரித்துள்ளன. அதுவும் தமிழ் மக்கள் செறிந்து வாழுகின்ற வெள்ளவத்தைப் பகுதியில் அடிக்கடி போலீசார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறான சிறப்பு தேடுதல் நடவடிக்கை ஒன்று செவ்வாய்க்கிழமை காலையில் இருந்து மாலை வரை இடம்பெற்றுள்ளது. இதன்போது தற்கொலைதாரிகளின் ஆயுதங்களும் வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. நேற்றைய நாள் முழுவதும் வெள்ளவத்தையின் மூலை முடுக்கு எங்கிலும் சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

அலுவலகங்கள், வெளி வேலைகள், சந்தைகள் என புறப்பட்ட பல தமிழர்கள் சாலைகள், ஒழுங்கைகளில் வழி மறிக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். ஆனால் நேற்று இரவு நிலவரப்படி ஒரு பொதுமக்களும் கைது செய்யப்பட்டதாக தகவல் இல்லை. கோத்தபாய ராஜபக்ஷ மீது தற்கொலைத் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டதில் இருந்து கொழும்பின் பிற பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன.

வன்னியில் நாள் ஒன்றுக்கு 60 கிலோ மீற்றர் பரப்பிலேயே கண்ணிவெடிகள் அகற்றப்படுகின்றன: 'சர்வாத்ரா' அமைப்பு

வன்னியில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்தியப் படையினரால் ஒரு நாளைக்கு 60 முதல் 70 சதுர கிலோமீற்றர் பரப்பளவையே சுத்திகரிக்க முடிகிறது என 'சர்வாத்ரா' அமைப்பு தெரிவித்துள்ளது.

இயந்திரங்களின் துணையுடன் தாம் பணிகளை மேற்கொள்வதால் இவ்வளவு விரைவாகச் செயற்பட முடிகிறது எனவும் இதுவே மனிதவலுவைப் பயன்படுத்தி மேற்கொண்டால் ஒரு நாளைக்கு 10 சதுர கிலோ மீற்றர் பரப்பளவையே சுத்திகரிக்க முடியும் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து சிறிலங்காப் படையினர் கைப்பற்றிய நிலப்பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அமைப்புக்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவின் 'சர்வாத்ரா' அமைப்பும் முன்னாள் இந்தியப் படையினரையும் உள்ளூர்வாசிகளையும் இணைத்து கடந்த 2003 ஆம் ஆண்டில் இருந்து அந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றது.

பெரிய அணைக்கட்டுப் போன்ற ஒரு கிலோ மீற்றர் பரப்பளவில் மட்டும் 14 கவச எதிர்ப்பு கண்ணிவெடிக்களைத் தாம் மீட்டதாக அந்த அமைப்புத் தெரிவித்துள்ளது.

மன்னாரின் நெல்வயல்களில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் தற்போது 'சர்வாத்ரா' ஈடுபட்டுள்ளது. மழை காலத்துக்குள் முன்னதாக அப்பகுதிகளைச் சுத்திகரித்து விவசாயிகள் கைகளில் ஒப்படைத்தாலேயே அவர்களால் விவசாயத்தில் ஈடுபட முடியும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்தப் பகுதிகளில் ஏராளமான கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கும் 'சர்வாத்ரா' அமைப்பின் நடவடிக்கை முகாமையாளர் மனிந்தர் சிங், கடந்த சில நாட்களில் மட்டும் 200 முதல் 300 வரையான கண்ணிவெடிகளை அகற்றியுள்ளோம் என்றார். அதேசமயம் சில சமயம் ஒரு நாளில் 10 முதல் 20 கண்ணிவெடிகளையே அகற்ற முடிகிறது எனவும் அவர் கூறினார்.

'அர்ஜூன்' எனப்படும் சிறப்பு இயந்திரம் ஒன்றை நாம் பயன்படுத்தி வருகின்றோம். இந்த இயந்திரம் எந்த வகையான கண்ணிவெடிகளையும் அகற்றும் வல்லமை படைத்தது. தற்போது அத்தகைய 8 இயந்திரங்கள் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

நாம் கண்ணிவெடிகளை அகற்றிவரும் பகுதியில் மண் கடினமானதாகவும் வறண்டதாகவும் காணப்படுகின்றது. அதனால், சிறப்பாக வேதியல் சேர்க்கப்பட்ட தண்ணீரை தரையின் மீது தண்ணீர் தாங்கி வாகனங்கள் மூலம் பீச்சியடித்து அது ஊறுவதற்கு மூன்று மணி நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. அதன் பின்னர் கண்ணிவெடிகளை இலகுவாக அகற்ற முடிகிறது என்றார் மனிந்தர் சிங்.

