| சிறிலங்காவில் உள்ள தடுப்பு முகாம்களிலும் சிறைச்சாலைகளிலும் பல மாத காலமாக விசாரணைகள் இன்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் தம்மை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் எனக் கோரி நாளை சனிக்கிழமை தொடக்கம் உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்த இருப்பதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. |
வெலிக்கடைச் சிறைச்சாலை, மகசீன் சிறை, மற்றும் மட்டக்களப்பு, திருகோணமலை சிறைச்சாலைகளில் உள்ளவர்கள் உட்பட சுமார் 2 ஆயிரம் தடுப்புக்காவல் கைதிகள் இந்த உண்ணாநிலைப் போராட்டத்தில் இணைந்துகொள்வார்கள் எனவும், பூசா தடுப்பு முகாமில் உள்ள பல நூற்றுக்கணக்கான இளைஞர்களும் இதில் இணைந்துகொள்ளலாம் எனவும் தெரிகின்றது. கடந்த இரண்டு தசாப்த காலத்தில் கைது செய்யப்பட்ட பெரும் தொகையான தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் எந்தவிதமான விசாரணைகளும் இன்றித் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் மீது குற்றப் பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படவில்லை. சுமார் 50 வரையிலானவர்களே தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளாக உள்ளனர். விசாரணைகள் இன்றித் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களில் பலர் தொடர்ச்சியாக பத்து வருடங்களுக்கும் அதிகமாக சிறைவாசம் இருக்கின்ற போதிலும் அவர்கள் மீது எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படவில்லை. வடக்கு - கிழக்குப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட படையினரின் சுற்றிவளைப்புக்களின் போதே இவர்கள் வெறுமனே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தென்பகுதிச் சிறைகளுக்கு அனுப்பப்பட்டனர். இவர்கள் தமக்கு பொது மன்னிப்பு வழங்கி, தம்மை விடுதலை செய்யுமாறு சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொறகொடவுக்கும் கடிதங்களை அனுப்பிவைந்திருந்த போதிலும் அது தொடர்பாக உரிய பதில் கிடைக்காததையடுத்தே உண்ணாநிலைப் போராட்டத்தை அடுத்தகட்டமாக தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |
21 August, 2009
சிறிலங்கா சிறைகளில் வாடும் தடுப்புக்காவல் கைதிகள் நாளை முதல் உண்ணாநிலைப் போராட்டம்
இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க, புலம்பெயர் தமிழர்கள் ஒன்று திரண்டு, தமிழீழம் மலரச் செய்வார்கள்: வைகோ
முல்லைத்தீவு, இரணைமடுவில் விமான படையினரின் புதிய ஒடுபாதை!

முல்லைத்தீவு மற்றும் இரணைமடுவில் புதிய விமானப்படை தளங்கள் அமைக்கப்பட்டு ஒடுபாதைகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன என விமானப்படை பேச்சாளர் ஜானக நாணயக்கார தெரிவித்துள்ளார். ஏற்கனவே புலிகளால் பாவிக்கப்பட்டுவந்த இலகுரக விமானங்களை தரையிறக்குவதற்கு பாவிக்கப்பட்ட ஒடுபாதைகளே அவை என்றும், மேற்படி விமான ஒடுபாதைகள் புனரமைக்கப்பட்டு, அபிவிருத்தி செய்யப்பட்டதும் அதனை விமானப்படையினர் பாவிப்பர்.
விமான ஒடுபாதைகளுக்கான அபிவிருத்தி பணிகளை விமானப்படை தளபதி ஏயார் மார்சல் றோசான் குணதிலக நேற்றுக்காலை பார்வையிட்டுள்ளார். விமான ஒடுபாதைகளின் அபிவிருத்தி பணிகள் இவ்வாண்டு முடிவடைவதற்குள் நிறைவு செய்யப்பட்டு ஒடுபாதை விமானப்படையினரின் முற்று முழுதான பாவனைக்கு திறக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
வன்னியிலிருந்த புலிகளின் முன்னாள வான்படைத் தளங்களுக்கு சிறிலங்கா வான் படைத் தளபதி திடீர்ப் பயணம்
சிறிலங்கா படையினர் இந்தப் பகுதிகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின்னர் இந்த விமான ஓடுபாதைகளைப் புனரமைத்து தமது வான்படைத் தளங்களை அந்த இடங்களில் அமைத்திருக்கின்றார்கள். அத்துடன் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய அதே ஓடுபாதைகளைத்தான் சிறிலங்கா வான் படையினரும் இப்போது பயன்படுத்திவருகின்றார்கள்.