கண்ணிவெடிகளை அகற்றியதுடன் மட்டுமல்லாது சுத்திகரிக்கப்பட்ட கிராமங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் தமது அமைப்பு ஈடுபட்டு வருகின்றது என அவர் தெரிவித்தார்.

ஏனெனில் சில பகுதிகளில் கண்ணிவெடிகள் எங்கு புதைக்கப்பட்டுள்ளன என்ற வழிகாட்டல் வரைபடங்கள் ஏதுமற்ற வகையில் அங்கும் இங்குமாக கண்ட கண்ட இடங்களில் எல்லாம் அவை புதைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

கேணல் ராயு/குயிலன்

கேணல் ராயு அண்ணையின் ஏழாம் ஆண்டு நினைவுநாள். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக நின்ற இத்தளபதி புற்றுநோயின் காரணமாக 25-08-2002 அன்று சாவடைந்தார்.

rajuஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அம்பலவாணர் நேமிநாதன் என்ற இயற்பெயருடைய ராயு அண்ணை, புலிகளின் இந்தியா-03 பயிற்சிப் பாசறையில் தனது அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்றிருந்தார். நேரிய பார்வை, எதையும் தீர்க்கமாக ஆராய்ந்தறியும் தன்மை, ஓயாத உழைப்பு, இவைகள் ராயு அண்ணையின் அடையாளங்கள். போராளிகளோ பணியாளர்களோ யாரையும் சாதுர்யமாக வேலை செய்விப்பதில் அவருக்கு நிகர் அவரேதான். கொடுக்கப்பட்ட பணிகள் உரிய நேரத்தில் செய்துமுடிக்கப்படாத பட்சத்தில் அவருடைய கோபங்களையும் பார்க்க முடியும்.

ஆனாலும் அதிலொரு நிதானமிருக்கும். கொடுக்கப்படும் தண்டனைகள் போராளிக்கு வேதனையைக் கொடுப்பதாக இருக்கக்கூடாது, பதிலாக விழிப்பைக் கொடுப்பதாக இருக்கவேண்டும் என்று அடிக்கடி கூறுவார். அவர் கற்றறிந்த விடயங்களை இயலுமானவரை அவரின்கீழ் செயற்படும் போராளிகளுக்குக் கற்றுக்கொடுக்க அவர் தவறியதில்லை. அதேபோல் போராளியொருவர் புதிய விடயம் ஒன்றை அவருக்குச் சொல்ல விளையும்போது ஒரு மாணவனின் மனநிலையோடு அவற்றைச் செவிமடுத்துக் கற்றுக்கொள்ளவும் அவர் தவறியதில்லை. அவருடைய இந்தக் குணாம்சமே பொறியியற்றுறைப் போராளிகளிடமிருந்து பல புதிய கண்டுபிடிப்புக்கள் வெளிவரக் காரணமாக அமைந்தது.

“முடியாது என்றால் முயற்சிக்கவில்லை” என்பதே ராயு அண்ணையின் வாக்காக இருந்தது. புதிய முயற்சிகளை ஆதரித்து ஊக்குவிக்கும் அதேவேளை தேவையற்ற பொருள் மற்றும் வள விரயங்கள் எவற்றையும் அவர் அனுமதித்ததே கிடையாது. அதுமட்டுமல்லாமல் அவர் எந்தவொரு வேலையிலும் முழுத்திருப்தி அடைந்துவிட மாட்டார்.

ஒவ்வொரு கருவியையும் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதாகத்தான் அவருடைய அறிவுரைகள் எப்போதும் இருக்கும். போராளிகளிடம் வேலைகளை ஒப்படைத்துவிட்டு அந்த வேலைக்குரிய நுட்பங்கள் அப்போராளிகளின் சுய சிந்தனையிலிருந்து வெளிப்படவேண்டும் என்று எதிர்பார்ப்பார். அவ்வாறு அவர்களின் சிந்தனையில் உருவாகும் நுட்பங்களை அவர்களிடம் கற்றறிந்து அவற்றை மேம்படுத்துவது பற்றிக் கலந்தாலோசிப்பார்.

ராயு அண்ணை தன்னுடைய போராட்ட வாழ்க்கையை லெப்.கேணல் ராதா அவர்களுடன் ஒரு தொலைத்தொடர்பாளராகத் தொடங்கினார். அவ்வாறு தொடங்கிய அவரது போராட்டச் செயற்பாடு அவரை ஒரு மாபெரும் சாதனையாளனாக உயர்த்தியது எனில் அவரின் அறிவினை நோக்கிய விடாத தேடலே மிகமுக்கிய காரணமாகும்.

விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைப் புலிகள் நிகழ்த்திய இமாலயச் சாதனைகள் பலவற்றின் பின்னால் ராயு அண்ணையின் வெளித்தெரியாத செயற்பாடுகள் பல இருந்தன. தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தொழிநுட்பப் பிரிவான “கேணல் ராயு படைய அறிவியல் தொழிநுட்ப ஆய்வு நிறுவன”த்தின் ஆணிவேர் ராயு அண்ணை என்றால் அது மிகையன்று.

விடுதலைப் புலிகளின் தொடக்ககாலத் தொலைத்தொடர்புத் துறையின் வளர்ச்சியில் ராயு அண்ணையின் பங்கு அளப்பரியது. ஒரு தொலைத்தொடர்பாளனாக இருந்தபோது தான் பெற்றுக்கொண்ட அனுபவம் மற்றும் தான் கற்றறிந்த விடையங்களை அடிப்படையாகக் கொண்டு தொலைத்தொடர்புக்கான ஒரு தனித்துறையினைக் கட்டியெழுப்பும் பணியினை மேற்கொண்டார். உலகமே வியந்துபார்த்த விடுதலைப் புலிகளின் தொலைத்தொடர்புக் கட்டமைப்பின் வளர்ச்சியில் ராயு அண்ணையின் உழைப்பு ஒவ்வொரு கட்டத்திலும் மறைபொருளாக இருந்தது.

~ ~ ~

இந்தியப் படையினருடனான போர்க்காலப் பகுதி. மணலாற்றுக் காட்டுப்பகுதியில் இந்தியப் படையினர் தமது இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருந்த நேரம். இராணுவத்தினரின் நகர்வுகளைக் கட்டுப்படுத்துவதற்காக தலைவரின் சிந்தனையில் உதித்த “ஜொனி” மிதிவெடிக்கு அப்போதிருந்த இக்கட்டான சூழ்நிலையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு வடிவம் கொடுத்த பெருமை ராயு அண்ணையையே சாரும்.

கடலிலே முதலாவது கடற்கரும்புலித் தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் தலைவர் அவர்களால் போடப்பட்டு அதற்கான பணிகள் ராயு அண்ணையிடமும் அப்போதைய கடற்புறா (கடற்புலிகள் என்று பெயர் பெறுவதற்கு முன் இயங்கிவந்த விடுதலைப் புலிகளின் கடல் நடவடிக்கை அணி) தளபதியிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தது. முன்னெப்போதும் நடத்தப்படாத ஒரு புதியவகைத் தாக்குதலாக அப்போது அந்தக் கடற்கரும்புலித் தாக்குதல் இருந்தது. வெடிபொருள் தொகுதியை எவ்வாறு படகில் பொருத்துவது, எந்த வடிவில் பொருத்துவது என்பன தெரியாமல் இருந்த விடயங்கள். ஆயினும் ராயு அண்ணை அவற்றைச் செய்து முடித்தார்.

பலகட்டப் பரிசோதனைகளைச் செய்து அவற்றிலிருந்து ஒரு வடிவத்தினைச் செய்து உருவாக்கியிருந்தார். ராயு அண்ணை இதனை திறம்பட முடித்துவிடுவார் என்ற தலைவரின் நம்பிக்கையை நிரூபித்துக் காட்டினார். அன்றிலிருந்து தன்னுடைய இறுதிக் காலம்வரை கடற்கரும்புலிகளின் தாக்குதற் படகுகளிற்கான வெடிமருந்துத் தொகுதியினை மேம்படுத்துவதற்காக அயராது உழைத்துக் கொண்டிருந்தார்.

தொடக்க காலத்திலிருந்து மோட்டார் மற்றும் எறிகணைகளின் செயற்பாடுகளைக் கற்றறிந்து புலிகளின் சுயதயாரிப்பான “பசிலன்” எனும் எறிகணைச் செலுத்தியின் தயாரிப்புக்கு அடித்தளமிட்டுக் கொடுத்தார். இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கியபோதே புலிகளின் பசிலன் பீரங்கிகள் சிறிலங்கா இராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக அமைந்திருந்தன. யாழ்.கோட்டை, மாங்குளம் போன்ற முகாம்கள் கைப்பற்றப்பட்ட தாக்குதல்களில் இப்பீரங்கிகளின் பங்கு அளப்பரியன.

1996 ஆம் ஆண்டு “ஓயாத அலைகள்-01” இராணுவ நடவடிக்கை மூலம் புலிகள் முல்லைத்தீவு இராணுவ முகாமைக் கைப்பற்றியபோது இரண்டு ஆட்லறிகள் புலிகள்வசம் வீழ்ந்தன. இயக்கத்தைப் பொறுத்தவரை அவை அப்போது பரிச்சயமற்ற பொருட்களாகவே இருந்தன. இராணுவத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட மட்டுப்படுத்தப்பட்டளவிலான கையேடுகள் மற்றும் இதர அறிவியல் ஏடுகள் என்பவற்றின் உதவியுடன் அவ்விரு ஆட்லறிகளையும் பரிச்சயமிக்க போராயுதங்களாக மாற்றியதில் ராயு அண்ணையின் பங்கே முதன்மையானது. முதன்மையானது என்பதைவிட முழுமையானது என்பதே பொருத்தமாக இருக்கும்.