விடுதலைப் புலிகள் இந்தப் பகுதிகளிலிருந்து பின்வாங்கிய போது ஓடுபாதைகள் சேதமடைந்திருந்ததாகவும், இருந்த போதிலும் தாம் அந்தப் பகுதிகளைக் கைப்பற்றிய பின்னர் குறிப்பிட்ட ஓடுபாதைகளை இலகுரக வானூர்திகள் பயன்படுத்தக் கூடிய விதமாக திருத்தியமைத்திருப்பதாகவும் சிறிலங்கா வான்படை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தப் பகுதியில் வான்படைக்கான முகாம்களை அமைத்து அவற்றைப் பராமரிப்பதற்காக மேற்கொள்ளப்படும் வேலைகளைப் பார்வையிட்ட சிறிலங்காவின் வான்படைத் தளபதி, இங்கு பணிபுரியும் முக்கிய அதிகாரிகளுடனும் அது தொடர்பான பேச்சுக்களை நடத்தினார். இங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகள் தொடர்பாகவும் அவர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
ஈழ விடுதலைப் போராட்டம் மீண்டும் முன்னெடுக்கப்படுவதற்கும், வெற்றி பெறுவதற்கும் முழுமையாக உதவுவோம்: உலகத் தமிழர் பிரகடனம்.

ஈழ விடுதலைப் போராட்டம் மீண்டும் முன்னெடுக்கப்படுவதற்கும், வெற்றி பெறுவதற்கும் அவர்கள் விரும்பும் அரசியல் தீர்வு உருவாவதற்கு முழுமையாக உதவுவோம் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வெளியிட்ட ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் பிரகடனம் கூறுகிறது.
சென்னை அமைந்தகரை புல்லாரெட்டி நிழற்சாலையில், தற்பொழுது நடந்த மாநாட்டில், உலகத் தமிழர் பிரகடனத்தை மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலர் வைகோ படித்து வெளியிட்டார்.
உலகத் தமிழர் பிரகடனம் வருமாறு :
1. ஈழத் தமிழ் மக்களின் மரபு வழி தாயகத்தில் அவர்களுக்கு முழுமையான மனித, ஜனநாயக உரிமைகள் வழங்கிடவும், அதற்கேற்ற அரசியல் அமைப்பிற்கு உத்தரவாதம் தரக்கூடிய அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்காக உலக மக்களின், அரசுகளின் ஆதரவைத் திரட்டிடவும், ஈழத் தமிழ் மக்கள் ஒப்புக்கொள்ளக் கூடியத் தீர்வு ஒன்றை அவர்களின் பிரச்சனையைத் தீர்க்கும் ஒரே வழி என்பதிலும் நாங்கள் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.
2. தங்கள் தாயகத்திலும், உலக நாடுகளிலும் புலம் பெயர்ந்திருக்கக்கூடிய ஈழத் தமிழர்கள் அனைவரும் அவரவர்களின் ஊர்களிலும், வீடுகளிலும் மீண்டும் குடியேறவும், அமைதியான, இயல்பான, சுதந்திரமான வாழ்க்கையை நடத்தவும் துணை நிற்க நாங்கள் உறுதி பூணுகிறோம்.
3. தமிழர் தாயக மண்ணில் அத்துமீறி உருவாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்களையும், சிங்கள இராணுவ முகாம்களையும் மற்றும் இராணுவ ரீதியான அமைப்புகளையும் வெளியேற்ற வேண்டும் என ஐ.நா.வை வற்புறுத்த நாங்கள் உறுதி பூணுகிறோம்.
4. இலங்கையில் மனித நேய உணர்வை மீறித் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளையும், கொலைகளையும் செய்த சிங்கள இராணுவ அதிகாரிகளும், அவர்களை ஏவிவிட்ட சிங்கள அரசியல் வாதிகளும் சர்வதேச நீதிமன்றத்தில் போர்க் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவதற்கு உரிய நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ள நாங்கள் உறுதி பூணுகிறோம்.
5. உலகில் உள்ள மற்ற தேசிய இன மக்களைப் போல முழுமையான, இறைமை உள்ள மக்களாக வாழும் உரிமையில் தங்களின் எதிர்காலத்தை தாங்களே முடிவு செய்துகொள்ளும் உரிமையும் ஈழத் தமிழர்களுக்கு இயற்கையாக உண்டு என்பதையும் அந்த வாழ்வுரிமையை அவர்கள் நிலைநிறுத்திக்கொள்ள அவர்களுக்கு தோள் கொடுத்து துணை நிற்க உலகத் தமிழர்களாகிய நாங்கள் உறுதி பூணுகிறோம்.
6. அளப்பரிய தியாங்களைச் செய்த ஈழத் தமிழ் மக்களும், அவர்களுக்காக இறுதிவரை போராடிய போராளிகளும், வீறுகொண்டு நடத்திய விடுதலைப் போராட்டம் பல நாடுகளின் கூட்டுச் சதியின் விளைவாக பின்னடைவைச் சந்திக்க நேர்ந்திருப்பது தற்காலிகமானது. மீண்டும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதற்கும், வெற்றி பெறுவதற்கும் அந்த மக்கள் விரும்பி ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வு உருவாவதற்கும் நாங்கள் முழுமையாக உதவுவோம். அதற்காக எங்களை முற்றிலுமாக ஒப்படைத்துக்கொண்டு எத்தகைய தியாகத்திற்கும் தயாராக இருப்போம் என உலகளாவிய தமிழர்களாகிய நாங்கள் உறுதி பூணுகிறோம்.
பிரகடனம் படித்து முடிக்கப்பட்ட பிறகு ஈழத் தமிழர்களுக்கு உதவ சர்வபறி தியாகத்திற்கும் தயார் என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது.
ஏராளமான கருஞ்சட்டை தரித்த இளைஞர்கள் தீப்பந்தம் ஏந்தி அந்த உறுதிமொழியை ஏற்றனர். அவர்கள் அனைவருடைய சட்டையிலும் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் படம் அச்சிடப்பட்டிருந்தது. பின்புறத்தில் தமிழீழத்தின் வரைபடம் அச்சிடப்பட்டிருந்தது.
20 August, 2009
கனேடிய தமிழ் மாணவர் சங்கத்தின் தலைவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்

கனடாவில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை சேகரித்ததாக குற்றஞ் சுமத்தப்பட்டிருக்கும் கனேடிய தமிழ் மாணவர் சங்கத் தலைவரின் பல புகைப்படங்களை எவ்.பி.ஐ.புலனாய்வு பிரிவு வெளியிட்டுள்ளது.
அவர் இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் இருந்த காட்சி கொண்ட படத்தையும், இயந்திர துப்பாக்கி ஒன்றை இயக்கும் படத்தையும் எவ்.பி.ஐ. வெளியிட்டுள்ளது.
29 வயதான சதா சரத் சந்திரன் என்ற இவர், புலிகளுக்கு, வானை நோக்கி ஏவக்கூடிய ஏவுகணை கொள்வனவிற்கு துணை புரிந்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். இவர் எதிர்வரும் அக்டோபர் ஆறாம் திகதி நீதிமன்றில் ஆஜர் செய்யப்படும் போது குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமானால் ஆயுள் தண்டனைக்குட்படுத்தப்படலாமெனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மற்றொரு கனேடியரான நடராசா யோகராசாவும் அதே தினத்தில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார். இவர்களைத் தவிர சகிலால் சபாரட்ணம் என்ற கனேடிய தமிழ் காங்கிரஸின் தகவல் தொடர்பு கணிப்பாளர் நவம்பர் 14 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.
அத்துடன், மேலும் மூன்று கனேடியர்கள் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் ஐக்கிய அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படவுள்ளனர்.
2006 ஆண்டு ஜூலை 31 ஆம் திகதி நியுயோர்க் லோங் ஐலண்ட் பகுதியில் ஆயுத ஒப்பந்தகாரர் ஒருவருடன் பேச்சு நடத்திய சரத் சந்திரன் நிதி ஒரு பிரச்சினை அல்ல என குறிப்பிட்டிருந்தார். இதனை அடுத்து அவர் கனடாவில் நிதி சேகரிப்பு குறித்து கலந்துரையாடல்களை நடத்தி அதனடிப்படையில் நிதிகளை சேகரித்தார்.
இதேவேளை, கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்ட கனடாவின் இரகசிய புலனாய்வு அறிக்கையின் படி, விடுதலைப் புலிகளுக்கு வருடமொன்றுக்கு 12 மில்லியன் டொலர்கள் நிதி சேகரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நல்லூர் தேர்த்திருவிழாவில் இலட்சக்கணக்கில் பக்தர்கள்: விமானங்கள் பூமழை பொழிய முருகன் வீதிஉலா

சரித்திர பிரசித்திபெற்ற நல்லூர் கந்த சுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த்திரு விழா நேற்றுக் காலை சிறப்பாக நடந்தேறியது. காலை 7.15க்கு முருகப் பெருமான் தேரில் ஆரோகணித்து 9.15 மணியளவில் தனது இருப்பிடத்தை வந்தடைந்தார்.
இலட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் முருகப் பெருமானின் தேர் வலம் வந்து கொண்டிருந்த போது இலங்கை விமானப்படை விமானங்கள் வானிலிருந்து பூமழை பொழிந்தன. இது கண்கொள்ளாக் காட்சியாக இருந்ததோடு அனைவரையும் மெய்ச்சிலிர்க்கச் செய்தது.
குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இலங்கையின் தென்பகுதி மற்றும் ஏனைய பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்து நல்லைநகர் கந்தனின் தேர் உற்சவத்தைக் கண்டு களித்தனர்.
இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சு தென் இலங்கை யில் இருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வரும் பக்தர்களின் வருகைக்காக மிகக் குறைந்த செலவில் கொழும்பு யாழ்ப்பாணத்திற்கான விமான சேவையினை வழங்கியிருந்தது. அத்துடன் பக்தர்களுக்கான தாக சாந்திக்காக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் போத்தல்களையும் வழங்கியிருந்தது.
அத்துடன் ஆலய வீதிகளிலும் யாழ்குடா நாட்டின் பல இடங்களிலுள்ள வீதியோரங்களிலும் ஆலயம் சென்று வரும் பக்தர்கள் தங்கி இளைப்பாறி செல்வதற்கும் தாகசாந்திக்கும் தாக சாந்தி நிலையங்களும் அமைக்கப்பட்டிருந்தன.
தேர் தொடங்கி இருப்பிடம் வரும்வரை வீதியில் கற் பூரம் எரிப்பதற்கு தடை செய்யப்பட்டிருந்தது. அத்துடன் தூக்குக்காவடிகள் என்பனவும் தேர் வெளி வீதியுலா தொடங்கி முடியும்வரை ஆலய வீதிக்கு வருவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்ததுடன் ஆலய வீதியில் ஒலி பெருக்கி (வெளியார்) பாவிப்பதும் தடை செய்யப்பட் டிருந்தது.
யாழ் மாநகர சபை நிர்வாகம் பக்தர்களினது வசதி கருதி ஆலய வீதிகளுக்கு சமீபமாக பல மலசல கூடங்களை அமைத்திருந்ததுடன், ஆங்காங்கே குடிதண்ணீர் நிரப்பப்பட்ட கொள்கலன்களையும் மக்களின் பாவனைக் கென வைத்திருந்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை பொலிஸாரும், இராணுவத்தினரும்கூட்டாக இணைந்து ஈடுபட்டிருந்தனர். சென்யோன் முதலுதவிப் படையினர் கே. செல்வரஞ்சன், யாழ் மாவட்ட இணைப்பாளர் தலைமையிலும் மக்கள் நலன்புரி சங்கத்தினர் எஸ். சதீஸ் தலைமையிலும், இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் எஸ். சாந்தா தலைமையிலும் தொண்டர் சேவைகளை ஆற்றியிருந்தனர். பலாலி இரா ணுவ தலைமையகத்திற்குச் சொந்தமான ஹெலிக்கொப்டர் தேர் வீதியில் வந்து கொண்டிருந்த போது மேல் இருந்து பூ மாரிபொழிந்து கந்தனை வழிபாடு செய்ததைக் காணக்கூடியதாக இருந்தது
அதிகாரப் பகிர்வின்றேல் புலிகள் மீண்டும் அணிதிரளும் வாய்ப்பு ஏற்படும்-அமெரிக்கா எச்சரிக்கை

இலங்கையில் அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்படாவிடின், விடுதலைப் புலிகள் மீண்டும் அணிதிரள்வதற்கான வாய்ப்பு ஏற்படுமென்று அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ரொபேட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு செய்திச் சேவையொன்றிற்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ரொபேட் ஓ பிளேக் மேலும் கூறியதாவது, இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி, அதிகாரங்கள் பகிரப்படா விட்டால், அது மீண்டும் தழிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழப் போராட்டத்திற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். இதேவேளை, இலங்கை அரசாங்கம் ஆயிரக்கணக்கான மக்களை விரைவில் மீளக்குடியமர்த்த வேண்டும். இதற்காகவே அமெரிக்கா இலங்கைக்கு நிதியுதவி அளித்து வருகின்றது.
இலங்கையில் அரசியல் இணக்கமொன்று காணப்படாமை குறித்து, மேற்குலக நாடுகள் கவலை கொண்டுள்ளன. இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சினை தொடர்பாக இலங்கையில் உள்ள தமிழர்களிடம் மாத்திரமல்லாது, இலங்கைக்கு வெளியிலுள்ள தமிழர்களிடமும் பேச்சுவார்த்தை மேற்கொள்ளவேண்டும். அதிகாரங்கள் இலங்கையில் பகிரப்பாடாவிடின், தமிழ் மக்கள் விரக்தியடைவர். இதனால், புலிகள் மீண்டும் அணிதிரள்வதற்கான வாய்ப்பு ஏற்படும்