அக்காலப் பகுதியில் அவர் இரவில் நித்திரை கொள்வதே அரிதான விடயம். பொதுவாக ஆட்லறிகளுக்கான சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதிகள் (Fire Control) அவ் ஆட்லறிகளின் தயாரிப்பு நிறுவனங்களினால் வழங்கப்பட்டவையாகவே இருக்கும். முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியும் அவ்வாறானதொன்றே. நிறைவான ஆட்லறிச் சூட்டுக்கு அவற்றின் செயற்பாடு போதுமானதாகவே இருக்கும். ஆயினும் ராயு அண்ணை அதனோடு திருப்திப் பட்டுவிடவில்லை. சுயமாக ஆட்லறிக்கான சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியினை உருவாக்கும் பணியில் போராளிகளை ஈடுபடுத்தினார். சாதாரண சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியைவிட மேம்பட்ட பல வசதிகளோடு சூடுகளை வேகமாகவும் மேலும் துல்லியமாகவும் வழங்கக்கூடியவாறு பல்வேறுபட்ட வசதிகளுடன் புதிய சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதி அவரின் வழிகாட்டலில் உருவாக்கப்பட்டது.

சிறிலங்கா படையதிகாரிகளாலேயே விடுதலைப் புலிகளின் ஆட்லறி சுடுதிறன் வியப்பாகப் பார்க்கப்படும் அளவுக்கு அதை வளர்த்தெடுத்த பெருமை ராயு அண்ணையையே சாரும். வேகமான செயற்பாடு மற்றும் துல்லியமான சூடு என்பவற்றினூடாக பீரங்கிப் படையணியின் நம்பகத்தன்மை போராளிகளிடமும் வளர்ந்திருந்தது. ஜெயசிக்குறு எதிர்ச்சமர், ஓயாத அலைகள் என்ற குறியீட்டுப் பெயரிலமைந்த தொடர் நடவடிக்கைகள், ஆனையிறவுக்கான சமர் போன்றவற்றில் ராயு அண்ணையின் கட்டளையில் செயற்பட்ட பீரங்கிப் படையணியின் செயற்பாடு முக்கியமான பங்கினைப் பெற்றிருந்தது.

சிறிலங்கா அரசினை சமாதானம் நோக்கி இழுத்துவந்த சமரான தீச்சுவாலை முறியடிப்புச் சமரில் எதிரியின் தீச்சுவாலையை எதிரியை நோக்கியே திருப்பிவிட்டதில் ஒருபுறத்தில் ராயு அண்ணையின் கட்டளையில் செயற்பட்ட பீரங்கிப்படை பெரும்பங்காற்றியது எனில் மறுபுறத்தில் ராயு அண்ணையின் சிந்தனையில் உருவான கவச எதிர்ப்புக் கண்ணிகள் தம்பங்கினையும் ஆற்றின.

அப்போதிருந்த சூழலில் கண்ணிவெடிகளை உருவாக்குவதற்குத் தேவையான பொருட்களை உடனடியாகப் தருவிக்கமுடியாத நிலை. ராயு அண்ணையின் சிந்தனையோ கண்ணிவெடி தயாரிப்பதற்கு என்ன பொருட்கள் தேவையென்ற நிலையிலில்லாமல், இருக்கும் பொருட்களைக்கொண்டு எவ்வாறு கண்ணிவெடி தயாரிக்கலாம் என்பதாக இருந்தது. பல்வேறு காரணங்களால் வெடிக்காத நிலையில் மீட்கப்பட்ட எதிரியின் எறிகணைகள் எதிரிகளின் கவசங்களையே குறிவைக்கும் கண்ணிவெடிகளாக உருவெடுத்தன. ஆனையிறவை மீளக் கைப்பற்றும் எதிரியின் கனவு அப்போது தகர்க்கப்பட்டது.

~ ~ ~1992 ஆம் ஆண்டின் நடுப்பகுதி. யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த பிரிவுகளுக்குரிய போராளிகள் சிலர் சிறுத்தைப் படையணியின் பயிற்சிக்குச் செல்வதற்காக மாவட்டத் தலைமைச் செயலகத்திற்கு அனுப்பப்பட்டிருந்தோம். அங்குதான் சிறுத்தைப் படையணியின் முதலாவது ஆண்கள் அணிப் போராளிகளுக்கான தெரிவு நடைபெற்றது. சிறுத்தைப் படையணியின் சிறப்புத் தளபதியாகவிருந்த ராயு அண்ணையே படையணிக்கான போராளிகளைத் தெரிவு செய்வதற்கு வந்திருந்தார். அன்று ராயு அண்ணையின் மூலம் தெரிவாகி, சிறுத்தைப்படையணி, பின்னர் பொறியியற்றுறை ஆகியவற்றில் அவரின்கீழ் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. ஒரு தந்தையாய், சகோதரனாய் அவர் போராளிகளை வழிநடாத்தினார்.

ஒவ்வொரு விடயங்களைக் கவனித்துக்கொள்வதற்கும் அவர் பொறுப்பாளர்களை நியமித்திருந்த போதிலும், போராளிகளுக்கான உணவு, உடை என்று அனைத்து விடயங்களிலும் கவனமெடுத்து நடந்துகொண்டார். போராளிகள் தமக்குள் கதைக்கும் போது அவரை “அப்பா” என்றே விழிப்பது வழமை. அந்தளவிற்கு அவர் ஒரு தந்தையாக போராளிகள் மனதில் இடம்பிடித்திருந்தார். அவருக்குத் தலைவரால் வழங்கப்பட்டிருந்த பல்வேறுபட்ட பணிகளுக்கு மத்தியில் தன்னால் வளர்த்தெடுக்கப்படும் போராளிகள் என்ற கரிசனையோடு எம்மை உருவாக்கிய விதம் என்றுமே நெஞ்சை விட்டகலா நினைவுகள்.

1993 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதி. தென்மராட்சியில் ஓரிடத்தில் எமக்கான சிறப்புப் பயிற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. திசைகாட்டி நகர்வுப் பயிற்சிகளை நாம் முகாமிற்கு வெளியேதான் மேற்கொள்வதுண்டு. தென்மராட்சி மற்றும் வடமராட்சிப் பகுதிகளில் காணப்படும் சதுப்புநிலக் காடுகளே இவ்வாறான நகர்வுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டன. நகர்வுகளுக்கான தொடக்க மற்றும் முடிவுப் புள்ளிகளாக இப்பகுதிகளில் அமைந்திருக்கும் சிறிய கோவில்களே தெரிவுசெய்யப்படும். அனைத்து அணிகளதும் நகர்வுகளை தானே நேரில் வந்து கண்காணிப்பதுடன் அந்தந்த இடங்களிலேயே நகர்வு உத்திகளைக் கற்றுத்தருவார். நகர்வில் ஈடுபடும் போராளிகளுக்கான உணவுப்பொருட்களை தானே எடுத்துவருவார். இருந்தபோதிலும், போராளிகளைக் கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டிக்கவும் தண்டிக்க வேண்டிய இடத்தில் தண்டிக்கவும் அவர் தவறுவதில்லை.

ஒருமுறை எமது நகர்வு புத்தூரிலிருந்து தென்மராட்சியின் வரணிப்பகுதி நோக்கி இருந்தது. இவ்விரு பகுதிகளுக்கும் இடைப்பட்ட சதுப்புநிலக் காடுகளே நகர்வுப் பகுதியாக பயிற்சி ஆசிரியரால் தேர்வுசெய்யப்பட்டிருந்தது. எமது நகர்வுக்காக ஒவ்வோர் அணிக்கும் குறிப்பிட்டளவு குடிநீரே தரப்படும். மேலதிகத் தண்ணீரை நாம் எங்கும் பெறக்கூடாது என்பது கட்டளை. அன்று எமது நகர்வுகளைக் கண்காணிப்பதற்காக வந்த ராயு அண்ணையின் வாகனம் சேற்றில் புதைந்துவிட எமது அணியினரே அதனை வெளியெடுக்கும் பணியினையும் செய்யவேண்டியதாகிவிட்டது. அந்தக் களைப்பின் காரணமாக எமக்கு வழங்கப்பட்ட தண்ணீரையும் குடித்து முடித்துவிட்டோம். ஆனால் போகவேண்டிய மீதித்தூரமோ இன்னும் அதிகமிருந்தது. இடையிலிருந்த கோவில் கிணறு ஒன்றில் மேலதிக தண்ணீரை நிரப்பிவிட்டோம். பயிற்சி ஆசிரியர் தண்டனை வழங்கினாலும் ராயு அண்ணை காப்பாற்றிவிடுவார் என்று எமக்கு நாமே சமாதானமும் சொல்லிக்கொண்டோம்.

பயிற்சி ஆசிரியருக்கும் விடயம் போய்விட்டது. நாம் காரணத்தைக்கூறி தண்டனையிலிருந்து தப்பலாம் என முயற்சித்தோம். ஆனால் ராயு அண்ணையின் பதில் எம்மால் நிராகரிக்க முடியாததாக இருந்தது. அவர் கூறியது இதுதான். “நீங்கள் சிறப்புப் படையணிப் போராளிகள். நீங்கள் நடவடிக்கையில் ஈடுபடும் இடங்களில் போதியளவு வளங்கள் கிடைக்குமென்று எதிர்பார்க்க முடியாது. நீங்கள் நடவடிக்கையில் ஈடுபடும்போது திட்டமிடப்படாத எதிர்பாராத பணிகள் காத்திருக்கலாம். அதற்கெல்லாம் உங்களை நீங்கள் தயார்ப்படுத்த வேண்டுமாயின் நீங்கள் இவ்வாறான சாக்குப்போக்குகள் சொல்ல முடியாது”. இதன்பிறகும் எம்மால் அவருடன் எதைக் கதைக்க முடியும்? தண்டனை உறுதி. எமதணிக்கான அடுத்துவந்த நகர்வு குடிநீரின்றி முடிந்தது.

1993 ஆம் ஆண்டு பலாலிப் படைத்தளத்தினுள் கரும்புலித் தாக்குதல் ஒன்றினை நடாத்துவதற்குத் தலைவரினால் திட்டமிடப்பட்டிருந்தது. கரும்புலிகளுக்கான வெடிமருந்துத் தொகுதிகளை உருவாக்குவதற்கான பணி ராயு அண்ணையினால் அவரின் கீழிருந்த வெடிமருந்துப் பயிற்சிபெற்ற போராளியின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவருடன் அப்போது வெடிமருந்துப் பயிற்சியினை மேற்கொண்டிருந்த நாமிருவரும் அவ்வேலையில் இணைக்கப்பட்டிருந்தோம். ராயு அண்ணையோ, வேலையை ஒப்படைத்ததோடு நில்லாமல் வேலையின் ஒவ்வொரு கட்டத்திலும் தானும் எம்முடன் கூடவிருந்து அந்த வேலைகள் நிறைவடைந்தபோது, நாமே தனித்து அவ்வேலைகளைச் செய்யுமளவிற்கு எம்மை உருவாக்கி விட்டிருந்தார்.

ஒவ்வொரு விடயங்களைச் செய்யும்போதும், அவ்விடயங்களில் அவர் காட்டும் ஈடுபாடு மிகவும் நேர்த்தியானது. அதே நேர்த்தியினையே போராளிகளிடமும் வேலைகளில் எதிர்பார்ப்பார்.

எனது உடல்நிலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இயலாமை காரணமாக என்னால் பயிற்சியினைத் தொடர முடியவில்லை. சிலகாலம் வைத்தியசாலையில் இருக்கவேண்டியிருந்தது. இனிமேல் பயிற்சியில் ஈடுபடவே முடியாது என்ற நிலை. அடுத்து என்னவென்று தெரியாத சூழல். அவ்வாறான சூழ்நிலையிலிருந்து என்னை மீட்டு எனக்குப் பொருத்தமான பணிகளில் என்னை ஈடுபடவைத்து, எனது உடல்நிலையில் ஏற்பட்ட இயலாமை என்னையும் எனது போராட்டச் செயற்பாட்டையும் பாதிக்காது காத்தது ராயு அண்ணையே. அவரின் அணுகுமுறைகள் எப்போதுமே போராளிகளிடமிருந்து அவர்களது செயற்பாடுகளைத் தனித்தன்மையோடு வெளிக்கொணர்வதாகவே இருக்கும்.

ஒவ்வொரு போராளியிடமும் இருக்கும் தனித்தன்மைகளைச் சரியான முறையில் இனங்கண்டு அதனை வெளிக்கொணர்வதில் அவருக்கு நிகர் அவரேதான். ஆயினும் கொடிய புற்றுநோய் அவரைச் சிறிதுசிறிதாக அரித்துக்கொண்டிருந்த விடயத்தை அவரால் அறிந்துகொள்ள முடியாததாகவே காலம் அவருக்குத் தீர்ப்பெழுதி விட்டது.

அடிக்கடி வந்துபோகும் வயிற்றுவலியினை அவர் சாதாரண வயிற்றுவலியாக எண்ணியே மாத்திரைகளைப் பாவிப்பதோடு நிறுத்திக்கொண்டார். நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் இருந்தபோதுகூட அவர் இயங்கிக்கொண்டேயிருந்தார், அனைவரையும் இயக்கிக்கொண்டுமிருந்தார்.

தீச்சுவாலை முறியடிப்புச் சமரின்போதே ராயு அண்ணையால் முழு உற்சாகமாகப் பணியாற்ற முடியாதபடி அவரது உடல்நிலை தளர்ந்திருந்தது. ஆனாலும் அந்த மூன்றுநாட்களும் அவர் முழுமையாகப் பாடுபட்டார். நோய் முற்றியநிலையில் அவர் அவதிப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் வடகடலில் ஒரு கடற்கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில் நின்ற இராணுவத்தினருக்கான எரிபொருள் வழங்கலைச் செய்த எரிபொருள் தாங்கிக் கப்பல் மீதே அத்தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தது போல் அக்கப்பல் தீப்பிடிக்கவுமில்லை, மூழ்கிப் போகவுமில்லை.

வழமையாகவென்றால் ராயு அண்ணையிடம் ஓடிவந்து நடந்த சிக்கல்களை ஆராய்ந்து அதற்குரிய மாற்றுத் திட்டங்களை அறிந்துகொள்வார்கள். ஆனால் இப்போது ராயு அண்ணையின் உடல்நிலை மிகமிக மோசமாக இருந்தது.

இந்நிலையில் எப்படி அவரைப் போய்க் கரைச்சல் படுத்துவது என்று கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை நினைத்தார். ஆனாலும் தாக்குதல் பிசகியதைக் கேள்விப்பட்ட ராயு அண்ணையே நேரடியாக தளபதி சூசையையும் தொடர்புடைய மற்றப் போராளிகளையும் அழைத்து விடயத்தைக் கேட்டறிந்தார். படுத்த படுக்கையில் இருந்தும்கூட அக்கப்பலை மூழ்கடிப்பதற்கான வெடிபொருள் நுட்பம் பற்றிய ஆலோசனையைக் கடற்புலிகளுக்குச் சொல்லிக் கொடுத்தார். பின்னாளில் அவர் சொல்லிக் கொடுத்த அந்த நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு கடற்கரும்புலித் தாக்குதல் மூலம் படையினரின் எண்ணெய்த் தாங்கிக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.

பின்னாளில் அவரின் பெயரிலேயே தலைவரால் உருவாக்கப்பட்ட ‘கேணல் ராயு படைய அறிவியல் தொழிநுட்ப ஆய்வு நிறுவன’ப் பொறுப்பாளர்களில் ஒருவரிடம் தலைவர் சொன்ன வார்த்தைகள் “நீங்கள் அனைவரும் சேர்ந்தாவது ராயுவின் இடத்தினை நிரப்ப முயற்சிக்க வேண்டும்”.

ஆம்! அவரின் இழப்பு ஒருவரால் மட்டும் ஈடுசெய்யப்பட முடியாததுதான்.

இலங்கை இராணுவத்தின் அதிர்ச்சி தரும் படுகொலைகள் அம்பலம்

விடுதலைப் புலிகளிடம் இருந்து நாட்டை மீட்டு விட்டோம் என்று சிறீலங்கா அரசாங்கம் அறிவித்து மூன்று மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், வெளிவந்துள்ள காணொளியானது சிறீலங்காப் படையினரிடம் அகப்பட்டுள்ள தமிழர்களை சிறீலங்கா அரசாங்கம் படுகொலை செய்கின்றது என்பதை உறுதி செய்துள்ளது.


தமிழ் இளைஞர்கள் மிகக் கொடூரமான முறையில் சித்திரவதைக்குள் உள்ளாக்கப்பட்டு, ஆடைகள் களையப்பட்டு, கண்கள், கைகள் கட்டப்பட்ட நிலையில் தரைவெளி ஒன்றுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். பின்னர் சிறீலங்காப் படையினர் குறிந்த இளைஞர்களைக் கேலி செய்து சிரிப்பதோடு, மூடுகாலணிகளால் உதைந்து அவர்களைக் சுட்டுச் கொன்றுள்ளனர்.

காணொளியில் ஒன்பது இளைஞர்களை சிறீலங்காப் படையினர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இப்படுகொலைக் காணொளியானது சிறீலங்கா இராணுவச் சிப்பாய் ஒருவரிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. இக்காணொளியானது கடந்த சனவரிமாதம் பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





வவுனியாவில் மீள குடியேறுவோருக்கு கூரைத் தகடுகளும் 25 ஆயிரம் ரூபா நிதியும் வழங்கப்படும்- வவுனியா அரச அதிபர்!

வவுனியா வடக்கில் மீளக்குடிய மரும் மக்கள் தமது வீடுகளைப் புனரமைத்துக் கொள்வதற்காக 12 கூரைத் தகடுகளும் 25 ஆயிரம் ரூபா நிதியும் மற்றும் ஏனைய உதவிகளும் வழங்கப்படவுள்ளன. மீள்குடியேற்றம் சம்பந்தமாக நேற்று நடைபெற்ற மீளாய்வுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக வவுனியா மாவட்ட அரச அதிபர் திருமதி பீ.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற மீளாய்வுக் கூட்டத்தில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் வடக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ எம்.பியும் கலந்து கொண்டார். குறித்த 35 கிராமங்களில் புனரமைப்புப் பணிகள் 40 வீதம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக நேற்றைய கூட்டத்தில் விபரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அரச அதிபர் வவுனியா வடக்குப் பகுதியில் அடுத்த வாரம் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கவுள்ளதாகவும் கூறினார்.

நிலக் கண்ணி வெடிகளை அகற்றுவதற்கான பணிகளை மேற்கொள்ள வவுனியா பாதுகாப்புப் படையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

இதேவேளை, மீள்குடியமரும் மக்களின் நெற்காணிகளை துப்புரவு செய்து கொடுக்க இராணுவத்தினர் உதவி வழங்குவார்களெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தமது வீடுகளைத் தாமாகவே புனரமைத்துக் கொள்ள வேண்டும். அதற்காக, கூரைத் தகடுகளும், பணமும் வழங்கப்படுகின்றன. அதேநேரம் ஏனைய உதவிகளையும் பெற்றுக் கொடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அரச அதிபர் மேலும் தெரிவித்தார்

25 August, 2009

வவுனியா அகதி முகாம்களில் மக்களின் அவலம்

இலங்கை அரச பயங்கரவாதத்தால் வவுனியா நலன்புர நிலையங்களில் மந்தைகள் போல அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சிறுபான்மை தமிழினம் படும் அவலங்கள் சொல்லிடங்கா. கடந்த சில தினங்களாக அங்கு பெய்து வரும் கடும் மழை காரணமாக அந்த கூடாரங்கள் வழியே நீர் நிறைந்து தொற்று நோய்கள் பரவியுள்ளன. வயிற்ரோட்டம் வாந்தி காய்ச்சல் சிரங்கு என பல நோய் உபாதைகளிற்கு அந்த மக்கள் அல்லல் பட்டுள்ளனர்.
அத்துடன் பல சிறார்களினது கண்கள் மஞ்சள் நிறத்தில் உள்ளதாகவும் இவ்விதமாக விழிகள் உடைய பலர் மரணம் அடைந்திருப்பதாகவும் அந்த முகாம் வாசிகள் சிலர் நமக்கு தெரிவித்தனர்.

மலசல கூடாங்களிற்கு செல்ல முடியாத நிலையும் அவை அங்கு சுத்தமின்றி கிடப்பதாகவும் அந்த மக்கள் எமக்கு தெரிவித்தனர்.
அத்துடன் பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை பிறதொரு முகாமிற்கு மாற்வுள்ளதாகவும் அவை கிளிநொச்சி அல்லது மாங்குளமாக இருக்கலாமென அவர்கள் ஜயம் தெரிவித்துள்ளன.
















புலிகளின் விமானப்படை உருவாக்கத்தைப் பார்வையிடும் தேசிய தலைவர்

விடுதலைப் புலிகளின் விமானப்படை முதன் முதலில் உருவாக்கப்பட்டு, எரித்திரியாவில் இருந்து முதலில் தருவிக்கப்பட்ட இரண்டு சிலின் 143 ரக விமானங்கள் வன்னி வான்பரப்பில் முதல் முதல் பறப்பில் ஈடுபடும் போது எமது தேசிய தலைவர் அவர்களால் பார்வையிடப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை. பின்னர் அவை தாக்குதலுக்காக புலிகளால் மாற்றி வடிவமைக்கப்பட்டது. கமபிளக் எனப்படும் வரி நிறம் பூசப்பட்டு தாக்குதலுக்கு தயாரானது.

தென்னிலங்கையில் சுமார் 7 முறை பறப்பில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தி வெற்றிகரமாக வன்னி திரும்பிய இவ் விமானங்கள், உலகின் முதல் முதல் விடுதலைப் போராட்ட இயக்கம் ஒன்றின் வான்படை என்ற புகழைப் பெற்றது. கடைசி நேரத் தாக்குதலில் இவ்விரு விமானங்களும் சிங்கள இராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

பறப்பில் ஈடுபட்டிருக்கும் விமானங்களை பொட்டுஅம்மான், கேணல் ஜெயம், கேணல் விதுஷா, காஸ்ரோ பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் மற்றும் கேணல் தீபன் ஆகியோர் முறையே பார்வையிடுகின்றனர், மற்றும் பொட்டுஅம்மானையும், தமிழ்ச்செல்வன் அவர்களையும் விமானிகள் ஏற்றி பறப்பில் ஈடுபட்டுள்ளதையும் காணலாம்.